தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

6.2 அகலிகை வெண்பா

 • 6.2 அகலிகை வெண்பா

  அகலிகை வெண்பா என்பது அகலிகையைப் பற்றிய வெண்பா என்னும் பொருளைத் தரும். அதாவது இந்நூல் அகலிகையின் வரலாற்றை வெண்பா யாப்பினால் தருகிறது. இந்நூல், கடவுள் வாழ்த்து, அவையடக்கம் நீங்கலாக மூன்று காண்டங்களால் ஆனது. முதலாவதாகிய இந்திர காண்டம் 109 வெண்பாக்களால் ஆனது. இரண்டாவதாகிய அகலிகை காண்டத்தில் 116 வெண்பாக்கள் உள்ளன. மூன்றாவது காண்டம் கௌதம காண்டம். இதில் உள்ள வெண்பாக்களின் எண்ணிக்கை 68 ஆகும். ஆக மூன்று காண்டங்களும் 293 வெண்பாக்களால் ஆக்கப்பட்டுள்ளன.

  அகலிகையின் மீது வேட்கையுற்ற இந்திரன், அகலிகையின் கணவனது வடிவத்தில் ஆசிரமத்தில் நுழைந்து அவள் கையைப் பற்றுதலும், அவ்வளவில் வந்தவன் தன் கணவன் அல்லன் என்பதை உணர்ந்து அவனுக்கு அறவுரைகளைக் கூறுதலும், வந்தவன் இந்திரன் என்பதை அறிந்த அளவில், தன் கற்பைக் காப்பாற்றிக் கொள்ள அவனோடு வாதிடுவதும் கற்பனைத் திறத்துடன் புனையப்பட்டுள்ளன. காம வேட்கை மிக்க இந்திரனிடமிருந்து தான் தப்ப முடியாது என்ற அளவில் அவள் மயக்கம் அடைய, இந்திரன் தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வதும் அகலிகையின் கணவன் கௌதமன், நிகழ்ந்தது அறிந்து, இந்திரனையும் அகலிகையையும் சபிப்பதும் அகலிகை வெண்பாவில் அழகுறச் சித்திரித்துக் கூறப்பட்டுள்ளன.

  6.2.1 ஆசிரியர்

  அகலிகை வெண்பா என்னும் குறுங்காப்பிய ஆசிரியர் வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார் 14.08.1857ஆம் ஆண்டு பழனியப்ப முதலியார்க்கு மகனாகப் பிறந்தார். மண்ணுலகில் 80 ஆண்டுகள் புகழுடன் வாழ்ந்த அவர் 12.10.1946இல் இயற்கை எய்தினார்.

  சொக்கநாதப் பிள்ளையும் பிறரும் இவர்தம் தமிழ்ப்புலமைக்கு வித்திட்டவர்கள் ஆவர். அவர்களிடம் தமிழ்ப் புராணங்களையும் இதிகாசங்களையும் சிற்றிலக்கியங்களையும் கற்றுத் தேர்ந்தார். உ.வே.சாமிநாத அய்யர், மு.ரா. அருணாசலக் கவுண்டர், பூண்டி அரங்கநாத முதலியார் ஆகியோரிடம் நட்பும் தொடர்பும் கொண்டிருந்தார்.

  கால்நடை மருத்துவப் பிரிவில் பணியாற்றியமையால் அது தொடர்பான ஆங்கில நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். கால்நடைக்காரர் புத்தகம், இந்தியாவில் கால்நடைகளுக்குக் காண்கிற உயிரிழப்பு நோய்கள் ஆகியவை கால்நடைத் துறையில் பணியாற்றும் தமிழர்களின் நலன் கருதி மொழிபெயர்க்கப் பட்டவையாகும்.

