தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

6.5 காப்பியச் சிறப்பு

 • 6.5 காப்பியச் சிறப்பு

  இப்பாடப் பகுதியில் இடம் பெற்றுள்ள அகலிகை வெண்பா, அகல்யா, வீராயி ஆகிய மூன்று குறுங்காப்பியங்களும் அடிப்படையில் பெண் மாந்தர்களைப் பற்றிய காப்பியங்களாகும். மூன்று குறுங்காப்பியங்களிலும் பெண்மையின் அவலம் சித்திரிக்கப்பட்டுள்ளது. ‘அகலிகை வெண்பா’வும் ‘அகல்யா’வும் வான்மீகி இராமாயணத்திலுள்ள அகலிகை கதையை மையப்படுத்தியுள்ளன. இவ்விரு குறுங்காப்பியங்களிலும் இருபதாம் நூற்றாண்டின் கண்ணோட்டத்தில் அகலிகை பார்க்கப்பட்டுள்ளாள். ‘வீராயி’ தமிழ்ஒளியின் புத்தம் புதுப்படைப்பு ஆகும். இதில் சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட பெண் ஒருத்தி வாழ்நாள் முழுதும் நடத்திய போராட்டம் பேசப்பட்டுள்ளது.

  மூன்று குறுங்காப்பியங்களிலுமே பெண்கள் கற்பைக் காப்பாற்றிக் கொள்ள மேற்கொண்ட போராட்டம் இடம் பெற்றுள்ளது.

  6.5.1 கற்பு : அகலிகையும் அகல்யாவும்

  அகலிகை வெண்பாவில் அகலிகை இந்திரனால் கற்பழிந்தாள். கோதமன் உருவில் வந்த இந்திரனைத் தன் கணவர் என்றே கருதி அவனை எதிரேற்றாள். அகலிகை, அவன் அவள் கையைப் பற்றிய அளவிலேயே அவன் தன் கணவன் இல்லை என்பதுணர்ந்தாள். அவன் கைப்பிடி இறுகியது. அவள் வலைப்பட்ட மயில்போலத் துடித்தாள். வந்தவன் தன் கணவன் இல்லை என்பதறிந்தாள். அவனால் கற்பழிக்கப்பட்டு வாழ்வதில் பொருள் இல்லை. விடிவதற்கு முன் இறந்துவிடுவதே நல்லது என்று எண்ணினாள். என் கணவன் உன்செயல் அறிந்தால் உன் கதி என்னாகும். அவரின் கோபத்தீக்கு ஆளாவாய். உலகமே பொசுங்கிப் போகும் என்றாள் அகலிகை. அப்போதுதான் இந்திரன் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான். அவள் தன்னைக் காதலிப்பாள் என்று எண்ணினான். ஆனால் அவன் எண்ணத்திற்கு உடன்படாமல் ‘விட்டிடு எனை, விட்டேவிடு’ என்று கெஞ்சினாள். அவன் அவள் அழகு தன்னை நோகடிப்பதாகக் கூறினான். தன் உள்ளம் முற்றும் அவள் களவுகொண்டதாகவும் களவு கொடுத்த தான் அவளைப் பற்றிக் கொண்டதில் தவறில்லையாகவும் கூறினான். தேவர்களுக்கு மன்னனாக இருப்பதை விட அவளுக்கு அடிமையாக இருப்பதாகத் தெரிவித்தான். அவள் இசையாமை கண்டு உன் கணவன் இல்லாதபோது உன்னை நான் வலிந்து இன்பந்துய்த்தால் என்னைத் தடுப்பவர் யார் என்று அச்சுறுத்தினான். இங்கு நடக்கும் நிகழ்ச்சியினை யாரும் அறிய மாட்டார்கள். நான் உன் கைப்பற்றியது நல்வினைப் பயனால் என்று அறிந்து என் விருப்பத்திற்கு இணங்கு. உன் கணவன் தான் செய்யும் தவத்தில் ஆறு ஒரு கூறு எனக்கு அளிப்பதைப் போல நீயும் எனக்கு ஒரு கூறு அளிப்பாய் என்பன முதலாகப் பல்வேறு கருத்துகளை இந்திரன் அவளுக்குக் கூறினான். அவள் எதற்கும் இணங்காதபோது அவளை வலிந்து பற்றினான். அவன் வன்மொழிகளைக் கேட்டு அவள் மயங்கி வீழ்ந்தாள். இந்திரன் தன் கருத்தை முடித்துக் கொண்டான். இந்திரன் செயலைக் கவிஞர் கீழ்வருமாறு கூறுகிறார்.

