தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முதலாம் குலோத்துங்கன் பரம்பரை

  • 5.5 முதலாம் குலோத்துங்கன் பரம்பரை

    அதிராசேந்திரனுக்குப் பின்பு சோழநாட்டின் ஆட்சிப்பொறுப்பை முதலாம் குலோத்துங்கன் என்பவன் ஏற்றான். இவனது இயற்பெயர் இரண்டாம் இராசேந்திரன். இவன் விசயாலயன் பரம்பரையில் வந்தவன் அல்லன். அவ்வாறாயின் இவன் யார்?

    கீழைச் சாளுக்கிய நாட்டை வேங்கியைத் தலைநகராகக் கொண்டு இராசராச நரேந்திரன் (கி.பி. 1011-1060) ஆண்டுவந்தான். இவன் முதலாம் இராசராச சோழனுடைய மகள் குந்தவைக்கும் கீழைச் சாளுக்கிய அரசன் விமலாதித்தனுக்கும் பிறந்தவன் ஆவான். முதலாம் இராசேந்திர சோழன் தன் மகள் அம்மங்காதேவியை இராசராச நரேந்திரனுக்கு மணம் முடித்துத் தந்திருந்தான். இராசராச நரேந்திரனுக்கும் அம்மங்காதேவிக்கும் பிறந்தவன்தான் இந்த இரண்டாம் இராசேந்திரன்.

    இவன் சோழ நாட்டில் தாய் வீட்டில் பிறந்து, தாய்ப்பாட்டனுடன் வளர்ந்து, தமிழ் கற்று, அதனுடன் வேறு பல கலைகளையும் பயின்றவன் ஆவான். எனவே இவன் இளம்பருவத்திலேயே சோழநாட்டு மக்களின் அன்பைப் பெற்றிருந்தான். பின்பு வேங்கி சென்று, தன் தந்தையின் ஆட்சிக் காலத்திலேயே இளவரசுப் பட்டம் சூட்டப் பெற்றான். எனினும் கி.பி. 1060 இல் தந்தை இராசராச நரேந்திரன் இறந்தது முதல் சுமார் பத்து ஆண்டுகள் இவனது வரலாறு அறியப்படவில்லை. இக்காலத்தில் கீழைச் சாளுக்கிய நாட்டை இரண்டாம் சக்திவர்மன், ஏழாம் விசயாதித்தன் ஆகியோர் அடுத்தடுத்து ஆண்டனர் எனத் தெரிகிறது. எனினும் இவர்கள் இருவருடைய வரலாறும் சரியாக அறியப்படவில்லை.

    கி.பி. 1070 இல் அதிராசேந்திரன் வாரிசு இல்லாமல் இறந்துபட்ட நிலையில், சோழநாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. மேலும் சோழநாடு முடிசூடுவதற்கு உரிய அரச மரபினர் எவரும் இல்லாமல் அல்லலுற்றது. இந்தச் சூழ்நிலையில் இரண்டாம் இராசேந்திரன் சோழநாட்டின் அரசுரிமையைப் பெற எண்ணி வேங்கியிலிருந்து வந்தான். இவனது வருகை, காலத்தே பெய்த மழை போலச் சோழநாட்டிற்குப் பயன் தருவதாயிற்று. சோழநாட்டு அமைச்சர்கள் ஆட்சியை இவனுக்கே அளிக்க முடிவுசெய்து முடிசூட்டினர். முடி சூட்டியவுடன் இரண்டாம் இராசேந்திரன் முதலாம் குலோத்துங்கன் என்ற பட்டப்பெயர் பெற்றான். இவனை முதலாகக் கொண்டு சோழப் பேரரசைக் கீழைச் சாளுக்கிய - சோழப் பரம்பரையினர் ஆளத் தொடங்கினர்.

    முதலாம் குலோத்துங்கன் பரம்பரையில் வந்து சோழ நாட்டை ஆட்சிபுரிந்தவர்கள் மொத்தம் எண்மர் ஆவர். அவர்கள், முதலாம் குலோத்துங்கன், அவன் மகன் விக்கிரமசோழன், அவன் மகன் இரண்டாம் குலோத்துங்கன், அவனது மைந்தன் இரண்டாம் இராசராசன், விக்கிரசோழனுடைய மகள் வயிற்றுப் பேரன் இரண்டாம் இராசாதிராசன், அவனை அடுத்து மூன்றாம் குலோத்துங்கன், அவன் மகன் மூன்றாம் இராசராசன், அவன் மகன் மூன்றாம் இராசேந்திரன் என்போர் ஆவர். இவர்களைப் பற்றி ஒருவர்பின் ஒருவராகக் காண்போம்.