  தமிழ் இலக்கியத் துறைக்கு வளம் சேர்க்கும் வகையில் ஆங்கிலக் கவிஞர் மில்டனின் Paradise Lost முதற்காண்டத்தைச் சுவர்க்க நீக்கம் என்னும் பெயரில் மொழியாக்கம் செய்தார். கோம்பி விருத்தம், நெல்லைச் சிலேடை வெண்பா, தனிக்கவிதைத் திரட்டு, கம்பராமாயண சாரம் என்பன வெ.ப.சுப்பிரமணிய முதலியாரின் பிற நூல்கள் ஆகும்.

  6.2.2 காவிய மாந்தர்

  இனி, காவிய மாந்தர்களின் பண்பு நலன்களைக் காண்போம்.

  அகலிகை

  அகலிகை கோதம (கௌதம) முனிவனின் மனைவி; களங்கமில்லா அழகுடையவள்.

  விரூபமிலள் என்றபொருள் மேவுபெயர் மின்னாள்
  மரீஇயதுஉரு ஒன்றுமொரு மாசும் - இராதபெண்வேறு
  இல்என்று உணர்த்திடுதற்கு என்னில் அவள்அழகு
  சொல்லும் தரமுடைய தோ?

  - (அகலிகை வெண்பா - 55)

  (விரூபமிலள் = களங்கமில்லா அழகு; மின்னாள் = மின்னல் எனத்தக்கவள்; மரீஇயது = பொருந்தியது)

  என்று அவள் களங்கமற்ற அழகு பேசப்படுகிறது.

  திருப்பாற்கடலில் இருந்து அமுது தோன்றியபோது அவ் அமுதை ஒத்த அகலிகையும் தோன்றினாள். முழு அழகே ஒரு பெண் உருவைக் கொண்டு வந்தது போன்று முற்றிய அழகை உடையவள்.

  அவள் முகம், மதியை ஒத்திருந்தது; அவள் குளிர்ச்சி பொருந்திய கண்கள், அம்மதியில் உள்ள மானை ஒத்திருந்தன. அவள் மொழி, மதி பொழியும் அமுதை ஒத்துள்ளது; ஆம்பல் மலரை ஒத்த வாயிதழ்களின் உள்ளே உள்ள பற்கள், மதியில் விளையும் முத்தைப் போல் ஒளி சிந்தின. மின்னலைப் போன்று அழகுடைய அவள் புருவங்கள், மன்மதனின் கையில் உள்ள கரும்பு வில்லை ஒத்துள்ளன. அவள் கண்கள், மன்மதனின் கையில் உள்ள பூங்கணைகளை ஒத்துள்ளதால் அவளுக்கு வில்லும் அம்பும் மிகையானவை ஆகும்.

