தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

அகல்யா

  • 6.3 அகல்யா

    பாலபாரதி ச.து.சுப்பிரமணிய யோகியாரின் அகல்யா ஆறு பகுதிகளாக அமைந்துள்ளது. அவையாவன: ஆரம்பம், திருமணம், கற்புக்கனல், சூழ்ச்சி, மீட்சி, முடிவு என்பனவாம். கலிவெண்பா என்னும் யாப்பில் 486 அடிகளால் ஆன ஒரு சிறு காப்பியம்.

    இக்குறுங்காப்பியத்தை அறிஞர்கள் "யோகியாரின் அகல்யா ஒரு புதிய அழகிய அற்புத சிருஷ்டி" என்று உளமாரப் பாராட்டுகின்றனர்.

    ஒரு பழைய கதை கவிஞரின் கற்பனைத் திறனில் புத்தம் புதிய வடிவுடன் வெளிப்படுவதை அகல்யாவில் காணலாம்.

    6.3.1 ஆசிரியர்

    அகல்யா என்னும் குறுங்காப்பியத்தைப் படைத்தவர் பாலபாரதி ச.து.சுப்பிரமணிய யோகியார் ஆவர். அவர் 30.09.1904இல் பிறந்து, 60 ஆண்டுகள் வாழ்ந்து 23.07.1963இல் மறைந்தார். இவர் தந்தை துரைசாமி அய்யர், தாய் மீனாட்சியம்மாள். இவர் சேலம் மாவட்டம் சங்ககிரியில் பிறந்தவர்.

    இவர், நாட்டு விடுதலைப் போராட்டத்திலும் வைக்கம் போராட்டத்திலும் கலந்து கொண்டார். 1931இல் தடையுத்தரவை மீறியதற்காக எட்டுத் திங்கள் சிறையிலிடப்பட்டார். அக்காலம் அவர்க்குக் கவிதை இயற்றவும் நூல்கள் இயற்றவும் உதவியது. யோகியாரின் மகள் இராசேசுவரி, பச்சிளம் குழந்தைப் பருவத்தில் இயற்கை எய்திய துயரத்தின் பாதிப்பால் அவர் எழுதிய கண்மணி ராஜம் ஓர் அற்புதப் படைப்பு; கவிஞரின் அவலப் படைப்பு.

    யோகியார் ஆங்கிலப் புலமையும் வடமொழிப் பயிற்சியும் உடையவர். தேசியக் கவிஞர் சி.சுப்பிரமணிய பாரதியார் நமக்குத் தொழில் கவிதை; நாட்டுக்கு உழைத்தல் என வாழ்ந்தது போல யோகியார்

    போதெல்லாம் பாட்டு, பொழுதெல்லாம் சங்கீதம்
    யாதுக்கும் அஞ்சோம் ; அவனியெலாம் எம்உடைமை;
    சூதுக்கும் வஞ்சனைக்கும் சூட்சிக்கும் மாந்தர்செயும்
    வாதுக்கும் மாமருந்து யாங்கள்செயும் வண்கவிதை

    என்று வாழ்ந்து காட்டியவர்.

    6.3.2 காவிய மாந்தர்

    இனி, காவிய மாந்தர்களின் பண்புநலன்களைக் காண்போம்.

    அகல்யா

    ச.து.சுப்பிரமணிய யோகியாரின் அகல்யா ஒரு புதுமைப்படைப்பு. அவர் அகல்யாவின் அழகினை எதிர்மறைச் சொற்களால் வடித்துப் புதுக்கியுள்ளார். கலிவெண்பாவின் கவிநடையில் காப்பியம் உள்ளத்தை அள்ளிச் செல்கிறது.

    பூவாத பூங்கமலம் புரையாத மணிவிளக்கம்
    மோவாத முத்தாரம் முளையாத செங்கரும்பு
    காம்பின்றித் தன்னிலேதான் கவின்விரியும் கற்பகக்கா
    கூம்புமிருள் மொட்டிலே குமையாத மின்னல்வெள்ளம்
    குவியாத சந்திரிகை குலையாத வானநிதி
    அவியாத மீனரசி அலையாத அமுதகும்பம்

    - (தமிழ்க்குமரி - ப.39)

    (புரையாத = குற்றமில்லாத; மோவாத = முகராத; குமையாத = அழியாத; சந்திரிகை = நிலவு)

