முகப்பு

1.2 மொழியின் பன்முக வளர்ச்சி

மொழியின் பன்முக வளர்ச்சி

தமிழ்மொழி தொன்மை வாய்ந்த மொழியாகும். தமிழ்மொழிக்கு வரிவடிவம் எந்த காலத்தில் உருவானது என்று தெரியவில்லை. ஒலியாகப் பிறந்து, சித்திரமாய் மாறி, உருக்கள் பல எடுத்து, காலங்கள் கடந்து கல்வெட்டுகளில் உராய்ந்து, செப்பேடுகளிலும் ஓலைச்சுவடிகளிலும் தோய்ந்து, வெள்ளைக்காகிதத்தில் தவழ்ந்து, கணினியில் வீரநடைபோடும் தேன்தமிழ் மொழியே நம் தாய்த்தமிழ் மொழி ஆகும்.

மொழி என்பது எண்ணத்தையும் கருத்தையும் வெளிப்படுத்தக் கூடிய கருவி ஆகும். இஃது ஒலிக்குறிப்பில் தோன்றி, சைகைமொழியாக மாறி பேச்சுமொழி, எழுத்துமொழி என வளர்ந்து வந்துள்ளது. இத்தமிழ்மொழியின் வளர்ச்சியைப் பல படிநிலைகளாகச் சுட்டுகின்றனர் அறிஞர்கள். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் எஸ்.வையாபுரிப்பிள்ளை. இவர் தமிழின் வளர்நிலைகளை,

  1. பண்டைத் தமிழ் நிலை - தொல்காப்பியம், சங்க இலக்கியம்.
  2. காப்பியக்காலத் தமிழ் நிலை - சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம்.
  3. இடைக்காலத் தமிழ் நிலை - தேவாரம், திவ்யப்பிரபந்தம், சிந்தாமணி.
  4. தற்காலத் தமிழ் நிலை - நன்னூலுக்குப் பிற்பட்ட இலக்கியங்கள்.

என நான்கு வகையாகப் பிரித்துள்ளார். இந்த ஒவ்வொரு நிலையிலும் தமிழ்மொழியானது காலத்திற்கேற்பச் சமூகம், பண்பாடு, அரசியல், பொருளாதாரக் காரணிகளால் பல வகைகளில் பரிணமித்து வந்துள்ளது.

மக்கள் தலைமுறை தலைமுறையாகக் குழுவாகச் சேர்ந்து கற்ற நடத்தை முறைகளும், பழக்கங்களும், மரபுகளும் சேர்ந்த ஒரு தொகுதியே பண்பாடு ஆகும். மனிதனின் பண்பைப் பக்குவப்படுத்துவது பண்பாடாகும்.

“தமிழர் பண்பாடு என்றால் தமிழ் மக்களுக்கே திருந்திய மனப்பான்மை என்று பொருள்பட வேண்டும்” என்று எஸ். வையாபுரிப்பிள்ளை பண்பாட்டிற்கு விளக்கம் கொடுத்துள்ளார். மேலும், “பண்படுவது பண்பாடு, பண்படுதல் சீர்ப்படுதல் அல்லது திருந்துதல், திருந்திய நிலத்தைப் பண்பட்ட அல்லது பண்படுத்தப்பட்ட நிலமென்றும், திருந்திய தமிழைப் பண்பட்ட செந்தமிழ் என்றும், திருந்திய உள்ளத்தை பண்பட்ட உள்ளமென்றும் சொல்வது வழக்கம்” என மொழி ஞாயிறு தேவநய பாவணர் பண்பாடு குறித்துக் கூறுகிறார். பொதுவாகப் பண்பாடு என்பது பண்பட்ட, பக்குவப்பட்ட, சீரான, நேரிய வழியில் செல்லும் ஒழுக்கமாகும்.

• தமிழர் பண்பாடு

தொல்காப்பியர் காலத்திலேயே பண்பாடு குறித்த சிந்தனை தமிழகத்தில் இருந்துள்ளது என்பதற்குச் சான்றாக "இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றி" (தொல்காப்பியம், சொல், நூ.782) என்ற நூற்பா புலப்படுத்துகிறது. “பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்” (கலித், பா.133) என்ற கலித்தொகைப் பாடல் சங்க காலத்திலேயே பண்பினைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

பழந்தமிழ் இலக்கியங்கள் பண்பாட்டைப் பண்பு, பண்புடைமை, சால்பு, சான்றாண்மை முதலிய சொற்களால் குறித்துள்ளன. இச்சொற்கள் வெவ்வேறு இடங்களில் பண்பாட்டுடன் தொடர்புள்ள வெவ்வேறு பொருள்களைக் குறித்தாலும், பல இடங்களில் பண்பாட்டையே குறிப்பிடுகின்றன. பண்பாடு உடையவரைச் சான்றோர் என்றும், ஒழுக்கம் உடையோர் என்றும், மாசற்ற காட்சி உடையோர் என்றும் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