  நேர்மையான முறையில் அடைய முடியாத அகலிகையைத் தவறான முறையிலாவது அடைவது என இந்திரன் முடிவு செய்தான். ஆசிரமம் உள்ள வனத்தைச் சென்று அடைந்தான்; நள்ளிரவில் சேவலைப் போலக் கூவினான். கோதமன் காலைக் கடன்களைக் கழித்தற்பொருட்டுத் தவச்சாலையிலிருந்து வெளியேறினான். இந்திரன் கோதமன் உருவில் ஆசிரமத்துள் நுழைந்தான். அகலிகை தன் கணவன் கோதமனே இல்லம் மீண்டான் என்று எண்ணி அவனை வரவேற்றாள். இந்திரன் அவள் கையைப் பற்றினான். அவன் தன் கையைப் பற்றிய முறையிலேயே அவனைத் தன் கணவன் இல்லை என்பதறிந்து ‘சீ, விட்டிடு’ என வேண்டினாள். அவன் அவளை வலியப் பற்றிக் கொண்டான். அவள் புலியால் பற்றப்பட்ட மான் போலவும் வலைப்பட்ட மயில் போலவும் துயருற்றாள். மாறுவேடத்தில் வந்தவன் இந்திரன் என்பது அறியாள். வந்தவன் தன்னைக் கற்பழித்துவிடுவான்; இனி உயிர் வாழ்வதில் பொருளில்லை. இறந்து விடலாம் என்றாலோ வந்தவன் தடையாக இருக்கின்றானே என்று கண்ணீர் வடித்தாள். ‘என் கணவன் இத்தீச்செயலைக் காணின் அவன் கோபத்தீய்க்கு ஆளாகிவிடுவாய்’ என்று வந்தவனுக்கு எச்சரிக்கை விடுத்தாள். அப்போது இந்திரன் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான். தன்னை விட்டுவிடும்படி பலமுறை அவனிடம் அவள் மன்றாடினாள். காமக் கனலால் வெந்த அவன் அவளின் வேண்டுகோளை ஏற்காமல், ஆள்வழக்கில்லா இந்தக் காட்டில் வலிந்து நான் இன்பந் துய்த்தால் என்னைத் தடுப்பவர் யாருமில்லை. என் விருப்பத்திற்கு இணங்கினால் வெளியில் யாருக்கும் இது தெரியப் போவதில்லை; உன் கணவனுக்கும் உன்னைப் பற்றிய ஐயம் ஒன்றும் வாராது. இங்கு நடப்பதை நானும் வெளியில் சொல்ல மாட்டேன்; நீயும் சொல்லமாட்டாய்; பிறர்க்கு இது தெரியப் போவதில்லை. ஒருவனுடைய வருவாயில் ஆறில் ஒரு கூறு இந்திரனாகிய எனக்குரியது; உன் கணவன் செய்யும் தவப்பயனில் ஆறில் ஒரு கூறு எனக்குரியது. அது போலவே உன் பங்காகிய ஆறில் ஒரு கூறையும் எனக்குக் கொடுக்கக் கடவாய். உனக்குச் சிந்தாமணி முதலிய செல்வங்களையும் அமுதத்தையும் தருவேன்’ எனப் பலவாறாக உரைத்தான்.

  இந்திரன் பலவாறாகக் கூறக் கேட்ட அகலிகை அவனுடைய கருத்திற்கு இசைய மறுத்தாள். தன் கற்பைக் காப்பாற்ற வேண்டுமெனக் கெஞ்சினாள். அவன் மீது ஆணையிட்டாள்; தெய்வங்களின் மீது ஆணையிட்டாள்.

  அகலிகையின் ஆணை மொழிகளைக் கேட்டும் சற்றும் அயராத இந்திரன், ‘மயிலே, மயிலே இறகொன்று கொடு என்றால் கொடுக்காது, அதன் தோகையைப் பறித்தால்தான் கொடுக்கும். அத்தகையவள் நீ. கருப்பஞ்சாறு ஆலையிற் பிழியப்படுவதுபோல, அகிலை எரித்துப் புகைபெறுதல் போலப் பெண் இன்பத்தை வலிந்து பெறுவதே வழி. நீ என்ன தடுத்தாலும் என் எண்ணம் நிறைவேறாமல் தடுக்கும் உன்முயற்சி வெற்றி பெறாது’ என்று தன் எண்ணத்தை வெளிப்படுத்தினான். இந்திரனின் கொடுமொழிகளைக் கேட்ட அகலிகை மயக்கமுற்று விழுந்தாள். இந்திரன் தன் எண்ணத்தை ஈடேற்றிக் கொண்டான். அதனைக் கவிஞர் ‘தேவர்கோன் அந்தோ தனது கருத்தை முடித்தான்’ என்று கூறுகிறார்.

  பெண்ணின் பெருமைக்குப் பெருமை சேர்க்கும் கற்பென்னும் திண்மையினை இந்திரனால் அகலிகை இழந்தாள்.