    அகல்யா நான்முகனின் மகள். அழகின் திருவுருவாகப் படைக்கப்பட்டவள். ச.து.சுப்பிரமணிய யோகியார் அகல்யாவின் அழகை வடித்துத் தரும் அழகே, அழகு. அவ்வழகினை

    அன்னையிலாக் கன்னிகையே யாருனக்கு யௌவனம்எனும்
    புன்னகையைத் தந்தானே, புதுவயிரப் பெட்டகமே!
    நள்ளிரவில் கனவாகி நாளோடும் பூத்தவளே!
    தெள்ளியதோர் தேன்வடிவே, தெய்விகமாம் பேரழகே!
    யாகக்கனற் கனவே, அருமறைக்கு நாயகியே
    போகத்துப் பூங்கனவே, போதத்து அகலிகையே

    - (தமிழ்க்குமரி - ப.40)

    (யாகக் கனல் = வேள்வித்தீ; அருமறை = அரிய வேதங்கள்; போகம் = இன்பம்; போதம் = அறிவு)

    என்று போற்றுகிறார் கவிஞர்.

    இந்த அழகே கௌதமனையும் இந்திரனையும் அகல்யாவின்பால் ஈர்க்கக் காரணமாயிற்று. நான்முகன் வைத்த போட்டியில் அவளை அடையும் வெறியில் இருவரும் கலந்து கொண்டனர். உலகை முதலில் சுற்றிவருபவனுக்குத தன் மகளை மணம் செய்து வைப்பதாக அவள் தந்தை நிபந்தனை விதித்தான். இந்திரன் வானவில்லில் சிறகுகள் அமைத்து வட்டமதியைத் தட்டாகக் கொண்டு வால்மீன்களைக் குதிரைகளாகப் பூட்டி மேகத்தேரில் மின்னல் வேகத்தில் மண்ணுலகையும் விண்ணுலகையும் சுற்றி வந்தான். கௌதமன் அண்டங்கள் அனைத்தும் ஆவின் உள்ளே அடங்கிக் கிடப்பதறிந்து அதனையே முதலில் சுற்றி வந்து வெற்றி பெற்றான். கௌதமனுக்கு அகலிகை மனைவியானாள்.

    அகலிகை கௌதமனை மணந்து கொண்டதால் வாழ்க்கையில் பெரும் சரிவை அவள் எதிர்கொண்டாள். காலைக் கதிரவன் போலும் ஒளிவீசும் பொன்மலையில் வாழ்ந்த அகலிகை ஓலைக்குடிசையில் வாழ நேர்ந்தது. கற்பகச் சோலை நிழலிலே கண்ணயர்ந்த அகலிகை பச்சைமரச் சோலையிலே கண்ணயர நேர்ந்தது. எனினும் அவள் முகத்தில் ஏமாற்றத்தின் அடையாளம் இல்லை. மாறாக அமைதி தவழ்ந்தது அவள் முகத்தில்.

    அகல்யாவை மணக்க முடியாமல் ஏமாற்றமடைந்த இந்திரன் அந்தரத்தில் ஆடும் பம்பரம் போல ஆடி அயர்ந்து விட்டான். அவன் அவள் நினைவாகவே பித்தேறிக் காணப்பட்டான். நீராடப் போகும் அகல்யாவைக் கண்ட இந்திரன் உள்ளத்தில் வெறி கொண்டான். அவன் நிலையைக் கவிஞர் பின்வரும் கண்ணிகளில் ஓவியமாக்கியுள்ளார்.

    மத்துருட்டும் தயிரென்ன மனதுருட்டும் காமத்தீ
    பித்துருட்டும் பேயாட்டப் பெருஞ்சூறை ஆனதுவே
    தானுண்ணும் காதல்தனை யுண்ண வானரசன்
    தேனுண்ணும் ஈப்போலத் தயங்கித் திகைத்தானே
    போதக் கனற்சுடராம் புதுமைக் கவிமலர்நின்
    காதல் விளக்கணையும் காமவிட்டில் போலவந்தான்

    - (தமிழ்க்குமரி - ப.48)

    இளம்பருவத்தில் அகல்யாவும் இந்திரனும் ஒருவருக்கொருவர் காதலித்தனர். ஆனால் அவர்கள் காதல் இன்பத்தைத் துய்த்ததில்லை. கௌதமனின் வஞ்சகத்தால் இந்திரன் அகல்யாவைப் பெற முடியாமற் போயிற்று. ஆனாலும் இந்திரன் அவளை அடைய எண்ணினான். இந்திரன் தன் எண்ணத்தை வெளிப்படுத்தினான்.

