தன் மதிப்பீடு : வினாக்கள் - I |
---|
|
3.2 சூழலுக்கேற்ற கற்பனை வெளிப்பாடு
சூழலுக்கேற்ற கற்பனை வெளிப்பாடு
சூழலுக்கு ஏற்ப கற்பனையை வெளிப்படுத்துவது என்பது தமிழுக்கும் தமிழர்க்கும் புதிதல்ல. கவிஞர் என்பவர் கலை உலகின் படைப்புக் கடவுள்; படைப்புக் கடவுளையும் மிஞ்சிய அழியாத சிற்பங்களை உருவாக்கிய கலைஞர். காரணம்: பிரம்மன் படைத்த உயிர்களுக்கு எல்லை உண்டு; இறுதி உண்டு. மாபெரும் கவிஞர்கள் கவிதைகளில் படைக்கும் உயிர்களுக்கு எல்லை இல்லை; இறுதி இல்லை. இதனால்தான் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்கள்,
அயன்படைப் பினையும் திருத்தி
அழகு செய்திடுவோன்
என்று கம்பரைப் புகழ்ந்துள்ளார். பிரம்மன் படைப்புகளையும் திருத்தி அழகு செய்பவர் கம்பர் என்பது இப்பாடலின் பொருள் ஆகும்.
இலக்கியங்கள் நம் வாழ்வோடு நெருங்கிய தொடர்பு கொள்வதற்கும் அழகிய கலை வடிவங்களாக விளங்குவதற்கும் அவர்களுடைய கற்பனைத் திறனே அடித்தளமாகும். கற்பனை இன்றேல் படைப்பிலக்கியத்துக்கும் வரலாற்றுக்கும் வேறுபாடு தெரியாது. மனித மனமே கற்பனைக்களனாக அமைகின்றது. கற்பனையானது இல்லாதவற்றை இருப்பதாகவும் நடைபெற இயலாதவற்றை நடப்பதாகவும் காட்டும்.
மனித மனம் நினைக்கத் தெரிந்து கொண்டபோதே கற்பனையும், உதித்திருக்க வேண்டும். கற்பனை என்பது மனதிலே உண்டாகும் படைப்புக்கு வித்தாகும். கலைஞன் தன் மனதில் உருவாகும் எண்ணங்களுக்குக் கொடுக்கும் உருவமே கற்பனையாகும். இதனையே,
“புலன்கள் நேரடியாக ஒரு பொருளை அனுபவியாத காலத்திலும் அந்தப் பொருளை நினைவிற்குக் கொண்டு வரும் ஒருவகைச் சக்தி”என அ.ச.ஞானசம்பந்தன் கூறும் கருத்து சிந்திக்கத்தக்கதாகும். (இவரின் கூற்று அன்று) இதன்மூலம் கற்பனை ஐம்புலன்களோடு தொடர்புடையது என்பதை அறியலாம்.
கற்பனையை ஆங்கிலத்தில் Imagination என அழைப்பார்கள். கற்பனை குறித்து தமிழ்மொழி அகராதி, “இல்லாததை யுள்ளதாயுண்டு பண்ணல், துடிப்பு, கட்டளை, கல்வி, கற்பிப்பு, சாதுரியம், நிருணம், பாவடை, புனைந்துரை விரிப்பு”என்கிறது.
சங்க இலக்கியங்களில் கற்பனை பற்றிய பல செய்திகள் காணப்பட்டாலும், கற்பனை என்ற சொல் இடம் பெறவில்லை. இக்கருத்தையே, “கற்பனை யென்னும் சொல் சங்கப்பாடல்களுள் காணப்படவில்லை. ‘புனைவு’ என்ற சொல் பெரும்பான்மையும் இப்பொருளில் வழங்கப்பட்டுள்ளது.இதிலிருந்து ‘புனை’ என்னும் வேர்ச்சொல்லடியாகப் பிறந்த “புனைவு, ‘புனைதல்’ என்னும் சொற்களே கற்பனை என்ற சொல் உணர்த்தும் பொருளில் சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
கவிஞர்கள் பல்வேறு வகையான கற்பனைகளைப் படைக்கின்றனர். நடக்கும் நிகழ்வை உள்ளவாறு கூறுதல், மற்றொன்று உள்ளவாறு விளக்காது, அவற்றில் சிலவற்றைக் கூட்டியும் குறைத்தும் மாற்றியும் திரித்தும் மனம் விரும்பியவாறு படைப்பர். உள்ளவாறே வாழ்க்கையைக் கற்பனை செய்வது இயலாத செயலன்று. ஆயின் மனம் விரும்புமாறு கற்பனை செய்வதே மனக்கிளர்ச்சி தரும். இத்தகைய கற்பனையே புலவனிடத்து அகத்தெழுச்சியினை ஏற்படுத்துகிறது எனலாம். இக்கற்பனைத் திறனை, “பொருள்களை உள்ளவாறு கண்டு அந்த அழகில் அமைவதில்லை. கலைஞரின் மனம் பொருள்களை மேலும் அழகுபடுத்தி இன்னும் சிறந்த உலகத்தைப் படைக்க முயல்கிறது” என்ற கருத்து ஒப்புநோக்கத்தக்கது. இதிலிருந்து புதியன படைக்கும் ஆற்றலுக்கு இம்முயற்சியே அடிப்படை என உணரலாம்.