  இந்திரனால் கற்பழிக்கப்பட்டதை அறிந்த அகலிகை “புழுத்தான் எரியும் அழல் எய்தினால் என்ன துடித்தாள். நஞ்சுண்டவர்க்கு மருந்துண்டு. கற்பிழந்த தனக்கு மருந்தில்லையோ? உயிர் போயினும் கற்பைக் காக்க வேண்டும் என்னும் உறுதியின்றிப் போனேனே, இதைவிட வேறு குற்றமுண்டோ?” என்று கூறிப் புலம்பி அழுதாள். பின்பு தன் கணவன் தன்னைக் கல்லாகுமாறு சபித்ததும், ”நெஞ்சைக் கல்லாக்கிக் கொண்டு இருந்தேனே, அத்தகைய நான் கல்லாதல் பழிசேர் வாழ்வினும் இனிதானது. கற்புடைய பெண்டிரைப் பிறர் விரும்பார். பொய்க் கற்புடைய நான் இந்திரனால் இந்நிலையை அடைந்தேனே! பொறுமை மிக்க என் கணவன் என்னைக் கல்லாக வேண்டுமெனச் சபித்தது என்பால் உள்ள கருணையினால் அல்லவா?” என்று பன்னிப் பன்னிப் பேசி உள்ளம் வேதனையால் துடித்தாள் அகலிகை.

  கல்லாக ஆவதற்கோ, கோதமனுடைய மனைவி என்னும் தகுதியை இழந்ததற்கோ அவள் கவலையுறவில்லை. அவனுக்குத் தொண்டு செய்யும் வாய்ப்பு இல்லாமல் போயிற்றே என்பதற்காக அகலிகை கலங்கினாள். கோதமனின் சாபத்தால் அகலிகை கல்லுருவானாள்.

  பின்னர், மிதிலை நகர் செல்லும் இராகவனின் பாதத்தூளி படக் கல்லுரு நீத்து அகலிகை பெண்ணுருவானாள். அகலிகை பெற்ற உரு தூயது; மாசு மறு இல்லாதது. நான்முகன் தந்த உரு மாய்ந்தது. இந்த உரு இராகவனின் பாதத்தூளிபட வந்த உரு; இதற்கு மாசும் இல்லை, மாய்வும் இல்லை என்று விசுவாமித்திரன் கூறுவதுபோல மாசு மறுவற்றதாகும்.

  இவ்வாறு அகலிகை வெண்பாவில் அகலிகை தூயவளாகப் படைக்கப்பட்டுள்ளாள். கற்பிழந்தாள் என்னும் குற்ற நிகழ்விற்கு அவள் காரணம் இல்லை. மயக்கமுற்ற அவளுடைய விருப்பமின்றியே, விலங்குணர்ச்சியோடு அவள் கற்பை இந்திரன் கவர்ந்து கொண்டான். கற்பைப் பொறுத்த மட்டில் அகலிகை இலக்கியப் பார்வையில் மனித நேயம் கலந்த ஒரு திருப்புமுனை என்றே கருதலாம்.

  கோதமன்

  அழகின் பேருருவமாகத் திகழ்ந்த நான்முகனின் மகள் அகலிகையை மணக்கக் கோதமனும் இந்திரனும் விரும்பினர். நான்முகன் ஒரு நிபந்தனையை முன் வைத்தான். அதன்படி கோதமன் இந்திரன் ஆகிய இருவரில் எவர் ஒருவர் நீரில் நெடுநேரம் மூழ்கியிருப்பதில் வெற்றி பெறுகிறாரோ அவரே அகலிகையை மணம் புரிதற்கு உரியவர் ஆவார். சபதத்தை ஏற்றுக்கொண்டு, நீரில் மூழ்கிய இந்திரன் கோதமன் நீரிலிருந்து எழுவதற்கு முன்பே நீரிலிருந்து எழுந்து அகலிகையை மணக்கும் வாய்ப்பை இழந்தான். போட்டியில் தோல்வியைத் தழுவிய இந்திரன் மறுபடியும் ஒரு போட்டியை வைக்க வேண்டுமெனத் தன் தகுதியும் நேர்மையும் இழந்து நான்முகனைக் கேட்டுக் கொண்டான். நான்முகன் அவன் கருத்தை ஏற்காமல் இகழ்ந்தான்.

