தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- தொகுப்புரை

  • 3.5

    தொகுப்புரை

     
    • நிறுவனங்களை ஒருநாட்டு / பன்னாட்டு நிறுவனங்கள், பொதுத்துறை / தனியார்துறை நிறுவனங்கள், இலாப நோக்கு / இலாப நோக்கில்லா நிறுவனங்கள், பொருள் விற்பனை / சேவை வழங்கு நிறுவனங்கள், சிறிய / நடுத்தர / பெரிய நிறுவனங்கள் எனப் பிரித்துப் பார்க்கலாம்.
    • ஒரு நிறுவனத்தின் கட்டமைப்பு முறை, பணி, செய்பொருள், வாடிக்கையாளர், புவிப்பிரிவு ஆகிய நான்கில் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு அமையலாம். ஒன்றுக்கு மேற்பட்டவை ஒன்றுக்குள் ஒன்றாக அமைந்த கலப்புக் கட்டமைப்பாகவும் இருக்கலாம்.
    • மேலாண்மை அமைப்பு என்பது நிறுவனத்தின் தலைவர், அனைத்து மட்டங்களிலுமுள்ள கண்காணிப்பாளர்கள், மேலாளர்கள், இயக்குநர்கள், செயலதிகாரிகள், கணக்காளர்கள் போன்ற நிர்வாகிகள் அனைவரையும் உள்ளடக்கியதாகும்.
    • நிறுவனச் செயல்பாட்டில் தீர்மானிக்கும் அல்லது முடிவெடுக்கும் அதிகாரம் பெற்றவரே மேலாண்மை அமைப்பின் அங்கமாகக் கருதப்படுவர்.
    • மேலாண்மை அமைப்பை மேல்நிலை, இடைநிலை, கீழ்நிலை மேலாண்மை என மூன்று அடுக்குகளாகப் பிரிக்கலாம்.
    • மேல்நிலை மேலாண்மை என்பது இயக்குநர்களின் குழுவையும் அக்குழுவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதன்மைத் தலைமை அதிகாரி அல்லது மேலாண்மை இயக்குநரையும், துணைத் தலைவர்களையும் கொண்டிருக்கும். நிறுவனம் தொடர்பான அதிமுக்கிய முடிவுகளை (Strategic Decisions) எடுக்கும். நிறுவனத்தின் உள்ளார்ந்த குறிக்கோளையும் நோக்கங்களையும் திட்டங்களையும் முடிவு செய்யும்.
    • இடைநிலை மேலாண்மை என்பது, பல்வேறு பணிப்பிரிவுகளின் மேலாளர்கள், துணை மேலாளர்களை உள்ளடக்கியது. நிறுவனத்தின் குறிக்கோளை எட்டுவதற்கான செயல்நுட்ப முடிவுகளை (Tactical Decisions) மேற்கொள்ளும். மேல்நிலை மேலாண்மை வரையறுக்கும் இலக்குகளை எட்டுவதற்குத் திட்டமிட்டு, பல்வேறு பணிப்பிரிவினருக்கும் இலக்குகளை நிர்ணயித்து, அவற்றை அடைவதற்கான செயல்நுட்பங்களை வகுத்துக் கொடுக்கும்.
    • கீழ்நிலை மேலாண்மை என்பது, நிறுவனத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் வேலை செய்யும் பணியாளர்களின் (Workers) உடனடி மேலாளர்கள், கண்காணிப்பாளர்களைக் கொண்டது. அன்றாடப் பணிகளைச் செவ்வனே நிறைவேற்றச் செயல்பாட்டு முடிவுகளை (Operational Decisions) மேற்கொள் ளும். இடைநிலை மேலாண்மை வகுத்துக் கொடுத்த இலக்குகளின்படி ஆற்ற வேண்டிய செயல்பாடுகளைத் திட்டமிட்டு, அவற்றைச் செய்து முடிப்பதற்கான வழிமுறைகளை வரையறுத்துக் கொடுக்கும்.
