முகப்பு

5.2 தேர்வு வினாக்களின் வகை

தேர்வு வினாக்களின் வகை

தேர்வுக்குரிய அளவுகோலாக அமைபவை “தேர்வு வினா வகைகள்” ஆகும். அவை இரு வகைப்படும். 1. புறவயத்தேர்வு, 2. அகவயத்தேர்வு என்பனவாகும். இத்தேர்வு வகைகளைக் கையாள்வதற்கு மேற்கூறப்பட்ட தேர்வு முறைகள் கருவியாக விளங்குகின்றன.

விடையை மதிப்பீடு செய்கின்ற அளவீட்டாளரின் மாறாத அளவீடு அமையும் தன்மையே புறவயத்தேர்வு எனப்படும். இது ஒரு மதிப்பெண் வினாவாக அமையும். தொடக்கப்பள்ளி அளவில் இத்தேர்வு வரவேற்கத்தக்கதாகும். அதுமட்டுமல்லாமல், இது தேர்வுச் சீர்திருத்தத்தின் அடிப்படையில் தோன்றிய புதுமுறை புறவயத்தேர்வாகும். நுழைவுத்தேர்வு, வங்கித்தேர்வு முதலியவற்றில் இம்முறையைப் பயன்படுத்தி இதன் வெற்றி நன்குணரப்பட்டுள்ளது. பள்ளித்தேர்விலும் இது பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இம்முறையில் மேற்கொள்ளும் மதிப்பீடு துல்லியமாகவும் சரியாகவும் அமைய வாய்ப்புள்ளது. மதிப்பிடுவோரின் மனநிலைக்கேற்ப மாறாத் தன்மையை இம்முறை உருவாக்குகிறது. இத்தேர்வுகளில் விடைக்குறிப்புகள் முன்கூட்டியே தயாரிக்கப்படுவதால்; சரியான விடையை முன்கூட்டியே தீர்மானிக்க முடிகிறது. இதில் மதிப்பீட்டாளரின் விருப்புவெறுப்புக்கு இடமில்லை.

• புறவய வினாக்கள் தயாரித்தல்
  1. வினாக்களைத் தெளிவான முறையில் தயாரித்தல்.
  2. துல்லியமான பொருள்தரும் சொற்களையே பயன்படுத்துதல்.
  3. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க ஏற்புடைய அடிப்படைகளைத் தருதல்.
  4. ஒரே மாதிரியான சொற்களைப் பயன்படுத்துதலைத் தவிர்த்தல்.
  5. பாடப்புத்தகத்திலுள்ள தொடர்களை அப்படியே பயன்படுத்துவதைத் தவிர்த்தல்.
  6. ஒரு வினாவுக்குரிய விடை பிறிதொரு வினாவிற்கும் விடையாகாமல் பார்த்துக்கொள்ளல்.
  7. குறிப்பாகப் பொருள்தரும் வினாக்களைத் தவிர்த்து நேரடியான விடைகள் தரும் வினாக்களையே பயன்படுத்துதல்.
• மொழிப்பாடத்தில் புறவயவினாக்கள் வகை

இப்பகுதியில் சரியா தவறா, பலவுள் தெரிவு, கோடிட்ட இடம் நிரப்புதல், பொருத்துக, மாற்றியமைக்கப்பட்ட வகை ஆகியவற்றைத் தயாரிக்கும் முறைகள் விளக்கப்படுகின்றன.

• சரி / தவறு

கொடுக்கப்பட்டிருக்கும் கருத்துச் சொற்றொடர் அருகே சரி அல்லது தவறு, ஆம் அல்லது இல்லை என்ற ஏதாவது ஒன்றினை மட்டும் மாணவர் பதிலாக அளித்தல் வேண்டும்.

எ.கா :

திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது. சரி/தவறு.

• பலவுள் தெரிவு

ஒரு வினாவிற்குப் பல தெரிவுகள் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றுள் சரியான ஒன்றை மட்டும் மாணவர்கள் தெரிவுசெய்து விடையாக எழுதவேண்டும். இவ்வாறு அமைக்கப்படும் வினாவிற்குரிய விடை “பலவுள் தெரிவு" எனப்படும்.

எ.கா :
'யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பாடலைப் பாடியவர் ?
அ) ஐயனாரிதனார் ஆ) ஔவையார்
இ) கணியன் பூங்குன்றனார் ஈ) பெருந்தேவனார்
• பொருத்துதல் வகை

இரண்டு வரிசைகளில் அமைந்திருக்கும் வினாக்கூறுகளுள். சரியான, தொடர்புடையவற்றை இணைத்தல் அல்லது விடையின் எண்ணை எழுதுதல்வேண்டும்.

