5.5 உணர்வுக் களத்தை மதிப்பிடுதல்
உணர்வுக் களத்தை மதிப்பிடுதல்
ஒருவருடைய ஆளுமையில் உணர்வு சார்ந்த பகுதி உணர்வுக்களம் எனப்படும். ஆளுமையை உருவாக்கும் களங்களில் மூன்றாவதாக அமைவது உணர்வுக்களம் ஆகும். இது மாணவர்களின் மன எழுச்சியை வளர்ப்பதோடு, அடிப்படையில் மாணவர்களுடைய பாராட்டுணர்வை வளர்த்து, அவர்களுக்குக் கருத்துகளின்மீது ஆர்வத்தை ஏற்படுத்தி அவற்றை நன்குணர்ந்து ஆராய்ச்சி செய்யும் மனப்பான்மையை ஏற்படுத்துகிறது.
உணர்வுக்களப் படிநிலைகளை, கல்வி நோக்க அடிப்படையில் ஏற்றுக்கொள்ளுதல், துலங்கல், மதிப்பளித்தல், ஒழுங்குப்படுத்துதல், பண்பாக்குதல் என வளர்நிலைப் படிகளாகப் பெஞ்சமின் புளூம் அவர்கள் காட்டுகிறார். இவற்றை உளவியலாளர்கள் நாட்டம், நுகருணர்வு, மனப்பான்மை, மதிப்பு, சீரமைவு எனக் கொண்டனர். ஆனால் ஏற்றல், துலங்கல், மதித்தல், அமைத்தல், பண்புறல் எனும் ஐந்தும் உளவியளார் குறித்த ஐந்தோடும் நேருக்கு நேர் ஒத்திசைவு கொண்டனவல்ல, இவற்றிற்கிடையாயிலான ஒத்திசைவினை பெஞ்சமின் புளும் மற்றும் அவருடனாளர்கள் கீழ்வரும் வரைவால் குறித்துள்ளனர். இத்தகையாறு காட்டப் பெறும் உணர்வு அல்லது உள்ளப்பதிவினை அளக்க வழக்கமாக மேற்கொள்ளப்படும் தேர்வு வினாக்கள் பயன்படாது. வேறு வகையான அளவு முறைகள் உள்ளன. அவை நோக்கல் உத்திகள், ஒப்பார் சீர்தூக்கல், தம்நிலை தெரிவித்தல் என வகைப்படுத்தப்படுகின்றன. இத்தகைய தேர்வு வினாக்கள் பற்றி உளவியல் நூல்கள் விளக்குகின்றன.
இவ்வாறு காட்டப் பெறும் உணர்வு அல்லது உள்ளப் பதிவினை அளக்க வழக்கமாக மேற்கொள்ளப்படும் தேர்வு வினாக்கள் பயன்படாது. வேறு வகையான அளவு முறைகள் உள்ளன. அவை நோக்கல் உத்திகள், ஒப்பார் சீர்தூக்கல், தம்நிலை தெரிவித்தல் என வகைப்படுத்தப்படுகின்றன.
ஒருவரது இயல்பான செயல் நிகழ்ச்சியை உற்றுநோக்கி நிகழ்ந்தவாறே பதிவு செய்யப்பட்ட குறிப்புத் தொகுதி நிகழ்ச்சிப் பதிவேடாகும். நிகழ்ந்த நிகழ்ச்சிகள் இதனுள் மாற்றமின்றிக் குறிக்கப்படும்.
இவ்வாறாக, இயல்பாக நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளை மாணவர், பெயர், வகுப்பு, நாள், இடம், நிகழ்ச்சி, குறிப்பு, நோக்கர் ஆகிய தலைப்புகளில் பதிந்து மாணவர்கள் பற்றிய குறிப்பாக அமைவது நிகழ்ச்சிப் பதிவேடாகும்.
நிகழ்ச்சிப் பதிவேட்டில் நிகழ்ச்சிக் குறிப்பை அடுத்து நிகச்சியை உற்று நோக்கியவர், நிகழ்ச்சியிலிருந்து நுணுகி அறியப்படுவனற்றைக் குறித்தல் வேண்டும். இக்குறிப்பையும் உடனடியாக எழுதுதல் வேண்டும். காலந்தாழ்த்தி எழுதப்படும் நுணுகள் குறிப்பு உற்றுநோக்கலிலிருந்து எடுக்கப்படும் பொருத்தமற்ற முடிவாக இருக்க வாய்ப்புண்டு.
மாணவர்களின் சில நடத்தைகளை, ஆசிரியர்களைவிட மாணவர்களோடு கல்வி, வயது போன்றவற்றில் ஒத்திருப்பவர் நன்றாக அறிவர். உடன் இருக்கும் நண்பர்களிடம் வெளிப்படையாகப் பழகும் வாய்ப்பு ஏற்படும். மாணவர் ஒருவரின் வழிநடத்தல், பிறரோடு பழகுதல், குழுவில் செயல்படுதல் போன்ற நடத்தைகளை அவன் உடனிருக்கும்
‘யார் என ஊகித்தல்’ முறையில் ஒப்பாரைச் சீர்தூக்கி மாணவர் தம் கருத்தை வெளியிடுவதற்கென வடிவமைக்கப்படும் படிவத்தில் எதிர்மறைக் கூற்றுகளோ, பிறரைக் குறை கூறுமாறு அமையும் கூற்றுகளோ இடம் பெறலாகாது. மேலும் மாணவரிடமிருந்து பெறப்படும் துலங்கல்கள் கமுக்கமாக வைக்கப்பட வேண்டும். படிவத்தின் அமைப்பும் கொடுக்கப்படும் குறிப்புகளும் கீழ்வருமாறு அமையலாம்.
