முகப்பு

5.1 தேர்வு முறைகளும் வகைகளும்

தேர்வு முறைகளும் வகைகளும்

  • தேர்வின் முதன்மையான நோக்கம் தேடல்.
  • மாணவர்கள் எந்த அளவிற்குப் பாடத்தைக் கற்றுக்கொண்டார்கள் என்பதை அறிந்து கொள்ளுதல்.
  • கற்றலில் முன்னேற்றத்தையும் சாதனைகளையும் அளவிடுதல்.
  • மாணவர்களின் உள்ளார்ந்த செயல்திறன்களை அறிதல்.
  • தேர்வினால் மாணவர்களின் அறிதல் மற்றும் புரிதல் திறனை அளவிடுதல்.
  • மாணவர்களின் கற்றல் அடைவைச் சோதித்தறிதல்.

ஆகியன தேர்வின் நோக்கங்களாக கருதப்படுகின்றன.

கல்வியில் தேர்விற்குச் சிறப்பிடம் உண்டு. தேர்வு கற்பிப்பின் நிறைவாகக் கருதப்படுகிறது. ‘தேர்வு’ எனும் சொல் ஆண்டு இறுதியில் மாணவர்களின் மேல்வகுப்புத் தகுதியைக் காணுவதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் முறை மட்டுமன்று. தேர்வு என்பது பரந்துபட்ட பொருளுடையதாகும். கற்றல்- கற்பித்தல் செயலில் கற்போரின் கற்றல் தேவை, போக்கு, தேர்ச்சி ஆகியவற்றை அறிவதற்கு உதவும் கல்விச்செயலும் ’தேர்வு’ ஆகும். ’தேர்வு’ சோதனை எனும் சொல்லாலும் குறிக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் 'Test', 'Examination' ஆகிய இருசொற்கள் பயன்பாட்டில் உள்ளன. இவ்விரு பொருளையும் சூழ்நிலைக்கு ஏற்பக் குறிக்கும் வகையில் தமிழில் ’தேர்வு’ எனும் சொல் பயன்படுத்தப்படுகிறது.

மாணவர்களின் தேவையின் அடிப்படையில், தேர்வுகள் வகைப்படுத்தப்படுகின்றன. அவை 1. வாய்மொழித்தேர்வு, 2. எழுத்துத்தேர்வு, 3. செய்முறைத்தேர்வு என்பன.

• வாய்மொழித் தேர்வு

ஆசிரியர் மாணவரிடம் நேரடியாக வினாக்களைக் கேட்டு அதற்குரிய விடையைப் பெறுவதே வாய்மொழித்தேர்வாகும்.

மொழிப்பாடங்களில் வாய்மொழித்தேர்வு இன்றியமையாததாகும். தொடக்கநிலை வகுப்புகளில் கேட்டல் திறனை அளந்தறிய இத்தேர்வு பயன்படுகிறது. பேசுதல் திறனை அளப்பதற்கும் வாய்மொழித்தேர்வே முறையானதாகும். மேல்நிலை வகுப்புகளில் வாய்மொழித்தேர்வின் இன்றியமையாமை உணரப்பட்டு வருகிறது. இத்தேர்வு உரையாடல், குறும்பேச்சு, வினாவிடை ஆகிய வெளிப்பாட்டு முறைகளில் மேற்கொள்ளப்படும். இம் மூன்றும் மொழித்திறன் அடைவினையும் மேம்பாட்டையும் மதிப்பிடப் பயன்படுகின்றன.

வாய்மொழித்தேர்வு ஒவ்வொரு தேர்வர்க்கும் தனித்தனியே மேற்கொள்ள வேண்டுவதால் தேர்வுக்காலம் மிகவும் நெடியதாக அமையும். மேலும் இத்தேர்வு ‘புறவயம்’ குன்றியதாக அமையும்.

எ.கா :

பின்வரும் சொல் தொகுதியில் எவையேனும் பத்துச் சொற்களைச் சரியான ஒலிப்புடன் சொல்லச் செய்க.

மரம் கோயில்
இலை உலகம்
கடல் பெட்டி
வட்டம் நிலவு
அம்மா பழம்
சன்னல் கப்பல்
புத்தகம் ஆடு
தக்காளி கொக்கு
• எழுத்துத் தேர்வு

தேர்வு வினாக்களுக்குரிய விடைகளை மாணவர் எழுதித் தருவதாக அமைவது எழுதுத்தேர்வாகும். இன்றைய கல்வி நடைமுறையில் வெகுவாக மேற்கொள்ளப் பெறுவது இத்தேர்வேயாகும். பல சீர்திருத்தங்களும் எழுதுத்தேர்வின் அடிப்படையில் கருதப்படுகின்றன. எழுதுதலின் வழிக் கற்றலின் பல்வகைப்பட்ட அடைவுகளையும் அளக்க இயலுவதால் எழுதுத்தேர்வு கல்வியில் பயன் மிகுந்ததாகக் கருதப்படுகிறது. எழுதுத்தேர்வை நடத்த ஆசிரியர்கள், மாணவர்களை நேருக்குநேர் எதிர்ப்படவேண்டும்.

