தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P20225l2-5.2 இராமாநுசரின் கொள்கையும் செயலும்

  • 5.2 இராமாநுசரின் கொள்கையும் செயலும்
    இராமாநுசர் சாதிவேறுபாடற்ற ஒரு பொதுநெறியை
    உருவாக்கினார். இவர் தான்பெற்ற இன்பம் பிறரும் பெறவேண்டும்
    என்ற வள்ளன்மையும் உடையவர்.
    திருமாலைப் பரம்பொருளாய்க்கருதிச் சரணடைய
    விரும்பியவர்கள் அனைவரும் வைணவர்கள். அவர்களுக்குள்
    சாதி வேற்றுமை இல்லை - என்று கருதியவர் இராமாநுசர்.
    இக்கருத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், நால்வகைக்
    குலத்திற்கும் கீழ்ப்பட்டவர்கள் என்று கருதப்பட்டிருந்தவர்களைத்
    திருக்குலத்தாராகக்
    கண்டு போற்றியது அவர் திருவுள்ளம்.
    மேல்கோட்டையில் (மைசூர்) திருமால் கோயில் கட்டுவதற்கு
    அவர்கள் செய்த உதவியைப் பாராட்டி, அவர்கள் கோயிலுக்குள்
    சென்று வழிபடவும் அனுமதி அளித்தார். பல நூற்றாண்டுகளுக்கு
    முன்னே அரிஜனங்களுடைய ஆலயப்பிரவேசத்துக்கு
    அடிகோலியவர் அவர். இதனைப் புக்கனன் (Buchanan) போன்ற
    வரலாற்றாசிரியர்கள் ஆதாரப்பூர்வமாக விவரித்துள்ளனர்.
    ஸ்ரீரங்கப்பட்டணம், போலூர் ஆகிய கர்நாடக நகரங்களில்
    உள்ள பெருமாள் கோயில்களில் திருக்குலத்தாருக்குத்தான்
    (Harijans) சிறப்பு மரியாதை செய்ய வேண்டுமென்று இராமாநுசர்
    ஆணை பிறப்பித்ததாகப் புக்கனன் கூறுகிறார்.

    இராமாநுசர், சாதிவேறுபாடுகளை அடியோடு நிராகரித்தார்.
    சாதிவேறுபாட்டை ஒழிக்கும் வகையில் - வைணவம்
    அனைவர்க்கும் உரித்தானது
    என்று அறிவித்தார். வெறும்
    உபதேசத்தோடு நிற்கவில்லை அவர். திருமால் அடியார்
    கூட்டத்தில் (பாசுவத கோஷ்டி) சாதியைக் குறிப்பிடுவது (ஜன்ம
    நிரூபணம்) கூடாது என்னும் கொள்கையைத் தாமே
    கடைப்பிடித்தார். நடைமுறைப்படுத்திக் காட்டினார். அவர் தம்
    வாழ்க்கை நிகழ்ச்சிகளே இதனை உறுதி செய்கின்றன.

    காவிரியில் நீராடப்போகும்போது அந்தணரான கூரேசரில்
    தோள்மீது தம் கையை இட்டுச் செல்வாராம் இராமாநுசர். நீராடித்
    திரும்பும்போதோ, தாழ்த்தப்பட்டவரான உறங்காவில்லிதாசரின்
    தோள்மீது அவரின் திருக்கை இருக்குமாம். சாதிப்
    பற்றுடையவர்கள் இந்தக் காட்சி கண்டு
    மருண்டார்கள்; திகைத்தார்கள். ஆனால் இராமாநுசரோ,
    நால்வகைச்சாதி நாராயணனுக்கு இழைக்கும் அநீதி
    என்று
    உணர்ந்தவர். அங்ஙனம் உணர்ந்தமையினாலே, தம் வாழ்விலும்
    பொதுமையுணர்வை அப்படியே கடைப்பிடித்துக் காட்டினார்
    அவர். அவர் செய்த அரியவற்றுள் எல்லாம் அரிய செயல் இது.
    இச்செயல்களுக்குச் சிகரம் வைத்தாற் போல அவர் வாழ்வில்
    ஒளிவிடும் உயரிய நிகழ்ச்சி ஒன்று உண்டு. அது அவரது
    வள்ளன்மையைக் காட்டும்.