ஒரு மொழியில் காலத்துக்குக் காலம் ஏற்படும் மாறுதல்களைக் கருத்தில் கொண்டு அவ்வப்போது மொழிவளர்ச்சிக்கு அரணாக விளங்குவன இலக்கண நூல்கள் ஆகும். தமிழ் இலக்கணம் ஐந்து வகைப்படும். எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகியவை ஐந்திலக்கணம் என்று அழைக்கப்படுகிறது. இவற்றில் எழுத்து, சொல் இலக்கணங்கள் மொழிக்கு இலக்கணம் கூறுபவை ஆகும். பொருள் இலக்கணம் மொழியில் எழுதப்படும் இலக்கியத்தின் உள்ளடக்கத்திற்கு இலக்கணம் கூறுவது ஆகும். யாப்பிலக்கணம் என்பது இலக்கியம் எழுதப்படும் செய்யுளின் இலக்கணம் கூறுவதாகும். யாப்பிலக்கணத்தின் ஒரு வளர்ச்சியாகப் பாட்டியல் இலக்கணம் தோன்றியது. பிள்ளைத்தமிழ், உலா, தூது போன்ற இலக்கியங்களின் இலக்கணம் பாட்டியல் நூல்களில் இடம்பெற்றுள்ளது. அணி இலக்கணம் செய்யுளில் அமையும் உவமை, உருவகம் முதலிய அணிகளின் இலக்கணத்தைக் கூறுகிறது. தமிழில் தோன்றியுள்ள இலக்கண நூல்களின் பட்டியல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

• அகத்தியம்

முத்தமிழுக்கும் இலக்கணம் கூறும் நற்றமிழ் நூல். தொல்காப்பியத்திற்கு மூலநூல். இது அகத்தியரால் எழுதப்பட்டது. அகத்தியர் தலைச்சங்கத்திலும், இடைச்சங்கத்திலும் இருந்து தமிழ் ஆராய்ந்தார் என்று கூறப்படுகிறது. இவரது சீடர்கள், அதங்கோட்டாசான், பனம்பாரனார், கழாரம்பர், அவிநயர், காக்கைப்பாடினியார், நத்தத்தனார், வாமனார், தொல்காப்பியர் முதலான பன்னிருவர் ஆவார்கள். இவர்கள் இயற்றிய நூல்களே பன்னிரு படலம். அகத்தியம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, சந்தம், வழக்கியல், அரசியல், அமைச்சியல், பார்ப்பனவியல், சோதிடம், காந்தருவம் முதலிய பல பகுதிகளை உடையது. இந்நூல் மொத்தம் 12000 நூற்பாக்களைக் கொண்டதாகும்.

• ஐந்திலக்கண நூல்கள்

ஐந்து இலக்கணத்தையும் கூறும் நூல்கள் பின்வருமாறு :

தொல்காப்பியம்

கி.மு.4 ஆம் நூற்றாண்டில் தொல்காப்பியரால் எழுதப்பட்டது. எழுத்து, சொல், பொருள் ஆகிய 3 அதிகாரங்கள் கொண்டு பொருளிலக்கணத்தில் யாப்பும், அணியும் கூறப்பட்டுள்ளது. அதிகாரத்திற்கு 9 வீதம் 27 இயல்கள் கொண்டுள்ளது. மொத்தம் 1,610 நூற்பாக்கள் காணப்படுகின்றன. மூன்று அதிகாரங்களுக்கு இளம்பூரணரும் சொல்லிலக்கணத்திற்கு சேனாவரையரும் பொருளிலக்கணத்திற்கு பேராசிரியர் மற்றும் நச்சினார்க்கினியர் ஆகிய இருவரும் தனித்தனியாகத் தொல்காப்பியத்திற்கு உரை எழுதியுள்ளனர்.

இலக்கண விளக்கம்

கி.பி.11 ஆம் நூற்றாண்டில் புத்தமித்திரரால் எழுதப்பெற்றது. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அலங்காரம் என்று ஐந்திலக்கணங்களையும் வடமொழி மரபில் எழுதியுள்ளார். மொத்தம் 183 நூற்பாக்கள் உள்ளன. பெருந்தேவனார் உரை எழுதியுள்ளார்.

வீரசோழியம்

கி.பி.17 ஆம் நூற்றாண்டில் வைத்தியநாத தேசிகரால் இயற்றப்பட்டது. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஐந்திலக்கணங்களையும் தமிழ்மொழி மரபில் எழுதியுள்ளார். 941 நூற்பாக்களுக்கும் இவரே உரை எழுதி விளக்கியுள்ளார்.