  செம்மான் தனைப்பற்றித் தின்னப் புகுந்தபுலி
  அம்மான் பதறியுணர் வற்றுறினும் - சும்மா
  தினாது விடாவாறே தேவர்கோன் அந்தோ
  தனாது கருத்தைமுடித் தான்

  - (அகலிகை வெண்பா- 224)

  (தினாது = தின்னாது; விடாவாறு = விடாதவாறு; தனாது = தன்னுடைய)

  இந்திரனோடு அவள் போராடியும் முடிவில் அவள் கற்பிழக்கலானாள்.

  அவள் இந்திரனை விரும்பி ஏற்றுக் கொள்ளாதபோது கோதமனின் சாபத்திற்கும் அவள் இலக்கானாள். குற்றம் புரிந்த இந்திரன் தன் மேனியெல்லாம் ஆயிரம் பெண்குறிகள் பெறக் கோதமனால் சபிக்கப்பட்டான். குற்றம் செய்யா அகலிகையும் கல்லாகும்படி சபிக்கப்பட்டாள்.

  அகலிகை அவன் பாதங்களில் விழுந்து வணங்கித் தனக்கு அருள் செய்ய வேண்டும் எனக் கோதமனை வேண்டினாள். இந்திரனால் உண்டான உடல்மாசைப் போக்கத்தான் கல்லாகும்படி சபித்தேன். நீ நெஞ்சில் களங்கமில்லாதவள். மயக்கமுற்ற நிலையில் நிகழ்ந்த செயலுக்கு உன்னை இகழ்வதில் பொருள் இல்லை என்று கோதமன் கூறுவதிலிருந்து அகலிகையின் உடற்கற்பு மாசுண்டது; உள்ளக் கற்பு மாசில்லாதது என்பதை அறியலாம்.

  இராமனின் பாதத்தூளிபட்டுக் கல்லுரு நீங்கி அகலிகை பெண்ணுருவானாள். அவள் தூயவள் என்பதைக் கவிஞர் பின்வருமாறு கூறுகிறார்.

  முந்தஇவள் உற்றஉரு முண்டகத்தோன் கைசமைத்து
  இந்தவுரு நின்திருத்தாள் ஈந்ததால் - அந்தஉரு
  மாசடையும் ; மாய்வுமுறும் மற்றிவ் வுருஎன்றும்
  ஆசடையும் வீவுமில தாம்.

  - (அகலிகை வெண்பா-283)

  (முண்டகத்தோன் = நான்முகன்; கைசமைத்து = உருவாக்கியது; திருத்தாள் = இராமனுடைய பாதங்கள்; மாசடையும் = குற்றப்படும்; மாய்வுறும் = அழியும்; ஆசடையும் வீவும் = குற்றப்படுதலும் அழிவுறுதலும்)

  அகலிகையின் முன்னைய உரு நான்முகனால் உண்டாக்கப்பட்டது. அவ்வுரு களங்கம் உறக் கூடியது; அழியக்கூடியது. இராமனுடைய பாதத் தூளியால் உண்டான இவ்வுரு களங்கமில்லாதது; அழியாதது.

  கற்பையிழந்த அகலிகை கணவனின் பரிவிற்கு இலக்காவதையும் இராமனின் கருணைக்கு இலக்காவதையும் அறியலாம்.

