தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Coursee- நிதியியல் கணக்கீடுகள் (Financial Calculations)

  • 1.3 நிதியியல் கணக்கீடுகள் (Financial Calculations)

    வணிகம் சார்ந்த நிறுவனம் எனில் கொடுக்கல் வாங்கல் நிறையவே இருக்கும். வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள நிறுவனம் எனில் பணப் பற்று வரவுக் கணக்குகளைப் பராமரிக்க வேண்டிய தேவை இருக்கும். வணிகத்தில் ஈடுபடாத நிறுவனம் என்றாலும் குறைந்தது ஊழியர்களின் ஊதியம், கடன், முன்பணம், சேமநல நிதி போன்ற பல்வேறு கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொள்ள வேண்டியிருக்கும். இப்போதும் பல அலுவலகங்களில் பேரேடுகளில்தான் கணக்கு எழுதி வைக்கின்றனர். மனிதர்கள் போடும் கணக்குகளில் பிழை ஏற்படுவது தவிர்க்க முடியாதது. கணக்கீடுகளுக்கு கணிப்பியைப் பயன் படுத்துவதும் ஒரு தீர்வாக முடியாது. பிழையின்றித் துல்லியமாகக் கணக்கு வைக்கவும், கணக்கு வழக்குகளை உடனுக்குடன் வேகமாகச் செய்து முடிக்கவும் தேவை இருக்கிறது. அத்தேவையை நிறைவேற்றும் வழிமுறைகளைப் பார்ப்போம்.

    1.3.1 கொடுக்கல் வாங்கல் (Payments and Receipts)

    ஒரு வங்கியை எடுத்துக் கொள்ளுங்கள். வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளில் பணம் போடுவதும் பணம் எடுப்பதும் தினந்தோறும் நடைபெறும் நிகழ்ச்சிகள். முன்பெல்லாம் வங்கிகளில் பெரிய பெரிய பேரேடுகளில் வாடிக்கையாளர்களின் கணக்குகளைப் பதிந்து வைத்திருப்பர். வாடிக்கையாளர் கையில் ஒரு கணக்குப் புத்தகம் (Pass Book) இருக்கும். பணம் போடும்போதும் எடுக்கும்போதும் கணக்குப் புத்தகத்திலும் வங்கிப் பேரேட்டிலும் பதிவு செய்வர். பணம் போடவும் எடுக்கவும் நீண்ட வரிசைகள் நிற்கும். வரைவோலை வாங்கப் பல மணி நேரம் காத்திருக்க வேண்டும்.

    இரண்டு மணிக்குக் கொடுக்கல் வாங்கல் பணி முடிந்தபின், வங்கி அலுவலர்கள் அன்றைய பணப் பரிமாற்றங்களைக் கணக்குப் பார்த்து முடிக்க இரவு எட்டுமணி கூட ஆகிவிடும். அப்படிப் பார்த்தாலும் சில பிழைகள் நிகழ்ந்துவிடும். அலுவலர்கள் தங்கள் கைப்பணத்தைப் போட்டுச் சரிக்கட்ட வேண்டிய நிலையும் ஏற்படும். ஆனால் இப்போது பெரும்பாலான வங்கிகளில் இந்த முறை ஒழிக்கப்பட்டு விட்டது. அனைத்துப் பணப் பரிமாற்றங்களும் கணிப்பொறி யிலேயே பதிவு செய்யப்படுகின்றன. கணக்குப் புத்தகங்கள், பேரேடுகள் இல்லை. நாள் இறுதியில் கையிருப்புப் பணத்தை எண்ணி வைப்பது தவிர வேறு கூட்டல், கழித்தல் கணக்கீடுகள் இல்லை.

