5.4 தேர்வுத்தாள் திட்ட வரைவு
தேர்வுத்தாள் திட்ட வரைவு
ஆசிரியர் நடத்தும் தேர்வுகள் முறையாக திட்ட வரைவுக்கு (Blue Print) உட்படுத்தி, பாடத்தின் அனைத்து அலகுகளிலும் வினாத்தாளை வடிவமைக்கவேண்டும். அவற்றின் விளக்கத்தை கீழே காண்போம்.
- தேர்வு நடத்தவிருக்கும் பாடப்பகுதியை வரையறுத்தல்.
- காலமும் மதிப்பெண்ணும் தருதல்.
- பாடப்பகுதிகளுக்கேற்ற நோக்கங்களைக் குறிப்பிடுதல்.
- தேர்வில் இடம்பெறும் வினா வகைகளை முடிவு செய்தல்.
- வினா வகைகளுக்குரிய மதிப்பெண் வழங்குதல்.
- வினா நிலைகளில் கவனம் செலுத்துதல்.
- வினாத்தாளைச் செம்மையாகத் தயாரித்தல்.
- வினா வடிவமைப்புத் தயாரித்தல்.
- விடைக்குறிப்பு எழுதுதல்.
- விடைகளுக்கு மதிப்பெண் வழங்குதல்.
- வினாவைத் தேர்ந்தெடுத்தல் பற்றிய குறிப்பு வழங்குதல்.
- முதலியவற்றை வினாத்தாள் வடிவமைக்கும்போது ஆசிரியர் மனத்திற் கொள்ளவேண்டும்.
நல்ல தேர்வின் இன்றியமையாப் பண்புகள் கீழ்க்கண்டவாறு அமைந்துள்ளன.
- ஏற்புடைமை
- நம்பத்தன்மை
- புறவயப்பாடு
- எளிமைப்பாடு
- தர அளவுப்பாடு
- சமநிலை
- ஒருமைப்பாடு
- பயன்பாடு
அளந்தறியப்படும் பண்பினைச் சரியாகத் துல்லியமாக அளவிட வினா உதவுமாயின், அது ஏற்புடைமை உடையது ஆகும்.
எந்த நோக்கத்திற்காக வினா தயாரிக்கப்பட்டதோ அந்நோக்கம் நிறைவேறும் வகையில் அமையவில்லை என்றால் அவ்வினா ஏற்புடைமையற்றது. ஏற்புடைமை பெற்ற வினாவானது சோதிக்கப்படும் பண்பினைத் தவிர வேறு எப்பண்பினையும் அளவிடாது. எடுத்துக்காட்டாகச் சொல்திறைனைச் சோதிப்பதற்காகத் தயாரித்த சோதனை, அத்திறனை மட்டும் சோதிக்க வேண்டுமேயன்றி எண்ணாற்றல், சொல்வேகம் போன்ற திறன்களைச் சோதிப்பதாய் இருந்தால், அச்சோதனை ஏற்புடையதன்று. எனவே ஏற்புடைமை பெற்ற சோதனையானது சோதிக்கப்படும் பண்பினை மட்டும் அளவிடவேண்டும்.
ஒரு குறிப்பிட்ட பண்பினை ஒரு தேர்வு எத்தனை முறை அளந்தறிந்தாலும், அது மாறாத முடிவுகளைக் கொடுக்குமானல். அதனை அத்தேர்வின் நம்பகத்தன்மை என்கிறோம். சோதனை ஒன்றை ஒரு குறிப்பிட்ட மாணவர் குழுவிற்கு மீண்டும் மீண்டும் கொடுத்தாலும் அளிக்கும் விடைகளின் தன்மையும் மதிப்பெண்களும் மாறாது இருந்தால், அதுவே நம்பகத்தன்மையாகும்.
மதிப்பீட்டாளரின் விருப்பு வெறுப்புகள், உள்ளுணர்வுகள், தன்னுணர்ச்சி, ஒருபுறச் சார்பு ஆகியவற்றால் எத்தனை முறை எத்தனை தேர்வர்கள் மதிப்பீடு செய்தாலும் மதிப்பெண் மாறாமல் இருக்கும் நிலையைப் புறவயப்பாடு என்பர். புறவயப்பாடு சிறப்பாக அமைய, புறவயப்பட்ட வினாக்கள் மட்டுமே இடம்பெறச் செய்தல் வேண்டும். மதிப்பெண் தெளிவாகச் சுட்டப்பட வேண்டும். திட்டமிடப்பட்ட விடைக்குறிப்பு தருதல் வேண்டும்.
