தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வீராயி

 • 6.4 வீராயி

  கவிஞர் தமிழ்ஒளியின் காப்பியம் வீராயி. சிதைந்த சேரி, வீராயி தப்பினாள், நிலைபெற்ற உறவு, வாழ்வில் இடி, அண்ணன் எங்கேடி, கொலைகாரன், மன்றினில் வீரன், சிதறிய குடும்பம், தேயிலைத் தோட்டத்திலே, மாரி இறந்தான், காதலன் கிடைத்தான், கண்ணீர் வெள்ளம், கப்பல் ஏறினர், மங்கையுடன் வந்தான், பறைச்சியா?, பயப்படாதே, புரட்சி மணம், நாடு செய்த தீமை, முடிந்தது வாழ்வு ஆகிய உட்பிரிவுகளால் ஆனது.

  இக்காப்பியத்தில் எண்சீர் ஆசிரிய விருத்தங்களும் ஆறுசீர் ஆசிரிய விருத்தங்களும் சிந்துப்பாக்களும் கலிவெண்பாவும் ஆசிரியமும் விரவி வந்துள்ளன.

  6.4.1 ஆசிரியர்

  கவிஞர் தமிழ்ஒளி 1924ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் நாள் பிறந்து, 1965ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 29ஆம் நாள் 40 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்தார். தந்தை பொ.சின்னையா, தாய் செங்கேணியம்மாள். தலைமகன் ஆனதால் தன் தாயின் தாய் வீட்டில் (பாட்டி வீட்டில்) குறிஞ்சிப் பாடியை அடுத்த ஆடூரில் பிறந்தார். கவிஞரின் இயற்பெயர் விஜயரங்கம். பெற்றோர் செல்லமாக அழைத்த பெயர் பட்டுராசு. கவிஞர் அவராகச் சூட்டிக் கொண்ட தமிழ்ஒளி என்ற பெயர் அவரைப் புரட்சிப் பாவலராக அடையாளப்படுத்தியது.

  கவிஞர் தமிழ்ஒளி புதுவைக் கல்வே கல்லூரியிலும் கரந்தைத் தமிழ்க் கல்லூரியிலும் பயின்றவர். புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் அன்பிற்கு ஆட்பட்டவர்.

  தமிழ் இதழ்களில் பணியாற்றிச் சிறந்த இதழாளராகவும் தமிழ்ஒளி திகழ்ந்தார். அவ்வகையில் குறிப்பிடத்தக்க இதழ்கள் முன்னணியும் ஜனயுகமும் ஆகும்.

  கவிஞர் தமிழ்ஒளி பன்முகப் படைப்பாளியாகவும் கவிஞராகவும் விளங்குகிறார். அவரின் காவியப் படைப்புகள் கவிஞனின் காதல், நிலைபெற்ற நிலை, வீராயி, மேதின ரோஜா, விதியோ வீணையோ?, மாதவி காவியம், கண்ணப்பன் கிளிகள், புத்தர் பிறந்தார், கோசலைக்குமரி ஆகியனவாம்.

  கவிஞர் தமிழ்ஒளியின் கவிதைத் தொகுப்புக்களான தமிழ்ஒளியின் கவிதைகள், மக்கள் கவிதைகள் ஆகியவை குறிப்பிடத்தக்கனவாம். குழந்தைக்கான பாடு பாப்பா என்ற கவிதைத் தொகுப்பும் அவருடையதாகும்.

  கவிஞர் தமிழ்ஒளியின் சிலப்பதிகாரம் நாடகமா? காவியமா?, திருக்குறளும் கடவுளும், தமிழும் சமஸ்கிருதமும், தமிழ்ச் சமுதாயம் ஆகிய கட்டுரைகளும் சிறந்த படைப்புகளாகும்.

  கவிஞர் தமிழ்ஒளி சிறுகதை படைப்பதிலும் தம் பங்களிப்பைச் செய்துள்ளார். அவையாவன அறிவூட்டும் 100 அற்புதக் கதைகள், குருவிப்பட்டி, உயிரோவியங்கள் என்பன. மாமாவின் சாகசம் என்ற குறுநாவலையும் படைத்துள்ளார்.

  தமிழ்ஒளி நாடகங்களாகக் கவிஞர் விழா, சிற்பியின் கனவு ஆகியவற்றைத் தீட்டியுள்ளார்.

  முதலில் திராவிட இயக்கத்திலும், அடுத்துப் பொதுவுடைமை இயக்கத்திலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு பணியாற்றிவர் கவிஞர் தமிழ் ஒளி.

  6.4.2 காவிய மாந்தர்

  இனி, காவிய மாந்தரைப் பற்றிக் காணலாம்.