  அகல்யா

  அகல்யா என்ற குறுங்காப்பியத்திலும் கற்பு கருப்பொருளாக அமைந்துள்ளது. கௌதமனின் மனைவி அகல்யை. அவளும் இந்திரனும் விளையாட்டுத் தோழர்கள். அகல்யாவின் அழகுக் கவர்ச்சியில் மனத்தைப் பறிகொடுத்த இந்திரன் அவளை அடைய எண்ணினான். நான்முகன் வைத்த போட்டியில் தோல்வியுற்று அவளை மணக்க முடியாத இந்திரன் வஞ்சனையால் அவளை அடையத் திட்டமிட்டான். ஒரு நாள் நள்ளிரவில் கௌதமனை ஆசிரமத்தினின்றும் போக்கி, அவன் வடிவில் இந்திரன் ஆசிரமத்தினுள் நுழைந்தான். மூரல் கலையாத மோகக் கவிமகள் நாணற் பாய்மேல் உறங்கக் கண்டான் இந்திரன். தீங்கு தடுப்பார் இல்லை; தீமை புரிந்து விட்டான். அவளும்,

  என்றுமிலாப் பேராசை என்கணவர் கொண்டாரே
  இன்றுகண்டேன் பேரின்பம் யான்என்று இணங்கிவிட்டாள்

  (தமிழ்க்குமரி- ப.55)

  வெளியே சென்ற கௌதமன் தான் ஏமாற்றப்பட்டது அறிந்து ஆசிரமம் திரும்பினான். இந்திரன் பூனை என வெளியே போனான். உண்மையறிந்த கௌதமன் இந்திரன் மேனியெல்லாம் பெண்குறி ஆயிரமாகத் தீமையுறச் சபித்தான். இல்லறம் பிழைத்ததற்காகக் கல்லாகக் கிடக்கும்படி அகல்யாவிற்கும் சாபமிட்டான்.

  பல்லாண்டுகள் கழித்துக் கல்லாகக் கிடந்த அகல்யா இராமனின் பாதத்தூளி பட்டுப் பெண்ணுருப் பெற்றாள். அவள் வரலாற்றை அறிந்த இராமன் அவள் தாள்களில் விழுந்து வணங்கினான்.

  அகலிகை கல் உரு நீங்கிப் பெண் ஆதல்

  பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

  நீபிழைத்தாய் அல்லை ; நினைப்பிழைத்தார் எல்லோரும்
  ஆயிழைநீ தருமத்துக்கு அறிகுறியாய் நின்றாயே
  ஆதலினால் துன்பமுறேல் அன்னாய்

  - (தமிழ்க்குமரி- ப.58)

  என்று இராமன் கூறுவதால் அவள் பிழைபுரியவில்லை என்பதையும் உலகத்தார் அவளைப் பிழையாக உணர்ந்தனர் என்பதையும் அவள் வணங்கத்தக்கவள் என்பதையும் அறியலாம். எச்செயலும் மனம் கலந்த அளவில்தான் அதன் பயனுக்கேற்ப மதிப்புப் பெறும் என்பதை ‘அகல்யா’ குறிப்பாக வெளிப்படுத்துகிறது எனலாம்.

  இராமனும் இலக்குவனும் விசுவாமித்திரனும் அகல்யாவை உடன் அழைத்துக் கொண்டு கௌதமனைக் காணச் சென்றனர். கௌதமன் அவர்களை வரவேற்றான். எனினும் அகல்யாவைக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் அகல்யா கண்டும் காணாமல் இருந்த கௌதமனின் அடிபணிந்தாள். இக்காட்சியைக் கண்ட இராமன் கோபமுற்றான். சூழ்நிலையின் இறுக்கத்தை உணர்ந்த விசுவாமித்திரன்

  இராமனும் இலக்குவனும் விசுவாமித்திரனும்

  பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

  மதிபடைத்த கோதமனே !
  பெண்பிழைத்த தில்லை ; அவள்பிறன் பிழைக்கப்
         பிழையுற்றாள்

  - (தமிழ்க்குமரி- ப.59)

  என்பதைக் கூறி அவளை ஏற்கச் சொன்னான். முன்னரே அவள் நடந்த நிகழ்ச்சிக்குரிய தண்டனையைப் பெற்றுவிட்டாள். அப்படிப்பட்ட அவளை மேலும் துன்புறுத்துவது தகாது