தேர்வு அமைப்பு எளிமையானதாக இருத்தல் வேண்டும். மாணவர்கள் விரைவாகவும், துல்லியமாகவும் இயல்பாகவும் எழுதும் வகையில் வினா வடிவமைப்பு இருத்தல் வேண்டும். ஆசிரியர்கள் மதிப்பிடுவதற்கு ஏற்ற வகையில் எளிமையாக அமைதல் வேண்டும். இத்தகைய அமைப்புக் கொண்ட வினாக்களை எளிமைப்பாடு என்பர்.
மாணவர்களிடையே பல்வேறு சமயங்களில், பிற பள்ளிகளில் பல்வேறு தேர்வாளர்களால் கேட்கப்பட்ட வினாக்களைத் தொகுத்து, ஒப்புநோக்கித் தேர்ந்தெடுக்கப்பட்ட வினாக்கள் தர அளவுப்பாடு வினாக்கள் எனப்படும். ஒரே தர வகுப்பில் பயிலும் பல்வேறு பள்ளிகளின் மாணவர்கள் ஒரே மாதிரியாக விடை எழுதக்கூடிய வினாக்களே தர அளவுப்பாட்டு வினாக்கள் ஆகும்.
மாணவர்களின் வேகமாகக் கற்போர், சராசரியாகக் கற்போர், மெதுவாகக் கற்போர் ஆகிய மூவகையினருக்கும் ஏற்றவகையில் சமமாக எழுதுவதற்கு வாய்ப்பளிக்கும் முறையில் அமையும் வினாத்தாளைச் சமநிலை உடையது எனலாம்.
பாடப்பகுதியில் அனைத்துப் பகுதியிலிருந்தும் சமமான மதிப்பெண் அமையுமாறு வினாத்தாள் கொடுப்பதையே ஒருமைப்பாடு என்கிறோம். வினாத்தாள் இவ்வகையில் அமைக்கும்போது மாணவர்கள் எந்தவொரு பாடப்பகுதியையும் விட்டுவிடாது, விலக்காது படிக்க வாய்ப்பு ஏற்படும்.
தேர்வு நடத்தும் முன் எந்த நோக்கத்திற்காகத் தேர்வு நடத்தப்படுகிறது என்பதைத் திட்டமிட்டு, அந்நோக்கம் நிறைவேறும் வகையில் தேர்வு அமைக்க வேண்டும். ஒரு தேர்வு மாணவருக்கும், ஆசிரியருக்கும் பயனளிக்கும் வகையில் அமைவதே அத்தேர்வின் பயன்பாட்டுத் தன்மையாகும்.
வினாத்தாள் நன்கு திட்டமிட்டுத் தயாரித்தால் சரியான விடைகளும் மதிப்பெண்களும் கிடைக்கும். ஆசிரியர் நடத்தும் தேர்வுகள் வளர்வறிதேர்வு, தொகுநிலைத்தேர்வு என இருவகைப்படும். வளர்வறிதேர்வு என்பது கற்பிக்கும் போதே மேற்கொள்ளப்படும். தொகுநிலைத்தேர்வு கற்பித்தல் கால நிறைவில் மேற்கொள்ளப்படுவதாகும். கால அளவைப் பொறுத்து இது வாரத்தேர்வு, மாதத்தேர்வு, பருவத்தேர்வு, ஆண்டுத்தேர்வு என பெயர் பெறும். இதனைத் தயாரிப்பதற்கு முன்திட்டம் தேவை.
