TT0101 தமிழ் கற்றல் - கற்பித்தல் ஓர் பார்வை
1.0 பாட முன்னுரை
பாட முன்னுரை
ஒரு நாட்டின் எதிர்காலம் வகுப்பறையில்தான் தீர்மானிக்கப்படுகின்றது. ஒருவர் இந்த உலகில் பெறுகிற அறிவு, அனுபவம், ஆற்றல் ஆகியவற்றின் தொகுப்பே கல்வி ஆகும். கல்வி ஒரு சமூகத்தின் ஒருங்கிணைந்த அறிவு, திறன் மற்றும் மதிப்பீடுகளை ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு கொண்டு செல்ல உதவும் ஒரு காரணியாகத் திகழ்கிறது. இக்கல்வி தரமாகவும், மக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் அமைய கலைத்திட்டம் இன்றியமையாத ஒன்றாகக் கருதப்படுகிறது. கலைத்திட்டம் கல்வியின் செயல் வடிவமாக விளங்குகிறது. ஆளுமை, படைப்பாற்றல், அறிவு, கற்றல் அனுபவங்கள், மனவெழுச்சி, உடற் செயற்பாடுகள் என மானுடப் பண்புகளை உயர்த்தும் நோக்கில் கலைத்திட்டச் செயல்பாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மொழியை அறிதல், உணர்தல், பயன்படுத்துதல் என்ற நோக்கில் மொழித்திறனை வளப்படுத்த கலைத்திட்டத்தினால் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பாடப்பகுதி மொழியின் பன்முக வளர்ச்சி, தமிழ்மொழியை வகுப்பறைச் சூழலில் கையாளும் திறன் மற்றும் மொழிக்குரிய பண்புநலன் குறித்து விளக்குதல் என்ற நோக்கில் அமைந்துள்ளது.