தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

TVU Courses- நாகரிகப் பாதையில் பழந்தமிழகம்

  • 3.4 நாகரிகப் பாதையில் பழந்தமிழகம்

    வரலாற்றிற்கு முந்தைய காலத்துத் தமிழக வரலாற்றை நாகரிகத்தின் வளர்ச்சியால் ஏற்பட்ட மாறுதல்களையும், பயன்படுத்திய கருவிகளையும் அடிப்படையாகக் கொண்டு நான்கு காலங்களாக வகைப்படுத்தலாம். அவையாவன:

    1. பழங்கற்காலம், 2. இடைக் கற்காலம், 3. புதிய கற்காலம், 4. இரும்புக் காலம்

    இவற்றை வரையறை செய்யத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அகழ்வாராய்ச்சிகள் மூலம் கிடைத்துள்ள புதைபொருட் சின்னங்கள் உதவுகின்றன. இந்தியாவில் நடைபெற்ற மிகப்பெரிய அகழ்வாராய்ச்சிகளில் ஒன்று ஆதிச்சநல்லூரில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியாகும். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சார்ந்த புதைபொருட்கள் இங்கு ஏராளமாகக் கிடைத்துள்ளன. அணிகலன்கள், இரும்பாலாகிய கருவிகள், உரல்கள், மனித எலும்புக் கூடுகள் போன்றன இவற்றுள் அடங்கும்.

    3.4.1 பழங்கற்காலம்

    பழங்கற்காலத்திய தமிழ் மக்களைப் பற்றிய சான்றுகள் பல கிடைத்துள்ளன. செங்கற்பட்டு மாவட்டத்தில் பல்லாவரத்திற்கு அண்மையில் கற்களினாலான கோடரிகள், உளிகள், கத்திகள் ஆகிய கருவிகள் சில கிடைத்துள்ளன. இக்கருவிகள் மிகவும் கரடுமுரடாகச் செதுக்கப்பட்டுள்ளன. கல்லால் ஆன கருவிகளோடு மரத்தாலான ஈட்டிகளையும் தண்டுகளையும் அக்கால மக்கள் கையாண்டதும் தெரிய வருகிறது. தமிழகத்தில் வட ஆர்க்காடு மாவட்டத்திலும், பழங்கற்காலக் கருவிகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் பழங்கற்கால மக்கள் தமிழகத்தில் பரவி வாழ்ந்தனர் என்று அறியலாம்.

    மேலும் பழங்கற்கால மக்கள் ஓரிடத்திலும் நிலையாகத் தங்கி வாழ்ந்ததாகத் தெரியவில்லை.

    3.4.2 இடைக்கற்காலம்

    பழங்கற்காலத்துக்கும் புதிய கற்காலத்திற்குமிடையே இடைக்கற்காலம் என்ற ஒன்று நிகழ்ந்திருக்கிறது. அக்கால அளவில் வாழ்ந்த மக்கள் மிகச்சிறிய கற்கருவிகள் செதுக்கிக் கொண்டனர் எனத் தெரிய வருகிறது. உதாரணமாக சிக்கிமுக்கிக்கல்லாலும், அகேட் (Agate) செர்ட் (Chert), ஜாஸ்பர் (Jasper) போன்ற இரத்தினக் கற்களாலும் இக்கருவிகள் அமைக்கப்பட்டன. திருநெல்வேலி மாவட்டத்தில் சாயர்புரத்திலும், கருநாடக மாநிலத்தில் பிரமகிரியிலும் கிருக்ஷ்ணா, கோதாவரி போன்ற ஆற்றுப்படுகைகளிலும் இக்கருவிகள் கிடைத்துள்ளன. பெரும்பாலும் இடைக்கற்காலத்தில் மக்கள் வேட்டையாடி வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. அவர்கள் மான், பன்றி, ஆடு, எலி போன்றவைகளை உணவாக உட்கொண்டனர் என்பது தெரியவருகிறது. இறந்தவர்களின் உடல்களைப் புதைக்கும் வழக்கம் அப்போதே தொடங்கிவிட்டது என்றும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.