    வங்கிக்கே செல்லாமல் ‘தானியங்குக் காசாளி எந்திரம்’ (ATM) மூலம் பணம் எடுக்கவும் போடவும் பல வங்கிகளில் வசதி செய்துள்ளனர். வங்கிக் கணக்கிலிருந்து பணப் பரிமாற்றங்களை இணையம் வழி செய்துகொள்ளவும் வசதியுள்ளது. வாடிக்கையாளர்கள் வங்கிக்கு நேரில் வருவதையே தவிர்க்கும் படி வலியுறுத்தப்படுகிறார்கள்.

    இரயில் பயணத்துக்கான முன்பதிவை எடுத்துக்கொள்ளுங்கள். நீண்ட வரிசையில் நின்று பதிவு செய்ய வேண்டும். முன்பெல்லாம் பதிவேட்டில் எழுதுவர். பயணச்சீட்டில் பயணியின் விவரங்களைக் கையில் எழுதித் தருவர். ஒருவருக்குச் சீட்டுத் தரவே நீண்ட நேரம் ஆகும். ஒருவர் பயணச் சீட்டை ரத்து செய்யும்போது அடுத்துக் காத்திருப்போருக்குத் தானாகவே அந்த இடம் போய்ச் சேராது. ஆனால் இப்போதெல்லாம் முன்பதிவு கணிப்பொறி வழியாக விரைவாகப் பதிவு செய்யப்படுகிறது. ஒருவர் பதிவை ரத்து செய்யும்போது அந்த இடம் தானாக அடுத்தவர்க்குக் கிடைத்துவிடுகிறது. முறைகேடு நடப்பதற்கு வழியில்லை. வீட்டிலிருந்தபடியே இணையம் வழியாக முன்பதிவு செய்துகொள்ளவும் முடியும். பயணச் சீட்டு அஞ்சல் வழியே அனுப்பப்பட்டு வந்தது. இப்போது உங்கள் பயணச் சீட்டை நீங்களே அச்சிட்டுக் கொள்ள முடியும். விமானப் பயணத்துக்கான முன்பதிவும் முழுக்க முழுக்க இவ்வாறே நடைபெறுகிறது.

    இத்தகைய கொடுக்கல் வாங்கல் அனைத்தும் கணிப்பொறி வழியாகவே நடைபெறுகிற காரணத்தால் விற்று வரவுக் கணக்கு வழக்குகள் உடனுக்குடன் துல்லியமாக எவ்விதப் பிழையுமின்றி செய்து முடிக்கப்படுகின்றன. அதுமட்டு மின்றி, இதுபோன்ற தானியங்கு செயல்பாடுகளில் குளறுபடிகளும் முறைகேடு களும் நடப்பதற்கு வழியில்லை என்பதும் குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

    1.3.2 ஊதியமும் கணக்குவைப்பும் (Pay and Accounts)

    எந்தவோர் அலுவலகம் ஆயினும் அலுவலர்களும் பணியாளர்களும் அதிகாரி களும் பணியாற்றுவர். அவர்களின் ஊதியம், கடன், முன்பணம், சேமநல நிதி போன்ற கணக்கியல் பணிகள் தவிக்க முடியாதவை. ஒவ்வொருவருக்கும் மாதந் தோறும் ஊதியமும் ஆண்டு தோறும் சரியான மாதத்தில் மிகுப்பூதியமும் (Yearly Increment) ஒழுங்காக வழங்கப்பட வேண்டும். வாங்கிய கடனுக்குரிய தவணைத் தொகையைப் பிடித்தம் செய்ய வேண்டும். முன்பணம் சரிக்கட்டப்பட வேண்டும். சேமநல நிதியில் கடன் கேட்போருக்கு கணக்கில் பணம் இருப்பின் வழங்கப்பட வேண்டும். அதற்கான தவணைத் தொகையைப் பிடித்தம் செய்ய வேண்டும். இவை தவிர போனஸ், ஊக்கத் தொகை, மருத்துவப் படி, சுற்றுலாக் கொடை போன்று இன்னும் எத்தனையோ கணக்குவைப்புப் பணிகள் உள்ளன.