நூல் ஆசிரியர்
1. நாலடியார் அ) சீத்தலைச் சாத்தனார்
2. சிலப்பதிகாரம் ஆ) சமண முனிவர்கள்
3. மணிமேகலை இ) திருத்தக்கத் தேவர்
4. சீவக சிந்தாமணி ஈ) இளங்கோவுடிகள்
• கோடிட்ட இடம் நிரப்புக

இவ்வகையில் கோடிட்ட இடம் நிரப்புதல், ஒரு சொல் அல்லது ஒரு தொடர் விடையாக எழுத வேண்டும். இவ்வகையில் வினாக்கள் கூற்றின் இடையில் கோடு அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கும். அக்கோட்டின் மேல் மாணவர் விடையை எழுதுதல் வேண்டும்.

எ.கா :

1. அழ.வள்ளியப்பா ____________ கவிஞர் என்று அழைக்கப்பட்டார்.

2. பாரதியார் ______________ என்ற இடத்தில் பிறந்தார்.

கோடிட்ட இடம் நிரப்புதலில் விடைகள் அடைப்புக்குள் கொடுக்கப்பட்டுச் சரியானதைத் தேர்ந்தெடுத்தல், சொல்லுக்குரிய எதிர்ச்சொல்லை எழுதுதல் என்னும் வகையிலும் வினாக்கள் அமைக்கப்படுகின்றன.

எ.கா :

1. மீனவன் ________ வீசினான் (வலை/வளை)

2. புலி ________ தேடும் (இரை/இறை)

3. பசு ________ தரும் (பால் / பாழ்)

• மாற்றியமைக்கும் வகை

ஒரு கூற்றை விடையாக அமைத்துக் கொடுத்து அதற்குரிய வினாவை எழுதச் செய்வது மாற்றியமைக்கும் வினா வகையாகும். மாற்றி அமைக்கும் வகை வினா மொழிப்பாடத்தில் பெருமளவு பயன்படுத்தப்படுவதாகும், வாக்கிய அமைப்பு அறிவினைத் தேர்ந்தறிவதற்கு இவ்வகை வினா சிறந்ததாகும்.

எ.கா :

1. கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தை அடைப்பிற்குள் கொடுக்கப்பட்டுள்ள குறிப்பிற்கேற்ப மாற்றுக.

நான் --------- ---------- ----------

(வந்தேன், நனைந்து, மழையில்)

அகவய வினாக்கள் மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்துகிறது. இவ்வகை வினா குறிப்பிட்ட செய்தியினைத் தொகுத்து ஒழுங்குபடுத்தி எழுதுவதற்கு வாய்ப்பு தருகிறது. மாணவர் தம் மொழித்திறமையை மேலும் விரிவாக்கிச் சொல்லமைப்பு, பத்தியமைப்பு, கருத்துத் தொடர்ச்சி ஆகியவற்றில் பயிற்சி பெற்றுச் சிறந்து விளங்க வாய்ப்பு ஏற்படுகிறது. மாணவனின் சிந்தனைத் திறனையும் படைப்பாற்றல் திறனையும் அறியமுடியும்.

வினாக்களின் விடைகளுக்குரிய அளவீடு தேர்வாளரின் நிலைக்கேற்ப மாறுபடின் அவ்வினாக்கள் அகவய வினாக்கள் எனப்படும். அவை குறுவினா, பத்தி வினா, கட்டுரை வினா என்பனவாக அமையும். அவற்றைப் பற்றிய விளக்கத்தைக் கீழே காணலாம்.

• குறுவினாக்கள்

குறுவினா என்பது ஓரிரு வாக்கியங்களைக் கொண்ட விடைக்குரியதான வினாவாகும்.

எ.கா :

பாரதியார் எழுதிய நூல்கள் எவை ?

• பத்தி வினாக்கள்

இவ்வகை வினாக்களுக்கு ஒரு பத்தியில் அதாவது ஆறு அல்லது ஏழு வாக்கியங்களில் விடை எழுதவேண்டும். ஒரு கருத்தை விளக்கப் பல வாக்கியங்கள் எழுதத் தெரிகின்றதா என்பதை அறிய இது பயன்படுகிறது.

இவ்வகை வினாக்களைத் தயாரிப்பது மிகவும் எளிது. உண்மைத் தகவல்கள் கிடைக்கும்; பாடப்பொருள் அனைத்தும் உள்ளடங்கும்.

எ.கா :

திருவள்ளுவரைத் தெய்வப்புலவர் எனப் போற்றுவதற்கான காரணம் யாது?

• கட்டுரை வினா

பல வாக்கியங்களில் விடை தருவதாக அமையும் வினா கட்டுரை வினா எனப்படும். இவ்வினாக்களால் மாணவரின் கருத்து வெளியீட்டுத் திறன் அளக்கப்படுகிறது.

எ.கா :

நீ சுற்றுலா சென்று வந்த இடத்தின் சிறப்புகளை விவரித்தல். நாட்டிற்கு உழைத்த தேசத் தலைவர்கள் இருவரின் தொண்டுகளை எடுத்துக்காட்டவும்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I
  1. தேர்வு முறைகள் யாவை?
  2. தேர்வின் வகைகள் யாவை?
  3. தேர்வு வினாக்களின் வகைகள் யாவை?
  4. புயவயத் தேர்வு - குறிப்பு வரைக.
  5. அகவயத் தேர்வு - குறிப்பு வரைக.