தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P20223l3-3.3 தமிழ் மரபுகள்

  • 3.3 தமிழ் மரபுகள்
    நாதமுனிகளின் அடைவில் ஆழ்வார்களின் பாசுரங்களைத்
    தனித்தனி     இலக்கியங்களாக     வகைப்படுத்தும் முயற்சி
    முளைவிட்டிருப்பதைக் காணமுடிகின்றது. இயல், இசை என்னும்
    பெரும் பகுப்புக்கு மேலாகப் பொருள், யாப்பு, அளவு
    முதலியவற்றால்     அவர்     நூல்களை     வகைப்படுத்தித்
    தொகுத்திருக்கிறார் என்று கருதுதற்கு இடமுள்ளது.

    பாடல்களைத் திரட்டித் தொகைப்படுத்துவோர் பொருள்,
    யாப்பு, அடிவரையறை, பாடலிடையே வரும் தொடர்,
    பாடல்களின்     தன்மை,     எண்ணிக்கை     ஆகியவற்றைக்
    கருத்திற்கொண்டு அவற்றை வகைப்படுத்திப் பெயரிடுதல் மரபு.
    பாட்டும் தொகையும்
    எனப்படும் சங்க இலக்கியங்கள்
    தொகுக்கப்பட்டுள்ள முறையினை நோக்கி நாம் இதனை ஒருவாறு
    உணர்ந்துகொள்ளலாம். அகநானூறு, புறநானூறு முதலிய
    தொகை நூல்கள் பாடுபொருளும், பாடல்களின் எண்ணி்க்கையும்
    கருதி அவ்வாறு பெயர் பெற்றுள்ளன. நற்றிணை, குறுந்தொகை
    முதலிய அகப்பொருள் நூல்கள் மேற்குறித்த இயல்புகேளாடு
    அடிவரையறையையும்     கருத்திற்கொண்டு     தொகுக்கப்
    பெற்றுள்ளன.     ஐங்குறுநூறு     பதிக     அமைப்பையும்
    கருத்திற்கொண்டு தொகுக்கப் பெற்றுள்ளது. கலி, பரிபாட்டு
    என்னும் ஓசைநயம் நிரம்பிய செய்யுள் வகையில் அமைந்த
    நூல்கள் கலித்தொகை, பரிபாடல் என்றே பெயர் பெற்றுள்ளன.
    பத்துப்பத்து     அகவற்பாக்களால்     அமைந்து பத்துப்
    பகுதிகளைக்கொண்ட நூல் ஒன்றுக்குப் பதிற்றுப்பத்து என்று
    பெயர் சூட்டியுள்ளனர். இந்நூலில் உள்ள ஒவ்வொரு பாட்டுக்கும்
    ஒவ்வொரு பெயர் தரப்பட்டிருக்கிறது. அவ்வப்பாட்டில் அமைந்த
    வருணனை மிக்க சிறந்த தொடரே பாட்டின் பெயராக
    அமைந்துள்ளது. பத்துப் பெரிய அகவற் பாடல்களைக் கொண்ட
    தொகுதிக்குப் பத்துப்பாட்டு என்றே பெயர் வழங்குகிறது.

    தமிழில் உள்ள பழைய தொகை நூல்கள் பற்றிய
    இக்கருத்துகளை நினைவிற்     கொண்டு     நாதமுனிகளின்
    தொகுப்பினைக் காணுதல் வேண்டும். இத்தகைய முறையிலேயே
    ஆழ்வார் பாசுரங்களையும் பிரபந்தங்களையும் நாதமுனிகள்
    தொகுத்திருக்கக்கூடும்; அவ்வாறே பிரபந்தங்களுக்கும் பெயர்
    சூட்டியிருக்கக்கூடும். பெயர்க்குறிப்பு எதுவும் இன்றி இயற்பா,
    இசைப்பா அல்லது முதலாயிரம், பெரிய திருமொழி, இயற்பா,
    திருவாய்மொழி என்ற பகுப்புக்களை மட்டுமே அவர்
    செய்திருப்பார் என்று கருதுதல் பொருந்தாது.