    மற்றொருவன் தாரம் நீ, ஆனாலும் வானரம்கைப்
    பற்றுமலர் மாலை பறித்தணைத்தல் பாவமுண்டோ?

    - (தமிழ்க்குமரி - ப.49)

    என்று தன் நியாயத்தை உரைக்கும் இந்திரன் அவளிடம் கெஞ்சினான்.

    போனவஞ்சம் போகட்டும் ; புதுவஞ்சம் வேண்டா
    ஏழைஎன்னைக் காப்பாயோ? தேவியுன்னை வேண்டுகிறேன்

    - (தமிழ்க்குமரி - ப.50)

    இந்திரன் அவள் காதல் மயக்கத்தில் வீழ்ந்தான். அவளிடம் உயிர்ப்பிச்சை வேண்டினான்.

    அவன் பேசப்பேச அமைதி குலைந்து அவனை உற்று விழித்தாள் அகல்யா; வெகுண்டாள்.

    யாரைநீ சொன்னாய்? அடகெடுவாய் மதியிலாய்
    வேரை அறியாதே வெற்றிலையை வேட்கின்றாய்?
    கற்புக் கனல்நான் ; காமச்சிறு புழுநீ
    அற்பம்நீ என்பால் அன்புரைக்க வந்தாயோ?

    - (தமிழ்க்குமரி, ப.50-51)

    தன்பால் காதல்மொழி பேசிக் காதலைப் புதுப்பிக்க வந்த இந்திரனைக் ‘காமச்சிறு புழு’ என்றும், ‘அற்பம்’ என்றும் அகல்யா சாடினாள். கௌதமனின் மனையாட்டியாகிய தன்னை வைப்பாட்டியாகக் கருதினானே என்று சினந்தாள். உயிர்ப்பிச்சை கேட்கும் இந்திரனை நோக்கிக் கற்புக்கு உயிர்ப்பிச்சை யார் தருவார்? வெட்கமில்லாதவனே, விண்ணுக்கு அரசனா நீ? காமப் புண்ணுக்கு அல்லவா அரசனாக இருக்கிறாய். தேவர்க்குத் தேவனே, தீமைக்கு அரசன் நீ என்று அவள் இடித்துக் கூறினாள். அவள் கடுமொழி கேட்டு இந்திரன் தலைகவிழ்ந்தான். அறிவு தடுத்தும் ஆசை உடைத்துச் செல்ல முடிவில் ‘தொடுவான்போல் ஆனாலும் தொடுவேன் அவளை’ என்றான்.

    ஒருநாள் இரண்டாம் யாமத்தில் இந்திரன் சேவற்கோழி போலக் குரலெழுப்பினான். அந்தக் குரலைக் கேட்ட முனிவன் சந்தி செய்யப் புறப்பட்டான். முனிவன் உருவில் இந்திரன் குடிசைக்குள்ளே புகுந்தான். முகத்தில் புன்னகை தவழ அகல்யா நாணற்பாய்மேல் உறங்கக் கண்டான், இந்திரன்.

    ஆங்கவளைக் கண்டான் ; அழகுண்டான், கொண்டான்
    தீங்குதடுப் பாரில்லை; தீமைபுரிந்து விட்டான்

    - (தமிழ்க்குமரி- ப.55)

    இந்திரன் அகல்யாவிடம் தன் இச்சையைத் தீர்த்துக் கொண்டான்.

    அகல்யா உறக்கநிலையில் தன்னோடு கூடி மகிழ்ந்தவன் தன் கணவனே எனக் கருதினாள்.

    என்றுமில்லாப் பேராசை என்கணவர் கொண்டாரே
    இன்றுகண்டேன் பேரின்பம் யானென்று இணங்கிவிட்டாள்

    - (தமிழ்க்குமரி- ப.55)

    இந்திரன் ஆசிரமத்திலிருந்து பூனைபோல வெளிப்பட்டுச் செல்வதைக் கண்ட கௌதமன், இந்திரன் மேனியெங்கும் பெண்குறி ஆயிரமாக ஆகும்படி சாபமிட்டான். அகல்யாவும் கௌதமனின் சாபத்திற்கு ஆளானாள். இல்லற நெறியினைக் காக்கத் தவறியதற்காக அவள் கல்லாகும்படி சபிக்கப்பட்டாள். அகல்யா அவனிடம் கழுவாய் வேண்டினாள். இராமனுடைய பாதத்தூளி உன்மீது படும்போது சாபம் நீங்கும் என்று அகல்யாவிற்குக் கௌதமன் சாபவிடுதலையும் தந்தான். அகல்யா கணவனின் சாபத்தின்படி கல்லானாள்.

