தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P20225l3-5.3 இராமாநுச சித்தாந்தம்

  • 5.3 இராமாநுச சித்தாந்தம்
    இனி, தத்துவ உலகுக்கு அவர் வழங்கிய கொடைகள்
    குறித்துக் காண்போம்.

    இராமாநுசர் நிறுவிய கொள்கை விசிட்டாத்வைதம்
    எனப்பெயர் பெற்றுள்ளது. இக்கொள்கையின் பல கூறுகள்
    அவருக்கு முன்பே பல நூல்களுள் சிதறுண்டு கிடந்தன. எனினும்
    அவற்றை முறைப்படுத்தி வகுத்தளித்தவர் இராமாநுசர். ஆதலின்
    இது இராமாநுச சித்தாந்தம் என அவருடைய சீட பரம்பரையில்
    அவருக்கு ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்குப் பின்பு வந்த
    சுதர்சன சூரியும்
    வேதாந்ததேசிகரும் சூட்டிய பெயர் அது
    என்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

    பிரம சூத்திரத்திற்குப் பேருரை (ஸ்ரீபாஷ்யம்) வழங்கியதன்
    மூலம் விசிட்டாத்வைதக் கொள்கையை நிலை நாட்டினார்
    இராமாநுசர்.

    இராமாநுசரின் விசிட்டாத்வைதம் சித்து, அசித்து, ஈசுவரன்
    என்னும் முப்பொருள் உண்மை கூறுவது.

    இம்மூன்றில் சித்து என்பது உயிர்த்தொகுதியைக் குறிக்கும்.

    அசித்து என்பது மக்கள், விலங்கு முதலியவற்றின் உடல்,
    உலகிலுள்ள ஏனைய பௌதிகப் பொருள்கள் எல்லாவற்றிற்கும்
    காரணாமாகவுள்ள பிரகிருதியைக் குறிக்கும். பிரகிருதி,
    மூலப்பகுதி எனவும் வழங்கப்படும்.

    மூன்றாவதாக, ஈசுவரன்.

    சித்து என்பது அறிவுள்ள பொருளாகும்; அசித்து என்பது
    அறிவில்லாப் பொருள். இறைவன் - சித்து, அசித்து ஆகிய
    இரண்டையும் தனக்கு உடம்பாகக் கொண்டிருக்கிறான். அவற்றுள்
    அந்தர்யாமியாய் (மறைந்து உறைபவனாய்) நிற்கிறான்.

    இவ்வாறு இம்முப்பொருள்களும் ஒன்றை விட்டொன்று
    பிரியாமல் எக்காலத்தும் தம் இயல்பை விடாமல் ஒன்று
    சேர்ந்துள்ளன என்பது வைணவ சமயக் கொள்கையாகும்.

    இறைவனுக்கும் சித்து, அசித்து ஆகிய இரு பொருள்களுக்கும்
    இடையில் உள்ள உறவு உயிருக்கும் உடலுக்கும் உள்ளதைப்
    போன்ற உறவாகும். அதாவது “உயிர்கள் அனைத்தும் உலகமும்
    இறைவனது சரீரம்; இறைவன் அச்சரீரத்தை உடையவன் - சரீரி”.
    இந்த உடல் உயிர்க்கொள்கையே (சரீர - சரீரிபாவம்)
    வைணவத்தின் உயிர் நிலையாகும். இதனைக் கீழ்க்காணும்
    நம்மாழ்வார் பாசுரம் தெளிவுபடுத்தக் காணலாம்.

    திட விசும்பு எரிவளி நீர்நிலம் இவைமிசை
    படர்பொருள் முழுவதுமாய் அவைஅவை தொறும்
    உடல்மிசை உயிர்எனக் கரந்தெங்கும் பரந்துளன்
    சுடர்மிகு சுருதியுள் இவையுண்ட சுரனே

    (திருவாய்மொழி : 1 :7)