தொன்னூல் விளக்கம்

வீரமாமுனிவரால் கி.பி.18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஐந்திலக்கணங்களையும் தமிழ்மொழி மரபில் எழுதியுள்ளார். 370 நூற்பாக்களுக்கும் இவரே உரை எழுதி தந்துள்ளார்.

முத்துவீரியம்

கி.பி.19 ஆம் நூற்றாண்டில் முத்துவீர உபாத்தியாயரால் எழுதப்பட்டது. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஐந்திலக்கணங்களையும் தமிழ்மொழி மரபில் எழுதியுள்ளார். 1,288 நூற்பாக்களுக்கும் திருப்பாற்கடல்நாதன் கவிராயர் உரை எழுதி தந்துள்ளார்.

சுவாமிநாதம்

சுவாமி கவிராயரால் கி.பி.19 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஐந்திலக்கணங்களையும் தமிழ்மொழி மரபில் எழுதியுள்ளார். 201 வெண்சீர் விருத்தங்களாக எழுதி தந்துள்ளார்.

• பிற இலக்கண நூல்கள்

பிற இலக்கண நூல்களின் தகவல்கள் கீழ்வருமாறு:

நேமிநாதம் (சின்னூல்)

குணவீர பண்டிதரால் கி.பி.12 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. எழுத்து, சொல் இரண்டுக்கும் இலக்கணம் தருவது. 99 வெண்பாக்களைக் கொண்டது.

நன்னூல்

பவணந்தி முனிவரால் கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. எழுத்து, சொல் இரண்டுக்கும் இலக்கணம் தருவது. 462 நூற்பாக்கள் உடையது.

நம்பியகப்பொருள்

கி.பி.12 ஆம் நூற்றாண்டில் நாற்கவிராச நம்பி என்பவரால் இயற்றப்பட்டது. அகத்திணையியல், களவியல், வரைவியல், கற்பியல், ஒழிபியல் என 5 இயல்களையும் 252 நூற்பாக்களையும் கொண்டது. இவரே உரை தந்துள்ளார்.

புறப்பொருள் வெண்பா மாலை

கி.பி.9 ஆம் நூற்றாண்டில் ஐயனாரிதனாரால் இயற்றப்பட்டுள்ளது. புறப்பொருள் வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண் என 9 திணைகளையும், 361 பாக்களையும் கொண்டுள்ளது.

யாப்பருங்கலம்

அமிர்தசாகரனாரால் கி.பி.10 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல் ஆகிய மூன்று இயல்கள் உள்ளன. 96 நூற்பாக்களைக் கொண்டது.

யாப்பருங்கலக் காரிகை

அமிர்தசாகரனாரால் கி.பி.10 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல் ஆகிய மூன்று இயல்கள் உள்ளன. 44 காரிகைகள் கட்டளைக் கலித்துறைப் பாக்களைக் கொண்டது.

தண்டியலங்காரம்

தண்டியாசிரியரால் கி.பி.12 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. பொது அணியியல், பொருள் அணியியல், சொல் அணியியல் என மூன்று இயல்களைக் கொண்டது. 125 நூற்பாக்களைக் கொண்டது.

காலந்தோறும் படைக்கப்படும் இலக்கியங்கள், மனிதன் வாழ்வாங்கு வாழ உயரிய கருத்துகளைச் சமூகத்திற்குத் தரவேண்டும். “இலக்கியம் என்பது தமிழ்ச்சொல். இதனை ‘இலக்கு + இயம்’ எனப் பிரிக்கலாம். ’இலக்கு’ என்பது குறிக்கோளையும் ’இயம்’ என்பது சொல்லுதலையும் குறிக்கும். இது ‘குறிக்கோளை இயம்புவது’ என்னும் பொருளைத் தருகிறது. வாழ்வின் குறிக்கோளை வகையுற எடுத்து இயம்புவதே இலக்கியமாகும். தமிழிலக்கியத்தின் துணைக்கொண்டு தமிழ்மக்களின் வாழ்வியலை அறியலாம்” என முனைவர் சி. இலக்குவனார் கூறுகிறார்.

• முச்சங்கத் தகவல்கள்
சங்கம் இடம் சங்கம் வளர்த்த அரசர்கள் நூல்கள்
முதற்சங்கம் தென்மதுரை (பஃறுளி ஆற்றங்கரை) காய்சின வழுதி முதல் கடுங்கோன் வரை (89 பேர்) பெருகு, பரிபாடல், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை, அகத்தியம்
இடைச்சங்கம் கபாடபுரம் (குமரி ஆற்றங்கரை) வெண்டேர்ச்செழியன் முதல் முடத்திருமாறன் வரை (59 பேர்) பெருங்கலி, குருகு, வெண்டாளி, வியாழமாலை, அகத்தியம், தொல்காப்பியம், மாபுராணம், பூதபுராணம்
கடைச்சங்கம் மதுரை (வைகை ஆற்றங்கரை) முடத்திருமாறன் முதல் உக்கிரப் பெருவழுதி வரை (49 பேர்) நெடுந்தொகை (அகநானூறு), குறுந்தொகை, நற்றிணை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை, பரிப்பாடல்,கூத்து, வரி, குற்றிசை, பேரிசை

முச்சங்கங்கள் பற்றிய தகவல்களை இறையனார் களவியல் உரைவழி அமைந்த தகவல்கள் அட்டவணைவழி விளக்கப்பட்டுள்ளது.