  சீசீ இனையமொழி செப்புதலும் சீர்மைத்தோ!
  ஆசை மதியை அழித்ததோ! - நீசர்
  புகலுமொழி சொற்றாய் புரந்தரபோ போபோ
  அகலஒழி என்றான் அயன்

  - (அகலிகை வெண்பா - 12)

  (சீர்மைத்தோ = பெருமைக்கு உரியதோ; நீசர் = இழிந்தவர்; புகலுமொழி = கூறும் சொற்கள்; சொற்றாய் = சொன்னாய்; புரந்தரன்= இந்திரன்)

  ஆனால் கோதமன் இந்திரன் கருத்தை ஏற்று மற்றுமொரு போட்டியை நடத்தும்படி நான்முகனை வேண்டினான். நான்முகன் கோதமனின் வேண்டுகோளை ஏற்றான். ஒரு போட்டியையும் வைத்தான்.

  இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்ற கோதமன், அகலிகையை மணந்தான். இரு போட்டியிலும் தோல்வியைத் தழுவி அகலிகையைத் தழுவ முடியாத இந்திரன், மனம் நொந்தான். அகலிகையின் அழகில் மயங்கிய இந்திரன் அவளை மறக்க முயலாமல் அவளை அடைவதிலேயே நாட்டம் கொண்டான்.

  நள்ளிரவில் சேவலைப் போலக் கூவி, கோதமனை ஆசிரமத்திலிருந்து அப்புறப்படுத்தினான். ஆசிரமத்துள் கோதமனைப் போல நுழைந்து அகலிகையின் கையைப் பற்றிய அளவிலேயே அவன் தன் கணவன் இல்லை என்பதை அவள் உணர்ந்தாள். அவன் அவள்பால் கொண்ட தன் காதலையெல்லாம் வெளிப்படுத்தினான். அவளுக்கு அடிமையாக இருந்து தொண்டு செய்வதாகக் கூறினான். புலிவாய்ப்பட்ட புள்ளிமான்போல மயக்கமுற்று வீழ்ந்தவளை நுகர்ந்து, தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொண்டான்.

  கோதமன் பொழுது விடியாமை கண்டு ஆசிரமத்திற்கு விரைந்து மீண்டான்; ஏதோ சூழ்ச்சி நிறைவேறிற்று என்பதை உணர்ந்தான். கோதமன் ஆசிரமத்துள் நுழையவும் இந்திரன் ஆசிரமத்திலிருந்து வெளியேறியதைக் கண்ட கோதமன் ஊழிக்காலத்து உருத்திரனைப் போலக் கண்சிவந்து அவனைக் கொன்று விடுவது போல் நோக்கினான். விலங்குகள் கூட மயங்கி விழுந்த விலங்கைக் கூடுவது இல்லை. நீயோ விலங்கினும் இழிந்தவனாய் ஆனாய். எதனை விரும்பினாயோ அதனையே உன் உடலெங்கும் கொள்க என இந்திரனைச் சபித்தான். தன் மனைவியிடம் தகாது நடந்து கொண்ட இந்திரனைக் கடிந்து கொண்டது நியாயமானதே ஆகும். அகலிகையின்பால் தவறேதும் இல்லை எனத் தெளிந்த கோதமன் அவள் மயக்கம் தெளிய உதவினான். மீண்டும் மீண்டும் தனக்கு நேர்ந்த பெரும்பழியை எண்ணி அவள் துன்பத்தால் துடிப்பதைக் கண்ட கோதமன் ‘பொல்லாத வன்பழி’ தீர்வதற்கு அவளைக் கல்லாகுமாறு சபித்தான். பழியோடு வாழ்வதிலும் கல்லாக இருப்பது மேல் என அவ்வாழ்வை விரும்பி ஏற்றுக் கொண்டாள். இராமனின் பாதத்தூளியால் தான் சாபத்திலிருந்து விடுதலை பெற்றதும் கோதமனுக்குத் தொண்டு செய்யும் பேறு வேண்டும் என்று கேட்டதால், கோதமனின் நல்லுள்ளமும் தூய உள்ளமும் வெளிப்படுகின்றன. கோதமன் அகலிகையை ஆற்றுவிக்கும் பகுதி கவனத்திற்குரியது.