    கௌதமன்

    பல்லாண்டுகள் கழிந்தன. இராமனும் இலக்குமனும் விசுவாமித்திரனோடு மிதிலைக்குப் போகும் வழியில் புல்வெளியில் கல்லாய்க் கிடந்த அகல்யா, இராமனின் பாதத்தூளி பட்டுப் பெண்ணானாள். இராமன் அகல்யா தவறிழைக்கவில்லை என்றும் பிறர் அவளைத் தவறாகக் கருதினார்கள் என்றும் கூறினான்.

    நீபிழைத்தாய் அல்லை நினைப்பிழைத்தார் எல்லோரும்
    ஆயிழைநீ தருமத்துக்கு அறிகுறியாய் நின்றாயே
    ஆதலினால் துன்பமுறேல் அன்னாய்

    (தமிழ்க்குமரி, ப.58)

    (பிழைத்தாய் அல்லை = பிழைபுரிந்தாய் இல்லை; நினைப்பிழைத்தார் = உன்னைத் தவறாகப் புரிந்து கொண்டனர்; ஆயிழை = தேர்ந்தெடுத்த அணிகலன்களை அணிந்தவளே; துன்பமுறேல் = வருந்தாதே)

    ச.து.சு.யோகியாரின் கௌதமன், தன்மானமும் குலமானமும் போற்றுபவன். அகல்யாவின் கணவன்; அகல்யாவைப் போட்டியில் வென்று மனைவியாக்கிக் கொண்டான். இந்திரனின் காம இச்சைக்கு அறியாமல் அகல்யா பலியானதை அறிந்து அவளைக் கல்லாகச் சபித்தான். இந்திரன் ஆயிரம் பெண்குறிகள் மேனியெல்லாம் பெறச் சபித்தான். கல்லான அகல்யா இராமனின் பாதத்துளி பட்டுப் பெண்ணான போது விசுவாமித்திரன் கூறியும் இராமன் கூறியும் அவளை ஏற்றுக் கொள்ள மறுத்தான்.

    அகல்யாவைக் கௌதமன் ஏற்க மறுத்ததால் இராமன் கோபமுற்றான். சூழ்நிலை இறுக்கமாவது கண்டு விசுவாமித்திரன் கௌதமனிடம் தன்கருத்தைக் கூறினான். இந்திரன் பிழைசெய்தானே அன்றி இவள் பிழைசெய்யவில்லை; மனக்குற்றமில்லாதவள்; உன் மனைவியை ஒதுக்கி வைத்தால் உண்டாகும் பழியிலிருந்து நீ தப்ப முடியாது. நீ இட்ட சாபத்தை அவள் ஏற்றுக் கழித்தாள். அவளை ஏற்றுக்கொள்ளாமல் பின்னரும் கொடுமை செய்வது அறமன்று. இந்திரன் குற்றம் செய்தான்; அவனாலே அகல்யா குறையுற்றாள். நிகழ்ந்தது உடற்குற்றமே அன்றி உயிர்க்குற்றம் ஆகாது. அவளை ஏற்றுக்கொள் என்றான்.

    விசுவாமித்திரன் எவ்வளவு கூறியும் கௌதமன் ஏற்கவில்லை. தனக்கும் தன் குலத்திற்கும் பழியை உண்டாக்கிய அவளின் கண்ணீரைக் கண்டு நான் இரக்கமுற்று அவளை ஏற்றுக்கொண்டாலும் உலகத்தார் அவளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றான். மேலும் கௌதமன்

    வஞ்சமகள் வாலிபத்தில் வானரசைக் காதலித்தாள்
    அப்போதைக் காதலன்றே இப்போது இப்பிழையாக
    எப்போதும் இழிந்தவளாய் எளிமையுறச் செய்ததுவே
    ஆதலினால் அகலிகையை யான்ஏற்கேன்

    (தமிழ்க்குமரி, ப.60-61)

    (அப்போதைக்கு = அப்போது; அந்தப் போதைக் காதல் = காதல் மயக்கம்)

    என்று முடிவாகக் கூறினான்.