வினாத்தாள் திட்டவரைவு என்பதை ஆங்கிலத்தில் 'Blue Print' என்று அழைப்பர். இது தேர்வு நடைபெறுவதற்கு முன்பாக அனைத்து அலகிலும் வினாக்கள் விடுபடாமல் எடுக்க ஏதுவாகிறது. தேர்வில் இடம்பெற வேண்டிய கற்பித்தல் நோக்கக்கூறுகள் (திறன்கள்), வினா வகைகள், ஒவ்வொரு வகையிலும் இடம்பெற வேண்டிய வினாக்களின் எண்ணிக்கை, திறன்கள், இயலுமைகள் (அறிவுத் திறன் கூறுகள் - நினைதல், புரிதல், ஆளல், ஆற்றல்) ஆகியவற்றிலுள்ள ஒவ்வொன்றிற்கும் ஒதுக்கப்படும் மதிப்பெண்கள், தேர்வு நடத்தப்பெறும் கால அளவு, வகுப்பு முதலியனவற்றைத் தெரிவிப்பதாய் அமையும்.
வினா எண்ணிக்கை, இயலுமைக்கான மதிப்பெண் ஒதுக்கீடு, தேர்வுப் பாடப்பொருள் ஆகியன திட்டவரைவில் கொடுக்கப்பட்டாலும், வினாத்தாளில் இயலுமைகளுக்குப் பொருந்திய வினாக்கள் இல்லாதிருப்பது பெருங்குறையாகக் காட்டப்படுகிறது. மேலும், தெரிவுகள் கொண்ட வினாத்தாள்களில் அவை தெளிவுறக் குறிக்கப்படுவதில்லை. ஆசிரியர் கல்வி பெறுவோர் திட்டவரைவின் முன்திட்டப்படி தயாரிக்கும் முறையினை அறிந்துகொள்ள வேண்டும். திட்டவரைவு, கீழ்க்கண்ட அட்டவணை படிநிலை 1 இல் குறித்தவாறு அமையும்.
வினாத்தாள் வடிவமைப்பு (நீல அச்சுப்படம்) தயாரிப்பு முறை ஆறு படி நிலைகளாக விளக்கப்படுகிறது.
அட்டவணை 1இல் காட்டியவாறு வினாத்தாள் வடிவமைப்பிற்கான அட்டவணையைத் தயாரித்துக்கொள்க. (இவ்வட்டவணையிலிருந்து, மொத்த மதிப்பெண்கள், மதிப்பெண் ஒதுக்கீடு, மூவகை வினாக்கள் ஒவ்வொன்றிற்குமான மதிப்பெண் ஆகியன குறிக்கப்பட்டுள்ளன).
அட்டவணை - 1
தேர்வுத்தாள் வடிவமைப்பு (படிநிலை 1) படம் 1
(மதிப்பெண் ஒதுக்கீடும் வினா மதிப்பெண்களும் குறிக்கப்பட்ட வெற்று வடிவம்) வகுப்பு : 5 பாடம் : தமிழ் (1 - 5 அலகுகள்) - தொகுநிலைத் தேர்வு மொத்த மதிப்பெண் : 60 நேரம் : 2 மணி
(குறிப்பு : மதிப்பெண் ஒதுக்கீடு சதுர அடைப்பிற்குள்ளும் வினாக்களுக்குரிய மதிப்பெண்கள் பிறை அடைப்பிற்குள்ளும் குறிக்கப்பட்டுள்ளன. இதில் நிரல், நிரை என்பது ஆங்கிலத்தில் குறிக்கப்படுகின்ற Row and Column என்பதை குறிக்கும்)
புறவய வினாக்கள் | 15 x 1 = 15 |
குறு வினாக்கள் | 10 x 2 = 20 |
கட்டுரை வினாக்கள் | 5 x 5 = 25 |
வினாக்கள் 30 | மதிப்பெண்கள் - 60 |
அடுத்து வினாக்களின் எண்ணிக்கைகளை 60 மதிப்பெண்களுக்கு ஏற்ப முடிவு செய்துகொள்ளவேண்டும். பொதுவாகத் தொகுநிலைத்தேர்வில் மூவகை வினாக்களைக் கொள்ளுதல் சிறப்பாகும். 1 மதிப்பெண் கொண்ட புறவயவினாக்கள். (இவை பலவுள் தெரிவு, கோடிட்ட இடம் நிரப்பல், ஒருசொல் விடை, பொருத்துதல் என அமையலாம்). இரண்டாவது வகை குறுவிடை வினாக்கள், மூன்றாவது வகை நெடுந்துலங்கலாக அமையும் கட்டுரை வினாக்கள் ஆகும்.
