Primary tabs
-
5.1 பிற்காலச் சோழர் – ஓர் விளக்கம்
சங்க காலத்தின் பிற்பகுதியில் களப்பிரர்கள் படையெடுத்து வந்து தமிழகத்தை கைப்பற்றிக் கொண்டனர். இவர்கள் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை தமிழகத்தை ஆண்டனர். இக்காலப் பகுதியில் சோழநாட்டை ஆண்டு வந்த சோழர்கள் சிற்றரசர்களாய் விளங்கினர். பின்பு கி.பி. ஏழு, எட்டு, ஒன்பதாம் நூற்றாண்டுகளில் தொண்டை மண்டலத்தில் பல்லவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. இதே காலத்தில் சோழ நாட்டில் முத்தரையர்கள் செல்வாக்குப் பெற்றிருந்தனர். இவர்கள் தஞ்சைக்கும் திருச்சிராப்பள்ளிக்கும் இடைப்பட்ட பகுதியை ஆண்டு வந்தனர். ஆனால் சோழர்களோ காவிரிப் படுகையில் ஒரு சிறுபகுதியைப் பழையாறை என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு சிற்றரசர்களாகப் பல்லவர்களுக்குத் திறை செலுத்தி ஆண்டு வந்தனர்.
கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இடையில் பாண்டியருக்கும் பல்லவருக்கும் கடும்போர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. முத்தரையர் பாண்டியருக்குத் துணைநின்றனர். இந்த அரசியல் சூழ்நிலையில் சோழ மரபில் தோன்றிய விசயாலயன் என்பவன் பல்லவருடன் கூட்டுச் சேர்ந்து முத்தரையரைத் தஞ்சையில் எதிர்த்துப் போர் புரிந்தான். இப்போரில் விசயாலயன் வெற்றி பெற்றுத் தஞ்சையைக் கைப்பற்றினான். அந்த விசயாலயனே சோழ நாட்டில் சோழர் ஆட்சிக்கு மறுபடியும் வித்திட்டவன் ஆவான். இவன் வழிவந்தவர்கள் சோழநாட்டைக் கி.பி. 850 முதல் 1279 வரை ஆண்டு வந்தனர். இவர்களையே பிற்காலச் சோழர் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.