  குற்றமுற்றான் வானரசன் ; குறையுற்றாள் நின்மனைவி
  உடற்குற்றம் என்றாலும் உயிர்க்குற்றம் ஆமோதான்?
  கிடக்கட்டும் ஏற்றுக்கொள் கிளிமொழியை

  - (தமிழ்க்குமரி, ப.59-60)

  என்று விசுவாமித்திரன் அகல்யாவின் சார்பாகப் பன்னிப் பன்னிப் பேசினான்; என்றாலும் கௌதமன் அவளை ஏற்க முன்வரவில்லை. கௌதமன் தன்பக்க நியாயத்தை எடுத்துரைத்தான். அவளால் இல்லறம் வசையாயிற்று. தான் செய்த பிழையைச் சாபத்தால் தீர்த்தாள். எனக்கு உண்டான பழியை என் குலத்திற்கு உண்டான பழியைத் தீர்க்கவல்லவளா? கண்ணீர் சிந்தும் அவளை நான் ஏற்றாலும் உலகோர் அவளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சிறுகுழந்தை என்றாலும் தீயைத் தீண்டினால் சுடத்தானே செய்யும். இளமைக் காலத்தில் இந்திரனைக் காதலித்தாள். அதுதான் இப்போது இழிசெயலாக விளைந்திருக்கிறது. ஆதலினால், அகலிகையை நான் ஏற்கமாட்டேன் என்று உறுதிபடக் கூறினான் கௌதமன்.

  கௌதமனின் சிந்தனைப் போக்கை அறிந்த இராமன் கோபமுற்றான். ‘யாரை நீ சொன்னாய்? பிச்சைச் சிறுதருமம் பேசலாமோ? கொடுமைக்கு ஆளானவளை மீண்டும் கொடுமைப்படுத்துவதா? வந்தது நீதான் என்று நினைத்து உனக்காகவே இப்பழியுற்றாள். பேயான நீயோ அவள் பெருமையைக் குலைத்துவிட்டாய். நெஞ்சில் வஞ்சமில்லாதவள், அவள் தேகவஞ்சம் ஏற்றாள் என்று பேசும் நீதான் பெரும்வஞ்சன். இந்திரனைக் காதலித்தாள் என்று அறிந்திருந்தும் அவளை மணந்துகொண்டாயே? விளையாட்டுத் தோழனாய் இந்திரன் இருந்தான் என்பதால் அவளுக்குக் குற்றம் கற்பிக்கிறாயே, அவளைப் பழி கூறாதே. எப்படியானாலும் ஏற்பட்ட இழிதன்மை போகாதா? இதுதான் அறமா? அவள் ஏமாந்துவிட்டாளே. அது குற்றம்தானே என்றால் முக்காலும் உணர்ந்த முனிவனாகிய நீயும் ஏமாந்தாயே. நீ போட்டியில் வஞ்சித்து வெற்றி பெற்று இந்திரனை வஞ்சித்தாய். அவன் உன்னை வஞ்சித்துவிட்டான். எந்தப் பாவமும் அறியா அகல்யா பழிகொண்டாள்' என்றான் இராமன்.

  இராமன் மேலும்,

  யார்குற்றம் நின்குற்றம் அவன்குற்றம் அறமகளின்
  சீர்குற்றம் உற்றதில்லை சினக்குற்றம் செய்தாயே

  - (தமிழ்க்குமரி- ப.62)

  (சினக்குற்றம் = கோபமாகிய குற்றம்)

  என்று கூறினான். கௌதமன் அவள் உடற்களங்கம் உற்றாள் என்றதற்கு இராமன் ‘உடற்குற்றம் எங்குவரும் உளக்குற்றம் இல்லை என்றால்’ என்று மடக்கினான். அவள் இந்திரனைக் காணவில்லை; உன்னைத்தான் கண்டாள். எண்ணத்திலும் நீதான் இருந்தாய்; உன்னைத் தழுவினாளே தவிர இந்திரனைத் தீண்டவில்லையே என்று அடுக்கடுக்காக வினாவும் விடையுமாக இராமனிடமிருந்து கேள்விக் கணைகள் புறப்பட்டன. ஒரு கட்டத்தில் இராமன் சினத்தின் சிகரத்தில் நின்று பேசினான்; 'நீ என்ன அவளை ஏற்பது; அவள்தான் உன்னை ஏற்க வேண்டும். தவளை ஒன்று பாம்பு ஏற்கும் தனிச்சிறப்புக் காண வேண்டும். ஆதலினால் அவள் அடிபணிந்து பொறுத்திட வேண்டிடு' என்று கூறினான்.