பன்நோக்குப் பயன்பாடு கொண்ட இத்தேர்வு எழுதுத் திறக்கூறுகளான விரைவு, தெளிவு, மொழியாட்சி ஆகியனவற்றின் பாதிப்புக்கு உட்படுகிறது. எனவே அக்கூறுகளால் இத்தேர்வு ‘அகவயம்’ இயல்புடையது.

• செய்முறைத் தேர்வு

தேர்வுக்கால வேளையில், மாணவர்கள்தம் திறன் அல்லது அடைவினைச் செய்துகாட்டல் வழி வெளிப்படுத்துவதாக அமைவது செய்முறைத் தேர்வாகும். அறிவியல் பாடத்தில் இத்தேர்வு வெகுவாக மேற்கொள்ளப்படுகிறது. செயல் சார்ந்த திறன்களை அளப்பதற்கு இத்தேர்வு மிகுந்த பயனுடையதாகும்.

மொழிக்கல்வியிலும் இத்தேர்வை மேற்கொள்ளத்தக்க வாய்ப்புகள் உள்ளன. அடிப்படைத் திறன்களில் குழந்தைகள் பெற்ற வல்லமையினை அளக்க இத்தேர்வு பயன்படுகிறது. மேலும் இத்தேர்வு எழுத்தளவிலான பொருண்மைகளைப் பயனளவில் எடுத்துக்காட்டப் பயன்படுகிறது.

இத்தேர்வுகள் தொடக்கநிலைகளில் தொடங்கி மேல்நிலைவரை செயல்படுகிறது. மொழிக்கல்வியில் மேற்கொள்ளப்படும் தேர்வு முறையானது மொழியின் அடிப்படைத் திறன்களைப் பெற்று மாணவர்கள் சிறப்பாகச் செயல்பட ஏதுவாக அமைகின்றது.

கற்பிக்கும் முன்னரும், கற்பிக்கும்போதும், கற்பித்த பின்னரும் நிகழ்ந்துவரும் தொடர் நிகழ்ச்சியே தேர்வு ஆகும். எனவே தேர்வு கற்பித்தலோடு இணைந்து நோக்கப்படவேண்டியதாகும். தேர்வு இன்றிக் கற்பிப்பு இல்லை; கற்பிப்பு இன்றித் தேர்வில்லை. இத்தகைய தேர்வு பல முறைகளில் நடைபெறுகிறது. இந்த முறைகளில் நடத்தப்படும் தேர்வுகள் நிலையறி தேர்வு, குறையறி தேர்வு, குறைதீர் பயிற்சி, தொகுநிலைத் தேர்வு, அடைவுத் தேர்வு என அமைந்துள்ளன.

• நிலையறி தேர்வு

கற்பிக்கும் முன்னர், ஆசிரியர் தமக்குள் இரு வினாக்களைக் கேட்டுக்கொள்ள வேண்டியவராகிறார்.

கற்பிக்க இருப்பனவற்றை மாணவர்கள் பெறத்தக்கவாறு முன்னறிவு பெற்றுள்ளனரா?

என்பது ஒரு வினா.

கற்பிக்க இருப்பனவற்றைப் பற்றி மாணவர்கள் ஏதேனும் முன்னரே அறிந்துள்ளனரா?

என்பது பிறிதொரு வினா.

மாணவர்கள் முன்னறிவைப் பெற்றுள்ளனரா என அறிவதற்கு அவர்களைத் தேர்வு செய்தல் வேண்டும். கோணம் என்பதன் கருத்துருவே அறியாத மாணவருக்கு முக்கோணம் பற்றிக் கற்பிப்பது பொருத்தமுடையதாகாது.

சிவன் என்னும் சொல்லையே கேள்விப்படாத மாணவருக்குச் சைவ சமயம் பற்றிச் சொல்வது சரியன்று. இராவண காவியத்தைக் கற்பிக்கப் புகும் ஆசிரியர், அக்காவியத் தோற்றத்திற்கான பின்னணியை அறியாத மாணவருக்கு அதன் வளமையான பாடல்களுக்கான விளக்கம் கூறுவதால் ஏது பயன்? மாணவர் முன்னரே அக்காவியம் பற்றி அறிந்துள்ளனரா என ஆசிரியர் அறிந்தால்தான் அவர் எங்கே, எவ்வாறு தொடங்குதல் வேண்டும் என அறியமுடியும். எனவே, கற்பிக்கும் முன்னர் மாணவரின் முன்னறிவை அறிதல், கற்பிப்புச் செயலில் முதற்கண் மேற்கொள்ளத் தக்கதொன்றாகும். இத் தேர்வு மாணவரின் தயார்நிலையை அறியத்தக்க தேர்வாகும்.