    திருக்கோட்டியூர் நம்பியிடம் ரஹஸ்யார்த்தங்களை (சமய
    நுண்பொருளை)ப் பெறுவதற்காகப் பதினெட்டு முறை நடந்தார்
    இராமாநுசர். திருவரங்கத்துக்கும் திருக்கோட்டியூருக்குமாகப்
    பலமுறை அலைக்கழித்த பிறகு நம்பிகள் மனமிரங்கி,
    ‘இவ்வர்த்தத்தை நீர் யாருக்கும் சொல்லக்கூடாது’ என்று
    நிபந்தனையிட்டு, நலந்தரு சொல்லான நாராயண மந்திரத்தை
    உபதேசித்தார். பிரணவத்தின் ஆழ்பொருளையும் எட்டெழுத்தின்
    (திருமாலைப் போற்றும் திருமந்திரம்) விரிபொருளையும்
    விளக்கிக் கூறினார். விளக்கம் பெற்றதுதான் தாமதம்.
    விரைந்தெழுந்தார் இராமாநுசர். தம்மை மறந்தார். தம்
    ஞானாசிரியரான திருக்கோட்டியூர் நம்பி தமக்கிட்ட
    கட்டளையையும் மறந்தார். அவ்வூர்க்கோயிலின் உச்சிமீது ஏறி,
    சேரவாரும் செகத்தீரே என்று மக்களைக் கூவியழைத்து,
    நம்பியுரைத்த மறைப்பொருளையெல்லாம் சாதாரண மக்கள்
    முன்னே வெளியிட்டார். பலமுறை நடந்து துவண்டு கேட்ட
    பரமார்த்தத்தைப் பலரும் அறிய ஓலக்கமாக வைத்து
    உபதேசித்தார். அந்நிலையில், தானறப் பெய்து மாயும்
    தடமுகில்
    போல் அவர் விளங்கினார். (தடமுகில் -
    பெரியமேகம்) நம்பி அவரை அழைத்து, என் கட்டளையை
    மீறியதால் நீர் என்ன பெற்றீர்?
    என்று வினவ, அழிவில்லாத
    நரகம் பெற்றேன்; நசிப்பது நான் ஒருவன் மட்டுமே.
    இத்திரள்கள் எல்லாம் ஆனவான் பேரின்பத்தை
    அருந்துமே
    என்று பதில் உரைத்தார் இராமாநுசர். (ஆனவான்
    பேரின்பம்
    - வைகுந்தம்) சீடனின் பக்குவ நிலை கண்ட
    ஆசார்யர், காக்கும் ஆற்றலால் உயிர்களுக்கெல்லாம்
    உடையவன் இறைவன்; அன்பினால் நீரும் உடையவர்
    ஆனீர்
    என்றுசொல்லி அவரை ஆரத்தழுவிக் கொண்டார்.
    அன்றுமுதல் இராமாநுசரை உடையவர் என்னும் பெயரால்
    குறிப்பது பெருவழக்காயிற்று.

    காரேய் கருணை கரைபுரண்டபடியால் அர்த்தத்தின் சீர்மை
    பாராமல், சம்சாரிகள் (பொதுமக்கள்) படும் அனர்த்தத்தை
    (கேட்டினை) நோக்கியே, இங்ஙனம் மறைப்பொருளை
    வெளியிட்டார் இராமாநுசர். (காரேய்கருணை - கரியமழை
    மேகம் போன்ற கருணை) இதனால் கருணைக் கடலான
    எம்பெருமானைக் காட்டிலும் கருணையில் விஞ்சி நின்றார் அவர்.
    ஆகவே எம்பெருமானார் (எமக்கெல்லாம் தலைவர்) என்னும்
    சிறப்புப் பெயரும் அவருக்கு ஏற்பட்டது. இதனை அங்கீகரித்த
    திருவரங்கத்து இறைவனும், ஸ்ரீவைஷ்ணவ மதத்துக்கு
    எம்பெருமானார் தரிசனம்
    என்றே பெயர் சூட்டி
    மகிழ்ந்தானாம். மணவாளமாமுனிகள் தாம் பாடிய
    உபதேசரத்தினமாலையில்,
    கீழ்க்காணும் வெண்பாக்களில்
    இதனைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

