Primary tabs
3. கடுவன் இளவெயினனார்:- இவர் செய்த பாடல்கள் 3, 4, 5; திருமாலையும் முருகக்கடவுளையும் வாழ்த்தியிருத்தலால் இவர் அவ்விருவரிடத்தும் அன்புடையவரென்று தெரிகிறது. மூன்றாம் நான்காம் பாடல்களில் திருமாலைத் துதித்திருக்கும் பகுதிகளும், அவருடைய நால்வகைவியூகம், வராக நரசிங்க வாமனாவதாரச் செயல்கள், அவர் அன்னமாகத் தோன்றிச்செய்த அரியசெயல்,
"வள்ளுரு ணேமியான் வாய்வைத்த வளைபோலத்
தெள்ளிதின் விளங்குஞ் சுரிநெற்றிக் காரியும்
ஒருகுழை யவன்மார்பி லொண்டார்போ லொளிமிகப்
பொருவறப் பொருந்திய செம்மறு வெள்ளையும்" (கலித். 104, 105)
"கடல் வளர் புரிவளை புரையு மேனி,
அடல்வெந் நாஞ்சிற் பனைக்கொடியோனு,
மண்ணுறு திருமணி புரையு மேனி,
விண்ணுயர் புட்கொடி விறல்வெய்யோனும்,
வலியொத் தீயே வாலி யோனைப்,
புகழொத் தீயே யிகழுந ரடுநனை" (புறநா. 56)
"மாயவனுந் தம்முனும் போலே மறிகடலும்,
கானலுஞ்சேர் வெண்மணலுங் காணாயோ" (திணைமா. 58)
என்பவற்றாலும் இதனையுணர்க, "புகர்வெள்ளை நாகர்தங்கோட்டம்" (சிலப். 9 : 10) என்பதனாற் பலதேவர்க்குத் திருக்கோயில் இருந்தமை தெரிகின்றது. சோலை மலையிற் பலதேவர் திருவுருவம் இக்காலத்திற் காணப்படவில்லை.