முகப்பு

3.0 பாட முன்னுரை

பாட முன்னுரை

கற்றல் என்பது வயது வேறுபாடின்றி நடைபெறும் ஒரு தொடர் செயலாகும். அதனைப் போன்றே படைப்பாற்றல் திறனும் தொடர் செயலாக இருப்பதனால் குழந்தைகள் ஒவ்வொரு நொடியும் தங்களின் ஐம்புலன்களின் வழியே எவற்றையேனும் கற்று கொண்டே இருக்கின்றனர். சிந்தனை ஆற்றல் இயங்கி கொண்டே இருக்கிறது. இதனால் அவர்களின் படைப்பாற்றல் தளமும் இயங்கி கொண்டே இருக்கிறது எனலாம். அவர்களின் சிந்தனைத் திறனையும் கற்பனைத் திறனையும் யாராலும் நிறுத்தவியலாது.

உலக உயிர்களுள் மனிதன் தான் சிந்தனை ஆற்றலைப் பெற்றிருப்பதால் உயர்ந்தவனாகக் கருதப்படுகிறான். அவன் பெற்ற மொழித்திறனால் மனத்தில் பதிந்த கருத்துகளைத் தக்க இலக்கிய வடிவில் வெளிப்படுத்த முற்படுவதைப் படைப்பு என்கிறோம். சிந்தனை வெளிப்பாட்டில் காலத்தைக் கடந்து நிற்கும் தன்மை எழுத்துப் பதிவுகளுக்கே உண்டு. அவை ஒழுங்குபட்ட வடிவத்தில் அழகுணர்ச்சியோடு ஆழ்ந்த சிந்தனை வீச்சாக வெளிப்பட்டிருப்பின் பலரும் விரும்பிக் கற்பர். எனவே, படைப்பாற்றல் என்பது சிந்தனையின் உயிரோட்டம், உயர்திறன் மட்டுமின்றி காலங் கடந்து நின்று மிகுந்த பயன் அளிப்பதாகும்.

எனவே, ஆசிரியர்கள் குழந்தைகளின் கற்றலுக்குத் துணைபுரிவதுடன் படைப்பாற்றலுக்கும் துணைபுரிய வேண்டும். அதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தருதல் வேண்டும். தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தருதல் வேண்டும். குழந்தைகளின் வயது, ஆர்வம், விருப்பத்திற்கு ஏற்ப வழிநடத்தி, எளிய முறைகளைக் கையாண்டு குழந்தைகளின் படைப்பாற்றலை வளர்க்க வேண்டும்.

தாய்மொழியில்தான் படைப்பாற்றலை எளிதில் வளர்க்க முடியும். குழந்தைகள் இயல்பாகவே படைப்பாற்றல் உடையவர்கள் என்பது நாம் அறிந்த ஒன்றுதான். அவ்வாறு இருக்கையில் தொடக்கநிலையில் மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்க ஏதுவாக அவர்களுக்குத் துணைபுரியும் முறைகளைக் கையாளுதல் வேண்டும்.

• படம்வழிப் படைப்பாற்றல்

• சூழலுக்கேற்ற கற்பனை வெளிப்பாடு

• மொழி விளையாட்டுகளும் குறுக்கெழுத்துப் புதிர்களும்

• கையெழுத்து இதழ் உருவாக்குதல்

• விளம்பரம், அறிவிப்பு, முழக்கத் தொடர்கள் உருவாக்குதல்