3.4 கையெழுத்து இதழ் உருவாக்குதல்
கையெழுத்து இதழ் உருவாக்குதல்
உங்களுடைய கையெழுத்தில் இதழினை உருவாக்குவது கையெழுத்து இதழாகும். அச்சு இயந்திரங்கள் கண்டுபிடிப்பதற்குமுன் கையெழுத்து பிரதிகள்தான் பயன்பாட்டில் இருந்தன. அரசர்கள் தங்களுடைய செல்வ செழுப்பினைக் காட்ட தங்கத்தாலான கையெழுத்து இதழ்களையெல்லாம் வடிவமைத்து இருக்கின்றனர். அவ்வகையில் கவிதை, கட்டுரை, சிறுகதை, விளம்பரங்கள், ஒருபக்க கதை, புதிர் விளையாட்டுகள் போன்றவற்றைக் கொண்டு நாம் விரும்பிய வண்ணம் ஒரு கையெழுத்து இதழை உருவாக்கலாம். இன்றும் ’தாழம் பூ’ என்ற பெயரில் எம்.எஸ்.கோவிந்தராஜ் என்பவர் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து 32 பக்கங்களைக் கொண்ட கையெழுத்து இதழை நடத்தி வருகிறார்.
தமிழில் முதலில் பத்திரிகை என்ற சொல் கையாளப்பட்டது. ஏடு, மலர், மடல், முடங்கல், தாள், தாளிகை, சுவடி முதலிய சொற்களும் பத்திரிகையைக் குறிக்கும். தற்போது இதழ் என்ற சொல்லும் இதழியல் என்ற சொல்லும் கலைச் சொற்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.
வார, மாத, ஆண்டு இதழ்களையும், கவிதை, சிறுகதை, துணுக்குகள், கட்டுரை முதலியவற்றைத் தாங்கி நிற்கும் வெளியீடுகளையும் இதழ் என்ற சொல் குறிப்பிடுகிறது. அதாவது இதழியல் என்பது இதழ் தொடர்பான எல்லாவற்றையும் உள்ளடக்கிய கலைச் சொல்லாக உள்ளது.
இதழியல் பற்றிய பாரதிதாசனது கவிதை
காரிருள் அகத்தில் நல்ல
கதிரொளி நீதான்! இந்தப்
பாரிடைத் துயில்வோர் கண்ணில்
பாய்ந்திடும் எழுச்சி நீதான்
ஊரினை நாட்டை இந்த
உலகினை ஒன்று சேர்க்கப்
பேரறி வாளர் நெஞ்சில்
பிறந்தபத் திரிகைப் பெண்ணே!
இதழ்களின் நோக்கத்தையும் சிறப்புக் கூறுகளையும் பணிகளையும் உள்ளடக்கிய இதழியல் என்ற கலைச்சொல்லின் முழுமையான பரிமாணங்களையும் தன்னகத்தே பெற்று இக்கவிதை மிளிர்கிறது எனலாம்.
‘வெளியிடுவதற்காகவோ பதிப்பிப்பதற்காகவோ ஒலி பரப்புவதற்காகவோ நடைமுறை ஈடுபாடுள்ள விவரங்களைத் தொகுப்பதும், எழுதுவதும், செப்பனிடுவதும் இதழியல்’ என்று வெப்ஸ்டர் பன்னாட்டு அகராதி (Webster) குறிப்பிடுகிறது.
‘பொது இதழ்களுக்கு எழுதுதல், அவற்றை நடத்துதல் ஆகிய தொழிலே இதழியல் எனப்படும்’ என, சேம்பரின் இருபதாம் நூற்றாண்டு அகராதி (Chambers) சுட்டுகிறது.
‘பொது நோக்குடைய இதழியல் துறை ஓர் ஆற்றல் மிக்க கருவியாகும். அதன் மூலம்தான் இன்றைய சமுதாயம் அதனுடைய வழிகளை வகுத்துக் கொண்டும் மாற்றிக் கொண்டும் தெளிவாக வரையறுக்கப் பெற்ற வளரும் மனித நலன் என்னும் இலட்சியத்தை நோக்கி நடை பயில்கின்றது’ என்று அமெரிக்க இதழியல் பேராசிரியரான ஹெரால்டு பெஞ்சமின் (Harold Benjamin) குறிப்பிடுகின்றார்.
ஜி.எப். மோட் (G.F. Mott) என்பவர் விரிவாக ‘இதழியல் என்பது, பொதுமக்கள் தொடர்புக்கு உரிய புதிய சாதனங்களைப் பயன்படுத்திப் பொதுச்செய்திகளையும் பொதுவான பொழுதுபோக்குகளையும் முறையாகவும் நம்பிக்கைக்கு உரிய வகையிலும் பரப்புவதாகும்’ என்று குறிப்பிடுகின்றார்.