    ஓரான் வழியாய் உபதேசித்தார் முன்னோர்
    ஏரார் எதிராசர் இன்னருளால் - பாருலகில்
    ஆசையுடை யோர்க்கெல்லாம் ஆரியர்காள்: கூறும்என்று
    பேசி வரம்பறுத்தார் பின் (37)

    (ஒரான்வழியாய் உபதேசித்தல் = ஆசார்யர்கள் ஒருவருக்குப்
    பின் ஒருவராய் உபதேசித்துக்கொண்டு வருதல்; எதிராசர் =
    இராமாநுசர்; வரம்பறுத்தார் = ஓராண்வழி எனும் வரம்பை
    அறுத்துப் பெருவழியாக்கினார்.)

    எம்பெருமா னார்தரிசனமென்றே யிதற்கு
    நம்பெருமாள் பேரிட்டு நாட்டிவைத்தார் - அம்புலியோர்
    இந்தத் தரிசனத்தை எம்பெருமானார் வளர்த்த
    அந்தச் செயலறிகைக் கா (38)

    (நம்பெருமாள் = திருவரங்கத்து இறைவன்)

    நாதமுனிகள் காலம் தொடங்கி வைணவக் கல்வி
    ஓராண்வழியாகவே உபதேசிக்கப்பட்டு வந்தது. அதாவது ஓர்
    ஆசிரியனிடத்தில் (ஆசார்யன்) சீடன் ஒருவன் மட்டுமே
    கற்கலாம். ஒருவன் கற்று முடித்த பின்னரே மற்றொருவன்.
    பின்னர் அச்சீடன் ஆசான் ஆன நிலையிலும் அவனிடத்தே
    ஒருவன். இப்படி வழிவழியாகப் பாதுகாக்கப்பட்டு வந்தது தான்
    ஓராண்வழி முறை. இதனை மாற்றி முன்னோர் செய்த வரம்பினை
    அறுத்து, ஆசையுடையவர்களுக்கெல்லாம் அறிவியுங்கள்
    என்றார் இராமாநுசர். அதன் அடையாளமாகத்தான்
    திருக்கோட்டியூர் நம்பியிடத்தே தாம் பெற்ற திருமந்திரப்
    பொருளை உலகுக்கெல்லாம் அறிவித்தார் அவர். வழிவழியாக
    நிலவிய மரபைத் தம் வள்ளன்மையால் மாற்றியவர் இராமாநுசர்.

    தன் ஆத்ம லாபத்துக்காக உலகத்தையும் தியாகம்
    செய்துவிடலாம்
    என்பது தத்துவப் பேரறிஞர்களின் கொள்கை.
    வேதரிஷிகள் காலந்தொட்டு இதுவே நிலைமை. ஆனால்
    இராமாநுசரோ உலக மக்களுக்காக இரங்கி, தம் ஆத்ம
    லாபமாகிய முக்தியையும் துறக்கத் துணிந்தார். அதனால் மற்றைய
    முனிவர்களிலும் மேம்பட்டு முனிவர்களின் தலைவர் என்னும்
    பொருளில் யதிராசர் ஆனார். எனவேதான்,

    தன்னுயிர் தன்னைக்கொண்டு
    தான்பிழைத் திடுவதன்றி,
    மன்னுயிர்க்கு இரங்கித் தன்னை
    மைந்தனே: மாய்க்கப் புக்கார்
    இந்நிலத்து இல்லை: இல்லை:
    ஏழுலகத்தும் இல்லை.............

    (மன்னுயிர் = நிலைபெற்ற பிற உயிர்கள்)

    என்று வியந்தார் திருக்கோட்டியூர் நம்பி. இராமாநுசரின் வரவால்
    பக்தி நெறியாளர் பெற்ற பெரும்பயன் இது.


    1.
    இராமாநுசருக்குரிய சிறப்புப் பெயர்கள் மூன்றனைக்
    குறிப்பிடுக.
    2.
    இந்தியத் தத்துவஞான வரலாற்றில் முக்கியமானவர்கள்
    யாவர்?
    3.
    தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இராமாநுசர் சூட்டிய பெயர் எது?
    4.
    ஆசையுடையவர்களுக்கெல்லாம் அறிவியுங்கள் என
    தம் கொள்கையை எவ்வாறு செயல்படுத்தினர்?
புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:33:34(இந்திய நேரம்)