    ஊதியக் கணக்குவைப்புகளைப் பேரேடுகளில் எழுதி வைத்துக் கொண்டு இரன்டு மூன்று எழுத்தர்கள் குழம்பிக் கொண்டிருப்பர். எவ்வளவு கவனமாகக் கணக்கு வைத்துக் கொண்டாலும் ஊழியர்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வைப்பது அவ்வளவு எளிதில்லை. சிலருக்கு ஆண்டு மிகுப்பூதியம் விட்டுப் போகும். சிலரது கடன் தொகைக்கான தவணைத் தொகை பிடிக்கப்படாமல் விட்டுப் போகும். சேமநல நிதியில் கடன் வாங்க விண்ணப்பித்த ஊழியருக்குக் கடன் வழங்க பல நாட்கள் ஆகும். ஊதியம் மற்றும் கணக்குவைப்புப் பிரிவில் ஏராளமான ஊழியர்களை நியமித்து அவர்களின் ஊதியக் கணக்குகளையும் பார்க்க வேண்டியிருக்கும்.

    கணிப்பொறியில் ஊதியக் கணக்குகளைப் பராமரிப்பதற்கென மென்பொருள்கள் உள்ளன. இன்றைக்குப் பல்வேறு பெரிய நிறுவனங்களில் அத்தகைய மென்பொருள்களையே பயன்படுத்துகின்றனர். அதனால் பலநூறு மணிகள் மனித நேரம் மிச்சமாகின்றது. கணக்கும் பிழையின்றித் துல்லியமாக இருக்கின்றது. எவருக்கும் ஆண்டு மிகுப்பூதியம், சேமநல நிதி பிடித்தம், கடன் தவணை பிடித்தம் விட்டுப் போவதில்லை. ஊழியர்களின் தேவைகளையும் கோரிக்கைகளையும் உடனுக்குடன் நிறைவேற்ற முடிகின்றது.

    1.3.3 உடனடித் தானியங்கு கணக்கீடுகள் (Instantaneous Automatic Calculations)

    அந்தக் காலத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல்களை மனக் கணக்காகவே போட்டோம். பெரிய கணக்குகள் எனில், தாளையும் பேனாவையும் எடுத்து வைத்துக் கொள்வோம். கணிப்பியின் வருகைக்குப் பின் அதைப் பயன்படுதிச் சின்னக் சின்னக் கணக்குகளைப் போட முடிந்தது. ஆனாலும் அலுவலகங்களில் நாம் போடவேண்டிய கணக்குகள் கணிப்பியில் போடும் சின்னக் கணக்குகள் மட்டுமல்ல.

    வரும் ஆண்டுக்குரிய வரவு செலவுத் திட்டத்தைத் (Budget) தயாரிக்கிறீர்கள். பொருளின் விற்பனை, வருமானம், வங்கிக் கடன், அதற்கான வட்டி, பிற செலவுகள், இலாபம் அனைத்தையும் கணக்கிட்டுள்ளீர்கள். நீங்கள் எதிர்பார்த்த இலாபம் வரவில்லை. பொருளின் விலையைக் கூட்டலாம்; அல்லது பொருளின் விற்பனையை அதிகரிக்கலாம்; அல்லது செலவைக் குறைக்கலாம். இவற்றுள் எதில் மாற்றம் செய்தாலும் முழு வரவு செலவுத் திட்டத்தையும் மீண்டும் முதலிலிருந்து தயாரிக்க வேண்டும். தயாரித்து முடித்தபின் வங்கிக் கடனுக்கான வட்டி ஒரு சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தகவல் வருகிறது. இப்போது மீண்டும் வரவு செலவுத் திட்டத்தைப் புதிதாகத் தயாரிக்க வேண்டியிருக்கும். ஆனால் ‘விரிதாள்’ என்னும் கணிப்பொறி மென்பொருளில் வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்தால், ஏதேனும் ஒரு தொகையை மட்டும் மாற்றி இறுதியில் இலாபம் என்ன என்று பார்த்துக் கொள்ள முடியும். வட்டி விகிதத்தை மாற்றி அதன் விளைவை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம். கணக்கீடுகள் எதையும் திரும்பப் போட வேண்டிய தேவையே இல்லை. வரவு செலவுத் திட்டத்தையும் புதிதாகத் தயாரிக்க வேண்டிய தேவையில்லை.