    (திட விசும்பு = திடமான வானம்; எரி = நெருப்பு; வளி =
    காற்று; இவைமிசை = இவற்றின் மீது; படர்பொருள் முழுவதும்
    ஆய்
    = படர்ந்த பொருள்கள் முழுவதும் தானாகும்படி அவற்றை
    ஆக்கி; கரந்து = மறைந்து; பரந்து = உள்ளும் புறம்புமாக
    வியாபித்து; சுருதி = வேதம்; இவை உண்ட சுரன் = இந்தப்
    பொருள்களையெல்லாம் பிற்காலத்தில் விழுங்கிய தேவன்)

    இப்பாசுரத்தின் மூன்றாம் அடியின் பொருளை
    அடிப்படையாகக் கொண்டே இராமாநுசர் தம் விசிட்டாத்வைத
    சித்தாந்தத்தை நிலைநிறுத்தினார் என்பர்.

    இராமாநுசரின் தத்துவம் இறைவேறு. உயிர்வேறு என்னும்
    பன்மைக் கொள்கையாகும். எண்ணிலா உயிர்களுடனும்
    அவையுறையும் உடல்களிலும் இறைவன் உறைவதாகவும் சித்து,
    அசித்துகளாகவும் அவற்றின் வேறாகவும் விளங்குவதாகவும்
    இப்பெரியார் கூறுதலின் இவர் நெறி சிறப்பான அத்வைதம்
    (விசிட்டாத்வைதம்)
    என்னும் பெயர் பெற்றது. வீடு பெற்ற
    நிலையில் கூட உயிர்கள் நித்தியசூரிகளாக இறைவனுக்குரிய
    கைங்கரிய இன்பத்தில் திளைத்திருத்தலின் உயிர், உயிர்தான்;
    இறை இறைதான். இரண்டும் ஒன்றாக, ஒருபடித்தாக ஆவதில்லை.
    எனின், உயிர் இறையருளால் பிறவித்தளை நீங்கி நித்தியப்
    பேரானந்தம் எய்துகிறது. இராமாநுசர் கொள்கையின்படி வீடுபேறு
    என்பது தளைகளினின்றும் உயிர் விடுதலை பெறுதலேயாகும்.

    பிரமசூத்திரம் என்னும் நூலுக்குச் சங்கராசாரியர் உரை
    எழுதினார். அந்த உரையில் இறை, உயிர், உலகு என்பன
    ஒன்றுதான் என்று கேவலாத்துவிதக் கொள்கையினை
    (அத்வைதம்) நிலைநாட்டினார். பிரமசூத்திரத்துக்கு இராமாநுசரும்
    உரை வகுத்தார். சித்து, அசித்து, ஈசுவரன் என்னும் முப்பொருள்
    உண்மையினை இராமாநுசர் சாதிப்பதற்கு பிரமசூத்திரமே
    துணையாயிற்று. ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத்திவ்வியப்
    பிரபந்தப்
    பயிற்சியினாற் பெற்ற ஞானச்செல்வமே இத்தகைய
    விளக்கத்திற்குக் காரணம் என்பர்.

    இராமாநுசர் சங்கரருக்குப் பின்வந்தவர். நிர்க்குணப் பிரமம்
    (உருவும் பண்பு மற்ற கடவுள்) என்ற சங்கரரின் கோட்பாடு
    அறிவாளிகளுக்கு ஏற்றதாக அமையலாம். ஆனால்
    பெரும்பான்மையோராக இருக்கும் சாதாரண மக்களுக்குத்
    தேவையான இதய பூர்வமான அனுபவம் அதில் கிடைக்காது
    என்று உணர்ந்தவர் இராமாநுசர். எனவே அனைவர்க்கும்
    ஏற்றதான பக்திமார்க்கத்தையும் அதன் எல்லை நிலமான
    பிரபத்தியையும் (சரணாகதி நெறி) அவர் கண்ட தரிசனத்தின்
    நிலைத்தூண்களாக நிறுவினார் அவர். சங்கரரே பின்னொரு
    காலக் கட்டத்தில் பக்தியை முன்னிறுத்தி, பஜகோவிந்தம் எனும்
    நூலைப் பாட நேர்ந்ததையும் நாம் இங்கு நினைத்துப் பார்க்க
    வேண்டும்.

