3.3 மொழி விளையாட்டுகளும் குறுக்கெழுத்துப் புதிர்களும்
மொழி விளையாட்டுகளும் குறுக்கெழுத்துப் புதிர்களும்
குழந்தைகளுக்கு விளையாட்டில் ஆர்வமும், ஈடுபாடும் மிகுதியாக இருக்கும். விளையாட்டு மூலம் கற்பித்தால் குழந்தைகள் கற்றுக்கொள்வதில் ஆர்வத்துடன் இருப்பர். களைப்போ, சோர்வோ தோன்றாமல் கற்றுக்கொள்வர். விளையாடுவதால் உடல் வலுப்பெறுவதோடு மகிழ்ச்சியும் மன நிறைவும் கூட்டுறவு மனப்பான்மையும் ஆளுமைத் திறனும் குழந்தைகளிடம் ஏற்படும். மேலும், தம் எண்ணங்களை எளிமையாக வெளிப்படுத்துதல், ஒழுங்குமுறைகளைப் பின்பற்றுதல், திட்டமிடல், தலைமையேற்றல், தன்னுடைய முறை வரும் வரை காத்திருத்தல் போன்ற பண்புகளை விளையாட்டின் வாயிலாக மாணவர்கள் பெறுகின்றனர். பள்ளியில் வகுப்பறையிலும் வகுப்பறைக்கு வெளியிலும் விளையாட்டுகளை நடத்தலாம்.
மொழி பயிற்றுவித்தலில் பெரும்பாலும் வகுப்பறை விளையாட்டுகளே கடைப்பிடிக்கப்படுகின்றன. எந்த ஒரு விளையாட்டு எல்லாக் குழந்தைகளையும் ஒன்றாகச் சேர்த்து ஒவ்வொருவரின் தனித்திறன் வளர்ச்சிக்கும் உதவுகிறதோ அதுவே வகுப்பறைக்கு ஏற்ற விளையாட்டாக விளங்குகிறது. வகுப்பறை விளையாட்டுகளின்வழி சொல் விளையாட்டுகளை வடிவமைத்தல், கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல், சொற்களஞ்சியம் பெருக்குதல் ஆகிய மொழித் திறன்களை வளர்க்கலாம். அதனை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களின் படைப்பாற்றல் திறனையும் வளர்க்கலாம்.
பயிற்றுவிக்கும் பாடப்பொருள், பாடவேளை, சூழல் முதலியவற்றிற்கு ஏற்ப மொழி விளையாட்டுகளை ஆசிரியர் திட்டமிடல் வேண்டும். விளையாடுவதற்குத் தேவையான பொருள்களைத் தொகுத்து வைத்துக் கொள்ளுதல் வேண்டும். ஒவ்வொரு விளையாட்டிலும் ஒன்றுக்கு மேற்பட்ட திறன்கள் வெளிப்பட்டாலும் மொழித் திறனுக்கே முன்னுரிமை அளித்தல் வேண்டும். விளையாட்டிற்கு ஏற்பவும் விளையாடுவோரின் எண்ணிக்கைக்கு ஏற்பவும் விளையாடும் முறை, விளையாட்டிலிருந்து வெளியேறுதல், விளையாட்டின் பயன், குழுத்தலைவர், மதிப்பெண் வழங்குபவர், நடுவர் என விதிமுறைகளை வகுத்துக்கொள்ளுதல் வேண்டும். சிந்திப்பதற்கும் வெளிப்படுத்துவதற்கும் முன்னுரிமை அளிக்கப்படுதல் வேண்டும். சிக்கல்கள் ஏற்படும்பொழுது மட்டும் ஆசிரியர் நடுவராக இருந்து வழிகாட்டுதல் வேண்டும். விளையாடும் மாணவர்கள் தவறு செய்யும்பொழுது, அவர் வெளியேறும்போது, தவறுக்கான காரணத்தைக் கூறி வெற்றி பெறுவதற்கு வழிகாட்டுபவராகவும் ஊக்கமூட்டக் கூடியவராகவும் ஆசிரியர் விளங்க வேண்டும். தமிழ் மொழியினைக் கற்பிப்பதில் கீழ்க்காணும் விளையாட்டு முறைகள் பின்பற்றப்படுகின்றன.
- விடுபட்ட எழுத்தை நிரப்பச் செய்தல்.
- குறிப்பிட்ட எழுத்துகளை வட்டமிட்டுக் காட்டுதல்.
- படங்களையும் பெயர்களையும் பொருத்தச் செய்தல்.
- பொருள்களுக்கான பெயர் எழுதச் செய்தல்.
- பொருத்துதல் [உறுப்புகள்-அணிகலன்கள்; உறுப்புகள்-பயன்கள் போல்வன].
- மாறியுள்ள எழுத்துகளை முறைப்படுத்தி அமைத்தல்.