‘பெரும்பாலும் ஒரு நாளிதழ் அறிவிப்பதும் கருதுவதும் தான் வரலாற்றுக்கு மூலப்பொருளாகவும் வரலாற்று ஆசிரியர்களுக்கு மிகவும் மதிப்புடையதாகவும் அமைகின்றது’ என்பது பிராங் மோரேஸ் (Frank Moraes) ,என்பவரின் கருத்தாகும்.
இந்திய அறிஞர் ஆர். இராமச்சந்திர ஐயர் கூறுவதாவது,“இதழ்களுக்கு, குறிப்பாகச் செய்தித்தாட்களுக்கு எழுதும் தொழிலைத்தான் முதன்முதலில் இதழியல் என்ற சொல் குறித்தது. இப்பொழுது அதனுடைய பொருளும் பரப்பும் விரிவடைந்து, செய்திகளையும் கருத்துக்களையும் பரப்புகின்ற மக்கள் தொடர்பு நிறுவனமாக மாறியும், சமுதாய விழிப்புணர்ச்சியின் ஓர் உறுப்பாக அதுவே உருவெடுத்தும், அதனுடைய நடவடிக்கைக்கு அற அடிப்படையிலும் சட்டநோக்கிலும் பொறுப்பேற்கும் அமைப்பாகவும் இதழியல் திகழ்கின்றது.”
கி.பி. ஆறாம் நூற்றாண்டில் மரப்பலகையில் செதுக்கிய இதழ்கள் சீனாவில் வெளியாயின. கிஸ்போ, பீகிங் நியூஸ், பீகிங் கெஜட் முதலியன அவ்வாறு வெளியான இதழ்களாகும். கி.பி.1835 வரை வெளியான பீகிங் நியூஸ் இதழுக்கு விழா 1200ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது. இந்த இதழே உலகின் மிகப்பழைய இதழாகக் கருதப்படுகிறது.
இந்தியாவில் முதல் அச்சகம் 1556இல் கோவாவில் தொடங்கப்பட்டது. இங்கிருந்து சுமார் 80 ஆண்டுகள் காலம் ‘ஒ எரால்டோ’ என்ற போர்த்துக்கீசிய நாளிதழ் வெளிவந்தது. அது 1633ஆம் ஆண்டு நின்றுபோனது. அதனை இந்தியாவில் இருந்து வெளிவரும் ஒரே போர்த்துக்கீசிய நாளிதழாகக் கருதினர். பேராசிரியர் அந்தோணி என்னும் போர்த்துக்கல் இறையியல் பேராசிரியர் ‘இறையியல் உரைகள்’ (Catechism) என்ற நூலை 1556இல் அச்சிட்டார். அதுவே முதல் நூலாகும். புனித சேவியர் என்பார் மொழிபெயர்த்த நூல் ஒன்றை ‘தம்பிரான் வணக்கம்’ என்ற பெயரில் அச்சிட்டு வெளியிட்டார். அதனை மொழிபெயர்த்துத் தமிழில் தந்தவர் அண்டிறிக் பாதிரியார் ஆவார். இவரைத் ‘தமிழச்சுத் தந்தை’ என்பர். இதுதான் முதல் தமிழ் நூலாகவும் கருதப்படுகிறது. அக்காலத்து இறையியல் நூல்கள் பலவற்றை மொழிபெயர்த்ததால் இவரைத் “தமிழ் மொழிபெயர்ப்புத் தந்தை” என்றும் போற்றுவர். 1779இல் பெப்ரிசியஸ் பாதிரியார் எழுதிய “தமிழும் ஆங்கிலேசுமாயிருக்கிற அகராதி (A Malabar and English Dictionary) என்ற நூல் வெளியானது. இது தமிழ் ஆங்கில அகராதிகளின் முன்னோடி எனலாம். முதல் இதழ் எனக் கருதப்பட்ட ‘தமிழ் மேகசின்’(1856) என்னும் இதழில் பிற செய்திகளுடன் அறிவியல் செய்திகளும் முதன்முதலாக வெளிவரத் தொடங்கின.
சிறுவர்களுக்கான இதழ்களை எல்லா நாடுகளும் வெளியிடுகின்றன. படங்கள் நிறைந்தனவாகவும் கதைகள் அதிகம் கொண்டனவாகவும் சிறுவர் இதழ்கள் உள்ளன. வாசகர்களாக மட்டுமின்றிப் படைப்பாளர்களாகவும் சிறுவர்கள் உள்ளனர். சிறுவர் இதழ்கள் சிறுவர்களது உள்ளத்தைப் பண்படுத்துகின்றன. அறஉணர்வு, நீதிபோதனை சார்ந்த கதைகள், புராணம், வரலாறு, கல்வி, அறிவியல் தொடர்பான கதைகள், கட்டுரைகள் முதலியன எளிய நடையில் வெளியாகின்றன.
