TT0101 தமிழ் கற்றல் - கற்பித்தல் ஓர் பார்வை
1.4 வகுப்பறைச் சூழலும் மொழியைக் கையாளுதலும்
வகுப்பறைச் சூழலும் மொழியைக் கையாளுதலும்
மொழியைத் துல்லியமாகவும், நுட்பமாகவும் கேட்டுப் புரிந்துகொள்ளுதல் மொழி அறிவைப் பெறுதல் ஆகும். தாய்மொழி மூலமாகக் கல்விக் கற்கும்போது பல்துறை நூல்களையும் கற்றுத் தெளிய வாய்ப்பு ஏற்படுகிறது. மனிதனின் எண்ணங்களைப் பேச்சாலும், எழுத்தாலும் வெளியிடவும் அவர்களின் சிந்தனைத் தாக்கங்களைப் படைக்கவும் மொழி பயன்படுகிறது.
தெளிவாகப் பேசவும், சிறப்பாக எழுதவும், நன்றாகப் படிக்கவும் மொழி அறிவு இன்றியமையாததாகும். மொழி அறிவினால் பிறர் கூறுவதை எளிதில் புரிந்து கொள்ளவும், சூழ்நிலையைத் திறமையாகச் சமாளிக்கவும் முடியும். கல்வியின் நோக்கங்களை மாணவர்களுக்கு அளிப்பதற்கும், மாணவர்கள் எளிதில் பயன்பெற்று இன்புறவும் மொழி அறிவு அவசியமாகிறது. எழுத்துகளின் ஒலி மற்றும் வரி வடிவங்களைச் சரியாகவும், அழகாகவும், தெளிவாகவும், பிழையில்லாமலும் எழுத மொழியில் பயிற்சி அளிக்கப்படுகிறது. மொழி அறிவு பெற்றால்தான் சமூகத்துடன் இணக்கமான நடத்தையை மேற்கொள்ள முடியும். இதனையே திருவள்ளுவர் “நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் யாநலத்த உள்ளதூஉம் அன்று” என்று கூறியுள்ளார். சரியான உச்சரிப்புடன், திருத்தமாகவும், அழுத்தமாகவும், உணர்ச்சியுடனும், பண்புடனும், பிழையின்றியும், பேசுவதற்கும், எழுதுவதற்கும் மொழி அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.
மொழித்திறன் வல்லமை உடையவரே பாடங்களின் உண்மை அறிந்து புதியனவற்றைப் படைக்கும் வல்லமையும் பெறுவர். மொழியின் சிறப்பும் பண்டையோரின் பண்பும் அறிய, இலக்கியங்களே துணை நிற்றன.
- மொழி அறிவைப் பெறுதல்
- கேட்டுப் பொருளுணரும் ஆற்றல் பெறுதல்
- படித்துப் பொருள் உணரும் ஆற்றல் பெறுதல்
- இலக்கியப் பாடலின் சுவையுணர்ந்து போற்றுதல்
- மனத்திலே உள்ளவற்றை வெளியிடுதல்
- கற்பனை ஆற்றலையும் அழகுணர் ஆற்றலையும் வளர்த்தல்
- சிறந்த மனப்பயிற்சியாக அமைதல்
- மொழிப்பற்று, நாட்டுப்பற்றை ஊட்டுதல்
- படைப்பாற்றலை வளர்த்தல்
- பிழையின்றி எழுதுதல்
- பண்பு நலன்களைப் போற்றி வளர்த்தல்
- வாழ்க்கை நுகர்வுகளை எடுத்தியம்புதல்
- சொல்லாட்சித் திறன் பெறுதல்
- சக மாணவர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் மொழி வளத்தைப் பெருக்கிக் கொள்ளுதல்
- மதிப்புணர்வை வளர்த்தல்
- வாழ்வியல் திறன்களை அறிய வைத்தல்
ஆகிய திறன்களை வளர்ப்பதற்காகவே வகுப்பறையில் மொழி கற்பிக்கப்படுகிறது.
- மாணவர்கள் எப்படிப்பட்ட சூழலில் இருந்து வருகின்றனர் எனக் கவனிக்க வேண்டும்.