• குறையறி தேர்வு, குறைதீர் பயிற்சி

கற்பித்தலிடையே மேற்கொள்ளப்படும் வளர்வறி தேர்வு, ஆசிரியரின் கற்பிப்புச் செயலை நெறிப்படுத்துவதற்கும், மாணவர்களுக்குக் கற்றலில் வழிகாட்டுவதற்கு உரிய குறையறி தேர்வு, குறைதீர்தேர்வு ஆகியனவற்றை மேற்கொள்ளுவதற்கும் இடமளிப்பதாகும். கற்பிப்பு நோக்கங்களை நிறைவேற்றுவதற்கும் நிறைவேறாத நிலையில், கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்குத் தனிக்கவனம் செலுத்துவதற்கும் இத்தேர்வு இன்றியமையாததாகிறது.

கற்பித்தலிடை மேற்கொள்ளப்படும் குறையறிதேர்வால் கற்றலில் இடர்ப்படுகின்ற மாணவர்களைக் கண்டறிதல், கண்டறிந்ததற்கு ஏற்ப அவர்களுக்குத் தனிக்கவனம் செலுத்துதல், இடர்ப்படுகின்ற கற்றல் பகுதிகளை இனங்கண்டு கற்பிப்பு முறைகளைச் செம்மைப்படுத்திக் கொள்ளல் ஆகியன நிகழ்கின்றன. குறையறிதேர்வின்றிக் கற்பித்தல் தொடருமாயின், தொடர்ந்து கற்பிக்கப்புகும் பகுதிகளுக்குத் தேவையான முன்னறிவு இல்லாமல் போய்விடும். கற்பித்தலிடையே ஆசிரியர் மேற்கொள்ள வேண்டிய வளர்வறி தேர்வின் தன்மைகளை அடுத்துவரும் வரைவு காட்டுகிறது. குறையறிதேர்வைத் தொடருவது குறைதீர்தேர்வு ஆகும்.

குறையறிதேர்வால் ஏற்பட்ட பட்டறிவு, குறைதீர்தேர்வை அமைப்பதற்குத் துணைபுரிகிறது. குறைதீர்தேர்வின் முடிவுகள் கொண்டு பாடப்பகுதிகளுக்கு ஏற்பவும் மாணவர்களின் கொள்திறனுக்கு ஏற்பவும் கற்பிப்பு முறைகளை மாற்றவும் மேம்படுத்தவும் இயலும். இவ்விரு வகைப்பட்ட தேர்வுகளின் தொடர்பினைக் கீழ்வரும் வரைவு காட்டுகிறது.

• தொகுநிலைத் தேர்வு

கற்பித்தலின் இறுதியில் மேற்கொள்ளப்படும் தேர்வு தொகுநிலைத்தேர்வு ஆகும். கற்பித்தலின் முடிவு என்பது ஒரு பாடவேளையின் முடிவாகலாம், பாடப்பகுதியின் முடிவாகவும் அமையலாம், அல்லது கற்பிப்புக் கால அளவின் முடிவாகலாம். சூழலுக்கு ஏற்ப இத்தேர்வு வகுப்புத்தேர்வு, அலகுத்தேர்வு, பருவத்தேர்வு, ஆண்டுத்தேர்வு போன்ற பெயர்களால் குறிக்கப்படுகின்றன. இவற்றுள் எந்நிலையிலுள்ள தேர்வாயினும் அத்தேர்வில் கருதத்தக்கன இரண்டாகும்.

அடுத்த மேம்பட்ட கல்விநிலை (வகுப்பு மாற்றம்) அல்லது பாட அலகுக்குச் செல்வதற்குத் தகுதிபெறும் அளவில் எவரெல்லாம் தேர்ச்சி பெற்றுள்ளனர் ? -------- 1

ஒவ்வொரு மாணவரையும் எவ்வெவ்வாறு தரம் பிரிப்பது ? --------- 2

ஆகிய வினாக்களுக்கு விடைகண்டு, கற்பித்தல் - கற்றல் செயலில் நிறைகுறை காண்பதே தொகுநிலைத்தேர்வின் நோக்கமாகும். இத்தேர்வு சூழலுக்கு ஏற்பக் கற்பித்தல் பகுதிகளின் அளவைப் பொறுத்து அமையும்.

கீழ்வரும் வரைவு தொகுநிலைத்தேர்வின் தன்மையையும் பயனையும் விளக்குவதாகும்.

• அடைவுத்தேர்வு (Achievement Test)

கற்றல் பொருள் அளவினைப் பெற்றிருப்பதைக் காட்டுவது அடைவு. இது தேர்ச்சி என்னும் சொல்லாலும் குறிக்கப்படும். அடைவு / தேர்ச்சி, கற்றல் நோக்கங்கள் நிறைவேறியதை அளந்து தெரிவிக்கும். அடைவினை அளப்பதற்குப் புறவய, அகவய வினாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. அடைவு அல்லது தேர்ச்சி என்பது திறனறி சோதனையைக் குறிப்பிடுகிறது. திறனறிதல் என்று சொல்லப்படுவது மொழி, இலக்கியத் திறனைக் குறிப்பதாகும்.

திறனறிசோதனை ‘தொடர் முழுமை மதிப்பீட்டுக் கணித்தல்’ (Continuous Comprehensive Evaluation) சூழலில் வளர்வறிதேர்வாகவும் தொகுநிலைதேர்வாகவும் மேற்கொள்ளப்படுகிறது.