தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- பழந்தமிழகப் புவியியல் கூறுகள்

  • 3.3 பழந்தமிழகப் புவியியல் கூறுகள்

    இன்றைய தமிழகம் பண்டைய தமிழகத்தை விடப் பரப்பளவில் குறைந்தே காணப்படுகிறது. இது இந்தியாவின் தென்கிழக்கு மூலையிலே உள்ளது. வரலாற்றுக்கு முந்தைய தமிழகம் இன்றைய கேரளம், ஈழம் (இலங்கை) ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது. இதுவே கலாச்சார வட்டத்தில் இணைந்திருந்தது.

    3.3.1 புவியியல் அமைப்பு

    பொதுவாகத் தமிழகத்தின் புவியியல் அமைப்புகளை உற்று நோக்கும்போது தோற்ற அமைப்பில் இது தலைகீழாக அமைந்த முக்கோணம் போலவே காட்சியளிக்கிறது. தரைத் தோற்ற அமைப்பிலும் பொதுவாகக் கிழக்கே சரிந்துதான் உள்ளது. வட இந்தியாவில் உள்ளது போன்று மிக உயர்ந்த மலைகளோ, மிக நீண்ட ஆறுகளோ, தார்ப்பாலைவனம் போல் அகன்ற மணற்பாலை நிலங்களோ இல்லாத ஒரு பகுதியாகவே தமிழகம் விளங்குகிறது. இது நிலநடுக் கோட்டின் வடக்கில் வெப்ப மண்டலத்தில் அமைந்திருப்பதாலும், மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டிருப்பதாலும், கடலிலிருந்து பருவக்காற்று வீசுவதாலும் சம தட்பவெப்ப நிலையை உடையதாக விளங்குகிறது.

    பழந்தமிழர் ஓர் ஆண்டின் காலநிலையை ஆறு பிரிவுகளாகப் பிரித்துப் பார்த்தனர். இவை முறையே கார்காலம், கூதிர்காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம், இளவேனிற் காலம், முதுவேனிற் காலம் ஆகும்.

    தமிழகத்திலுள்ள மலைத் தொடர்கள், குன்றுகள், காடுகள், ஆறுகள் ஆகியன இந்நிலப்பகுதியைப் பல்வேறு கூறுகளாகப் பிரித்துள்ளன. இதனையே சங்க இலக்கியங்களில் வரும் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம் போன்ற நிலப்பிரிவுகள் உணர்த்துகின்றன. இப்பிரிவுகளைத் திருத்தொண்டர் புராணம் பின்வரும் பாடலில் விளக்கிக் கூறுகிறது.

    தா இல் செம்மணி அருவியாறு இழிவன சாரல் ;
    பூவில் வண்டினம் புதுநறவு அருந்துவ புறவம் ;
    வாவி நீள் கயல் வரம்பு இற உகைப்பன மருதம் ;
    நீவி நித்திலம் பரத்தியர் உணக்குவ நெய்தல்.

    (திருத்தொண்டர் புராணம், 1083)

    (சாரல்=மலைப்பகுதி; நறவு=தேன்; புறவம்=காடு; வாவி=குளம்; நித்திலம்=முத்து; பரத்தியர்=மீனவ மகளிர்; உணக்குதல்=உலர்த்துதல்)

    இவ்வாறு பிரித்துக் கூறப்பட்ட நிலப்பகுதிகள் ஒவ்வொன்றும் தனித்தனி உலகமாகவே இலக்கியங்களில் சித்திரிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் தமிழகத்தைச் சேர்ந்த ஆற்றுப் படுகைகளே வரலாற்றுக் காலத் தமிழக அரச வம்சங்களின் மையமாக விளங்கின. சேரர் பெரியாற்றையும், சோழர் காவிரியாற்றையும், பாண்டியர் தாமிரபரணியையும், வைகையையும் மையமாக வைத்து எழுச்சி பெற்றனர். இம்மூவேந்தரில் பாண்டியர் ஆட்சி செய்த நிலப்பரப்பே பெரிதாகக் காணப்பட்டது. சங்க இலக்கியங்கள் சித்திரிக்கும் நிலப்பாகுபாடு கூட நாகரிக நிலையில் பல்வேறு படிகளிலிருந்த சங்க காலத் தமிழகத்தின் நாகரிகத்தையே எடுத்துக் காட்டுகின்றது. எதிர்வரும் பகுதிகளில் ஐவகை நிலப்பாகுபாடுகளைப் பார்ப்போம்.