    5.5.1 முதலாம் குலோத்துங்கன் (கி.பி. 1070 – 1120)

    இவன் சோழ நாட்டை ஐம்பது ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். இவன் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் பல நாடுகளோடு போர் புரிந்தான். இருப்பினும் சோழநாட்டு மக்களுக்குப் பல நன்மைகள் புரிந்தான். நாட்டு மக்களின் வரிப்பளுவை உணர்ந்து சுங்க வரியை நீக்கினான். தங்கள் முன்னோரைப் போலச் சமயப் பொறை உடையவனாய் விளங்கினான். சீன நாட்டோடும், கடாரத்தோடும் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தான்.

    • மேலைச் சாளுக்கியருடன் போர்

    இவன் சோழ நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற காலத்தில், மேலைச் சாளுக்கிய நாட்டின் ஒரு பகுதியை ஆறாம் விக்கிரமாதித்தன் என்பவன் ஆண்டு வந்தான். இவன் வேங்கி நாட்டைத் (கீழைச் சாளுக்கிய நாட்டை) தனது ஆட்சியின் கீழ்க் கொண்டுவர வேண்டும் என எண்ணியிருந்தான். ஆனால் சோழ நாடும் வேங்கி நாடும் முதலாம் குலோத்துங்கனின் ஒரு குடைக்கீழ் இருந்து வந்தது. இது தன்னுடைய எண்ணம் நிறைவேறத் தடையாக இருப்பதை உணர்ந்தான். எனவே அவன் சோழ நாட்டின் மீது படையெடுத்துச் சென்றான். முதலாம் குலோத்துங்கனும் ஆறாம் விக்கிரமாதித்தனை எதிர்ப்பதற்குப் பெரும்படையுடன் சென்றான். அது மட்டுமன்றி, மேலைச் சாளுக்கிய நாட்டின் மற்றொரு பகுதியை ஆண்டுவந்த இரண்டாம் சோமேசுவரனைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டான். இந்தச் சோமேசுவரன் ஆறாம் விக்கிரமாதித்தனுடைய தமையன் என்பதை ஏற்கெனவே கண்டோம். மைசூர்ப் பகுதியில் கோலார் என்னுமிடத்தில் கடும்போர் நடைபெற்றது. முதலாம் குலோத்துங்கன் வெற்றி பெற்று, ஆறாம் விக்கிரமாதித்தனைத் துங்கபத்திரை ஆற்றிற்கு அப்பால் துரத்தினான். ஆனால் ஆறாம் விக்கிரமாதித்தன் முதலாம் குலோத்துங்கன் சோழ நாட்டிற்குத் திரும்பிச் சென்றவுடன், பெரும்படை திரட்டிச் சென்று இரண்டாம் சோமேசுவரனோடு போர் செய்து அவனைத் தோற்கடித்துச் சிறை பிடித்தான். இதன் விளைவாக ஆறாம் விக்கிரமாதித்தன் மேலைச் சாளுக்கிய நாடு முழுவதிற்கும் மன்னனாக முடி சூடிக்கொண்டான்.

    • பாண்டிய, சேர நாடுகளின் மீது போர்

    அதிராசேந்திரன் மறைவை அடுத்துச் சோழநாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தைப் பயன்படுத்திப் பாண்டியரும் சேரரும் தங்கள் நாடுகளைச் சோழர் ஆதிக்கத்திலிருந்து விடுவித்துக் கொண்டு ஆட்சி புரியத் தொடங்கினர். எனவே முதலாம் குலோத்துங்கன் இவ்விரு நாடுகள் மீதும் படையெடுத்துச் சென்றான். அந்நாடுகளை ஆண்டுவந்த மன்னர்களோடு போர் செய்து அவர்களை வெற்றி கொண்டான். இருப்பினும் அந்நாடுகளை அவர்களுக்கே திருப்பித் தந்து, அவர்களை ஆண்டுதோறும் சோழ நாட்டிற்குத் திறைப்பொருளை அனுப்பிவைக்க ஏற்பாடு செய்தான்.