    3.4.3 புதிய கற்காலம்

    புதிய கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் வாழ்க்கையில் பல சீர்திருத்தங்கள் காணப்படுகின்றன. இவர்கள் தாங்கள் பயன்படுத்தும் கற்கருவிகளை ஒழுங்காகவும், வழுவழுப்பாகவும் செதுக்கியுள்ளனர் என்று ஆராய்ச்சி மூலம் தெரிய வருகிறது. இக்கற்கருவிகள் படிக்கட்டுக்கல் (Traprock) என்ற ஒரு வகைக் கல்லினால் செய்யப்பட்டுள்ளன. கற்களால் உளிகள், சம்மட்டிகள் போன்றவைகளை ஒழுங்காகச் செதுக்கி அவற்றிற்கு மெருகூட்டியுள்ளனர் என்பது திருநெல்வேலி, மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், வடஆர்க்காடு, செங்கற்பட்டு ஆகிய மாவட்டங்களில் அகழ்வாராய்ச்சி செய்தபோது தெரிய வந்தது.

    இவர்கள் ஆங்காங்குக் குடியேறி நிலையான வாழ்க்கையில் அமர்ந்துவிட்டனர். இக்கற்காலத்தில்தான் மனிதன் நெருப்பு உண்டாக்கக் கற்றுக் கொண்டுள்ளான் என்று ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். ஆடைகளை நெய்துள்ளனர். ஆடு, மாடுகளை வளர்த்துள்ளனர். குறிப்பாகத் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் வாழ்க்கை வசதிக்கான பொருட்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எடைக்கற்கள், அம்மி, குழவிகள், கற்சட்டிகள் இவற்றுள் அடங்கும். இவர்களிடம் இறந்தவர்களைப் புதைக்கும் வழக்கம் காணப்பட்டது.

    3.4.4 இரும்புக் காலம்

    தமிழகத்தில் புதிய கற்காலத்தைத் தொடர்ந்து இரும்புக் காலம் தொடங்கிற்று. ஆனால் வட இந்தியாவில் புதிய கற்காலத்தை அடுத்துச் செம்புக் காலம் தொடங்கிற்று. அதனை அடுத்தே அங்கு இரும்புக் காலம் தொடங்கியது. புதிய கற்காலத்துக்கும் இரும்புக் காலத்துக்கும் இடையில் செம்பு அல்லது வெண்கலக்காலம் ஒன்று தமிழகத்தில் நிகழாதது வியப்பாக உள்ளது. இந்நிலைக்கு இருவேறு காரணங்கள் காட்டப்படுகின்றன. ஒன்று, மக்கள் வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்குக் குடிபெயர்ந்து வந்தபோது, முதன்முதலாக இரும்பைத் தம்முடன் கொண்டு வந்திருக்கலாம். மற்றொன்று, தமிழகத்தில் புதிய கற்காலத்தின் இறுதியில் வாழ்ந்த மக்கள் இரும்பைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கலாம். இவற்றுள் இரண்டாம் காரணமே பொருத்தமானதாகத் தோன்றுகிறது. மண்பாண்டங்கள் செய்வதற்குத் தகுதியான மண்ணைத் தேடியபோது, பலவகையான மண்ணையும், பாறைகளையும் ஆராய்ந்து பார்த்திருப்பார்கள். பச்சை மண்பாண்டங்களைச் சூளையில் இட்டுச் சுட்டிருப்பார்கள். அப்போது அவர்கள் தற்செயலாக இரும்பைக் கண்டுபிடித்திருக்கலாம்.

    திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஆதிச்சநல்லூர் என்னும் இடத்தில் அகழ்வாராய்ச்சி மேற்கண்டபோது அங்கே கற்கருவிகளுடன் கத்தி போன்ற இரும்புக் கருவிகளும் கண்டெடுக்கப்பட்டன. மேலும் செங்கற்பட்டில் பெரும்பேயர் என்னும் இடத்திலும், கேரளத்தில் தலைச்சேரி என்னும் இடத்திலும் இவ்வாறே கற்கருவிகளும், இரும்புக் கருவிகளும் கலந்தே கிடைத்துள்ளன. எனவே தமிழகத்தில் புதிய கற்காலம் முடிவுறும்போதே இரும்புக் காலமும் தொடங்கிவிட்டது என்று கருத இடம் ஏற்படுகிறது.

புதுப்பிக்கபட்ட நாள் : 31-08-2016 22:19:55(இந்திய நேரம்)