- எழுத்துக் கூட்டல்.
- ஓர் எழுத்தைச் சேர்த்து அல்லது நீக்கிப் புதிய சொல் உருவாக்குதல்.
- இரட்டைக் கொம்பு சேர்த்துச் சொல்லாக்குதல் [சாறு-சோறு; தாள்-தோள்].
இவற்றிற்கு
- சொற்களை முறைமாற்றிக் கொடுத்து வாக்கியமாக்குதல்.
- வினாக்களுக்கு விடை கூறுதல் விளையாட்டு.
- எதிர்ச்சொல் கூறுதல்.
- ரே ஒலியில் அமைந்த சொற்களைக் கூறச் செய்தல்.
- கதை அமைத்தல்.
- பொருந்தாதவற்றை அல்லது அந்நியனைக் கண்டுபிடித்தல்.
- படம் காட்டித் தலைப்பினைக் கூற வைத்தல்.
- ஆத்தி சூடி அல்லது திருக்குறள் கூறச்செய்தல்.
- பாதி சொல்வேன்; மீதி கூறு! (இவ்விளையாட்டில் பாதிக் கதையை ஆசிரியர் கூறி மீதியைக் கூற வைத்தல்).
- இரு பொருள் தரும் சொற்களைக் கூறுதல்.
- விடுகதைகள் கூறுதல்
மாணவர்களின் தரம், வாழ்க்கைச் சூழல், ஆசிரியர் தம் தனித்திறன் முதலானவற்றிற்கு ஏற்ப மொழி விளையாட்டுகளைப் பெருக்கவும் சுருக்கவும் செய்து பயிற்சி அளிப்பர். இந்த முறைகளைக் கையாண்டு மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வளர்க்கலாம்.
வட்ட நி__வே!
வா__ வீதியில். . .
யாரைத் தேடி
அ__கிறாயோ?
விடுபட்ட எழுத்தை நிரப்பி, கவிதையை நிறைவு செய்தல் வேண்டும்.
பறவைகள் மகிழ்ந்து
விளையாடவே
விளையாட்டு பூங்காவாக
----------------
------------------------
பின்பாதி கவிதையை நிறைவு செய்தல் வேண்டும்.
• குழந்தைகள் மகிழ்வுடன் கற்பர்.
• கற்றல் விளைவுகளை உடனுக்குடன் அறிய இயலும்.
• மாணவர்களிடையே ஒற்றுமையும் உதவும் பண்பும் ஓங்கும்.
• கற்றல் விளையாட்டை முடித்ததும் வெற்றிப் பெருமிதம் ஏற்படும்.
• தானே ஒன்றைச் செய்யும்பொழுது நினைவில் நிலை நிறுத்தப்படுகிறது.
• முயன்று தவறிக் கற்பதால் மீண்டும் தவறு செய்ய வாய்ப்பு ஏற்படாது.
• ஆசிரியர் திட்டமிடுவதால் பேசுதல் குறைகிறது.
• குழந்தை மையக் கற்றலுக்கு இம்முறை உதவுகிறது.
• கற்கிறோம் என்ற எண்ணம் தோன்றாமல் எளிதாகக் கற்றுக்கொள்ள விளையாட்டு முறை உதவுகிறது.
• மொழித் திறன்கள் அனைத்தையும் விளையாட்டு முறையில் கற்க இயலாது.
• ஒரே விளையாட்டு முறையைப் பின்பற்றும்போது குழந்தைகளிடம் கூச்சல், குழப்பம் ஏற்படும்.
• பாடப்பொருள், விளையாட்டு முறை ஆகிய இரண்டினையும் ஒவ்வொரு நாளும் திட்டமிடுவதும் செயற்படுத்துவதும் ஆசிரியர்க்குப் பணிச் சுமையை ஏற்படுத்தும்.
• நாள் முழுவதும் தொடர்ந்து விளையாடாமல் கற்பதும் - கற்பிப்பதும் சோர்வைத் தரும்.
• விளையாட்டு முறையில் பிற வகுப்புகளின் கவனம் சிதறும்.
• ஆதலால் இவற்றை மனத்தில் கொண்டு அதற்கு ஏற்ப விளையாட்டு முறையைப் பின்பற்ற வேண்டும்.
கட்டங்களைச் சொற்களால் நிரப்பும் ஒருவித சொல் விளையாட்டே குறுக்கெழுத்துப் புதிர் எனப்படுகிறது. கருப்பு, வெள்ளை நிறங்களில் கட்டங்களும் அதில் வெள்ளைக் கட்டங்களில் எண்களும் கொடுக்கப்பட்டிருக்கும். வெள்ளைக் கட்டங்களை நிரப்புவதற்குக் குறிப்புகள் உண்டு. கருப்புக் கட்டங்களைக் கண்டுகொள்ளத் தேவையில்லை. இடமிருந்து வலமாகவும், மேலிருந்து கீழாகவும் கட்டத்தை நிரப்புமாறு புதிர் அமைக்கப்பட்டிருக்கும். சில புதிர்கள் இடமிருந்து வலம், வலமிருந்து இடம், மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் என்று நிரப்பும் வகையிலும் அமைந்திருக்கும்.