    • இலங்கையை இழத்தல்

    இலங்கையில் சோழர் ஆட்சி அகன்று, தன்னுடைய ஆட்சி ஏற்படவேண்டும் என்று விசயபாகு என்பவன் நீண்டகாலமாக முயன்றுவந்தான். அதிராசேந்திரன் மறைவினால் சோழநாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தைப் பயன்படுத்தி, கி.பி. 1070 இல் அனுராதபுரத்தைக் கைப்பற்றி இலங்கை முழுவதிற்கும் மன்னனாக விசயபாகு முடி சூடிக் கொண்டான். இலங்கையில் இருந்த சோழர் படை விசயபாகுவுடன் கடும்போர் செய்து வெற்றி பெற்றது. எனினும் விசயபாகு மீண்டும் பெரும்படை திரட்டிச்சென்று அனுராதபுரம், பொலன்னருவை ஆகிய இடங்களைத் தாக்கி, அங்கிருந்த சோழர் படையைத் தோற்கடித்து இலங்கையைக் கைப்பற்றிக் கொண்டான். தோல்வியடைந்த சோழர் படை தாயகம் திரும்பியது. முதலாம் இராசராசன் காலம் முதல் சோழப் பேரரசின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த இலங்கை, முதலாம் குலோத்துங்கன் காலத்தில் சோழர்களின் பிடியிலிருந்து விலகித் தன்னுரிமை தேடிக்கொண்டது.

    • தென்கலிங்கப் போர்

    முதலாம் குலோத்துங்கன் கலிங்க நாட்டை எதிர்த்து இரண்டு போர்கள் செய்து வெற்றி பெற்றான். இவற்றில் முதல் போர் தென்கலிங்கப் போர் ஆகும். இது இவனது ஆட்சியின் 26ஆம் ஆண்டில் (கி.பி. 1096 இல்) நடைபெற்றது. அப்பொழுது தென் கலிங்க நாட்டை வீமன் என்பவன் வேங்கிக்கு உட்பட்ட சிற்றரசனாய் ஆண்டு வந்தான். அதே நேரத்தில் முதலாம் குலோத்துங்கன் மகன் விக்கிரமசோழன் வேங்கியின் அரசுப் பிரதிநிதியாக இருந்து வந்தான். வீமன் தன்னாட்சி பெறுவதற்காக வேங்கியின்மீது படையெடுத்தான். விக்கிரமசோழன் பெரும்படையுடன் சென்று வீமனோடு போர் செய்து அவனை வென்றான். தோல்வியுற்ற வீமன் சிற்றரசனாகவே இருந்து வேங்கிக்குத் திறை செலுத்த ஒப்புக்கொண்டான். இதுவே முதல் கலிங்கப்போர்.

    • வடகலிங்கப் போர்

    முதலாம் குலோத்துங்கன் தனது ஆட்சியின் 42 ஆம் ஆண்டில் (கி.பி. 1112 இல்) மற்றொரு கலிங்கப் போரை மேற்கொண்டான். இது வடகலிங்கப் போர் ஆகும். வடகலிங்க நாட்டு அரசன் அனந்தவர்மன் சோழருக்கு உட்பட்ட வடகலிங்கத்தைத் திறை செலுத்தி ஆண்டுவந்தான். அவன் தான் செலுத்த வேண்டிய திறையைத் தொடர்ந்து இருமுறை செலுத்தாதலால், அவனை வென்று திறை வாங்கி வருமாறு முதலாம் குலோத்துங்கன் தன் படைத்தலைவன் கருணாகரத் தொண்டைமான் தலைமையில் பெரும்படை ஒன்றை அனுப்பினான். கருணாகரத் தொண்டைமான் படையானது காஞ்சியிலிருந்து புறப்பட்டது; பாலாறு, வடபெண்ணை, கிருஷ்ணா, கோதாவரி ஆறுகளைக் கடந்து சென்று வடகலிங்க நாட்டைத் தாக்கியது. அப்போது நடந்த போரில் அனந்தவர்மன் தோல்வியடைந்து புறங்காட்டி ஓடினான். மாபெரும் வெற்றி கண்ட கருணாகரத் தொண்டைமான் அளவற்ற செல்வம், யானைகள், குதிரைகள் ஆகியவற்றைக் கைப்பற்றிக் கொண்டு சோழநாடு திரும்பினான். இந்த மாபெரும் கலிங்க வெற்றியைப் புகழ்ந்து சயங்கொண்டார் என்ற புலவர் கலிங்கத்துப் பரணி என்ற நூலை இயற்றினார்.