  வஞ்சன் உடல் நிறையை மாற்றினான்; அன்றிஉன்றன்
  நெஞ்சில் நிறைசிறிதும் நீங்கிலதால் - நெஞ்சம்
  நினைவிழந்த பின்னர் நிகழ்ந்த செயலுக்கு
  உனையிகழ்ந்து கொள்ளுவதுஎன் னோ

  - (அகலிகை வெண்பா - 263)

  (உடல் நிறை = உடல் சார்ந்த கற்பு; என்னோ = என்ன)

  இந்திரன் அவள் உடற்கற்பை அழித்தான். அவள் நெஞ்சினால் கற்பழியவில்லை; மயக்கமுற்ற பின்னர் நடந்தவற்றிற்கு அவளைக் குறை கூறுவது தகாது எனக் கூறினும் கோதமன் அகலிகையைக் கற்பிழந்தவளாகக் கருதவில்லை என்பது கவனத்திற்கு உரியது.

  கோதமனால் சாபமுற்ற இந்திரன் பொருட்டு, தேவர்கள் கோதமனைக் கண்டு சாப விடுதலை கோரினர். நிலைமையை உணர்ந்த கோதமன் இந்திரனுக்குச் சாபவிடுதலை அளித்தான். இன்னா செய்தார்க்கும் இனியவை செய்யும் பண்பாளனாகக் கோதமன் காட்சியளிக்கிறான்.

  இராமனின் பாதத்தூளியால் கல்லுரு நீங்கிய அகலிகையை விசுவாத்திரனின் வேண்டுகோளால் மனைவியாகக் கோதமன் ஏற்றுக் கொண்டான்.

  இந்திரன்

  இந்திரன் அகலிகையின் அழகில் தோய்ந்து அவளைத் தன்னவள் ஆக்கிக் கொள்ள எண்ணினான்.

  இந்திரனின் உள்ளம் கவர்ந்தவள் அகலிகை என்றாலும் அவள் கோதமனின் மனைவியான பின்னர், அவளை எப்படியாவது அடைய வேண்டும் என்று இந்திரன் முயல்வது அறத்திற்கு மாறுபட்டதாகும். காம எண்ணமே மிக்கிருந்ததால் அறத்திற்கு மாறுபட்டது அவன் வேணவா என்பதை அவன் உணர மறந்தான். திசை காட்டும் கருவியின் சிற்றூசி வடதிசையை நாடுவது போல அவன் மனம் அவளையே நாடியது.

  இந்திரன்

  பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

  வேகின்றேன்; வேகின்றேன்; வெவ்வியதோர் தீப்பற்றி
  வேகின்றேன்; அந்தோ ! விளிந்தேனே - வேக
  நரகத்தீத் தானும் நலியுமோ? இந்த
  விரகத்தீப் போல வெகுண்டு

  - (அகலிகை வெண்பா - 66)

  என்ற இந்திரன் கூற்று அவன் காமத்தால் உற்ற துயரத்தை விளக்கும்.