நல்ல கவிதையின் தோற்றத்திற்கு ஒரு பொருளை உள்ளவாறே புனைந்து கூறும் திறன் மட்டுமின்றி, உள்ளம் விரும்புமாறு புனைந்துரைக்கும் கற்பனைத் திறனும் இன்றியமையாததாகும் என்பது தெளிவாகின்றது.
அகநானூற்றில் மயிலின் ஆடற்காட்சி ஒன்று இத்தகைய கற்பனைக்குச் சான்றாக விளங்குகிறது. மலைச்சாரலில் ஆடுகின்ற மயில் காண்பவர் மருளக் களிநடம் புரிகின்ற விறலி ஒருத்தியைப் புலவரின் மனக்கண் முன் நிறுத்துகின்றது. விறலி ஆடுகின்ற பொழுது, குழலும், முழவும், யாழும் அரங்கத்தில் இனிய இசையை எழுப்பி அவள் ஆட்டத்திற்கு ஓர் ஒத்திசைவை உண்டாக்குதலை அறிந்தவர் கவிஞர். மயிலின் ஆட்டத்திற்கும் மலைச்சாரலில் ஓர் இசைப் பின்னணியைப் படைத்துத் தருகின்றார்.
“ஆடு அமைக் குயின்ற அவர்துளை மருங்கின்
கோடை அவ்வளி சூழலிசை ஆக
பாடு இன் அருவிப் பனிநீர் இன்இசை
கோடு அமை முழவின் துதை குரல் ஆக
கணக் கலை இகுக்கும் கடுங்குரற் தூம்பொடு
மலைப்பூஞ் சாரல் வண்டு யாழ் ஆக
இன்பல் இமிழ் இசைகேட்டு, கலி சிறந்து
முந்தி நல் அவை மருள்வன நோக்க
கழைவளர் அடுக்கத்து, இயலி ஆடுமயில்
நனவுப்புகு விறலியின் தோன்றம் நாடன்”
இப்பாடலில் மூங்கிலின் துளையில் மேல்காற்றுப் புகுதலால் குழலிசை எழுகின்றது. மலையருவி முழவாக ஒலிக்கின்றது. மான்களின் குரல் தூம்பின் இசையாகத் திகழ்கின்றது. வண்டின் ஒலி யாழின் இசையாக விளங்குகின்றது. இவற்றின் இனிய இசையினைக் கேட்டு மகிழ்ச்சி மிகுந்து மயிலாடுகின்றது. மந்திகள் அவ்வாடலை மருண்டு பார்க்கின்றன.
இம்மயிலின் ஆட்டத்தின் போதுகூட மலையில் பல்வேறு ஒலிகள் இருந்திருக்கும். ஆனால் கபிலர் அவ்வொலிகள் எல்லாவற்றையும் தம்பாடலில் படைத்துக் காட்டவில்லை. அவற்றிலிருந்து மூங்கிலின் துளையொலி, அருவியின் ஆர்ப்பொலி, மானின் குரலொலி, வண்டின் இன்னொலி ஆகியவற்றை மட்டும் பிரித்து மயிலின் ஆட்டத்திற்குப் பின்னணியாகத் தொகுத்துத் தந்திருக்கும் பாங்கு கவிஞனின் கற்பனைக்குச் சான்றாகும். இதில் கவிஞர் உள்ளவாறு கற்பனையை அமைக்காது தம் மனம் விரும்பியவாறு அமைத்துள்ளதை அறிய முடிகின்றது.