    3.3.2 குறிஞ்சி

    தமிழகத்தின் மலைப்பகுதிகளில் குறிஞ்சிப் பூ அதிகமாகக் காணப்பட்டது. அதனை அடிப்படையாகக் கொண்டு பழந்தமிழர் மலைகளையும், அவற்றைச் சார்ந்த இடங்களையும் குறிஞ்சி எனப் பெயரிட்டு அழைத்தனர். தமிழகத்தின் குறிஞ்சி நிலப் பகுதியாக மேற்குக் காற்றாடி மலைகள், கிழக்குக் காற்றாடி மலைகள், நீலகிரி, பழனி, ஆனைமலை போன்றவற்றைக் கூறலாம். இவற்றுள் மேற்குக் காற்றாடி மலைத் தொடர்கள் அரபிக்கடலை அண்டியும், கிழக்குக் காற்றாடி மலைத்தொடர்கள் வங்கக்கடலைச் சார்ந்தும் அமைந்துள்ளன.

    இவ்வகையான மலைகளில் வாழ்ந்த மக்கள் குறவர் என அழைக்கப்பட்டனர். இம்மலைப் பகுதியிலும், அடர்ந்த பெருங்காட்டிலும் யானை, புலி, கரடி போன்ற விலங்குகளும், மயில் போன்ற அழகிய பறவைகளும் காணப்பட்டன. சிறுசிறு ஆறுகள், அருவிகள் இக்குறிஞ்சி நிலப்பகுதிக்கு நீர்வளம் தந்தன. இங்கு வாழ்ந்த மக்கள் அவர்களின் நிலப்பகுதியில் அவ்வளவாக மாற்றங்களை ஏற்படுத்த முடியவில்லை. இருப்பினும் தினை விதைத்தலையும், வேட்டையாடுதலையும் முக்கியத் தொழிலாகக் கொண்டிருந்தனர். இந்நிலப்பரப்பில் முருக வழிபாடு இருந்தது. மேலும் வழிபாட்டு நெறிகளாகப் பலியிடுதல், வெறியாட்டு போன்றவை இருந்ததைச் சங்க இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். இங்கு மக்கள் வாழ்ந்த இடங்களைச் சிறுகுடி என்று அழைத்தனர். குறிஞ்சி நில மக்களின் தலைவர்கள் வெற்பன், சிலம்பன் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டனர்.

    3.3.3 முல்லை

    காடு அடர்ந்த நிலப்பரப்பே முல்லை நிலமாகும். இந்நிலப்பரப்பிற்கு ஒரு தனித்துவம் அங்கே காணப்படும் முல்லைப் பூவாகும். இன்றைய திருச்சிராப்பள்ளி, சேலம், கோயம்புத்தூர், மதுரை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகள் முல்லை நிலத்தைச் சேர்ந்தவைகளாகும். இங்கு வாழ்ந்தோர் ஆயர் அல்லது இடையர் என அழைக்கப்பட்டனர். இவர்களின் முக்கியமான தொழில் ஆடு மாடுகளை மேய்ப்பதாகும். இவர்கள் இந்நிலப்பரப்பில் கிடைக்கும் பொருட்களான பால், தயிர், வெண்ணெய் போன்றவற்றைப் பிற நிலப்பரப்பில் உள்ளவர்களிடம் கொடுத்துப் பண்ட மாற்றாகத் தமக்கு வேண்டியவைகளைப் பெற்றனர். இங்கு மக்கள் வாழ்ந்த இடங்களைச் சேரி என்று அழைத்தனர். இவர்களின் தலைவர்கள் குறும்பொறை நாடன் என்று அழைக்கப்பட்டனர்.

    3.3.4 மருதம்

    ஆற்றுப்படுகைகள் சேர்ந்த வளமான இடங்கள் மருதம் என அழைக்கப்பட்டன. இங்குக் காணப்பட்ட மருதப் பூவே இந்நிலத்திற்கு இப்பெயரை வழங்கியது. தமிழக ஆறுகளாகிய காவிரி, பெண்ணாறு, பவானி, நொய்யல், அமராவதி, பாலாறு, தாமிரபரணி, வைகை போன்றன இந்நிலப்பரப்பில் அடங்கும். இந்நில அமைப்பில் அடங்கும் தரை அமைப்பிற்கு ஏற்பத் தமிழக ஆறுகள் வட இந்திய ஆறுகளைப் போல் அல்லாது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியே பாய்கின்றன.

    காவிரி ஆறு மைசூர் மாநிலத்திலுள்ள பிரமகிரியிலிருந்து ஊற்றெடுக்கிறது. இவ்விடம் தலைக்காவிரி எனவும் அழைக்கப்படுகிறது. தஞ்சை வரை ஓடி அங்கிருந்து முக்கோண வடிவில் வங்கக்கடலில் இணைகின்றது. கங்கையைப் போன்று காவிரியும் புனித நதியாகக் கருதப்படுகிறது. சேர, சோழ, பாண்டிய மன்னர்களது தலைநகர்கள் ஆற்றங்கரைகளிலேதான் அமைந்திருந்தன. சேர மன்னருள் ஒரு குறிப்பிட்ட மரபினரது தலைநகரான கரூர் அமராவதி ஆற்றங்கரையிலும், பாண்டியரின் தலைநகராகிய மதுரை வைகை ஆற்றங்கரையிலும் அமைந்திருந்தன.

