TT0101 தமிழ் கற்றல் - கற்பித்தல் ஓர் பார்வை
1.1 கலைத்திட்டத்தில் தமிழ்மொழி பெறுமிடம்
கலைத்திட்டத்தில் தமிழ்மொழி பெறுமிடம்
கலைத்திட்டம் பற்றிய விளக்கத்தையும், அதில் தமிழ்மொழி பெறுகின்ற இடத்தையும் இந்த அலகு வழி அறிய முடிகிறது.
ஆங்கிலத்தில் ‘Curriculum’ என்று அழைக்கப்படும் சொல்லானது ‘Carrere’ எனும் இலத்தீன் மொழிச் சொல்லிருந்து பெறப்பட்டதாகும். இது “ஓட்டம்” என்று பொருள்படும் அதாவது கலைத்திட்டம் என்பது ‘இலக்கை அடைவதற்கான ஓட்டப்பாதை’ என்று பொருள் கொள்ளப்படுகின்றது. எலிசபெத் (1965) என்பவர் “கலைத்திட்டம் என்பது கற்பிப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள பாடப்பொருள்களின் அளவு” எனவும் குரோ & குரோ என்பார், “கலைத்திட்டம் என்பது கற்பவர்களின் அனைத்து அனுபவங்களையும் உள்ளடக்கியதாகும். பாடசாலையின் உள்ளே அல்லது வெளியே பெற்றுக்கொள்ளப்படும் அனைத்து அனுபவங்களும் அதனுள் அடங்கும். மாணவர்களை உளரீதியாகவும் உடல்ரீதியாகவும் மனவெழுச்சிரீதியாகவும் சமூகரீதியாகவும் ஒழுக்கரீதியாகவும் அறிவுரீதியாகவும் கற்றலை விரும்பிச்செய்வதில் பெரும்பங்கு வகிக்கின்றது.” எனவும் தத்தம் கருத்துகளை முன்மொழிந்தனர். இவ்வாறு பல ஆராய்ச்சியாளர்களால் ஆராய்ந்து உணரப்பட்ட கலைத்திட்டமானது குறிப்பிட்ட சில கூறுகளைக் கொண்டிருத்தல் வேண்டும் என எண்ணப்படுகிறது.
- கல்வியின் அடிப்படைக் குறிக்கோள்களை அடையக்கூடியதாக இருத்தல் வேண்டும்.
- மாணவர்களின் அனைத்துச் செயற்பாடுகளை உள்ளடக்கி முழுமையாகச் செயற்படகூடியதாக இருத்தல் வேண்டும்.
- இளம்தலைமுறையினருக்கும் தேவையான அனுபவங்களை வழங்குவதாக அமைதல் வேண்டும்.
- சமூகத்தின் தேவைகளை நிறைவு செய்வதாக இருத்தல் வேண்டும்.
- கல்வியில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப தொடர்ந்து மாறும் தன்மையுடையதாக இருத்தல் வேண்டும்.
- வகுப்பறைக்கு உள்ளேயும் வெளியேயும் நடைபெறும் கற்றலுடன் தொடர்புடையதாக இருத்தல் வேண்டும்.
- மாணவர்களது ஆளுமை வளர்ச்சிக்கு உதவக்கூடியதாக இருத்தல் வேண்டும்.
- மாணவர்கள், பரந்த நோக்கங்களை அடையக்கூடிய வகையில் அமைந்திருத்தல் வேண்டும்.
- நடைமுறையிலுள்ள கல்வி முறையை முழுமையாகக் கொண்டு பாடமாகக் கலைத்திட்டம் இருத்தல் வேண்டும்.
- சமுதாய முன்னேற்ற அடிப்படையில் கலைத்திட்டத்தில் மாற்றம் ஏற்படுத்த வழிவகை செய்ய வேண்டும்.
மேற்கூறிய கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு கலைத்திட்டம் உருவாக்கப்படும்போது அவை சிறப்புடையதாகவும் பயனுடையதாகவும் விளங்கும் என்பதில் ஐயமில்லை.
குழந்தைகள், பள்ளிக்கு வரும் முன்னரே அவரவர் வாழ்க்கைச் சூழலுக்குட்பட்டு ஏராளமான சொற்களை அறிந்து வைத்திருப்பர். மொழியைப் பற்றிய அடிப்படைப் புரிதலும், உரிய இடங்களில் அதைச் சரியாகப் பயன்படுத்தும் திறமையும் அவர்களுக்கு இருக்கும். இத்தகைய தொடக்கநிலைத் திறன்களைப் படிப்படியாக ஒருங்கிணைத்து வளர்ப்பதே தமிழ்மொழிக் கல்வி கற்பித்தலின் நோக்கமாகும்.
தமிழ்மொழிப் பாடத்திட்டம் செம்மையாக அமையவேண்டுமெனில் குழந்தைகளிடம் மொழி அறிவோடு அன்றாட வாழ்க்கை உரையாடல்களும் இடம்பெறுதல் வேண்டும். பள்ளிப்பருவத்திலேயே தமிழ்மொழிப் பாடத்தைப் பற்றி முழுமையாக அறிய வேண்டும். அப்போதுதான் பன்மொழிப்புலமையை எளிதில் பெறமுடியும்.
அடிப்படை மொழியறிவுடன் குழந்தைகள் பள்ளிக்கு வந்தாலும், முறையான மொழி அறிவைப் பள்ளிகளில் மட்டுமே போதிக்க முடியும். மொழிகற்பித்தல் என்பது வகுப்பறைக்குள் நின்று விடுவதில்லை. கதை, செய்யுள், நாடகம் போன்ற கலை வடிவங்களின் மூலம் பெறும் மொழி அறிவால், இலக்கண அறிவும் பெறமுடியும்.
இக்கலைத்திட்டம் பற்றிய கருத்துகளை ஆசிரியர்கள் முழுமையாக அறிந்திருந்தால் மட்டுமே மாணவர்களின் கற்றல், கற்பித்தல் திறன்களை மேம்படுத்திக் கொள்ளமுடியும்.