குறிப்பு : உங்கள் வகுப்பிலுள்ள ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்களைப் பற்றிய விளக்கக் குறிப்பு கீழ்வரும் கூற்றுகளில் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கூற்றுக்கும் பொருந்துபவர் உங்கள் எண்ணப்படி யார் யார் என ஊகித்து அவர் அல்லது அவர்களுடைய பெயர்களை அந்தந்தக் கூற்றுக்குக் கீழே குறிக்கவும். நீங்கள் குறிக்கும் தகவல்கள் அனைத்தும் கமுக்கமாக வைக்கப்படும்.
1. எந்த வேலையையும் மகிழ்ச்சியோடு செய்வார்
---------- ----------
2. எனக்கு எப்போதும் உதவியாய் இருப்பார்
---------- ----------
3. எப்போதும் ஏதாவது ஒரு வேலையில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார்
---------- ----------
4. எல்லோரையும் பாராட்டும் பழக்கமுடையவர்
---------- ----------
5. நான் பாடங்களைப் படிப்பதற்கு உதவி செய்வார்
---------- ----------
மேற்காட்டப்பட்ட படிவத்தில் நடத்தைகள் கூற்றுகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை வினா வடிவிலும் அமைத்துத் துலங்கல்களைப் பெறலாம்.
எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவர் யார்?
உங்களுக்கு உதவி செய்பவர் யார்?
நடத்தைகள், தொடர்பான முடிவுகளைப் பெறுவதற்கு, முன் பகுதிகளில் எடுத்துக்காட்டப்பட்ட முறைகளுள் ஒன்று, ஆசிரியர் (பிறர்) உற்று நோக்கல். மற்றொன்று, ஒப்பார் சீர் தூக்கல், இவ்விரு முறைகளிலும் பெறமுடியாத பல தகவல்களைப் பெறுவதற்குத் தம்நிலை தெரிவிப்பு உத்திகள் பயன்படும். தம் நிலை தெரிவிப்பு உத்திகளில், யாரைப் பற்றிய தகவல்கள் பெறப்பட வேண்டுமோ அவரே தம்மைப் பற்றிய தகவல்களை வாய்மொழியாகவோ, எழுத்து மொழியாகவோ தரும் முறைகள் வடிவமைக்கப்படுகின்றன. தம் நிலை தெரிவிப்பு உத்திகளில் பல முறைகள் உள்ளன. அவற்றுள், நேர்காணல், வினாத்தொகை ஆகியன பெரும்பான்மையாகப் பயன்படுவனவாகும்.
நேர்காணல் முறையில், நேருக்குநேர் ஒருவரிடமிருந்து தகவல்கள் பெறப்படுகின்றன. நேர்காணலில் தகவல் கேட்பவர் நேர்காணியர் என்றும், தகவல்களைத் தருபவர் நேர்காணி எனவும் பெயர்பெறுவர். நேர்காணலில், தேவைப்படும் தகவல்களை நேர்காணியர் நேர்காணியிடம் கேட்கலாம். மேலும் நேர்காணியர் நேர்காணி ஆகிய இருவரும் நேருக்கு நேர் சந்திப்பதால், நேர்காணியின் முகக் குறிப்புகளிலிருந்து அவர் தரும் தகவல்களின் குறை நிறைகளை அறிய இயலும். நேர்காணலில் பெறப்படும் தகவல்கள், நேர்காணியின் விருப்பத்துடன் முழுமையாகத் தரப்படுகின்றன எனக் கருதப்படுகிறது. தகவல்களின் தன்மையில் ஐயம் ஏற்படின் பிற முறைகளில் அவற்றைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
நேர்காணலில், நேர்காணியர் வினாக்கள், வினாக்களுக்கு நேர்காணி தரும் விடைகளுக்கான விளக்கங்கள் போன்றனவும் பிறவும் இடம் பெறும். திட்டமிட்ட நேர்காணலிலும் வரையறைக்கு உட்படாதவாறு வினாக்கள் இடம் பெற வேண்டிய சூழல் ஏற்படுகிறது. நேர்காணியர் எதிர்பார்க்காத நிலையில் நேர்காணல் போக்கு மாறவும் கூடும். இக்குறையைப் போக்க, நேர்காணலில் இடம் பெற வேண்டிய வினாக்களை முன்னரே அச்சிலோ, எழுத்திலோ அமைத்து நேர்காணியிடம் வழங்கி அவற்றிற்கான விடைகளைப் பெறலாம். இவ்வாறாக வழங்கப்படும் வினாத் தொகுதியே வினாத்தொகையாகும். தம் நிலையைத் தெவிப்பதற்கு நேர்காணல் முறையில் வெகு நேரம் பிடிக்கும். வினாத்தொகையால் நேர் காணியிடமிருந்து திட்டமிட்டவாறு வரையறைக்குட்பட்ட வினாக்களுக்குக் குறைந்த நேரத்தில் விடைகளைப் பெறமுடியும்.
பதிவுக்களக் கூறுகளை அளக்கப் பயன்படும் வினாத்தொகை அது அளக்கும் உள்ளப் பண்புகள் அடிப்படையில் மனப்பான்மைத் தருவி, நாட்டத் தருவி, ஆளுமைத் தருவி போன்ற பெயர்களால் அழைக்கப்படும்.