    மருத நிலத்தில் காணப்பட்ட சமமான தரைப் பகுதி, செழிப்புள்ள மண், போதிய நீர் வசதி ஆகியன ஏனைய நிலங்களைவிட இதனை வளமானதாக ஆக்கின. நெல், கரும்பு போன்றவை விளைய ஏற்ற இடமாக அமைந்ததால் இந்நிலப்பரப்பு தன்னிறைவு அடைந்து மக்கள் நிலையாகத் தங்கும் நகர வளர்ச்சிக்கு அடிகோலியது எனலாம். இப்பகுதியில் மக்கள் வாழ்ந்த இடங்கள் நகர், ஊர் என அழைக்கப்பட்டன. இம்மக்களின் தலைவர்கள் ஊரன், மகிழ்நன் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டனர்.

    3.3.5 நெய்தல்

    நெய்தல் பூவே நெய்தல் நிலத்திற்குத் தனித்துவத்தை அளித்தது. தமிழகத்தைச் சுற்றியுள்ள கடற்கரை நிலப்பரப்பு நெய்தல் நிலமாகும். இங்கு வாழ்ந்த மக்கள் பரதவர், நுளையர், வலைஞர் என அழைக்கப்பட்டனர். மீன் பிடித்தல், உப்பு விளைவித்தல், முத்துக் குளித்தல் போன்றவை இங்கு வாழ்ந்த மக்களின் முக்கியத் தொழிலாக அமைந்திருந்தன. பண்டமாற்று முறையே இந்நிலத்தில் நடைபெற்றதாகத் தெரிகின்றது. இங்கு மக்கள் வாழ்ந்த இடங்களைப் பாக்கம், பட்டினம் என அழைத்தனர். இவர்களின் தலைவர்கள் சேர்ப்பன், புலம்பன் என்று அழைக்கப்பட்டனர்.

    கடற்கரைப் பகுதிகளான இந்நிலப் பகுதியில் துறைமுகங்கள் யாவும் அமைந்திருந்தன. கடல் வழியாகப் பல அயல்நாடுகளுடன் வாணிபம் நடைபெற்றது. தமிழகத்து மிளகு முதலிய நறுமணப் பொருள்களுக்கும் முத்துகளுக்கும் ஈடாகப் பொன்னையும், மதுவையும் பண்டமாற்றாகப் பெற்றுச் செல்லக் கிரேக்கரும், உரோமானியரும் மரக்கலங்களில் வந்து சென்றதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. எளிய மக்கள் குடிசைகளில் வாழ்ந்து வந்தாலும் செல்வச் செழிப்பாக வாழ்வைக் களித்தனர். வாணிபம் வளர்ச்சியுற்றதால் துறைமுகப்பட்டினங்கள், நகரங்கள் வளர்ச்சி பெற்றன. சேரரின் துறைமுகங்களாக முசிறி, தொண்டி, மாந்தை, நறவு ஆகியன விளங்கின. சோழரின் துறைமுகப் பட்டினங்களாகக் காவிரிப்பூம்பட்டினம், நாகப்பட்டினம், பொதுகை அல்லது அரிக்கமேடு ஆகியன விளங்கின. கொற்கை, சாலியூர், காயல் ஆகியன பாண்டியரின் துறைமுகங்களாகும். சங்க இலக்கியம் பெருமைப்படுத்திக் கூறும் ‘மருங்கூர்ப்பட்டினமும்’ நெய்தல் நிலப்பரப்பில் இருந்தது.

    விழுநிதி துஞ்சும் வீறுபெறு திருநகர்
    இருங்கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து’

    (அகநானூறு -227: 19 -20)

    3.3.6 பாலை

    பழந்தமிழகத்தின் வறட்சியான நிலப்பரப்பினைப் பாலை நிலம் என அழைத்தனர். இப்பகுதியில் காணப்பட்ட பாலைப்பூவே இப்பெயருக்குக் காரணமாக அமைந்தது. மேற்கூறிய நால்வகை நிலங்களும் வறட்சி அடையும்போது அவை பாலை நிலம் என்று அழைக்கப்பட்டன.

    முல்லை நிலமாகிய காடுகளும், குறிஞ்சி நிலமாகிய மலைகளும் நெடுங்காலம் மழை பெய்யாமையால் காய்ந்து வறட்சி அடையும் போது பாலை என்னும் நிலப்பரப்பாகக் காட்சி அளிக்கும் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. இந்நிலப்பரப்பில் வாழ்ந்தவர்களை மறவர், எயினர், வேடர் எனப் பலவாறு அழைத்தனர். இம்மக்கள் வாழ்ந்த பகுதிகளைக் குறும்பு என அழைத்தனர். இவர்களின் தலைவர்களாக மீளி, காளை என்ற விருதுப்பெயர் கொண்டோர் விளங்கினர்.

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 22:19:52(இந்திய நேரம்)