தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

காப்பியச் செய்தி

 • 6.6 காப்பியச் செய்தி

  அகலிகை வெண்பா, அகல்யா, வீராயி ஆகிய மூன்று குறுங்காப்பியங்களும் தரும் காப்பியச் செய்திகளை இனி நோக்குவோம்.

  6.6.1 பெண்ணியம்

  அகலிகை வெண்பாவும் அகல்யாவும், ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் பெண்களுக்குக் கேடு செய்யக்கூடாது என்பதைக் காப்பியச் செய்தியாக அறிவுறுத்துகின்றன. ‘பிறன் மனை நயத்தல்’ மாந்தனின் மாண்பினைச் சிதைத்து அவனை இழிநிலைக்கு ஆளாக்கும் என்பதைக் காப்பியம் உணர்த்துகிறது.

  அகலிகை வெண்பாவில் வரும் வானவர் கோனாகிய இந்திரன் அகலிகையைத் தன்செல்வம் என்றும், சுடர் என்றும் ஏனைய பெண்களை வடு என்றும் கருதினான். மரங்களுள் கற்பகத்தரு, ஆவினுள் காமதேனு, மணிகளுள் சிந்தாமணி என்று கூறும்படி பெண்களுள் மாசிலாமகள் அவள், அத்தகைய அவள் தனக்கு உரியவள் என்று எண்ணினான்.

  மாற்றான் மனைவி என்றும் எண்ணாமல், காட்டின் நடுவே ஆசிரமத்தில் தவமுனிவனாகிய கோதமனுக்குப் பணிவிடை புரியும் பாவை என்றும் எண்ணாமல், வஞ்சக நெஞ்சால் அவளைக் கவர நினைத்தது பெரும் பிழையாகும். மக்களையும் மன்னுயிர்களையும் வானவர்களையும் காக்க வேண்டிய இந்திரன் அபலைப் பெண்ணொருத்தியின் கற்பினைக் கெடுக்க முனைவானாயின் அவன் மன்னன் என்னும் தகுதியை இழந்து விடுகிறான். அவன் வேட்கை நிறைவேறிற்று; ஆனால் அவன் வாழ்வோ குலைந்தது. உண்மையில் இந்திரனின் வன்சொற்களைக் கேட்டு, அவனால் தன் கற்பிற்குத் தீங்கு உண்டாகும் என்பதறிந்து, மனம் தளர்ந்து மயக்கமுற்று வீழ்ந்த அகலிகையைத்தான் இந்திரன் கெடுத்தான்; உடலளவில் அவள் மாசுற்றாள்.

  இந்திரனோடு எதிர்த்துப் போராடி, முடிவில் அவனிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள வேறுவழியின்றி, மனந்தளர்ந்து மயக்கமுற்றாள். உடல் அவள் வயமில்லாத நிலையில் இந்திரன் தன் ஆசையைத் தீர்த்துக் கொண்டான். இந்திரனின் நிலை விலங்கினும் கீழானது.

  மயங்கு நிலையுற்ற மாவைப் பிறமா
  முயங்க முயலாதால் மூர்ச்சித்து . உயங்கும்
  இலங்கிழைபால் இன்பத்தை எய்தி இழிந்த
  விலங்கினும்நீ தாழ்ந்தாய் மிகுந்து

  - (அகலிகை வெண்பா-230)

  (மா= விலங்கு ; முயங்க = கூட, தழுவ ; உயங்கும் = சோரும்; இலங்குஇழை = அகலிகை)

  இந்திரன் தவறிழைத்தான். அதனால் கோதமனின் சாபத்திற்கு ஆளானான். ஆனால் எந்தக் குற்றமும் இழைக்காத அகலிகையும் கோதமனால் கல்லாகுமாறு சபிக்கப்பட்டாள். தான் கற்பழிக்கப்பட்டதை அறிந்த அகலிகை எரியில் விழுந்த புழுப்போலத் துடித்தாள்; துவண்டாள். ஆனாலும் கௌதமனின் சாபத்திற்கும் இலக்கானாள்.