இனி, வடிவமைப்பு அட்டவணை 2இல் குறிக்கவேண்டும். மூவகைப்பட்ட 30 வினாக்களின் எண்ணிக்கைகளை உரிய கட்டங்களில் காட்டியவாறு சிதறலாகப் பதியவும். 30 வினாக்களும் வெவ்வேறு கட்டங்களில் அமையுமாறு பார்க்கவேண்டும். ஆற்றலைக் குறிக்கும் நிரைகளிலோ (படுக்கைக் கோடு) நிரல்களிலோ (செங்குத்து) புறவயவினாக்கள் இடம் பெறலாகாது. (ஆற்றல் என்பது பகுத்தல், தொகுத்தல், ஆக்கல் ஆகிய மூன்று இயலுமைகளை உள்ளடக்கிய சொல் ஆகும்). இலக்கணம், மொழித்திறன் ஆகிய பாடப்பகுதிகளில் கட்டுரை வினாக்கள் அமையலாகாது என்பதையும் கருத்திற்கொண்டு வினா எண்களைப் பதியவும். (காண்க. படிநிலை 2)
அட்டவணை - 2
தேர்வுத்தாள் வடிவமைப்பு (படிநிலை 2) படம் 2
(நிழலிட்ட நிரல், நிரை பகுதிகள் மாணவர் விளக்கத்திற்காக கொடுக்கப்பட்டுள்ளது. திட்டவரைவின் பகுதியன்று)
வினாக்களின் எண்ணிக்கைகளைச் சிதறலாகப் பதிந்தபோது, நிரல் I அலகு 1ற்கு 17 மதிப்பெண்கள், அலகு 2ற்கு 17 மதிப்பெண்கள், அலகு 3ற்கு 12 மதிப்பெண்கள், அலகு 4ற்கு 7 மதிப்பெண்கள், அலகு 5ற்கு 7 மதிப்பெண்கள் என அமைகின்றன. ஆனால் இவற்றிற்கான மதிப்பெண் ஒதுக்கீடுகள். முறையே 15, 15, 10, 10, 10. எனவே இவற்றை சரிப்படுத்த நிரை I-இலிருந்து 2 மதிப்பெண்களுக்குரிய வினாக்களையும் நிரை II-இலிருந்து 2 மதிப்பெண்களுக்குரிய வினாக்களையும் நிரை III-இலிருந்து 2 மதிப்பெண்களுக்குரிய வினாக்களையும் முறையே நிரல் IV, நிரல் V ஆகியனவற்றிற்கு மாற்றவேண்டும். (வடிவமைப்புத் தயாரிக்கும்போது இதுபோன்றுதான் மாறுபட்ட எண்ணிக்கைகள் வரும் என்று நினைவில் பதியவேண்டும். பதிவுக்கு ஏற்ப வேறு எண்கள் வரலாம். ஒதுக்கீடுகளுக்கு ஏற்ப நிரைகளில் வினா எண்ணிக்கைகளைச் சரிசெய்க.) வினாக்களின் எண்ணிக்கை சரிசெய்யப்பட்ட பின்னர் அட்டவணை 3இல் கண்டவாறு அமையும். (காண்க படிநிலை 3)
அட்டவணை - 3
தேர்வுத்தாள் வடிவமைப்பு (படிநிலை 3) படம் 3
(நிழலிட்ட பகுதியிலிருந்து வினாக்கள் + எனக் குறிப்பிட்ட இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன)
இவ்வட்டவணையில் நிரைகளில் அமையவேண்டிய மதிப்பெண்கள் சரிசெய்யப்பட்டுள்ளன. இனி நிரல்களில் அமையவேண்டிய மதிப்பெண்கள் சரி செய்யப்படவேண்டும். அடுத்த படிநிலையிலுள்ள 4வது அட்டவணையினை நோக்குக. (காண்க படிநிலை 4)
அட்டவணை - 4
தேர்வுத்தாள் வடிவமைப்பு (படிநிலை 4) படம் 4
