முகப்பு

3.5 விளம்பரம், அறிவிப்பு, முழக்கத் தொடர்கள் உருவாக்குதல்

விளம்பரம், அறிவிப்பு, முழக்கத் தொடர்கள் உருவாக்குதல்

எந்த இதழைப் புரட்டினாலும் அதன் விற்பனை அளவிற்கும் புகழுக்கும் ஏற்ப விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருப்பதைக் காணலாம். விளம்பரம் என்பது, படங்கள், கவர்ந்திழுக்கும் சொற்கள், தொடர்களைப் பயன்படுத்திப் பொருள்களை வாங்குவதற்கு மக்களைத் தூண்டும் முறையாகும். இதழ்களில் பல வகையான விளம்பரங்கள் வெளிவருகின்றன. வணிக விளம்பரம், நிறுவன விளம்பரம், அறிவிப்பு விளம்பரம், தொழில் விளம்பரம், அரசு விளம்பரம், பங்குச்சந்தை விளம்பரம் போன்ற விளம்பரங்களை நாளிதழ்களில் காணலாம்.

விளம்பரம் உருவாக்குதல்

பொருள்களை விளம்பரப்படுத்த விளம்பரதாரருக்கும் புதிய பொருள்களைப் பற்றி அறிந்து அவற்றை வாங்கிப் பயன்படுத்திட நுகர்வோருக்கும் விளம்பரங்கள் உதவுகின்றன. விளம்பரம் என்பது ஒரு வகையான கருத்தியல் வெளிப்பாடு ஆகும். அதன்மூலம் பரந்துபட்ட நிலையில் பொதுக் கருத்தியலை உருவாக்கிட இயலும். விளம்பரத்தில் பயன்படுத்தப்படும் மொழி மிகவும் முக்கியமானது. அது மக்களுக்குத் தெளிவாகத் தெரியக் கூடியதாகவும் எளிதில் விளங்கிக் கொள்ளக் கூடியதாகவும் இருத்தல் அவசியமானது.

நல்ல விளம்பரத்தின் இயல்புகள்

• நுகர்வோருக்கு அறிவூட்டும் வகையில் இருத்தல் வேண்டும்.

• நுகர்வோரிடம் தாக்கத்தினை ஏற்படுத்துவதாக இருக்கவேண்டும்.

• நம்பகத்தன்மை மிக்கதாக அமைய வேண்டும்.

• நுகர்வோரின் மனவுணர்வுகளைத் தூண்டுவதாக அமைதல் வேண்டும்.

• செயற்படுத்தக்கூடியதாக இருத்தல் வேண்டும்.

• மேலோட்டமான நிலையிலும், நினைவில் பதியுமாறும் அமைந்திருத்தல் வேண்டும்.

• நுகர்வோரின் கவனத்தை ஈர்க்கும்படி இருத்தல் வேண்டும்.

• கருத்துத் தெளிவும் சொற்சிக்கனமும் பெற்றதாக இருக்க வேண்டும்.

தமிழில் விளம்பரங்கள்

வணிக நிறுவனங்கள், வங்கிகள், தொழிற்சாலைகள் போன்றவை வணிக நோக்கில் விளம்பரங்களைத் தமிழில் வெளியிடுகின்றன. பொதுவாக, இன்று உலகமயமாக்கல் காரணமாகத் தமிழ்நாட்டின் சந்தையானது உலக வணிகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு நிறுவனங்களின் பொருள்களை விற்பனை செய்ய விளம்பரங்களே பெரிதும் உதவுகின்றன. இந்நிலையில் பிறமொழி பேசும் முதலாளிகள், விளம்பர நிறுவனங்கள் மூலம் பல்வேறு ஊடகங்களின் வழியாக விளம்பரப்படுத்துகின்றனர். பரந்துபட்ட மக்களைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்படும் விளம்பரங்கள் தனித்துவமான காட்சியமைப்பு, மொழி ஆகியவற்றைக் கொண்டுள்ளன.

விளம்பரத்தில் மொழிப்பயன்பாடு

விளம்பரங்களில் மொழியைப் பல்வேறு நிலைகளில் கையாளும்போது மக்களை எளிதில் கவருகின்றன. இதற்காக, எழுத்து, இலக்கியத் தொடர், இலக்கண நூற்பா, உவமை, உருவகம், அணிகள், தொடைநயங்கள், தொன்மம், பழமொழி ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர். இவை விளம்பரங்களில் கவர்ச்சியான தன்மையையும் அழகையும் கொடுக்கின்றன. எழுத்தின் அளவு, அழுத்தம், வடிவம் போன்றவை எழுத்து உத்திகளாகும். இந்நிலையில் மற்றவர்களைக் கவரும் நிலையில் விளம்பரம் அமைய வேண்டும் எனில் அதனை உருவாக்குபவர் ஒன்றனைப் புதுமையாக வெளிப்படுத்துபவராக இருத்தல் வேண்டும். எனவே, மாணவர்களை விளம்பரங்கள் உருவாக்கச் செய்வதன் மூலம் படைப்பாற்றல் திறனை வளர்க்கலாம்.

எ.கா:

கொடுக்கப்பட்டுள்ள குறிப்பினைக் கொண்டு விளம்பரம் உருவாக்குதல்

புத்தகக் கண்காட்சி
டிசம்பர் 01 2022 முதல் டிசம்பர் 31 2022 வரை

கம்பன் தமிழ்ச் சங்கம்
காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை

அனுமதி இலவசம்

கீழ்க்காணும் பொருள்களை விளம்பரம் செய்வதற்குப் பொருத்தமான தொடர்களை உருவாக்குதல்
விளம்பரத் தொடர்கள்

இங்குச் சுவையான இனிப்புகள் கிடைக்கும்.

