தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P20225l4-5.4 இயற்றிய நூல்களும் ஈடுபாடும்

  • 5.4 இயற்றிய நூல்களும் ஈடுபாடும்
    தமக்கென ஒரு தனித்தன்மையோடு வைணவ சமய நெறிகளை
    வகுத்து, வளர்த்த இராமாநுசர் பல நூல்களை இயற்றினார்.
    மேலும் அவர் திவ்வியப் பிரபந்தத்திலும் மிகுந்த ஈடுபாடு
    கொண்டிருந்தார்.
    நவநிதிகள் போலவும் நவரத்தினங்கள் போலவும் இராமாநுசர்
    இயற்றிய நூல்கள் ஒன்பது ஆகும்.
    (1)
    வேதார்த்த சங்கிரகம்
    (2)
    ஸ்ரீபாஷ்யம்
    (3)
    கீதாபாஷ்யம்
    (4)
    வேதாந்த தீபம்
    (5)
    வேதாந்த சாரம்
    (6)
    சரணாகதி கத்யம்
    (7)
    ஸ்ரீரங்க கத்யம்
    (8)
    ஸ்ரீவைகுண்ட கத்யம்
    (9)
    நித்ய கிரந்தம்

    என்பன அவை. இவையாவும் வடமொழியில் அமைந்தவை.
    தமிழில் ஒருநூல்கூட அவர் இயற்றவில்லை
    . “அவர்
    அருளிச்செய்ததாக ஒரு திராவிட பிரபந்தமும் இல்லையன்றோ”
    என்பார் பிள்ளைலோகம் ஜீயர்.

    தமிழ் மண்ணிற் பிறந்தவர் இராமாநுசர். தத்துவ
    விளக்கத்திற்கு ஆழ்வார்களின் அமுதமொழிகளையே
    அருந்துணையாகக் கொண்டவர். பிரமசூத்திரத்துக்கு
    உரையெழுதுகையில் - ஐயம் ஏற்பட்ட இடங்களில் எல்லாம்
    திருவாய்மொழிப்
    பாசுரங்களைக் கொண்டே ஐயம் அகற்றி
    அறுதியிட்டதாகக் கூறுகிறது ஆசார்யஹிருதயம் என்னும் நூல்.

    திருமாலையாண்டான், திருமலைநம்பி, திருக்கோட்டியூர்
    நம்பி, பெரியநம்பி, திருவரங்கப்பெருமாளரையர் ஆகிய
    ஐம்பெரும் ஆசிரியர்களிடம் கற்கத் தக்கவற்றை நாடிக் கற்றவர்
    இராமாநுசர். மாலாதரர் என்னும் திருமாலையாண்டானிடம்
    திவ்வியப்பிரபந்தத்தின் நுண்பொருள்களையெல்லாம் அவர்
    கற்றுக்கொண்டார். தம்முடைய சீடர்களிடத்தும் ஆழ்வார்
    பாசுரங்களைப் படித்தாக வேண்டும் என்று வலியுறுத்தினார்.
    அவரே பல சமயங்களில் நாலாயிரத்தைச் சேவித்துக்
    கொண்டேயிருப்பது வழக்கம். திருமாலிருஞ்சோலைமலை
    என்றேன்
    என்னும் திருவாய்மொழிக்கு (10-8-1)ச் சொல்லப்படும்
    ஐதிகம் இதனை எடுத்துக்காட்டும்.


    திருவரங்கப்பெருமாள்

    “நம்மிடத்து இறைவன் இருப்பதால் இந்த உயிரையும்
    உடலையும் அவன் இருப்பதற்குத் தகுதியுள்ள இடமாகச் செய்தல்
    வேண்டும். நாம் தகுதியோடு வாழ முற்பட்டால் பரமபதத்தைக்
    காட்டிலும் இக உலக வாழ்வு நன்று” என்னும் கருத்துக்
    கொண்டவர் இராமாநுசர். இதன் விளக்கமாகத் தொண்டரடிப்
    பொடியாழ்வாரின் பாசுரம் ஒன்றை அவர்
    எடுத்துக்காட்டுவதுண்டு.

    பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச்செங்கண்
    அச்சுதா: அமரர் ஏறே: ஆயர்தம் கொழுந்தே என்னும்
    இச்சுவை தவிரயான்போய் இந்திரலோகம் ஆளும்
    அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே:

    (திருமாலை : 2)

    (அச்சுதா = அடியவரை ஒருநாளும் நழுவவிடாதவனே; அமரர்
    ஏறே
    = பரமபதத்தில் உள்ள நித்ய சூரிகளுக்குத் தலைவனே.)