இலக்கிய வரலாறு என்பது இலக்கியங்களைக் கால வரிசைப்படித் தொகுத்துக் கூறுவது மட்டுமல்ல; அக்கால மக்களின் வாழ்க்கை முறைகளையும் எடுத்துக் கூறுவதாகும். அதனால்தான் இலக்கியம் மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடி என்கிறார்கள் அறிஞர்கள்.

வகைப்பாடு

தமிழ் இலக்கிய வரலாற்றை பழங்காலம், இடைக்காலம், நவீன காலம் எனப் பிரிக்கலாம். பழங்காலத்தில், சங்க இலக்கியங்கள், நீதி இலக்கியங்கள், பழம்பெருங் காப்பியங்கள் ஆகியவை இதில் அடங்கும். இடைக்காலத்தில் பக்தி இலக்கியம், பிரதிகள், புராண இலக்கியம், உரை வகைகள் போன்றவை அடங்கும். இந்த காலக்கட்டத்தில் உரைநடை, நாவல், நாடகம், சிறுகதை மற்றும் புதிய கவிதை உள்ளிட்ட இலக்கிய வகைகளும் அடங்கும்.

சங்க காலம், சங்க மருவிய காலம், பல்லவர் காலம், சோழர் காலம், நாயக்கர் காலம், ஐரோப்பியர் காலம், தற்காலம் எனத் தமிழகத்தை ஆண்ட மன்னர்களின் ஆட்சியின் அடிப்படையில் காலம் வரையறுக்கப்பட்டுள்ளன. வீர யுக காலம், நீதி இலக்கிய காலம், பக்தி இலக்கிய காலம், காப்பிய காலம், உரை இலக்கிய காலம், மறுமலர்ச்சி இலக்கிய காலம் என இலக்கிய வகை அடிப்படையிலும் பிரிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் பகுக்கப்பட்ட இலக்கியங்கள் பின்வருமாறு:

• சங்க காலம்

கி.மு. 500 முதல் கி.பி. 200 வரையிலான காலம் சங்க காலம் எனப்படும். இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள் எனப்படும். சங்க காலத்தில் அகத்தியம், தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய நூல்கள் தோன்றின. காதலும் வீரமும் காலத்தின் கருப்பொருள்களாக இருந்தது. இச்சங்க இலக்கியங்கள் ஆசிரியப்பா, கலிப்பா, பரிபாடல் ஆகிய மூன்று பாவகைகளைக் கொண்டவை.

எட்டுத்தொகை நூல்கள்
நூல் பாடல் அடி வரையறை பொருள் தொகுத்தர் தொகுப்பித்தவர்
நற்றிணை 400 9-12 அகம் தெரியவில்லை பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
குறுந்தொகை 400 4-8 அகம் பூரிக்கோ தெரியவில்லை
ஐங்குறுநூறு 500 3-6 அகம் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
பதிற்றுப்பத்து 100(80) 8-57 புறம் தெரியவில்லை தெரியவில்லை
பரிபாடல் 70(22) 25-400 அகம் + புறம் தெரியவில்லை தெரியவில்லை
கலித்தொகை 150 11-80 அகம் நல்லந்துவனார் தெரியவில்லை
அகநானூறு 400 13-31 அகம் உருத்திர சன்மனார் பாண்டியன் உக்கிரப்பெருவழுதி
புறநானூறு 400 4-40 புறம் தெரியவில்லை தெரியவில்லை
பத்துப்பாட்டு
நூல்கள் பாடிய புலவர் அடி அளவு
திருமுருகாற்றுப்படை நக்கீரனார் 317
பொருநராற்றுப்படை முடத்தாமக் கண்ணியார் 248
சிறுபாணாற்றுப்படை நல்லூர் நத்தத்தனார் 269
பெரும்பாணாற்றுப்படை கடியலூர் உருத்திரங் கண்ணனார் 500
முல்லைப்பாட்டு நப்பூதனார் 103
மதுரைக்காஞ்சி மாங்குடி மருதனர் 782
நெடுநல்வாடை நக்கீரனார் 188
குறிஞ்சிப்பாட்டு கபிலர் 261
பட்டினப்பாலை கடியலூர் உருத்திரங் கண்ணனார் 301
மலைபடுகடாம் பெருங்கௌசிகனார் 583
• சங்கம் மருவிய காலம்

கி.பி.100 முதல் கி.பி.500 வரையிலான காலத்தைச் சங்க மருவிய காலம் என்பர். நீதி இலக்கியம் இக்காலத்தில் தோன்றியது. இவற்றில் பெரும்பான்மையான நீதி இலக்கியங்கள் வெண்பா யாப்பில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நீதி இலக்கியங்கள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் என்று அழைப்பர். இக்காலத்தில் சிலப்பதிகாரம், மணிமேகலை எனப் போற்றப்படும் இரட்டைக் காப்பியங்களும், முத்தொள்ளாயிரமும் தோன்றின.