  வீராயி

  கவிஞர் தமிழ்ஒளியின் வீராயி காப்பியத்தலைவி. காப்பியத் தொடக்கத்திலிருந்து முடிவு வரை துன்பமும் துயரமும் சூழ வாழ்ந்து முடிந்தாள். பிற கதைமாந்தர் அனைவரும் அவளது துன்பத்துக்குக் காரணமாகவோ அல்லது துன்பம் துடைப்பவர்களாகவோ உருவாக்கப்பட்டிருக்கின்றனர்.

  மருதூரைச் சேர்ந்தவர்கள் வேடப்பனும் அவன் மகள் வீராயியும். வெள்ளத்தால் மருதூர்ச்சேரி அழிந்தது. வைக்கோற் போரில் ஏறி வேடப்பனும் வீராயியும் உயிர் பிழைத்தனர். வைக்கோற் போர் பயணத்தில் வேடப்பன் இறந்தான். வீராயி ஆதரவு அற்றவள் ஆனாள். அச்சூழலில் அவளுக்கு ஆதரவாக மாரியும் அவன் மகன் வீரண்ணனும் இருந்தனர்.

  பருவவானில் வண்ணமதிபோல் வீராயி வளர்ந்தாள். அவள் அழகில் புதுப்பட்டி சமீன்தார் உள்ளம் இழந்தான். செய்த வேலைக்குக் கூலி வாங்கச் சென்றவிடத்தில் முரட்டுக் குணமும் காமமும் மதுக்குடியும் உடைய சமீன்தாரின் காம வேட்டைக்குப் பலியாக இருந்த அவள் வீரண்ணனால் காப்பாற்றப்பட்டாள். சமீன்தார் வீரண்ணனின் கோடரிக்கு இரையானான்.

  வீரண்ணன் தக்க சமயத்தில் வந்து காப்பாற்றி இராவிடில் அவள் சமீன்தாரின் காம இச்சைக்கு இரையாகி இருப்பாள்.

  வீரண்ணனுக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டதை அறிந்து வீராயி துன்பமுற்றாள்; துடித்தாள். அடிபட்ட மானாக, ஒடிபட்ட கிளையாக, தழலில் பட்ட தளிராக, பெரும்பாம்பின் வாயில் அகப்பட்ட தவளையாக என்றெல்லாம் அவள் துயரம் பேசப்பட்டுள்ளதால் அவள் உற்ற துயரின் ஆழம் புலப்படுகிறது.

  ஆதரவற்ற வீராயி மாரியுடன் பல இடங்களில் சுற்றித் திரிந்தாள். அவர்களை அன்புடன் ஆதரித்து உணவிடுவார் எவருமிலர். சொந்த நாட்டில் வாழ வழியின்றி உயிர் வாழ்வதை விடக் கடல்தாண்டி உழைத்துப் பிழைக்க எண்ணினாள். ‘சுமையற்ற தொழிலும் சுகமான சம்பளமும்’ கிடைக்கும் என்ற கங்காணியின் சொல்லை நம்பி ஆப்பிரிக்காவிற்குக் கப்பலில் புறப்பட்டனர் வீராயியும் மாரியும்.

  ஆப்பிரிக்கா நாட்டில், முதலாளி ஒருவனிடம் வீராயியையும் மாரியையும் கங்காணி விலைபேசி விற்றுவிட்டான். அவர்கள் அங்குத் தேயிலைத் தோட்டத்தில் உழைத்தார்கள். வெள்ளை முதலாளி சவுக்கால் அவர்களை அடித்து விரட்டி வேலை வாங்கினான். வீராயியின் வாழ்க்கை கண்ணீரும் கம்பலையுமாய்க் கழிந்தது.

  மாரியின் அன்பிலும் ஆதரவிலும் ஓரளவு ஆறுதல் கொண்ட வீராயி மற்றும் ஒருமுறை அனாதை ஆனாள். மாரி பாம்பு தீண்டி இறந்தான். அவள் துன்பத்திற்கு ஆளானாள்.

  அண்ணன் இறந்தவுடன் - என்
  ஆவி துறந்திருப்பேன்
  புண்ணியத் தந்தையினால் - அதைப்
  பொறுத்துக் கொண்டிருந்தேன்
  கண்இரண் டில்லைஇன்று - பினர்
  காட்சியும் தப்பிடுமோ?
  மண்ணில் உயிர்விடுவேன் - என
  மங்கை துணிந்துவிட்டாள்

  - (வீராயி, ப.57)

  (அண்ணன் = மாரியின் மகன் வீரண்ணன்; புண்ணியத் தந்தை = வீரண்ணனின் தந்தை; காட்சியும் தப்பிடுமோ = காட்சி கிடைத்திடுமோ)

  வீராயி, தன் இடையில் செருகி வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்துத் தன் நெஞ்சில் பாய்த்திட எத்தனித்தபோது ஆனந்தன் என்னும் மற்றொரு தேயிலைத் தோட்டத் தொழிலாளி அவளைத் தடுத்தான். அவன் ‘நாளை கழிந்துவிட்டால் நம் நாட்டிற்குச் சென்றிடலாம்’ எனக் கூறினான். ஆனால் அவளோ தன்னை மாய்த்துக் கொள்வதிலேயே கருத்தாக இருந்தாள். ‘என்னைக் கொன்ற பின்னர் உன்னையும் மாய்த்துக்கொள்’ என்று அவள் இருகால்களையும் பற்றிக் கொண்டான். அவள் சட்டெனக் குனிந்து அவன் கைகளை நீக்கிவிட்டு

  கெட்ட உலகினிலே - உம்
  கேண்மை சிறப்புடைத்தாம் !
  தட்டிடேன் உங்கள்சொலை - இது
  சத்தியம் என்றுரைத்தாள்.