    • கங்கபாடி, நுளம்பபாடி நாடுகளை இழத்தல்

    முதலாம் குலோத்துங்கன் தன் ஆட்சியின் இறுதிக் காலத்தில் முதிர் வயது காரணமாகச் சோழப் பேரரசின் சில பகுதிகளை இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. கி.பி. 1116 இல் விஷ்ணுவர்த்தன் என்ற போசள அரசன் (Hoysala King) சோழப்பேரரசின் மீது போர் தொடுத்துக் கங்கபாடி, நுளம்பபாடி ஆகிய நாடுகளைக் கைப்பற்றிக் கொண்டான். முதலாம் இராசராசன் காலம் முதல் சோழர் ஆட்சியின்கீழ் இருந்துவந்த கங்கபாடி, நுளம்பபாடி ஆகிய நாடுகளை முதலாம் குலோத்துங்கன் தன் காலத்திலே இழந்துவிட்டான்.

    • வேங்கி நாட்டை இழத்தல்

    மேலும் முதலாம் குலோத்துங்கன் தன் தந்தையின் நாடான வேங்கியையும் இழந்தான். வேங்கியில் தன்னுடைய மகன் விக்கிரமசோழன் என்பவனை அரசுப் பிரதிநிதியாக நியமித்து ஆட்சி புரிந்துவரும்படி செய்தான் முதலாம் குலோத்துங்கன். விக்கிரமசோழன் கி.பி. 1093 முதல் வேங்கி நாட்டைச் சோழருடைய அரசு பிரதிநிதியாக இருந்து ஆண்டு வந்தான். பின்பு, முதலாம் குலோத்துங்கன் தன் ஆட்சிக் காலத்திலேயே விக்கிரம சோழனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டுவதற்காக கி.பி. 1118 இல் அவனைச் சோழநாட்டுத் தலைநகருக்கு வரவழைத்துக் கொண்டான். விக்கிரமசோழன் இருந்த இடத்தில் தெலுங்குச் சோழர்களில் ஒருவனை அரசு பிரதிநிதியாக நியமித்து வேங்கி நாட்டை ஆண்டு வரும்படி செய்தான். முதலாம் குலோத்துங்கனின் இச்செயலை வேங்கி நாட்டு மக்கள் விரும்பவில்லை. இதனால் வேங்கி நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டது. வேங்கியை மேலைச் சாளுக்கிய நாட்டோடு இணைத்துக்கொள்ள வேண்டுமென்று நெடுங்காலமாக முயன்று கொண்டிருந்த ஆறாம் விக்கிரமாதித்தன் இதைத் தக்க வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டான். வேங்கி நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அந்நாட்டை எளிதாக வென்று கைப்பற்றிக் கொண்டான். இதனால் முதலாம் குலோத்துங்கன்மேல் இருந்த தன் பரம்பரை வஞ்சத்தை ஆறாம் விக்கிரமாதித்தன் தீர்த்துக்கொண்டான்.

    • அயல்நாட்டுத் தொடர்பு

    முதலாம் குலோத்துங்கன் சீனம், கம்போடியா, கடாரம் ஆகிய கடல் கடந்த நாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்தான். இவன் தன் ஆட்சிக்காலத்தில் சீன நாட்டோடு வாணிபத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்காக அந்நாட்டிற்கு 72 பேர் அடங்கிய ஒரு தூதுக் குழுவினைக் கி.பி. 1077 இல் அனுப்பி வைத்தான். கம்போடிய மன்னன், கடாரத்து அரசன் ஆகியோர் இவனுடைய நண்பர்கள் ஆவர்.

    • சுங்கம் தவிர்த்தல்

    முதலாம் குலோத்துங்கன் தன் ஆட்சியின்போது செய்த பாராட்டற்குரிய அரிய செயல் நாட்டில் இருந்துவந்த சுங்க வரியை நீக்கியதே ஆகும். சுங்கவரி இல்லாத நாட்டில் வாணிபம் பெருகும்; பொருள்கள் வந்து குவியும்; விலைகள் குறையும். இதனாலேயே அவன் இவ்வாறு செய்தான். சுங்கவரி நீக்கியதால் மக்கள் அவனை வாழ்த்திச் சுங்கம் தவிர்த்த சோழன் என்று அழைத்தனர்.