நான்காவது படிநிலை அட்டவணையில் நினைதலுக்குரிய நிரலில் (நிரல் I) 5 மதிப்பெண்கள், புரிதலுக்குப் 10, ஆளலுக்குப் 20, ஆற்றலுக்கு 25 என மதிப்பெண்கள் அமைந்துள்ளன. இவற்றை அடுத்து விளக்கியவாறு சரிசெய்யவும். (காண்க படிநிலை 5)
அட்டவணை - 5
தேர்வுத்தாள் வடிவமைப்பு (படிநிலை 5) படம் 5
நிரல் II - நினைதல் திறனில் 5 மதிப்பெண்களே உள்ளன. ஆனால் நினைதலுக்கான ஒதுக்கீடு 10. இதை சரிசெய்ய ஏதேனும் ஒரு நிரையிலிருந்து (அல்லது நிரைகளிலிருந்து) 5 மதிப்பெண்களுக்குரிய வினாவை (அல்லது வினாக்களை) அதே நிரையிலும் நினைதலுக்குரிய நிரலிலும் அமையத் தக்கவாறு மாற்றுக. ஆற்றலுக்குரிய ஒதுக்கீடு 20, ஆனால் மேலுள்ள அட்டவணையில் அதற்கு 25 மதிப்பெண்கள் அமைந்துள்ளன. அலகு 4ல் உள்ள 5 மதிப்பெண் ஒன்றினை நினைதல் நிரைக்கு மாற்றுக. இப்போது ஆற்றல், நினைதல் ஆகிய இரு இயலுமைகளுக்குரிய மதிப்பெண் ஒதுக்கீடுகள் சரிசெய்யப்பட்டுள்ளன. இனி “ஆளல்” நிரல் நோக்கப்படுகிறது. இதில் 20 மதிப்பெண்கள் அமைந்துள்ளன. ஆனால் இதற்குரிய மதிப்பெண் 15. மிகுந்ததுள்ள 5 மதிப்பெண்ணைக் குறைப்பதற்கு, அதன் நிரையிலுள்ள (நிரல் IV) 5 மதிப்பெண்களுக்குரிய வினாவை (அல்லது வினாக்களை) புரிதல் நிரைக்கு மாற்றினால் இவ்விரண்டு இயலுமைகளுக்குரிய ஒதுக்கீடுகள் சரிசெய்யப்படும். இப்போது அட்டவணை படிநிலை 6 இல் கண்டவாறு அமையும். (காண்க படிநிலை 6)
அட்டவணை - 6
தேர்வுத்தாள் வடிவமைப்பு (படிநிலை 6) படம் 6
புறவய வினாக்கள் | 15 x 1 = 15 |
குறு வினாக்கள் | 10 x 2 = 20 |
கட்டுரை வினாக்கள் | 5 x 5 = 25 |
வினாக்கள் 30 | மதிப்பெண்கள் - 60 |
குறிப்பு : வினாத்தாள் வடிவமைப்பினைத் தயாரிக்கும் முறையினைத் தெளிவுற விளக்குவதற்காக ஒவ்வொரு படிநிலைக்கும் வெவ்வேறு அட்டவணைகள் இங்குக் காட்டப்பட்டன. பயிற்சியின்போது இதைத் தயாரிக்க ஒரு அட்டவணை மட்டுமே போதுமானது. ஆனால் மையால் எழுதாமல் பென்சிலால் குறிக்கவும், மாற்றங்களை அவ்வப்போது அழிப்பானால் அழித்துச் சீர் செய்யவும், இறுதியாக மையினால் எழுதவும்.
வடிவமைப்பினை இறுதிசெய்த பின்னர், வினாத்தாளில் இடம்பெறும் வினாக்களின் வரிசை எண்களை அந்தந்தக் கட்டத்திற்குள் குறித்து (பென்சிலால்) அவற்றை வேறுபடுத்திக்காட்ட வட்டமிட்டுக் காட்டக. வினாத்தாளில் 1 மதிப்பெண் வினாக்கள் தொடக்கத்திலும், அவற்றை அடுத்து 2 மதிப்பெண் வினாக்களும், 2 மதிப்பெண் வினாக்களைத் தொடர்ந்து 5 மதிப்பெண் வினாக்களும் அமைத்தல் முறையாகக் கருதப்படுகிறது.