  அனைவரும் அறிய, அடைய முடியாதவளைத் தவறான வழியில் அடைவேன் என்று இந்திரன் முடிவு செய்தது காமத்தீயின் வேகத்தைப் புலப்படுத்துகிறது. அவ்வெண்ணத்தின் முடிவாக ஒருநாள் நள்ளிரவு கோதமனை ஆசிரமத்திலிருந்து வெளிப்படுத்தி, கோதமன் உருவிலேயே ஆசிரமத்தில் நுழைந்தான். காம உணர்வு தலைப்பட அவன் அவள் கையைப் பற்றிய அளவிலேயே அவன் தன் கணவன் இல்லை என்றுணர்ந்து அவனை வெருட்டினாள்; மருட்டினாள். அவன் இந்திரன் என்றறிந்த போது மன்றாடினாள். அவன் கொஞ்சமும் மனம் மாறவில்லை. அவளை அடைவதிலேயே கருத்தாக இருந்தான். நீ என்னைத் தடுத்தாலும் உன் முயற்சி வெற்றி பெறாது என்று இந்திரன் கூறக்கேட்ட அகலிகை மயக்கமுற்று விழுந்தாள்.

  இந்திரன் அகலிகையின் கற்பைக் கெடுத்தான். பொழுது விடியாமை கண்டு ஆசிரமத்திற்குத் திரும்பிய கோதமன் இந்திரன் எதிர்ப்பட்டான். இதனைத்

  தூயஅவி வவ்விஅதைத் துய்த்தோடு இழிதிருட்டு
  நாயெனவிண் வேந்துஏக நாடு அமயம்

  - (அகலிகை வெண்பா-227)

  (அவி = வேள்வியில் இடுபொருள்; வவ்வி = கவர்ந்து; துய்த்து = உண்டு, நுகர்ந்து; விண்வேந்து = இந்திரன்)

  என்று கவிஞர் குறிப்பிடுகிறார். வேள்வியில் இடும் அவிர்பாகத்தை நாயொன்று திருட்டுத்தனமாகத் திருடி உண்டுவிட்டு ஓடுவதுபோல இந்திரன் ஓடினான் என்பது இதன்பொருள்.

  விண்வேந்தனாகிய இந்திரன் பிறன்மனை நயந்த பேதைமையால் குலைந்தான்.

  உட்கு அடங்கி ஒடுங்கி. நடுநடுங்கி
  வெட்கி மெலிந்து வெளிறிஒளி - மட்கி
  உலைந்தான் ; குலைந்தான் ; உடைந்தான் ;  இடைந்தான்
  அலைந்தான் மலைந்தான் அவன்

  - (அகலிகை வெண்பா- 229)

  (உட்கி = அஞ்சி; வெட்கி = நாணமுற்று; மட்கி = மழுங்கி; மலைந்தான் = மலைப்புற்றான்)

  என்று கவிஞர் இந்திரனின் அவலநிலையைப் படம்பிடித்துக் காட்டுகிறார்.

  இந்திரன் கோதமனின் சாபத்திற்கு உள்ளானான். பெண்ணின்பம் வேண்டி அகலிகையின் கற்பைச் சூறையாடியதால் எதனை நீ விரும்பினாயோ அந்த உருவை உன் உடல் எங்கும் கொள்க எனக் கோமதன் சபித்தான். எவரும் காணாதபடி மறைந்து வாழும் அவல வாழ்விற்கு இந்திரன் ஆளானான்.

  இந்திரனின் நிலைமையை அறிந்த தேவர்கள் கோதமனைச் சந்தித்துச் சாப விடுதலை அளிக்கும்படி வேண்டினர். அவர்களின் சொல்லைச் செவிமடுத்த கோதமன் இந்திரன் உடம்பில் உள்ள பெண்குறிகளை ஆயிரம் கண்ணாக ஆகும்படி சாபவிடுதலை தந்தார்.

  இந்திரன் தேவர்களுக்கெல்லாம் தலைவனாயினும், பிறன்மனை நயந்த காரணத்தால் தாழ்வுற்றான். விலங்கினும் கேடாக நடந்து இழிவுற்றான்.

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:44:50(இந்திய நேரம்)