    கௌதமன் கூறியதைக் கேட்ட இராமன் காட்டமாக அவனைச் சாடினான். கொடுமைக்கு ஆளானவளை மீண்டும் கொடுமைப்படுத்துவதா? வந்தது நீதான் என நினைத்து இப்பழிக்கு ஆளானாள். பேயான நீ அவள் பெருமையைக் குலைத்துவிட்டாய். இந்திரனை அவள் காதலித்தாள் என்று தெரிந்திருந்தும் அவளை மணந்து கொண்டது ஏன்? விளையாட்டுத் தோழனாய் இருந்தான் இந்திரன். அந்த உறவில் தவறு காண்பது பிழையாகும். மனம் குற்றப்பட்டால்தான் உடல் குற்றப்படும். வெளியே புறப்பட்டுச் சென்ற கணவன் திரும்பி வந்ததாகவே அவள் கருதினாள்.

    கண்ணால் உனைக்கண்டாள் ; வானரசைக் காணவில்லை
    எண்ணத்து உனைஏற்றாள் ; வானரசை ஏற்கவில்லை
    தேகத்தால் நினைத்தழுவும் வானரசைத் தீண்டவில்லை

    (தமிழ்க்குமரி - ப.63)

    என்றெல்லாம் அவள் மாசுமறுவற்ற தன்மையை எடுத்துக் கூறிவரும் இராமன் ஒரு கட்டத்தில் மனம் கொதிப்பேறினான்.

    நீ ஏற்க மாட்டாயோ? நினைஏற்கச் சொன்னதுயார்?
    தீயேற்குமோ வேள்விச் சிதைஈரம் புகைதந்தால்?
    அவள்உன்னை ஏற்பாளேல் ; அதுவன்றோ பெருந்தன்மை
    தவளை ஒன்றுபாம் பேற்கும் தனிச்சிறப்புக் காண்போமே !

    (தமிழ்க்குமரி - ப.63)

    என்று கூறியவன் கௌதமனை அவள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கச் சொன்னான். அவ்வாறே அவள் காலில் அவன் விழும்போது அவனை விழாமல் மேலெடுத்து அவள் தாழ்ந்தாள். அவ்வாறு அவள் தாழாமுன் கௌதமன் அவளை எடுத்துத் தழுவிக் கொண்டான்.

    அகல்யா இந்திரனின் காம இச்சைக்குப் பலி ஆனாலும் உள்ளத்தாலும் உடலாலும் குற்றம் இல்லாதவள் என்பது பெறப்படுகிறது.

    இந்திரன்

    அகல்யா’வில் வரும் இந்திரன் இளமைக் காலந்தொட்டு அகல்யாவை அறிந்தவன். அகல்யாவின் விளையாட்டுத் தோழன். நான்முகன் வைத்த போட்டியில் இந்திரன் தோல்வியுற்றான். போட்டியில் கௌதமன் வென்றான். அதனால் அகல்யா அவன் மனைவியானாள். அகல்யாவின் அழகால் கவரப்பட்டு அவளை அடைய முனைந்தான். தன் காம இச்சையை அவளிடம் வெளிப்படுத்தியும் அவள் அவன் கருத்திற்கு இசையவில்லை. நள்ளிரவில் கௌதமனின் ஆசிரமத்தை அடைந்து சேவற்கோழி போலக் குரல் காட்ட, வைகறைப் பொழுது வந்தது எனக் கருதிக் கௌதமன் ஆசிரமத்தை விட்டு வெளியேறினான். இந்திரன் கௌதமன் உருவில் உறக்கத்தில் இருந்த அவள் உடலில் கலந்தான். ‘இன்று கண்டேன் பேரின்பம்’ என்று அகல்யாவும் இணங்கிவிட்டாள். சதி நடந்திருப்பதை உணர்ந்த கௌதமன் உடன் ஆசிரமம் திரும்பினான். இந்திரன் பூனை போலப் பதுங்கிச் சென்றான். நடந்த நிகழ்ச்சிக்குக் காரணம் இந்திரன் என்பது அறிந்த கௌதமன் அவன் மேனியெல்லாம் பெண்குறி உண்டாகச் சபித்தான். இந்திரன் குன்றிப் போனான்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 24-07-2017 13:29:45(இந்திய நேரம்)