முகப்பு

1.3 இரண்டாம் மொழியாகத் தமிழ் கற்பித்தல்

இரண்டாம் மொழியாகத் தமிழ் கற்பித்தல்

மொழி கற்பித்தலை முதல் மொழி நிலை, இரண்டாம் மொழி நிலை, மூன்றாம் மொழி நிலை அல்லது அயல்மொழி நிலை என்று மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

“தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்குத் தமிழ் கற்பித்தல் என்பது முதல் நிலையாகக் கொள்ளப்படுகிறது. தமிழ் புழங்கும் சுற்றுப்புறச் சூழலில் தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத பிறமொழி மாணவர்கள் தமிழ் கற்பது இரண்டாம் நிலையாகக் கருதப்படுகிறது. தமிழ் புழங்கும் சுற்றுப்புறச்சூழல் அற்ற இடத்தில் பிறமொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தமிழ் கற்பது அயல்மொழி நிலை என வழங்கப்படுகிறது” என திண்ணப்பன் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அயலகத்தில் வாழும் மாணவர்கள் பிற மொழியுடன் தமிழ் மொழியையும் சேர்த்துக் கற்பதும் அயல்மொழி நிலையாகக் கருதப்படுகிறது.

மொழி கற்பித்தலில் இரண்டு படிநிலைகள் பின்பற்றப்படுகின்றன அடிப்படை மொழித்திறன்களான கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகியவற்றில் பயிற்சி பெறுவதற்கேற்ப உள்ளடக்கத் தரமும், கற்றல் தரமும் அமைக்கப்பட வேண்டும். மாணவர்கள் ஏற்கனவே பயிற்சி பெற்ற அடிப்படை மொழித்திறன் ஆளுமையைக் கொண்டு மொழியைப் பயன்படுத்திப் பிறருடன் தொடர்பு கொள்ளவும், மொழி அறிவைப் பெறவும், இலக்கணப் பிழையின்றி எழுதவும் மொழியைப் பயன்படுத்தி எண்ணங்களையும், கருத்துகளையும் வெளிப்படுத்தி உள்ளடக்கத்தரமும், கற்றல்தரமும் இரண்டாம்படிநிலைகளில் வரையறுக்கப்பட வேண்டும்.

மொழியை இரண்டாம் மொழியாகக் கற்பித்தலில் கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகிய நான்கும் அடிப்படைத் திறன்களாகக் கருதப்படுகின்றன. அடிப்படைத் திறன்களில் படித்தலும் எழுதுதலும் மிக முக்கியமானதாகும். படித்தல் அல்லது வாசித்தல் என்பது கையெழுத்து அல்லது அச்செழுத்தில் உள்ளதைக் கண்ணால் பார்த்தல், வாயால் உச்சரித்தல், பொருள் உணர்தல் என்ற முன்று கூறுகளைக் கொண்டுள்ளது. இதே போல் எழுதுதல் திறனையும் மூன்றாகப் பிரிக்கலாம். அவை பிறர் உதவி கொண்டு எழுதுதல் (அச்சின் மேல் எழுதுதல், பார்த்து எழுதுதல்), படிப்படியாகத் தாமே எழுதும் நிலைக்குச் செல்லுதல் (சொல்வதை எழுதுதல்), தாமாகவே தாராளமாக எழுதும் திறனை அடைதல் (கட்டுரை எழுதுதல்) என்பனவாகும்.

தமிழ்மொழிக் கலைத்திட்டத் தர மதிப்பீட்டு ஆவணத்தின் அடிப்படையில் படித்தல் மற்றும் எழுத்துத் திறன்களில் தமிழை இரண்டாம் மொழியாகக் கற்கும் பிறமொழி மாணவர்களின் அடைவுநிலை பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் கற்றல் தரத்தை எந்த நிலையில் பயிற்சி பெற்றுள்ளனர் என்பதைக் காட்டுவதே அடைவுநிலையாகும்.