  இராமன் கூறியபடி அகல்யாவின் அடிபணியக் குனிந்த கௌதமனைத் தடுத்து, அவள் அடிதாழ அவன் அவளைத் தழுவிக் கொண்டான்.

  6.5.2 வீராயி போராட்டம்

  வீராயி குறுங்காப்பியத் தலைவி வீராயி. வாழ்க்கையில் எதிர்கொள்ளும் போராட்டங்களை இக்காப்பியம் சித்திரிக்கிறது. சமுதாய மதிப்போ பொருளாதாரப் பின்புலமோ இல்லாத ஒரு பெண்ணுக்கு ஏற்படும் அவலங்களுக்கு எல்லை இல்லை.

  மருதூர்ச்சேரி முழுதும் வெள்ளத்தில் அழிந்துவிட, வைக்கோற்போரில் ஏறி உயிர் தப்பிய வேடப்பன், வீராயி ஆகிய இருவரில் வேடப்பனும் இறந்துவிட வீராயி மயக்கமுற, அவள் பறைச்சி என்பதால் சாதி இந்துக்கள் காப்பாற்ற முன்வராதபோது பறைச்சிறுவன் வீரண்ணன் உதவியினால் அவள் காப்பாற்றப்பட்டாள். உற்றார் உறவினர் யாரும் இல்லா நிலையில் மாரி அவளுக்கு உதவினான். அவன் அவளுக்குத் தந்தையாக உதவினான். வீரண்ணன் அண்ணனாகத் துணைநின்றான்.

  வண்ணமதிபோல் வளர்ந்த அவளை வேட்டையாடப் புதுப்பட்டி சமீன்தார் எண்ணமிட்டான். அதற்கான வாய்ப்பு அவனுக்குக் கிட்டிற்று. வயலில் வேலை செய்துவிட்டு, கூலி வாங்கத் தன் வீடு வந்தவளைக் கெடுக்க முயலும்போது, வீரண்ணன் இடைப்பட்டு அவனைக் கோடரியால் தாக்கி, அவளைக் காப்பாற்றினான். வீரண்ணன் அங்கு வந்திராவிட்டால் அந்த ஏழைப் பெண்ணின் வாழ்வு அலங்கோலமாகியிருக்கும்.

  வயிற்றுப் பிழைப்பிற்காக வாழ்க்கையைத் தேடி மாரியோடு வீராயி ஆப்பிரிக்கா சென்று தேயிலைத் தோட்டத்தில் சேர்ந்து வாழ்க்கை நடத்தினாள். கங்காணியின் சொல்லை நம்பி வந்தவர்களுக்குத் தொல்லைதான் மிஞ்சியது. ‘ஓய்வு ஒழிச்சல்’ இன்றி உழைக்க வேண்டியிருந்தது. சாட்டையினால் அடியுண்டு உழைத்தனர். வீராயிக்குத் துணையாக இருந்த மாரி பாம்பு தீண்டி இறந்தான். வாழ்க்கையில் அவளுக்கென இருந்த ஓர் ஆதரவையும் அவள் இழந்தாள். தற்கொலை முயற்சியில் ஈடுபட அவளை அதிலிருந்து காப்பாற்றிய ஆனந்தனின் அன்பிற்குப் பாத்திரமானாள். ஆனந்தனும் வீராயியும் ஆப்பிரிக்காவிலிருந்து தாயகம் மீண்டனர். செல்லப்பக் கவுண்டர் மகன் ஆனந்தனும் வேடப்பன் மகள் வீராயியும் வாழ்க்கையில் இணையச் சாதி தடைவிதித்தது. சாதியத்தின் கொடுமைக்கு இருவரும் பலியானார்கள்.