  - (வீராயி- ப.60)

  வீராயி சாகும் எண்ணத்தை விட்டாள்.

  முதலாளியின் கொடிய கண்களில் ஆனந்தனும் வீராயியும் அகப்பட்டுக் கொண்டனர். முதலாளி ஆனந்தனைச் சாட்டையால் அடித்தான். மேலும் அவன் தன் ஆட்களை வரச் செய்து ஆனந்தனைச் சிறையில் இடச் செய்தான். வீராயி வேலையை இழந்தாள். சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஆனந்தன் அவளைத் தேடினான், முடிவில் அவளைக் கண்டான்.

  தேடிய செல்வம் புழுதியில் - விழுந்து
  எதிரில் கிடப்பதைக் கண்டதும்
  ஓடி எடுத்து

  - (வீராயி- ப.63)

  அவள் மேனியில் விழி ஒட்டி நின்றான். முதலாளி தன் கற்பைக் குலைக்க முனைந்ததையும் கூறிக் கதறினாள்.

  ஆப்பிரிக்காவிலிருந்து தாயகம் புறப்படும் கப்பலில் ஆனந்தன் வீராயியை அழைத்துக் கொண்டு தன் ஊராகிய மருதூர்க்கு வந்தான். வீராயி ஆனந்தனோடு அவன் வீட்டில் இருந்தாள்.

  புதுப்பட்டிக்காரர்கள் வீராயி மாரியின் மகள் என்றும் பறைச்சி என்றும் ஆனந்தனின் தந்தை செல்லப்பக் கவுண்டரிடம் கூறினர். அவரும் சாதியிலே தன்னை ஒதுக்கி வைத்துவிடுவார்கள் என்ற அச்சம் கொண்டார். மகனையும் வீராயியையும் வசை பாடினார். மனைவிக்கும் எச்சரிக்கை விடுத்தார்.

  தொலையட்டும் கழுதையது பறைக்குட்டி யோடு !
  துளியேனும் இடங்கொடுத்தால் உன்கழுத்து துண்டு

  - (வீராயி- ப.67)

  வீராயியை ஆனந்தன் திருமணம் புரிந்து கொள்ள முடிவு செய்தான். கவுண்டருக்கும் பறைச்சிக்கும் திருமணம் என்ற செய்தி பரவியது. செய்தி கேட்ட கவுண்டர்,

  வேரினிலே பிடிக்கின்ற புழுஇந்தப் பையன்
  விடவேண்டாம் இருவரையும் கொல்லுங்கள்

  - (வீராயி- ப.71)

  என்று தன் அடியாட்களுக்கு ஆணை இட்டார். அவர்கள் குடிசையைச் சூழ்ந்து கொண்டு சிதைத்தார்கள். ஆனந்தன் அஞ்சாமல் வீராயியை அணைத்த வண்ணம் நின்றான். குண்டர்களின் கொடுந்தாக்குதலுக்கு ஆளான வீராயியும் ஆனந்தனும் உயிர் துறந்தனர்.

  தாழ்ந்த குலத்தில் பிறந்த வீராயி துன்பங்களை வாழ்நாள் முழுதும் எதிர் கொண்டாள். தன் கற்பைக் காத்துக்கொள்ளக் கடுமையாகப் போராடினாள். ஆனால் வாழ்க்கைப் போராட்டத்தில் இறப்பைத் தழுவிக் கொண்டாள்.


  தன்மதிப்பீடு : வினாக்கள் - I

  1.

  அகலிகை வெண்பா ஆசிரியர் யார்? அவரைப் பற்றிய குறிப்புகளைத் தருக.

  2.

  தமிழ்ஒளி இயற்றிய நூல்கள் சிலவற்றைக் குறிப்பிடுக.

  3.

  அகலிகை வெண்பாவில் அகலிகையின் அழகு எங்ஙனம் புனையப்பட்டுள்ளது?

  4.

  ‘அகல்யா’வில் வரும் கௌதமன் அகல்யாவை ஏற்றுக் கொள்ள மறுத்த காரணம் யாது?

  5.

  ‘வீராயி’ புலப்படுத்தும் காவியத்தளம் யாது?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 24-07-2017 13:37:57(இந்திய நேரம்)