காந்தள் பூ மலரும் காட்சியினைக் குறுந்தொகை பாடலொன்றில்,
“காந்தளங் கொழுமுகை காவல் செல்லாது
வண்டு வாய் திறக்கும் பொழுதிற் பண்டும்
தாமறி செம்மைச் சான்றோர்க் கண்ட
கடனறி மாக்கள்போல இடன் விட்டு
இதழ்களை யவிழ்ந்த ஏகல் வெற்பின்”
என்ற பாடலில் ஆசிரியர் தம் உள்ளம் விரும்புமாறு கற்பனை செய்கின்றார். காந்தள் மலரும் வரை காத்திருக்கப் பெறாது வண்டுகள் மூடிய கொழுமுகைகளைத் தாமாகத் திறப்பதாக அவர் கற்பனை செய்துள்ளார். மொட்டு மலர வண்டுகள் தேனை உண்பது தான் இயற்கை நிகழ்ச்சியாகும். அந்த இயற்கை நிகழ்வை உள்ளாவறே பாடுவதில் புலவரின் உள்ளம் நிறைவினை அடையவில்லை. எனவே, வண்டுகள் தாமாக முகைகளின் வாயினைத் திறப்பதாகப் புலவர் கற்பனை செய்திருக்கின்றார்.
மனம் விரும்பியவாறு கற்பனை படைக்கும் சிறப்பை மு.வ., “இயற்கையைப் பாடுகின்ற கவிஞன் தான் கண்ட இயற்கை காட்சிகளை உள்ளவாறே பாடுவதில்லை. இயற்கையின் உண்மைத் தோற்றங்கள் நம் கண் முன்னர்க் காட்சியளித்தலின் அவற்றை அவ்வாறே கவிதையிலும் காண்பதற்கு நாம் விரும்புவதில்லை, கற்பனைத் திறத்தால் கூட்டியும், குறைத்தும் காட்டப்படுகின்ற இயற்கையின் மறுபடைப்பினையே நாம் விரும்புகின்றோம்” என்கிறார்.
ஓர் இலக்கியம் காலத்தை வென்று வாழ்வதற்குக் காரணம் அதன் கவிதைப் பண்பு என்று கூறுவர். இலக்கியத்தின் பாடுபொருளும் நோக்கமும் காரணங்கள்தாம். என்றாலும் இவற்றையும் கடந்து கவிதைப் பண்புகள் தலைமைக் காரணங்கள் ஆகின்றன. கம்பராமாயணம் காலம் கடந்து வாழ்வதற்குக் கதை மட்டுமே காரணம் அன்று. அக்கதையைச் சொன்ன விதமும் காரணம் ஆகும். கவிதைப் பண்பு சிறக்க அமைவதற்குத் தேர்ந்த சொல்லாட்சி ஒரு காரணம். இனிய ஓசை நயம் இன்னொரு காரணம். வளமான கற்பனை பிறிதொரு காரணம். கற்பனை விரியும் வருணனைகள், உவமைகள், உணர்ச்சிகள் கவிதையைச் சிறக்கச் செய்யும். செய்யுளுக்கு உரிய அணிநலன்கள் கவிதைக்கு மெருகு சேர்க்கும். இவை யாவும் கம்பரின் கவிதையில் உண்டு. எனவே தான் கம்பர் கவித்திறன் கற்றவரால் பாராட்டப் பெறுகிறது.
ஐந்து நிலங்களை (மலை, காடு, வயல், பாலை, கடல்) வருணிப்பது புலவர்களின் மரபு. கம்பர் மருத நில (வயல்) வளத்தைக் கற்பனையோடு வருணித்துள்ளார். மருத நிலத்தில் இயல்பாக உள்ளவை எல்லாம் புலவருக்குக் கற்பனையைத் தூண்டுகின்றன. மருத நிலம் அரசனாகக் கம்பரின் கற்பனையில் உருவாகிறது.
தண்டலை மயில்கள் ஆடத்
தாமரை விளக்கம் தாங்கக்
கொண்டல்கள் முழவின் ஏங்கக்
குவளைகண் விழித்து நோக்கத்
தெண்திரை எழினி காட்டத்
தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட
மருதம்வீற் றிருக்கும் மாதோ!
- (கம்ப. பால காண்டம், நாட்டுப் படலம், 4.)