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
எண் நூல் ஆசிரியர்
1. திருக்குறள் திருவள்ளுவர்
2. நாலடியார் சமண முனிவர்கள்
3. நான்மணிக்கடிகை விளம்பி நாகனார்
4. இன்னா நாற்பது கபிலர்
5. இனியவை நாற்பது பூதஞ்சேந்தனார்
6. திரிகடுகம் நல்லாதனார்
7. ஆசாரக்கோவை பெருவாயின் முள்ளியார்
8. பழமொழி முன்றுறையரையனார்
9. சிறுபஞ்சமூலம் காரியாசான்
10. ஏலாதி கணிமேதாவியார்
11. முதுமொழிக்காஞ்சி மதுரைக்கூடலூர் கிழார்
12. ஐந்திணை ஐம்பது மாறன் பொறையனார்
13. திணைமொழி ஐம்பது கண்ணன் சேந்தனார்
14. ஐந்திணை எழுபது மூவாதியார்
15. திணைமாலை நூற்றைம்பது கணிமேதாவியார்
16. கைந்நிலை புல்லங்காடனார்
17. கார் நாற்பது மதுரைக்கண்ணன் கூத்தனார்
18. களவழி நாற்பது பொய்கையார்
• பக்தி இலக்கிய காலம்

கி.பி. 600 முதல் 900 வரையிலான காலகட்டம் பல்லவர் காலம் அல்லது பக்தி இலக்கியத்தின் காலம் என்று குறிப்பிடப்படுகிறது. இக்காலத்தில் நாயன்மார்களும் ஆழ்வார்களும் தோன்றித் தமிழை வளர்த்தனர். நாயன்மார்களின் எழுத்துகள் பன்னிரு திருமுறைகள் எனப் பெயர் பெற்றன. இவற்றை நம்பியாண்டார் நம்பி தொகுத்துள்ளார்.

பன்னிரு ஆழ்வார்கள் எழுதிய பாசுரங்கள் அனைத்தும் நாலாயிர திவ்விய பிரபந்தம் என்ற பெயரில் தொகுக்கப்பட்டன. இவற்றைத் தொகுத்த பெருமை நாதமுனியைச் சாரும். சிவபெருமானையும் திருமாலையும் பல்வேறு நிலைகளில் பாடும் பாடல்களின் தொகுப்பைப் பக்தி இலக்கியங்கள் என்கிறோம்.