  வாழ்க்கை போராட்டம் நிரம்பியது என்பதையும் சத்தியத்தைக் கடந்த மனிதநேயம் வெற்றி பெற வேண்டும் என்பதையும் வீராயியின் காப்பியச் செய்தி எடுத்துரைக்கிறது.

  6.5.3 கவிஞர் நோக்கு

  கற்பென்னும் திண்மையைப் பெண்மைக்குரிய சிறப்பாகச் சான்றோர்கள் வகுத்தனர். இந்திய இதிகாசங்களில் ஒன்றாகிய இராமாயணத்தில் அகலிகையின் வரலாற்றின் வழிக் கற்பைப் பற்றிய கணிப்புகள் வெளிப்படுகின்றன. கற்புடைமை என்பது பெண்ணிற்குரியதாகப் போற்றப்பட்டது. எக்காலத்தும் அதனை அவள் இழந்துவிடக் கூடாது. அகலிகை என்ற பெண் இந்திரனால் கற்பிழந்தாள் என்ற கதைக்கரு இருபதாம் நூற்றாண்டுக் கவிஞர்களின் கண்ணோட்டத்தில் பெற்ற பரிணாம வளர்ச்சியை ‘அகலிகை வெண்பா’வும் ‘அகல்யா’வும் விவரிக்கின்றன.

  அகலிகை வெண்பாவில் அகலிகையின் உள்ளத்தைக் கவரப் பல்வேறு கவர்ச்சி உறுதிமொழிகளை இந்திரன் கூறினும் அவற்றையெல்லாம் அகலிகை பொருட்படுத்தவில்லை. தன் கணவனையே மேலாகப் போற்றினாள். பலாத்காரமாக அவளை அடையப்போவதாக அவன் கூறியபோது மனந்தளர்ந்து மயக்கமுற்று விழுந்தாள். அவள் விருப்பமின்றியே தன் விருப்பத்தை அவன் நிறைவேற்றிக் கொண்டான். கோதமன் நடந்ததறிந்து இந்திரனையும் அகலிகையையும் சபித்தான். இராமனால் சாப நீக்கம் பெற்ற அகலிகையைக் கோதமன் ஏற்றுக் கொண்டான்.

  அகல்யாவில் பெண்ணியம் வீறுபெற்று எழுகிறது. இளம்பருவத் தோழனாகிய இந்திரன் அகல்யாவின் அன்பிற்காக ஏங்கினான்; கெஞ்சினான். அகல்யா அவன் எண்ணத்திற்கு இசையவில்லை. இந்திரன் தக்க தருணத்தில் ஆழ் உறக்கத்திலிருந்த அகல்யாவிடம் தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொண்டான். கௌதமனின் உருவில் வந்த இந்திரனைக் கௌதமனாகவே கண்டாள்; கொண்டாள். அவள் தவறு ஒன்றுமில்லை. ஆணாகிய இந்திரன் வஞ்சனைக்கு அவள் ஆளானாள்; கணவனின் வன்சொல்லுக்கும் ஆளானாள். கௌதமன் தந்த சாபத்தை அனுபவித்தும் கௌதமன் அவளை ஏற்க மறுத்தான். பெண்மையின் சார்பாக விசுவாமித்திரனும் இராமனும் கருத்துப் போர் நடத்தினர். இந்திரனால் அவள் உடல் மாசுண்டது; ஆனால் அவள் உள்ளம் மாசுற்றதில்லை. அவளை ஏற்கவேண்டும் என்ற கருத்து முன் வைக்கப்பட்டது. விடாப்பிடியாக இருந்த கௌதமனை மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டிய சூழலுக்கு அகல்யா இராமனால் தள்ளப்பட்டாள். அவன் பிழை பொறுத்து அவள் அவனை ஏற்றாள்.

  கற்பிழந்த பெண்ணிற்குக் கருணை காட்ட வேண்டுமே அன்றி அவளை மீண்டும் மீண்டும் வதைக்கக் கூடாது என்பது கவிஞர்களின் கண்ணோட்டம் எனக் கருதலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 21:44:59(இந்திய நேரம்)