  நின்னை அறியாமல் நேர்மாசு நீங்கஅதை
  உன்னி உனித்துன் புறல்தவிரத் - துன்னிஉள
  பொல்லாத வன்பழியும் போய்ஒழிய நின்மேனி
  கல்லாக என்றான் கனிந்து

  - (அகலிகை வெண்பா-238)

  (மாசு = களங்கம்; உன்னிஉனி = எண்ணி எண்ணி; துன்னிஉள = அடைந்த; கனிந்து = இரக்கம் கொண்டு, பரிவுற்று)

  கோதமன் அவளிடம் இரக்கம் கொண்டு, அவள் அறியாமல் சுமந்த களங்கம் அவளை வருத்தாதவாறு அவளைக் கல்லாகும்படி சபித்தான். ஆடையில் படியும் அழுக்கை நீக்க உவர் மண்ணைப் பயன்படுத்தல் போல உன் உடற்குற்றம் நீக்க உன்னைக் கல்லாகும்படி சபித்தேன் என்றான் கோதமன்.

  இராமனின் பாதத்தூளிபட்டு எழுந்த அகலிகை மாசுமறுவற்றவள். நான்முகனால் படைக்கப்பட்ட மாயும் உடல் மாய்ந்தது.

  இந்திரனின் அடாத செயலால் அபலைப் பெண்ணாகிய அகலிகை உற்ற துன்பம் அளப்பரியது. இந்திரனும் தான் செய்த குற்றத்திற்கு உரிய தண்டனை பெற்றான். குற்றம் செய்யாத அகலிகையும் தண்டனை பெற்றதுதான் ஆணாதிக்கச் சமுதாயத்தின் வன்மையைப் புலப்படுத்துகிறது எனலாம்.

  அகல்யா குறுங்காப்பியமும் அகலிகையின் வாழ்க்கையைத்தான் பாடுபொருள் ஆக்கியுள்ளது. அகலிகையின் கதை பெண்ணின் பெருமை பேசும் காப்பியமாகப் பாலபாரதி ச.து.சுப்பிரமணிய யோகியின் சிந்தனை வண்ணத்தில் உருவாகியுள்ளது. அகலிகை வெண்பாவிற்கும் அகல்யாவிற்கும் பெருத்த வேறுபாடில்லை. எனினும் படைப்பாளியின் உளப்பாங்கிற்கும் சமுதாய நிலைக்கும் ஏற்பக் காவியம் புதுப்புனைவு பெறும். அகல்யாவைப் பொறுத்தமட்டில் கவிஞனின் கற்பனையும் கவிதை ஆற்றலும் பழைய கதையைப் புதிய கோணத்தில் உருவாக்கியுள்ளன எனின் அது மிகையன்று.

  6.6.2 சாதியம்

  வீராயி முழுக்க முழுக்கச் சமுதாயக் காப்பியம் ஆதலின் இந்தியச் சமுதாயத்தில் வேர் விட்டிருக்கும் சாதியத்தைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளது.

  கடும் வெள்ளத்தால் வைக்கோற்போரில் ஏறி உயிர் பிழைத்த பறையர் இனத்தைச் சேர்ந்த வேடப்பனையும் வீராயியையும் சாதி இந்துக்கள் காப்பாற்ற முன்வரவில்லை. இதற்கு ஆன காரணத்தைக் கவிஞர் தமிழ்ஒளி விவரிக்கிறார்.