பன்னிரு திருமுறைகள் - I
1,2,3 திருமுறைகள் திருஞானசம்பந்தர் ‘தேவாரம்’
4,5,6 திருமுறைகள் திருநாவுக்கரசர் ‘தேவாரம்’
7ம் திருமுறை சுந்தரர் ‘தேவாரம்’
8ம் திருமுறை மாணிக்கவாசகர் திருவாசகம்
9ம் திருமுறை பாடியோர் : ஒன்பதின்மர்
1. திருமாளிகைத்தேவர்
2. சேந்தனார்
3. கருவூர்த் தேவர்
4. பூந்துருத்தி காட நம்பி
5. கண்டராதித்தர்
6. வேணாட்டடிகள்
7. திருவாலியமுதனார்
8. புருடோத்தம நம்பி
9. சேதிராயர்
10ம் திருமுறை திருமூலர் திருமந்திரம்
11ம் திருமுறை பன்னிருவர்
1. திருவாலவாயுடையார்
2. காரைக்காலம்மையார்
3. ஐயடிகள் காடவர்கோன்
4. சேரமான் பெருமாள் நாயனார்
5. நக்கீரதேவ நாயனார்
6. கல்லாடதேவ நாயனார்
7. கபிலதேவ நாயனார்
8. பரணதேவ நாயனார்
9. இளம்பெருமான் அடிகள்
10. அதிராவடிகள்
11. பட்டினத்துப் பிள்ளையார்
12. நம்பியாண்டார் நம்பி
12ம் திருமுறை சேக்கிழார் அருளிய பெரியபுராணம்
பதினொன்றாம் திருமுறை நூல்கள் - II
11ஆம் திருமுறை பன்னிருவர்
திருவாலவாயுடையார் (கி.பி.6ம் நூற்றாண்டு) 1. பாணபத்திரர் பொருட்டு சேரமானுக்கு எழுதிய பாசுரம்
காரைக்கால் அம்மையார் (கி.பி.5ம் நூற்றாண்டு) 1. திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் (2)
2. திரு இரட்டை மணிமாலை
3. அற்புதத் திருவந்தாதி
கல்லாடதேவ நாயனார் 1. திருக்கண்ணப்பர் திருமறம்
நக்கீரதேவ நாயனார் (கி.பி.6ம் நூற்றாண்டு) 1. திருமுருகாற்றுப்படை
2. கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி
3. திரு ஈங்கோய்மலை எழுபது
4. திருவலஞ்சுழி மும்மணிக்கோவை
5. திருவெழுகூற்றிருக்கை
6. கோபப் பிரசாதம்
7. காரெட்டு
8. போற்றிக் கலிவெண்பா
9. திருக்கண்ணப்ப தேவர் திருமறம்
10. பெருந்தேவபாணி
கபிலதேவ நாயனார் (கி.பி.11ம் நூற்றாண்டு) 1. மூத்த நாயனார் இரட்டை மணிமாலை
2. சிவபெருமான் இரட்டை மணிமாலை
3. சிவபெருமான் திருவந்தாதி
பரண தேவ நாயனார் (கி.பி.10ம் நூற்றாண்டு) 1. சிவபெருமான் திருவந்தாதி
அதிரா அடிகள் (கி.பி.7ம் நூற்றாண்டு) 1. மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை
எம்பெருமானடிகள் 1. சிவபெருமான் மும்மணிக்கோவை
ஐயடிகள் காடவர்கோன் 1. சேத்திர வெண்பா
சேரமான் பெருமாள் நாயனார் (கழறிற்றறிவார் நாயனார்) 1. திருக்கயிலாய ஞான உலா (ஆதி உலா)
2. பொன் வண்ணத்து அந்தாதி
3. திருவாரூர் மும்மணிக்கோவை
பட்டினத்தடிகள் (கி.பி.10ம் நூற்றாண்டு) 1. கோயில் நான்மணிமாலை
2. திருக்கழுமல மும்மணிக்கோவை
3. திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
4. திருவேகம்பமுடையார் திருவந்தாதி
5. திருவெற்றியூர் ஒருபா ஒருபஃது
நம்பியாண்டார் நம்பிகள் (தமிழ் வியாசர்) 1. கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
2. திருத்தொண்டர் திருவந்தாதி
3. ஏகாதச மாலை
4. ஆளடைய பிள்ளையார் திருவந்தாதி
5. திருச்சபை விருத்தம்
6. திருமும்மணிக்கோவை
7. திருவுலா மாலை
8. திருக்கலம்பகம்
9. திருத்தொகை
நாலாயிரப் பிரபந்தம் பாடிய ஆழ்வார்கள் பன்னிருவர்
எண் ஆழ்வார் நூல்கள்
1. பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதி - 100 பாடல்கள்
2. பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதி - 1000 பாடல்கள்
3. பேயாழ்வார் மூன்றாம் திருவந்தாதி - 100 பாடல்கள்
4. திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தம் நான்முகன் திருவந்தாதி
5. நம்மாழ்வார் திருவாசிரியம், திருவாய்மொழி, திருவிருத்தம், பெரிய திருவந்தாதி
6. மதுரகவி ஆழ்வார் ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ எனும் பதிகம்
7. குலசேகர ஆழ்வார் பெருமாள் திருமொழி (வடமொழியில் முகுந்த மாலை)
8. பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழி
9. ஆண்டாள் நாச்சியார் திருமொழி, திருப்பாவை
10. திருப்பாணாழ்வார் அமலனாதிபிரான் பதிகம்
11. தொண்டரடிப் பொடியாழ்வார் திருமாலை (10 பாடல்கள்), திருப்பள்ளி எழுச்சி (45 பாடல்கள்)
12. திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி திருக்குறுந் தாண்டகம், திருவெழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல்
• காப்பியக் காலம்

கி.பி. 900 முதல் கி.பி. 1200 வரையிலான காலம் சோழர் காலம் என்று கூறப்படுகிறது. 10 ஆம் நூற்றாண்டில் பல்லவர்கள் வீழ்ந்ததால், சோழர்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றினர். அவர்களும் பெரும் சக்தியாக உயர்ந்தனர். இவர்கள் காலத்தில் ஐம்பெருங்காப்பியமும் ஐஞ்சிறுகாப்பியமும் இக்காலத்தில் தோன்றின. மேலும் இக்காலத்தில் பல்வேறு இலக்கண நூல்கள் தோன்றின.

