தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கிள்ளிமங்கலங்கிழார்


கிள்ளிமங்கலங்கிழார்

76. குறிஞ்சி
காந்தள் வேலி ஓங்கு மலை நல் நாட்டுச்
செல்ப என்பவோ, கல் வரை மார்பர்-
சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை
பெருங் களிற்றுச் செவியின் மானத் தைஇ,
தண் வரல் வாடை தூக்கும்
கடும் பனி அற்சிரம் நடுங்கு அஞர் உறவே.
பிரிவுணர்த்தச் சென்ற தோழிக்கு அவர் பிரிவு முன்னர் உணர்ந்த தலைமகள் சொல்லியது.- கிள்ளிமங்கலங்கிழார்

110. முல்லை
வாரார் ஆயினும், வரினும், அவர் நமக்கு
யார் ஆகியரோ-தோழி!-நீர
நீலப் பைம் போது உளரி, புதல
பீலி ஒண் பொறிக் கருவிளை ஆட்டி,
நுண் முள் ஈங்கைச் செவ் அரும்பு ஊழ்த்த
வண்ணத் துய்ம் மலர் உதிர, தண்ணென்று
இன்னாது எறிதரும் வாடையொடு
என் ஆயினள்கொல் என்னாதோரே?
பருவங் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்கு உரைத்தது; தலைமகனைக் கொடுமை கூறித் தலைமகளைத் தோழி வற்புறீஇயதூஉம் ஆம். - கிள்ளிமங்கலங் கிழார்

152. குறிஞ்சி
யாவதும் அறிகிலர், கழறுவோரே-
தாய் இல் முட்டை போல, உட்கிடந்து
சாயின் அல்லது, பிறிது எவன் உடைத்தே?
யாமைப் பார்ப்பின் அன்ன
காமம், காதலர் கையற விடினே,
வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகள், 'நீ ஆற்றுகின்றிலை' என்று.நெருங்கிய தோழிக்குச் சொல்லியது. - கிள்ளிமங்கலங் கிழார்

181. குறிஞ்சி
இது மற்று எவனோ-தோழி!-துனியிடை
இன்னர் என்னும் இன்னாக் கிளவி-
இரு மருப்பு எருமை ஈன்றணிக் காரான்
உழவன் யாத்த குழவியின் அகலாது,
பாஅல் பைம் பயிர் ஆரும் ஊரன்
திரு மனைப் பல் கடம் பூண்ட
பெரு முது பெண்டிரேம் ஆகிய நமக்கே?
தலைமகன் பரத்தையிற் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள் ஆற்றல் வேண்டித் தோழி இயற்பழித்தவழி, தலைமகள் இயற்பட மொழிந்தது. - கிள்ளிமங்கலங்கிழார்

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 08:12:07(இந்திய நேரம்)