    • மேலாண்மை அமைப்பிலுள்ளோர், சரியான முடிவுகளை மேற்கொள்ள (to take right decisions), சரியான தகவல்கள் (right information), சரியான நேரத்தில் (at right time), சரியான நபருக்கு (to right person), சரியான வடிவமைப்பில் (in right format) சென்று சேரவேண்டும். இதுவே மேலாண்மைத் தகவல் அமைப்பின் அடிப்படை இலக்கணம் ஆகும்.
    • மேலாண்மைத் தகவல் அமைப்பில், அலுவலகத் தானியக்கமாக்க முறைமை, பரிமாற்றச் செயலாக்க முறைமை, தகவல் அறிவிப்பு முறைமை, தீர்மானிப்பு உதவி முறைமை, நிர்வாகத் தகவல் முறைமை எனப் பல கூறுகள் உள்ளன.
    • அலுவலகத் தானியக்கமாக்க முறைமையில் பயன்படும் அலுவலகப் பயன்பாட்டுக் கூட்டுத் தொகுப்பில் ஆவண உருவாக்கம் (சொற்செயலி), நிதி/கணக்கு (விரிதாள்), தரவுச் சேமிப்பு/செயலாக்கம் (தரவுத்தளம்), கடிதப் போக்குவரத்து (மின்னஞ்சல்) ஆகிய அனைத்துப் பணிகளுக்குமான மென்பொருள்கள் இடம்பெற்றுள்ளன.
    • கச்சாப் பொருள்களின் கொள்முதல், செய்பொருள் உற்பத்தி, சரக்குக் கையிருப்பு, விற்பனை ஆகிய அனைத்தையும் நிகழ்நேரச் (Realtime) சூழலில் செய்து முடிக்கப் பயன்படுவது ‘பரிமாற்றச் செயலாக்க முறைமை’ ஆகும்.
    • அன்றாட வணிக நடவடிக்கைகளின் சாரமான தகவல்களைப் பிழிந்தெடுத்து இடைநிலை மேலாண்மைக்கு வழங்கும் அமைப்பு ‘தகவல் அறிவிப்பு முறைமை’ ஆகும்.
    • நிறுவனச் செயல்பாடுகள் தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுப்பதிலும், அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதைத் தீர்மானிப்பதிலும் மேலாண்மை அமைப்புகளுக்கு உதவி செய்யும் தகவல் அமைப்பு ‘தீர்மானிப்பு உதவி முறைமை’ ஆகும்.
    • மேல்நிலை மேலாண்மையின் தீர்மானிப்புத் தேவைகளைக் கருத்தில்கொண்டு வடிவமைக்கப் பட்ட தனிச்சிறப்பான தீர்மானிப்பு உதவி முறைமையே ‘நிர்வாகத் தகவல் முறைமை’ ஆகும்.
    • பரிமாற்றச் செயலாக்க முறைமை, அகநிலை இலக்குகள் / எதிர்பார்ப்புகள், புறநிலைத் தகவல்கள் ஆகியவற்றை அடிபடையாகக் கொண்டு நிர்வாகத் தகவல் முறைமை செயல்படுகிறது.
    • அலுவலகத் தானியக்கமாக்க முறைமை கீழ்நிலை மேலாண்மைக்குப் பயன்படுகிறது. பரிமாற்றச் செயலாக்க முறைமை கீழ்நிலை, இடைநிலை மேலாண்மை அமைப்புகளுக்குப் பயன்படுகிறது. தகவல் அறிவிப்பு முறைமை இடைநிலை மேலாண்மைக்குப் பயன்படுகிறது. தீர்மானிப்பு உதவி முறைமை இடைநிலை, மேல்நிலை மேலாண்மை அமைப்புகளுக்குப் பயன்படுகிறது. நிர்வாகத் தகவல் முறைமை மேல்நிலை மேலாண்மைக்குப் பயன்படுகிறது.
புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 23:47:31(இந்திய நேரம்)