  பயப்பட்டார் பறையர்களைத் தொட்டெடுத்துவிட்டால்
  பார்ப்பவர்கள் என்சொல்வார் என்றொதுங்கிப் போனார்

  - (வீராயி-9)

  இத்தகைய சாதிய உணர்வுதான் அவளின் முடிவிற்கும் காரணமாயிற்று. ஆப்பிரிக்காவில் தேயிலைத் தோட்டத்தில் உடல் உழைப்பைத் தரும் ஆனந்தனின் அன்பிற்கு ஆட்பட்டாள். ஆப்பிரிக்காவில் வாழப் பிடிக்காமல் வீராயி ஆனந்தனோடு தாயகம் திரும்பினாள். மருதூரில் உள்ள தன் வீட்டிற்கு அவளை அழைத்து வந்தான்; தன் வீட்டிலேயே அவளைத் தங்க வைத்தான். புதுப்பட்டிக்காரர்கள் ஆனந்தன் தந்தை செல்லப்பக் கவுண்டரிடம் வீராயி பறைச்சி என்பதைக் கூறி வைத்தனர். பறைச்சியை வீட்டிற்குள் தங்க வைத்திருக்கும் அவனோடு உறவு கொள்வதைத் தவிர்ப்பதாகவும் கூறினர். உண்மை அறிந்த செல்லப்பக் கவுண்டர் வெகுண்டார். காதலர்களை வீட்டைவிட்டு வெளியே தள்ளினார்.

  ஒளிவிழியால் காதலினைப் பரிமாறி நின்ற
  தப்பேதும் அறியாத காதலரைச் சீறித்
  தாக்கியுமே வெளித்தள்ளி ஆர்ப்பாட்டம் செய்தார்

  - (வீராயி - 66)

  மகன் ஆனந்தன் பறைச்சியினை அழைத்து வந்ததால் மானம் போய் விட்டதாக வருந்தினார்.

  ஆனந்தனும் தந்தையின் ஆர்ப்பரிப்பையும் வசையையும் கேட்டுச் சினமுற்றான். அவளுக்கு ஆறுதல் கூறினான்.

  துடுக்கடக்கப் போகின்றேன் மேல்சாதித் திமிரை
  தூரப்போய் நீநின்று ; பயப்படவே வேண்டாம்
  நடுக்கடலில் தப்பித்தோம் இங்கென்ன மானே !
  நமக்கென்றும் சாவுண்டு ; வீணாக மாண்டு
  விடுவதிலும் போராடி உயிர்விடுதல் நன்று

  - (வீராயி - 68)

  வீராயியைத் தான் திருமணம் செய்து கொள்ளப் போவதைப் பறையறைந்து ஊரார்க்குத் தெரிவித்தான், ஆனந்தன். இச்செய்தியைக் கேட்ட செல்லப்பக் கவுண்டர் தன் குலமானம் அழிவது கண்டு,

  வேரினிலே பிடிக்கின்ற புழுவிந்தப் பையன்
  விடவேண்டாம் இருவரையும் கொல்லுங்கள்

  - (வீராயி - 71)

  என்று அடியாட்களை ஏவிவிட்டான். அவர்கள் ஆனந்தனும் வீராயியும் வாழும் குடிசையைக் கூளத்தைச் சிதைப்பதுபோல் சிதைத்தார்கள். காதலர்கள் அடியாட்களால் தாக்கப்பட்டு இறந்தனர்.

  சாதியத்தின் கொடுமைக்குக் காதலர்கள் பலியானார்கள்.

  காதலர்களின் மண உறவிற்கும் சாதி தடையாக இருக்க அதே சமயத்தில் மற்றொரு பக்கம் வன்முறைப் பாலியலில் சாதி தடையாக இல்லை. வீராயியின் அழகில் மயங்கிய புதுப்பட்டி சமீன்தார் அவளை வன்முறையாகக் கற்பழிக்க எத்தனித்தபோது சாதி தடையாக இல்லை. செல்வாக்குடையவர்களின் மனப்போக்கு சாதியின் இருப்பைத் தீர்மானிக்கிறது.

  இவ்வாறு வீராயி காப்பியத்தில் சாதியின் வன்கொடுமை காதலர்களின் இறப்பிற்குக் காரணமாக இருக்கிறது. மனிதநேயம் மறுக்கப்படுகிறது என்பதைக் காணலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 24-07-2017 13:43:59(இந்திய நேரம்)