- மாணவர்கள் பேசும் மொழியினை அறிதல் வேண்டும்.
- மாணவர்கள் வாழும் பகுதியில் பேசப்படும் மொழி என்ன என்று அறிந்திருத்தல் வேண்டும்.
- தமிழ்மொழியை முதல், இரண்டாம், மூன்றாம் மொழியாக எவ்வகையில் கற்கிறார்கள் என்பதை அறிதல் வேண்டும்
- மாணவர்களின் தாய்மொழி எது? பேசும் மொழி எது? என்பதை அறிதல் வேண்டும்
மொழி கற்பித்தலில் கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் ஆகியன மொழியின் அடிப்படைத் திறன்களாகக் கருதப்படும். இவற்றை வகுப்பறைச் சூழலில் எவ்வாறு கையாள்வது என்பதைப் பயிற்சி ஆசிரியர் அறிய வேண்டும். கேட்டல், பேசுதல் என்பன ஒலியை அடிப்படையாகக் கொண்டவையாகவும் பேசுதல், எழுதுதல் என்பன வரிவடிவத்தை அடிப்படையாகக் கொண்டவையாகவும் திகழ்கின்றன.
கேட்டல், படித்தல் ஆகிய திறன்கள் நம் கருத்துகளை அறிந்து கொள்ள உதவுவனவாகும். எனவே இவற்றை உட்கொள்ளும் திறன்கள் என அழைப்பர்.
பேசுதல், எழுதுதல் ஆகிய திறன்கள் நம் கருத்துகளை வெளியிட உதவுவனவாகும். எனவே இவற்றை வெளிப்படும் திறன்கள் என்பர்.
மாணவர் விரும்பும்வகையில் மொழி கற்பித்தல் சிறப்படைய வகுப்பறையில் அடிப்படை திறன்கள் இன்றியமையாததாகத் திகழ்கிறது. இவை ஆசிரியர் மாணவர் கலந்துரையாடலில் வகுப்பறையில் மேற்கொள்ளப்படும் பயிற்சிகள் குறித்து விளக்கமாக அலகு – 3 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் மொழியின் அடிப்படைத் திறன்களை முன்கூட்டியே அறிவது நம் தலையாய கடமையாகும். எனவே சுருக்கமாக மொழியின் திறன்களைக் காண்போம்.
கேட்டல் என்பது ஒலிகளைக் கேட்டல் மட்டுமன்று, கேட்டதன் பொருளை உணர வேண்டும். எனவே, கேட்டல் என்பதற்குக் கேட்டுப் பொருள் உணர்தல் என்று பொருள் கொள்ள வேண்டும். கேட்டுப் பொருள் உணர்ந்து கேட்ட பேச்சின் கருத்தினை அறிந்து கொள்ளுதலே கேட்டல் திறனாகும்.
பேச்சாற்றல் பெற்றவர்களே உலகில் வெற்றிப் பெற முடியும். திருத்தமாக, அழுத்தமாக, தெளிவாக, அச்சம் கூச்சமின்றி, பிழையின்றி, உணர்வுகளுடன் பேச மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். “செந்தமிழும் நாப்பழக்கம்” என்பதற்கு இணங்க மாணவர்களிடம் பேச்சுத் திறனை வளர்க்க வேண்டும்.
ஒரு அச்சிட்ட வரியையோ, கையெழுத்தையோ பார்த்துப் படிக்கும்போது, சிறந்த உச்சரிப்புடன் உள்ளதை உள்ளவாறு திருத்தமாக உணர்வுகள் கலந்து ஒலியமைதியுடன் படிக்க வேண்டும். இதுவே படித்தல் திறன் எனப்படும்.
வகுப்பில் ஆசிரியர் சொற்களையோ, தோடர்களையோ கூற அவற்றைக் கேட்டு மாணவர் எழுத வேண்டும். மாணவர் தெளிவாக இடைவெளிவிட்டு அளவும் அழகும் பொருந்தி வரியொற்றி பிழையின்றி எழுத வேண்டும். இதுவே எழுதுதல் திறன் எனப்படும்.