    பலரும் அறிந்த பாசுரம் இது. இப்பாசுரம் கூறும் உண்மையை
    வற்புறுத்த, இராமாநுசர் மூன்று நூல்கள் இயற்றியுள்ளதாகக்
    கூறுவர். அவை சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், வைகுண்ட
    கத்யம் என்பன.

    இராமாநுசர் திவ்வியப்பிரபந்தங்களை ஆழக்கற்றிருந்தார்
    என்பதற்கு வைணவ உரைகளில் வரும் ஐதிகங்கள் சான்று
    பகர்கின்றன. கூரத்தாழ்வான் மறைந்தபோது,

    ஒருமகள் தன்னை உடையேன்
    உலகம் நிறைந்த புகழால்
    திருமகள் போல வளர்த்தேன்
    செங்கண்மால்தான் கொண்டு போனான்

    என்று பெரியாழ்வார் பாசுரத்தைச் சொல்லி, ஆண்டாளைப்
    பிரிந்த அந்த ஆழ்வாரைப் போலவே வருந்தினாராம். சில
    பாசுரங்களுக்கு அவர் கூறிய நுட்பமான பொருளாட்சிகளும்
    (நிர்வாஹம்) உரைகளில் பதிவு செய்யப்பட்டுள்ளன. துயர்
    அறுசுடர் - அடி
    என்னும் திருவாய்மொழித் தொடருக்கு
    முன்னோர்கள் சொன்ன துயர் அறுக்கும் சுடரடி என்ற
    பொருளுடன் நிறைவடையாமல், துயர் அறும் சுடர்அடி என்றும்
    பொருள் கொண்டார். அதாவது அடியவர்கள் துயர்தீரத்
    தன்துயரம் தீரும் திருவடி
    என்பது இவர் கொண்ட
    கருத்தாகும். அடியவர் துயரமே அவன் துயரமுமாகும் என்று
    சொல்லும்படி ஆண்டவனின் ஒப்பற்ற அருளின் திறனைத்
    திருவாய்மொழியின்
    துணைகொண்டு நிறுவிக் காட்டினார்
    அவர். அன்றியும் ஆழ்வார் பாசுரங்களின் பொருளை
    விளக்குதற்கு - இறையனார் களவியல் போன்ற தமிழ்
    நூல்களிலிருந்து அவர் மேற்கோள் காட்டியிருப்பதும் அவரின்
    தமிழ்ப்புலமைக்குச் சான்றாகின்றது.

    எனினும் அவர் பிரமசூத்திரத்துக்கு விரிவுரை செய்தது
    போல, திவ்வியப்பிரபந்தங்களுக்கு உரையெழுதவில்லை.
    அத்தகையதொரு வேண்டுகோள் அவர்முன் வைக்கப்பட்டபோது,
    தாம் உரையெழுதாமைக்கான காரணத்தைப் பின்வருமாறு
    விளக்கினார்.

    “அவரவர் அறிவுத்திறனுக்கும் பக்திச்சிறப்புக்கும் ஏற்பப்
    பொருள் சுரப்பன ஆழ்வார் பாசுரங்கள். அதற்கு நான்
    உரையிட்டால் வரம்பிட்டது போல் ஆய்விடும். சில
    மந்தமதிகளுக்கு இவ்வளவே பொருள் என்று தோன்றும்”

    எனவே தம் சீடரான திருக்குருகைப்பிரான் பிள்ளான்
    என்பவரைத் திருவாய்மொழிக்கு உரையெழுதுமாறு பணித்தார்.
    அதன் பயனாய் வந்ததே ஆறாயிரப்படி உரை விளக்கம்.
    அதன்பின்னர் நஞ்சீயரின் ஒன்பதினாயிரப்படியும்,
    பெரியவாச்சான் பிள்ளையின் இருபத்திநாலாயிரப்படியும்,
    நம்பிள்ளையின் முப்பத்தாறாயிரப்படியும், அழகிய
    மணவாளச்சீயரின் பன்னீராயிரப்படியும் எழுந்தன. இவை
    யாவும் பகவத்விஷயம் என்னும் பெயரில் எழுத்தெண்ணிக்
    காக்கப்படும் ஞானச்செல்வங்களாகத் திகழ்கின்றன.
    திருவாய்மொழியைக் காலமெல்லாம் கட்டிக்காக்கும்
    அரண்களாகவும் விளங்குகின்றன. அதனால்தான்
    ‘திருவாய்மொழியை ஈன்ற முதல்தாய் சடகோபன்
    (நம்மாழ்வார்) என்றும், ‘மொய்ம்பால் வளர்த்த இதத்தாய்
    இராமாநுசன்
    ’ என்றும் வைணவ உலகம் கொண்டாடுகின்றது.
    (இதத்தாய் = வளர்ப்புத்தாய்)

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:33:40(இந்திய நேரம்)