Primary tabs
-
5.2 பிற்காலச் சோழப் பேரரசின் தோற்றம்
விசயாலய சோழன் முத்தரையரை வென்று தஞ்சையைக் கைப்பற்றியவுடன் அங்கே தன் வெற்றியின் அடையாளமாகத் துர்க்கைக்கு ஒரு கோயிலைக் கட்டினான். ஒரு குறுநில மன்னனாகப் பல்லவர்க்கு அடங்கித் திறை செலுத்தி முடங்கிக் கிடந்த விசயாலயனின் கைகள் தஞ்சையின் வெற்றிக்குப் பின் மிகவும் வலுவடைந்துவிட்டன. தமிழக வரலாற்றில் ஈடு இணையற்ற பெரும்புகழை ஈட்டிக் கொடுத்த சோழப் பேரரசர் பரம்பரை ஒன்றைத் தான் தொடங்கி வைக்க இருந்ததை விசயாலயன் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. விசயாலயன் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் தொடக்கி வைத்த சோழப்பேரரசு கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை, துங்கபத்திரை ஆற்றின் தெற்கில் உள்ள நிலப்பகுதி முழுவதும் செல்வாக்குடன் விளங்கியது.