மணக்க! மணக்க!! சுவைக்க! சுவைக்க!!

பாரம்பரிய இனிப்புகள்!!!

மக்களுக்கு இன்றியமையாத சில செய்திகளைத் தெரிவிப்பதற்காக உருவாக்கப்படுபவை அறிவிப்புகள் எனப்படும். பேருந்து, வானூர்தி, கப்பல், தொடர்வண்டி இவை புறப்படும் நேரம், காலதாமதம் போன்ற செய்திகள் அறிவிக்கப்படுபதை நாம் கவனித்திருப்போம். இவ்வாறே பொது மக்களுக்குத் தெரியப்படுத்த விரும்பும் தகவல்களை அறிவிப்புகளாக உருவாக்கச் செய்யலாம். பிறரைக் கவரும் வகையில் அமையும் அறிவிப்புகளே மக்களை எளிதில் சென்றடையும்.

முழக்கத்தொடர் என்பது எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளக் கூடியது; தனித்தன்மைமிக்கது; ஒரு குறிப்பிட்ட நிகழ்வின் முதன்மையைச் சுருக்கமாகக் கூறுவது; மக்களிடையே நேர்முக உணர்வுகளை வெளிப்படுத்தும் சொற்றொடர் ஆகும்.

முழக்கத் தொடர்கள் உருவாக்கும்போது கவனிக்க வேண்டியவை
  • நாம் எந்தச் செய்தியை வலியுறுத்துகிறோமோ அந்தச் செய்தியின் கருத்தை வலுப்படுத்துதல் வேண்டும்.
  • அதற்கேற்ற சில உறுதியான/செறிவான/வலுவான சொற்களைப் பயன்படுத்துதல் வேண்டும்.
  • மையக் கருத்தை வெளிப்படுத்துவதாய் அமைதல் வேண்டும்.
  • உரிய நிறுத்தக்குறிகளைப் பயன்படுத்துதல் வேண்டும்.
முழக்கத் தொடர்கள் உருவாக்கும் முறைகள்

முழக்கத் தொடர்களை உருவாக்கச் செய்ய முற்படும்போது கீழ்க்காணும் முறைகளைப் பின்பற்றலாம்.

  • உரைப்பகுதியைப் படித்து முழக்கத் தொடர்கள் உருவாக்கலாம்.
  • பாடலின் பொருளின் அடிப்படையில் முழக்கத் தொடர்கள் உருவாக்கலாம்.
  • படங்களைப் பார்த்து முழக்கத் தொடர்கள் உருவாக்கலாம்.
  • தலைப்புகள் குறித்து முழக்கத் தொடர்கள் உருவாக்கலாம்.
எ.கா :
உரைப்பகுதியைப் படித்து முழக்கத் தொடர்கள் உருவாக்குதல்

வெப்பமடைந்து வரும் புவியினால் மனிதன் அழிவை நோக்கிச் செல்லும் கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுவிட்டான். இதனைத் தவிர்க்க மரங்களை வளர்க்க வேண்டும். "வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம்" என்ற நிலைமாறி "ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்" என்று சொல்லும் நிலைக்கு வந்துவிட்டோம். எனவே, இயற்கையைப் பாதுகாக்கும் முதல் காரணியான மரம் வளர்ப்பு பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முழக்கத்தொடர்களை உருவாக்குங்கள்.

மேற்கண்ட உரைப்பகுதியின் மையக் கருத்தைக் கொண்டு,

  • மரம் வளர்ப்போம்; மழைவளம் பெறுவோம்!
  • மரம் வளர்ப்போம்; மண்ணைக் காப்போம்!
  • மரம் ஒரு வரம்; அதுவே உயிரின் சுவாசம்!
  • மரம் வளர்த்தால் மழை பொழியும்; மழை பொழிந்தால் மானுடம் செழிக்கும்!
  • மரத்தை வாழ விடுங்கள்; மரங்கள் நம்மை வாழவைக்கும்!

என்பவை போன்ற முழக்கத்தொடர்களை உருவாக்கலாம்.

பாடலின் பொருளின் அடிப்படையில் முழக்கத் தொடர்கள் உருவாக்குததல்

“கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த விடத்து” என்ற குறளின் கருத்தையும்

“ஓடுமீன் ஓட உறுமீன் வரும் வரையில் வாடி இருக்குமாம் கொக்கு’’ என்ற மூதுரைப் பாடலின் பொருளையும் ஒப்பிட்டுப் பார்ப்போம்.

கொக்கானது தனக்குரிய உணவான மீனைப் பிடிக்கப் பொறுமையுடன் காத்திருந்து சரியான நேரத்தில் வேகமாகச் செயல்பட்டு உணவைப்பெறும். அதைப்போல அறிவுடையோரும் உரியகாலம் வரும்வரை பொறுமையாகக் காத்திருந்து விரைந்து செயலாற்றுவர்.

மேற்கண்ட கருத்தை மையமாகக்கொண்டு,

  • காலத்தே பயிர்செய்.
  • காலம் அறிந்து கடமையாற்று.
  • பொன்போன்ற காலத்தில் கண்ணெனக் கடமையாற்றுவோம்.
  • காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.
  • வாய்ப்பைக் கொண்டு வெற்றிகொள்.

முதலான முழக்கத் தொடர்களை உருவாக்கலாம்.

இவற்றைப் போன்றே சமூகநல விழிப்புணர்வுச் செய்திகளுக்கு முழக்கத் தொடர்களை உருவாக்கலாம்.

சுற்றுப்புறத்தூய்மை
எ.கா :

சுற்றுப்புறம் காப்போம்; சுகமாய் வாழ்வோம்.

பெண்கல்வி
எ.கா :

வானுக்கு நிலவு அழகு; பெண்ணுக்குக் கல்வி அழகு.