    நாதமுனிகளின் தொகுப்பில் ஆழ்வாரின் பிரபந்தங்கள்
    அளவாலும் யாப்பாலும் வேறுபல சிறப்பாலும் பல்வேறு
    பெயர்களைப் பெற்றுள்ளன. பெரியாழ்வார் திருமொழி,
    நாச்சியார் திருமொழி, பெருமாள் திருமொழி
    முதலியன
    பாடியவர்களால் பெயர்     பெற்றவை. திருப்பல்லாண்டு,
    அமலனாதிபிரான், கண்ணிநுண்சிறுதாம்பு
    போன்றவை
    பாட்டு     முதற்குறிப்பால்     பெயர்     பெற்றவை.
    நான்முகன்திருவந்தாதி
    என்பது பாட்டு முதற்குறிப்பாலும்
    அந்தாதித் தொடையாலும் பெயர் பெற்றது. முதல் திருவந்தாதி,
    இரண்டாம் திருவந்தாதி, மூன்றாம் திருவந்தாதி,
    பெரியதிருவந்தாதி
    என்பன அந்தாதித் தொடையால் பெயர்
    பெற்றவை.      திருவாசிரியம்,     திருச்சந்தவிருத்தம்,
    திருவிருத்தம், திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம்

    என்பவை யாப்பால் பெயர் பெற்றவை. திருவெழுகூற்றிருக்கை
    என்பது எண்ணலங்காரத்தாற் பெயர் பெற்றது. திருப்பாவை,
    திருப்பள்ளியெழுச்சி, சிறியதிருமடல், பெரிய திருமடல்

    என்பன பாவை நோன்புநோற்றல், பள்ளியெழுச்சி பாடுதல்,
    மடலேறுதல் ஆகிய தொழிலாற் பெயர் பெற்றவை. திருமாலை,
    பெரிய திருமொழி, திருவாய்மொழி
    ஆகியவை முறையே
    தன்மையாலும் அளவாலும் சிறப்பாலும் பெயர் பெற்றவை எனக்
    கருதலாம். எனினும் பெரிய திருவந்தாதி நூலின்
    பொருட்சிறப்புக்கருதி அமைந்த பெயர் என்பர். இவ்வாறு
    கொண்டால் பழைய மரபுகளைத் தழுவிச் சில புதிய
    மரபுகளையும் அவர்     உருவாக்கியதை அறியமுடியும்.
    கண்ணிநுண்சிறுதாம்பு,     அமலனாதிபிரான்
    எனவரும்
    முதற்குறிப்புப்பெயர்கள் பொருள் பொதிந்த சிறந்த தொடரால்
    பாட்டுக்குப் பெயரிடும் பதிற்றுப்பத்து மரபினை ஒருவகையில்
    ஒத்துள்ளன. உயர்ந்தோர் வாய்மொழிகளைத் திருமொழி எனக்
    குறிக்கும் மரபினையும் முந்தையோர் இலக்கியங்களிலிருந்தே
    நாதமுனிகள் பெற்றிருக்கக்கூடும். அருகதேவனின் அருளிச்
    செயல்களைப்     பெருமகன்     திருமொழி     எனவும்,
    ஞானத்திருமொழி
    எனவும்     குறிக்கிறது சிலப்பதிகாரம்.
    திருமொழியாய் நின்ற திருமாலே
    (இரண்டாம்திருவந்தாதி-64)
    என இறைவனைப் பாடுகிறார் பூதத்தாழ்வார். இக்குறிப்புகள்
    பெரியாழ்வார் திருமொழி, நாச்சியார் திருமொழி, பெருமாள்
    திருமொழி, பெரிய திருமொழி
    எனப் பெயர் சூட்ட
    நாதமுனிகளுக்கு வழிகாட்டியிருக்கலாம். இவற்றுள் முன்னைய
    மூன்றும் ஆசிரியர் பெயரை முன்னிட்டும், இறுதியில் உள்ள
    பெரிய திருமொழி
    பாசுரங்களின் மிகுதியான எண்ணிக்கையைக்
    கருதியும் பெற்ற பெயர்களாகத் தோன்றுகின்றன. பெரிய
    திருமொழியைப் பெரிய என்னும் அடைமொழியின்றி திருமொழி
    எனவும் குறிப்பதுண்டு. அந்நிலையில் வேறுபடுத்தி அறியும்
    பொருட்டு மற்றையோர் திருமொழிகள் பாடியோர் பெயருடன்
    இணைத்து அழைக்கப்பட்டிருக்கலாம்.

    நம்மாழ்வாரின் நூல் ஒன்று மட்டும், திருவாய்மொழி எனப்
    பெயர் பெறுகின்றது. வேதத்தை, வாய்மொழி எனக்குறிக்கும்
    பரிபாடலை ஒட்டியே வேதம் தமிழ் செய்தவரான நம்மாழ்வாரின்
    நூல் ஒன்றுக்குத் திருவாய்மொழி என்று அவர் பெயர்
    சூட்டியிருக்க வேண்டும்.

    இவ்வாறு நோக்கினால் நாதமுனிகள் முந்தையோர்
    மரபுகளைத்     தழுவி     ஆழ்வார்களின் இலக்கியங்களை
    வகைப்படுத்தியிருப்பது தெளிவாகும்.
புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:31:34(இந்திய நேரம்)