குழந்தைகளுக்கென எளிதில் படித்துப் புரிந்து கொள்ளும் நிலையில் பல இதழ்கள் வருகின்றன. துளிர், பெரியார் பிஞ்சு, சுட்டி விகடன், அம்புலிமாமா, பாலமித்ரா, ராணி காமிக்ஸ் முதலியன குறிப்பிடத்தக்கனவாக அமைகின்றன. குழந்தைகளுக்கு அறிவு, சிந்தனையைத் தூண்டும் கதைகள், விடுகதை, வேடிக்கைக் கதைகள், ஓவியம், வினோதக் கதைகள் முதலியன முக்கிய உள்ளடக்கமாக அமைகின்றன.
மனிதரின் அறிவாற்றல் எல்லையற்று விரிந்த வண்ணம் உள்ளது. இதற்கு இணையாக மக்களது மொழித்திறன் வளர்ச்சி அமைய வேண்டும். மொழித் திறன்களைப் பாடப்புத்தகங்களே மாணவர்களிடம் முற்றிலும் வளர்த்துவிடும் என்று எதிர்பார்க்க இயலாது. பள்ளிப்பாடப் புத்தகங்கள் மாணவர்கள் அடைய வேண்டிய அறிவுத்திறன் வளர்ச்சிக்கென்றே எழுதப்படுகின்றன. எனினும், வேகமாகவும் விவேகமாகவும் நாளுக்கு நாள் வளர்ந்துவரும் மக்களது அறிவார்ந்த இதர வளர்ச்சிகளுக்கேற்ப இன்றைய மாணவர்கள் தம்மைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்குப் பாடப்புத்தகங்களைத் தவிர வெவ்வேறு நூல்களையும் படிக்க வேண்டியது தேவையாகிவிட்டது. ஒரு குழந்தையின் முழு வளர்ச்சி என்பதில் அக்குழந்தையின் சரியான மொழித்திறன் வளர்ச்சியும் உள்ளடங்கி யுள்ளது. பாடம் சார்ந்த திறன்களுடன் பல்வகைப் பொது அறிவிலும், தற்சிந்தனை, படைப்பாற்றல், எதையும் கூர்ந்த மதிநுட்பத்துடன் ஆய்ந்துதெளியும் உள்ளாற்றல் ஆகியவற்றிலும் சிறந்து விளங்குவது இன்றைய மாணவருலகிற்குப் பெரிதும் தேவையாகிவிட்டது. இவ்வகையிலான அனைத்துத் திறன்களும், பல்வேறு இதழ்களைப் படிப்பதால் நன்கு வளர்க்கப்படுவதுடன் அவை மேம்பாடு அடைகின்றன எனபது மிகத் தெளிவான உண்மையாகும்.
இதழ்களின் பண்பு நலன்களான அறிவித்தல், அறிவுறுத்தல், மகிழ்வித்தல், வழிகாட்டுதல் ஆகியவை மாணவர்களை அறிவார்ந்த வகையில் செம்மைப்படுத்தவும், நன்னெறிப்படுத்தவும் பெரிதும் பயன்படுகின்றன. புத்தகப்படிப்பே ஒரு முழு மனிதனை உருவாக்குகிறது’ (Reading Maketh a Man) என்பதும் 'கண்டது கற்றவன் பண்டிதனாவான்” என்பதும் 'படி படி நல்ல தமிழ் நூலைப்படி, காலை படி, மாலை படி கடும்பகல் படி' - என்ற பாவேந்தரது கருத்தும் இதழ்கள் படித்தல் என்ற திறன்வளர் செயலுக்கு மேலும் மெருகூட்டுகின்றன. இத்துடன், மொழிதொடர்பான பேச்சு, எழுத்து, உரையாடும் திறன், வர்ணனை, வினா எழுப்புதல், தொடர்ந்து பிழையின்றிச் சொந்த நடையில் பேசுதல் ஆகிய ஆற்றல்கள் மாணவர்களிடம் மிகச்சிறப்பாக வளர வேண்டும். இதற்குக் குறிப்பாகச் சிறுவர் இதழ்கள் நன்கு பயன்படுகின்றன. வரையறுக்கப்பட்ட பாடப்புத்தகத் திறன்களானவை, மாணவர்கள் மேற்கொள்ளும் பிறவகைப் படிப்புகள் (Extra Reading) மூலமே முழுமையும் செம்மையும் அடைகின்றன.
ஆகவே, மாணவர்களைச் சிறுவர் இதழ்களைப் படிக்கச் செய்து, அதனைப் போன்றே சிறுவர் இதழ்களைத் தங்களின் கையெழுத்தில் உருவாக்கச் செய்தல் மூலம் அவர்களின் படைப்பாற்றல் திறனை வளர்க்கலாம்.