    உங்கள் அலுவலகத்தில் ஆயிரம் பணியாளர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களுடைய வருமானவரிக் கணக்கைத் தயாரித்து அதற்கேற்ப வருமான வரியை அவர்களுடைய ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்ய வேண்டும். இதற்கு எவ்வளவு காலம் பிடிக்கும்? ஒவ்வொருவருடைய வருமானம், சேமிப்பில் சிறு சிறு மாற்றங்கள்தாம் இருக்கும். வருமான வரிக் கணக்கீடு என்பது எல்லாருக்கும் ஒன்றுதான். என்றாலும் ஒவ்வொருவருக்கும் தனித் தனியாகத்தான் வருமான வரியைக் கணக்கிட வேண்டும். ஆனால் ‘விரிதாள்’ (Spreadsheet) மென்பொருளில் இக்கணக்கைத் தயாரித்தால் ஒவ்வொரு வருக்கும் மீண்டும் மீண்டும் கணக்கிடத் தேவையில்லை. ஒரே ஒருமுறை கணக்கைத் தயாரித்து வைத்துக் கொண்டு, அவரவருடைய வருமானம், சேமிப்பில் உள்ள சிறு சிறு மாற்றங்களை மட்டும் அவற்றுக்¢குரிய கலங்களில் (Cells) செய்தால் போதும். கட்ட வேண்டிய வரி இருக்கும் கலத்தில் உள்ள தொகை உடனுக்குடன் (instantaneously) தானாகவே (automatically) மாறும்.

    இதுபோன்ற கணக்கீடுகளுக்கு மரபுவழி முறைகள் பயன்தரா. அக்காலத்தில் இதுபோன்ற தேவைகள் எழவில்லை. ஆனால் இக்காலத்தில் புதிய புதிய தேவைகள் உருவாகின்றன. இதுபோன்ற நவீன காலத் தேவைகளை எதிர்கொள்ள நவீனக் கணக்கீட்டு முறைகள் கட்டாயத் தேவையாகும். ‘விரிதாள்’ போன்ற மென்பொருள்கள் அலுவலகத் தானியக்கமாக்கத்துக்கான இத்தகைய தேவைகளைப் பெருமளவு நிறைவு செய்கின்றன.

         தன் மதிப்பீடு : வினாக்கள் - I
    1.
    தாள்கோப்பு / கணிப்பொறிக் கோப்பு - வேறுபடுத்துக.
    2.
    தாள்கோப்பினால் ஏற்படும் இடர்ப்பாடுகளைக் குறிப்பிடுக.
    3.
    தட்டச்சு ஆவணத்தின் குறைபாடுகளை விளக்குக.
    4.
    சொல்செயலி மென்பொருளில் உருவாக்கும் ஆவணத்தின் நிறைகளைக் கூறுக.
    5.
    ‘சிவப்பு நாடாத்துவம்’ என்பது என்ன? அதை ஒழிப்பது எப்படி?
    6.
    கடிதப் போக்குவரத்தில் மரபுவழி அஞ்சல் முறையினால் ஏற்படும் பாதிப்புக்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.
    7.
    ‘மடல் உள்ளிணைப்பு’ என்னும் மென்பொருள் வசதியை விளக்குக.
    8.
    கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்டுள்ள நவீன மாற்றத்துக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.
    9.
    ஊதிய கணக்குகளைப் பேரேடுகளில் எழுதிவைத்துக் கையாள்வதால் ஏற்படும் குறைபாடுகளை விளக்குக.
    10.
    ‘உடனடித் தானியங்கு கணக்கீட்டை’ எடுத்துக்காட்டுடன் விளக்குக.
புதுப்பிக்கபட்ட நாள் : 23-06-2017 13:04:18(இந்திய நேரம்)