உலகில் பல நாடுகளில் தமிழ்மொழி இரண்டாம் மொழியாகக் கற்பிக்கப்பட்டு வருகிறது. தமிழ்மொழியை இரண்டாம் மொழியாகக் கற்கும் பிறமொழி மாணவர்களிடமிருந்து, தமிழ் எழுத்துகளை உச்சரிப்பதில் எதிர்நோக்கும் சிக்கல்களாக மயங்கொலிகள் உச்சரிப்புப் பிழை, மாற்றொலியன்கள் உச்சரிப்புப் பிழை, குறில் நெடில் உச்சரிப்புப் பிழை, குற்றியலுகர உச்சரிப்பு பிழை ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. இவ்விடர்ப்பாடுகள், அயலகத்தில் தமிழைக் கற்கும் மாணவர்களுக்கும் பொருத்தும்.

இரண்டாம் மொழியாகத் தமிழ் கற்கும் நிலை நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது. பொதுவாகத் தமிழ்மொழியை இரண்டாம் மொழியாகக் கற்கும் மாணவர்களிடம் உச்சரிப்புப் பிழைகள், பொருளுணர்ந்து வாசிக்காத நிலை, உணர்வின்றி வாசித்தல், உள்ளதை உள்ளவாறு வாசிக்காத நிலை, தொடர்ச்சியாக வாசிக்க இயலாமை, வாசிக்கும்போது அச்சமும் கூச்சமும் மேலோங்கி நிற்றல், எழுதுவதில் வரிவடிவப் பிழைகள், ஓர் எழுத்திற்குப் பதிலாக வேறொரு எழுத்தை எழுதுதல், எழுத்தை விட்டு எழுதுதல், குறில் நெடில் பிழைகள் முதலான சிக்கல்கள் சூழலுக்கு ஏற்ப மாறுபடுகின்றன. இத்தகைய சூழ்நிலைகளை முறையாகக் கையாண்டு ஆசிரியர்கள் திறம்படச் செயல்பட வேண்டும்.

  • இரண்டாம் மொழியின் தேவையினை அறிந்து தமிழ்மொழி தற்போதைய தேவை அதனுடைய மதிப்பு, செல்வாக்கு ஆகியவற்றை மாணவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்; தமிழை இரண்டாம் மொழியாகக் கற்கும் போது ஏற்படும் சிக்கல்களைத் தமிழாசிரியர்கள் இனங்கண்டு சுட்டிக்காட்ட வேண்டும்.
  • தமிழ்ச்சமூகத்தின் வாழ்வியல் நெறி, பண்பாட்டுக் கூறுகள் ஆகியன தமிழ் கற்றல்- கற்பித்தல் மூலம் கடத்தப்படும் விதம், பிற மொழியினர் கொண்டுள்ள கருத்தியல் மொழியின் அடையாளம், தனித்துவம் என்பன பற்றி ஆராய வேண்டும்.
  • இரண்டாம் மொழி கற்றல் மொழியியல் காரணிகள், தமிழ்மொழியின் தேவை, வளர்ச்சி போன்றன பற்றி ஆராய வேண்டும்
  • இரண்டாம் மொழியாகக் கற்றல் - கற்பித்தலில் உள்ள சிக்கல்களுடன் தொடர்புடைய நூல்கள், ஆய்வுக்கட்டுரைகள், ஆய்வேடுகள், இணையதளத் தரவுகள் ஆகியவற்றைக் கொண்டு ஆழமான ஆய்வை செய்தல் வேண்டும்.
  • கற்றல் கற்பித்தல் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளிலிருந்து பெறப்படும் கருத்துகள் நடைமுறைச் சூழலுக்கு ஏற்றவாறு பயன்படுத்தப்பட வேண்டும்.
  • காலத்தின் தேவையும் சூழலும் கருதி தமிழ் கற்பித்தலில் வளர்ச்சி நிலைக் குறித்த பொருண்மையை ஆராயப்படவேண்டும்.
  • மொழி கற்றல் கற்பித்தல் செயல்பாட்டில் ஆசிரியர் மாணவர்களிடையே ஆர்வத்தை அதிகரிக்க தற்கால தொழில்நுட்பத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்.

இரண்டாவது மொழியாகத் தமிழைக் கற்கும் மாணவர்களின் மனநிலை அறிந்து தமிழ் மொழியைக் கற்பிக்க வேண்டும்.