    தம்காலத்தில் வழங்கிய தத்துவங்கள் அனைத்தையும் கற்றுக் கரை கண்டவர் இராமாநுசர். அவர் இயற்றிய
    ஸ்ரீபாஷ்யத்தைப் படித்தால் அவரின் பல திறப்பட்ட
    தத்துவப்புலமை புலனாகும் என்பர். எனினும் தத்துவ
    விசாரணையால் மட்டும் அவர் மனம் நிறைவு காணவில்லை.
    இறைவனை அணுகுவதற்கு அறிவு வழியை விட இதய (அன்பு)
    வழியே சிறந்தது
    என்று கருதினார். எனவே இறைவழிபாட்டில்
    அழகுணர்ச்சியையும் இணைத்துக் கடவுளைப் புவனசுந்தரனாகப்
    பாவித்து
    வணங்கும் நெறியை இராமாநுசர் அறிமுகம் செய்தார்.
    இந்த நெறியை மக்களின் மனத்தைப் பெரிதும் கவர்ந்தது.
    இதனால் வைணவம், மக்கள் இயக்கமாக அவர் காலத்தில்
    மலரத் தொடங்கியது. சத்தியம், ஒழுக்கம், அழகு ஆகிய
    மூன்றையும் ஒருசேரக் கண்ட தத்துவமே இராமாநுசரின் தரிசனம்
    ஆகும்.

    கர்மத்தை வலியுறுத்தியது சநாதன தர்மம். ஆனால்
    இராமாநுசர், ஒருவன் எந்தச் சாதியில் பிறந்திருந்தாலும்
    இறைவனுடைய லீலைகளில் (அருட்செயல்கள்) மனம் ஈடுபட்டால்
    அவனருளைப் பெறுவதற்கு உரிமையுண்டு என்று நம்பினார்.
    இந்த நம்பிக்கையின் அடிப்படையில் அவர் வளர்த்த
    வைணவநெறி மக்களிடம் செல்வாக்குப் பெற்றதில் வியப்பில்லை
    அல்லவா?

    “விசிட்டாத்வைதம் சமய ஒழுக்கத்தையும் சமய
    அனுபவத்தையும் விளக்குகிறது. ஆனால் அது வெறும்
    கொள்கைகளின் அடுக்கு அல்ல. செயலைத் தன்
    அடிப்படையாகக் கொண்டு விளங்கும் வாழ்க்கை விளக்கம் அது.
    இறைவனருள் எல்லாச் சமயத்தினருக்கும் சாதியினருக்கும் உண்டு
    என்ற முற்போக்கான கருத்தை உலகுக்கு அளித்தது அதுவே”
    என்று அறிஞர்கள் இராமாநுசர் கண்ட நெறியைப் பாராட்டிக்
    கூறியுள்ளனர். இராமாநுசர் வகுத்த வைஷ்ணவ மதத்தின்
    அரசியல் வியாக்கியானமே காந்தியடிகள் கண்ட ராம-ராஜ்யம்
    என்றும் அவர்கள் கருத்துரைக்கின்றனர்.

    ஆழ்வார்களின் பாசுரங்களை அடியொற்றி இராமாநுசர்
    வளர்த்த பக்திநெறி வடநாட்டிலும் பரவியது; இராமானந்தர்,
    கிருஷ்ணசைதன்யர், இராமதாஸ் ஆகியோர் பிறமதத்
    தாக்குதல்களை எதி்ர்கொள்ளவும் அதுவே உதவியது. இதனை,
    சுவாமி விபுலானந்தர் பின்வருமாறு வியந்து பேசுவார்:

    “இராமாநுஜ முனியாகிய பகீரதர் தென்னாட்டுத்
    தெய்வக்காவிரி வெள்ளத்தினை வடநாட்டுக் கங்கையிலே
    கலக்குமாறு செய்தார். கலப்பினால் ஏற்பட்ட அன்பு வெள்ளம்
    பாரதநாட்டின் மேற்குத்திசையிலும் பரவியது. மும்மையும் செம்மை
    வாய்ந்த இப்பாரத நாட்டிலே அரியின் திருநாமம் ஆயிரமும்
    யாங்கணும் முழங்குவனவாயின”.

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:33:37(இந்திய நேரம்)