(தண்டலை = சோலை; விளக்கம் = விளக்கு; கொண்டல் = மேகம்; முழவு = இசைக்கருவி; ஏங்க = ஒலிக்க; குவளை = மலர்; திரை = அலைகள்; எழினி = திரைச்சீலை; தேம்பிழி = பிழிந்து எடுக்கப்பட்ட தேன்; மகரயாழ் = வீணை; மருதம் = நிலம் / நிலமாகிய அரசன்)
மருத நிலம் செழிப்போடு காணப்படுகிறது. கம்பருக்கு அது அரசன் அரியணையில் வீற்றிருப்பதைப் போலத் தோன்றுகிறது. தாமரை மலர்கள் விளக்குகளை ஏற்றி நிற்கின்றன; மேகங்கள் இசைக் கருவிகளை முழக்குகின்றன; மகரயாழ் வாசிப்பது போல வண்டுகள் பாடுகின்றன; நீர் நிலைகளில் எழும் அலைகள் நாடக அரங்கின் திரைச் சீலைகள் போல் காட்சி தருகின்றன; அங்கே மயிலாகிய நாட்டியப் பெண் நடனம் ஆடுகிறாள்; குவளை மலர்கள் ஆகிய விழிகளால் அவையினர் விழித்துப் பார்க்கின்றனர்; இவ்வாறான அரசவையில் மருதமாகிய அரசன் வீற்றிருக்கிறான். இவ்வாறாகக் கம்பர் மருத நிலத்தை வருணித்துள்ளார்.
சிலப்பதிகாரம் உலகப் பெருங்காப்பியங்களுள் ஒன்று. ஒரு பேரிலக்கியத்தில் எதிர்பார்க்கும் அனைத்துச் சுவைகளும் இதில் உண்டு. அடிகளின் கற்பனை வளத்திற்குச் சில எடுத்துக்காட்டுகள் காண்போம். அடிகளின் கற்பனைத் திறத்திற்கு நல்ல சான்றாக அமைவது அவருடைய வையை வருணனையாகும். வையை என்னும் பொய்யாக் குலக்கொடி, புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி என்று புகழும் அடிகள், அக்கொடியின் பேரழகினை வருணிக்கும் அழகே அழகு!
இவ்வாறே மதுரைக் கோட்டையின் மீது பறக்கும் பாண்டியனின் வெற்றிக் கொடிகளைப் பாராட்டும் அடிகள்,
போருழந்து எடுத்த ஆர்எயில் நெடுங்கொடி
வாரல் என்பன போல் மறித்துக்கை காட்ட. . .
(மதுரைக்காண்டம், புறஞ்சேரியிறுத்த காதை, வரிகள்: 189-190)
என்றார். பாண்டியன் கோட்டை மீது நாட்டிய வெற்றிக் கொடிகள், கண்ணகிக்கும், கோவலனுக்கும் விரைவில் வரப்போகும் துயரத்தை மனம் கொண்டு அவர்களை நோக்கி “மதுரைக்கு வாராது நீங்குக” என்பது போல் மறித்து ஆடின என்கின்றார். இவ்வாறே, தன் உடம்பைப் பூவாடையால் போர்த்துக் கொண்டும், தன் கண்ணீரை அடக்கிக் கொண்டும் வையை சென்றாள் என்கிறார். அடிகளின் கற்பனை ஆற்றலை பாடல் வரிகளால் தெளிவாக உணரலாம்.
அறிவு முக்கியமானதுதான். ஆனால், அதனைவிட முக்கியமானது கற்பனைத்திறன் என்று கூறினார் ஐன்ஸ்டீன். கற்பனைத் திறன் எப்படி கைவரப்பெறும்? இளம் வயதில் தாய்மொழியில் கற்பதும் இதைத்தான், இப்படித்தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயத்திற்கு ஆளாகாமல் செய்து கற்பதும் கற்பனைத் திறனை வலுப்பெறச் செய்வதற்கான வழிமுறைகளாகும். எனவே கற்பனை ஆற்றலை மாணவர்கள் உணரும் வகையில் ஆசிரியர்கள் இலக்கியங்களைக் கற்றுத்தருதல் வேண்டும். அவ்வாறு கற்பித்தல் நிகழுமாயின் மாணவர்களும் தங்களின் கற்பனையாற்றலைச் சிறப்புற வெளிப்படுத்துவர்.