ஐம்பெருங்காப்பியங்கள்
எண் நூலின் பெயர் பெயர்க் காரணம் நூலமைப்பு யாப்பு ஆசிரியர் காலம் சமயம்
1. சிலப்பதிகாரம் (வே. பெயர்) முத்தமிழ்க் காப்பியம் குடிமக்கள் காப்பியம் சிலம்பு + அதிகாரம் (சிலம்பின் மூலம் அதிகரித்த கதை) 3 காண்டங்கள் புகார் - 10 மதுரை - 13 வஞ்சி - 7 30 காதைகள் நிலை மண்டில ஆசிரியப்பா இளங்கோவடிகள் கி.பி.2ம் நூற். சமணம்
2. மணிமேகலை (வே.பெயர்) மணி மேகலைத் துறவு கோவலன் - மாதவி மகள் மணிமேகலையின் வாழ்வு பேசும் கதை 30 காதைகள் 4286 அடிகள் நிலை மண்டில ஆசிரியப்பா மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் கி.பி. 2ம் நூற். பௌத்தம்
3. சீவக சிந்தாமணி (மண நூல்) சீவகனின் கதை கூறும் நூல், சிந்தாமணி நினைத்ததைத் தரும் கல் 13 இலம்பகங்கள் 3147 விருத்தப் பாக்கள் விருத்தப் பாக்கள் திருத்தக்கத் தேவர் கி.பி.9ம் நூற். சமணம்
4. வளையாபதி -- 75 பாடல்கள் மட்டும் கிடைத்துள்ளன விருத்தம் பெயர் தெரியவில்லை கி.பி.9ம் நூற். சமணம்
5. குண்டலகேசி துறவியான போது களைந்த கூந்தல் சுருள் சுருளாக (குண்டலமாக) கேசம் வளர்ந்ததால் – பத்திரை எனும் பெண் இப்பெயர் பெற்றாள். அவளது கதை கூறும் நூல் 19 பாடல்கள் மட்டும் கிடைத்துள்ளன விருத்தம் நாதகுத்தனார் கி.பி.8ம் நூற். பௌத்தம்
ஐஞ்சிறுகாப்பியங்கள்
எண் நூலின் பெயர் பெயர்க் காரணம் நூலமைப்பு யாப்பு ஆசிரியர் காலம் சமயம்
1. நீலகேசி (நீலகேசித் தெரட்டு) (நீலகேசித் திரட்டு) நீல (கருமை) கேசி - கூந்தலை உடையவள் கதை 10 சருக்கங்கள் 894 பாடல்கள் விருத்தம் பெயர் தெரியவில்லை கி.பி.5 (அல்) கி.பி.6ம் நூற். சமணம்
2. சூளாமணி திவிட்டன், விசயன் இருவரும் சூளாமணி போல் தெரிந்த பண்பு கருதியது 12 சருக்கங்கள் 2330 பாடல்கள் விருத்தம் தோலாமொழித் தேவர் கி.பி.7 (அல்) கி.பி.10ம் நூற். சமணம்
3. யசோதர காவியம் -- 5 சருக்கங்கள் 320 பாடல்கள் விருத்தம் வெண்ணாவலூர் உடையார்வேள் கி.பி.13ம் நூற். சமணம்
4. உதயணகுமார காவியம் உதயணனின் கதை 6 காண்டங்கள் 369 பாடல்கள் விருத்தம் கந்தியார் எனும் பெண் துறவி கி.பி.15ம் நூற். சமணம்
5. நாககுமார காவியம் நாககுமாரன் கதை 5 சருக்கங்கள் 170 பாடல்கள் விருத்தம் பெயர் தெரியவில்லை கி.பி.16ம் நூற். சமணம்
• சிற்றிலக்கிய காலம்

நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்று அழைக்கலாம். பல்வேறு காலங்களில் பல்வேறு சிற்றிலக்கிய நூல்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. எனினும், சிற்றிலக்கிய வகைகள் மேலோங்கி நின்ற கி.பி. 15-ஆம் நூற்றாண்டு முதல் 19-ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலத்தைச் சிற்றிலக்கியக் காலமாக வரையறுக்கப்படுகிறது. தமிழில் 96 வகையான சிற்றிலக்கியங்கள் காணப்படுகின்றன. அவை பின்வருமாறு:

சிற்றிலக்கியங்கள்
எண் சிற்றிலக்கிய வகை சான்றாகும் நூல்
1. உலா சேரமான் பெருமாள் நாயனார் பாடிய 'ஆதியுலா' திருக்கைலாயர் ஞான உலா : ஒட்டக்கூத்தர் பாடிய மூவருலா எனப் பலவாகும். 80க்கும் மேற்பட்ட உலாக்க உள்ளன.
2. கலம்பகம் நந்திக்கலம்பகம், வீரமாமுனிவரின் திருக்காவனார்க் கலம்பகம், ஜி.யு.போப்பின் தமிழ்ச் செய்யுட் கலம்பகம் என 85 கலம்பகங்கள் வந்துள்ளன.
3. குறத்திப்பாட்டு குறவஞ்சிக்கு இதுவே மூலம்
4. கோவை பாண்டிக்கோவை, தஞ்சைவாணன் கோவை
5. தூது தமிழ்விடுதூது உமாபதி சிவாச்சாரியாரின் நெஞ்சுவிடுதூது. பலவகை தூதுக்கள் உள்ளன.
6. நூற்றந்தாதி அபிராமி அந்தாதி
7. பரணி கலிங்கத்துப்பரணி, தக்கயாகப்பரணி முதலியன
8. பிள்ளைத்தமிழ் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - குமரகுருபரர், சேக்கிழார் பிள்ளைத்தமிழ் முதலாகப் பல தோன்றியுள்ளன
9. மடல் திருமங்கையாழ்வாரின் சிறிய திருமடல், பெரிய திருமடல்
10. மெய்க்கீர்த்தி கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ளன
• ஐரோப்பியர் காலம்

தமிழ் உரைநடை வரலாற்றில் கி.பி.பதினாறாம் நூற்றாண்டு தொடங்கி கி.பி.இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை உள்ள காலப்பகுதி ஐரோப்பியர் காலம் எனப்படும். கிறித்தவ சமயப் பிரச்சாரம் செய்யும் நோக்கில் ஐரோப்பியர் தமிழ்நாட்டிற்கு வந்தனர். ஆனால் அவர்கள் தமிழ் மொழிக்கும், தமிழ் உரைநடைக்கும் செய்த தொண்டே மிகப் பெரியதாகும். சமயம் பரப்பும் நோக்கில் தமிழைப் படித்த ஐரோப்பியர், அதன் இனிமையில் மயங்கினர். ஆய்வு நோக்கில் மொழியை வளப்படுத்தினர். தமிழ் எழுத்து வடிவில் இருந்த குறைபாடுகளை நீக்கினர். பண்டிதரே படித்தறிய முடிந்த உரையாசிரியர்களின் உரைநடையை மாற்றினர். சிறுசிறு வாக்கியங்களில் மக்கள் பேசும் மொழியில் ஐரோப்பியர் எழுத ஆரம்பித்தனர். அதன் பயனாகத் தமிழுக்கு ஒரு புதிய உரைநடை கிடைத்தது.

• தற்காலத் தமிழ் இலக்கியங்கள்

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பாரதி உள்ளிட்ட பெருங்கவிஞர்கள் தோன்றிக் கவிதை இலக்கியத்தை வளம்பெறச் செய்தனர். கல்கி, உள்ளிட்ட பல்வேறு அறிஞர்கள் தோன்றி நாவல் இலக்கியத்தை வளப்படுத்தினர். புதுமைப்பித்தன் உள்ளிட்ட பலர் தோன்றி சிறுகதை இலக்கியத்திற்கு வளம் சேர்த்தனர். திரு.வி.க. உள்ளிட்ட தமிழறிஞர்கள் நல்ல கட்டுரை இலக்கியங்களைப் படைத்து தமிழன்னைக்கு அணி செய்தனர்.

தவத்திரு சங்கரதாஸ்சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார் உள்ளிட்டோரின் உழைப்பால் தமிழ் நாடகத்துறை வளமுற்றது. கடிதம், மொழி வரலாறு, வாழ்க்கை வரலாறு, ஆராய்ச்சி உள்ளிட்ட இலக்கியத்துறைகள் தோன்றி தமிழை உலகளாவிய நிலைக்கு உயர்த்தியது. இருபத்தோராம் நூற்றாண்டில் புதிய புதிய துறைகளான மொழிபெயர்ப்பியல் துறை, அகராதித்துறை, பதிப்புத்துறை, சுவடியியல் துறை, மானிடவியல் துறை என்று பல்வேறு நிலைகளில் தமிழில் புதியன தோன்றிக் கொண்டே இருக்கின்றன. இவை அனைத்தும் உலகச் செம்மொழிகளில் தமிழ் உயர்ந்து விளங்கி வருகின்றது என்பதை உலகிற்கு எடுத்துரைத்துக் கொண்டிருக்கின்றன.

இப்பகுதியில் உள்ள குறிப்புகள் பற்றி மேலும் அறிய தமிழ் இணையக் கல்விக் கழக மின்னூலகத்தில் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I
  1. கலைத்திட்டம் என்றால் என்ன?
  2. கலைத்திட்டம் அமையும் விதம் குறித்து எழுதுக.
  3. தமிழ் இலக்கண நூல்கள் பற்றி விரிவாக எழுதுக.
  4. முச்சங்கம் - குறிப்பு வரைக.
  5. சங்க காலத்தில் தோன்றிய நூல்கள் பற்றி எழுதுக.
  6. பதினெண் கீழ்கணக்கு நூல்கள் யாவை?