குறுக்கெழுத்துப் புதிர் விளையாடுவதால் கணக்கற்ற நன்மைகள் கிடைக்கின்றன. அவற்றுள் சில.
• சொற்களஞ்சியம் (vocabulary) அதிகரிக்கிறது
• மன அழுத்தத்தைக் (stress) குறைக்கிறது
• படைப்பாற்றலைத் (creativity) தூண்டுகிறது.
• பகுப்பாய்வுத் திறன்களை (analytical skills ) மேம்படுத்துகிறது.
• மூளையைத் துருதுருவென இயங்க வைக்கிறது.
• பயனுள்ள பொழுதுபோக்கு
எந்த மொழியையும் சரளமாய்ப் பேசுவதற்கான அடித்தளத்தைக் கொடுப்பது அதன் சொற்கள்தான். ஏராளமான, புதிய வியப்பூட்டும் சொற்களைத் தெரிந்துகொள்ளவும் சொற்களஞ்சியத்தை மேம்படுத்தவும் குறுக்கெழுத்துப் புதிர்கள் உதவுகின்றன. இதன்மூலம் புதுப்புதுச் சொற்களை அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. எழுத்துப் பிழையின்றி மொழியைப் பயில உதவுகிறது.
மன அழுத்தமாக உணரும்போது உங்கள் மனதை அமைதிப்படுத்தி, தெளிவாகச் சிந்தித்து, மன அழுத்தத்தைக் குறைத்து உடலையும் மனதையும் அமைதியான நிலைக்கு கொண்டுவர குறுக்கெழுத்துப் புதிர் ஒரு சிறந்த வழியாகும். இந்தப் புதிர்களின் மீதான ஆர்வம் அதிகமாகும்போது மன அழுத்தம் குறைவதை நீங்களே உணரலாம்.
குறுக்கெழுத்துப் புதிரில் சில விடைகளைக் கண்டுபிடிப்பது கடினமாய் இருக்கும். இதன் காரணமாக, நீங்கள் வழக்கத்திற்கு மாறாகச் சிந்திக்க வேண்டும், அதாவது மாற்றி யோசிக்க வேண்டும். இப்படி வெவ்வேறு வழிகளில் சிந்திப்பது உங்கள் படைப்பாற்றலைத் தூண்டுவதாக அமையும்.
ஒரு துப்பறிவாளரைப்போல நீங்கள் விளையாடும் குறுக்கெழுத்து புதிர்கள் உங்கள் பகுப்பாய்வுத் திறன்களை மேம்படுத்துகின்றன. சிக்கல்களைத் தீர்த்து விடைகளைக் கண்டறியும் திறமை வாழ்க்கையில் பல சவால்களைக் கையாளுவதற்கும் எதிர்கொள்வதற்கும் நம்பிக்கையை உங்களுக்கு வழங்குகிறது.
ஒருபோதும் உங்கள் மூளைக்கு பயிற்சி அளிக்கவில்லை என்றால், அது சோம்பேறியாகி, சிந்திக்கும் திறனை மெல்ல இழக்கும். வாரத்திற்கு ஒரு முறையாவது குறுக்கெழுத்து புதிர்களைச் செய்வதன் மூலம் உங்கள் மூளைச் செல்கள் புத்துணர்வோடு இருக்கும்.
பொழுதுபோக்கு என்று எடுத்துக்கொண்டாலே அவை அதிக பொருட்செலவைக் கொண்டவையாகத்தான் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் குறுக்கெழுத்து புதிரை விளையாடுவதற்கு உங்களுக்கு அதிக செலவு ஆகாது. இதனால் பொது அறிவும் வளரும். பயனுள்ள வகையில் பொழுதினைச் செலவழிக்கும் ஆற்றலைப் பெறுவர். எடுத்துக்காட்டாக,

- தமிழ் மொழியின் முதல் இலக்கணநூல்---------
- பாரதிதாசன் இவர்மேல் பற்று வைத்திருந்தார்--------
- புதுவையில் தோன்றிய புதுமைப் பாவலர்--------
- பாரதிதாசனின் தந்தையின் பெயர்---------
- பாரதியார் எழுதிய பாடலில் ஒன்று--------
- முத்தமிழ் என்பது இயல், இசை--------
- உடலுக்குக் குளிர்ச்சி தருவது---------
- உலகின் முதன்மொழி மூத்த மொழி--------
- தமிழ் என்னும் சொல்லுக்குரிய பொருள்--------