    • சமயப் பணி

    முதலாம் குலோத்துங்கன் தன்னுடைய முன்னோர்களைப் போலச் சிவபெருமானிடத்தே எல்லையில்லா அன்பு கொண்டிருந்தான். சிவபெருமானிடத்தில் கொண்ட அன்பால் திருநீற்றுச் சோழன் என்ற விருதுப்பெயர் இவனுக்கு வழங்கியது. சைவசமயம் சார்ந்தவனாக இருந்தாலும், வைணவம், பௌத்தம் போன்ற பிற சமயங்களையும் ஆதரித்தான். இவ்வேந்தனது அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர் சயங்கொண்டார். இவர் முதலாம் குலோத்துங்கனின் கலிங்க வெற்றியைப் புகழ்ந்து கலிங்கத்துப்பரணி என்ற நூலை எழுதினார்.

    5.5.2 விக்கிரம சோழன் ( கி.பி. 1118-1136)

    கி.பி. 1118 இல் முதலாம் குலோத்துங்கன் தன் மகன் விக்கிரம சோழனுக்குத் தன் ஆட்சிக் காலத்திலேயே இளவரசுப் பட்டம் சூட்டினான். கி.பி. 1120 இல் முதலாம் குலோத்துங்கன் மறைந்ததும் விக்கிரம சோழன் சோழப் பேரரசின் ஆட்சிப் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக் கொண்டான். முதலாம் குலோத்துங்கன் தன் ஆட்சியின் இறுதிக் காலத்தே இழந்த கங்கபாடி நாட்டின் ஒரு பகுதியை விக்கிரம சோழன் கைப்பற்றி மீட்டுக்கொண்டான். கி.பி. 1126 இல் ஆறாம் விக்கிரமாதித்தன் உயிர்துறந்ததும், அவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்த வேங்கி நாட்டை வெற்றி கொண்டு, அதை மீண்டும் சோழப்பேரரசில் இணைத்துக் கொண்டான்.

    விக்கிரம சோழனுடைய அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர் ஒட்டக்கூத்தர். இவர் விக்கிரம சோழன் மீது உலா பாடியுள்ளார். அது விக்கிரம சோழன் உலா என்பதாகும்.

    5.5.3 இரண்டாம் குலோத்துங்கன் (கி.பி. 1136-1150)

    விக்கிரம சோழனுக்குப் பின் அவன் மகன் இரண்டாம் குலோத்துங்கன் அரியணை ஏறினான். இவனுடைய அவைக்களப் புலவராகவும் திகழ்ந்தவர் ஒட்டக்கூத்தர். அவர் இவன் மீது குலோத்துங்க சோழன் உலா, குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் ஆகிய நூல்களைப் பாடியுள்ளார். இவனால் ஆதரிக்கப்பட்ட புலவர் தண்டி என்பவர் ஆவார். இவர் எழுதிய தண்டியலங்காரம் என்ற அணி இலக்கண நூல் புகழ்பெற்றதாகும்.

    சோழ மன்னர்கள் அனைவரும் சைவ சமயத்தினராக இருந்தாலும், சமயப் பொறையுடன் அனைத்துச் சமயங்களையும் மதித்து வாழ்ந்தனர். ஆனால் இவன் ஒருவன் மட்டுமே வைணவ சமயத்தாரிடம் பகைமை பாராட்டினான். இதனால் இவன் காலத்தில் சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் இடையே சண்டைகள் மூண்டன. இவன் சிதம்பரம் நடராசர் கோயிலில் இருந்த கோவிந்தராசப் பெருமாளின் சிலையைப் பெயர்த்தெடுத்து, அதை வங்கக் கடலில் வீசி எறிந்தான். இவனது இச்செயல் வைணவர் உள்ளங்களைக் கொதிப்புக்கு உள்ளாக்கியது.

    5.5.4 இரண்டாம் இராசராசன் (கி.பி. 1146-1163)

    இரண்டாம் குலோத்துங்கன் தனது ஆட்சிக் காலத்திலேயே (கி.பி. 1146) தன்மகன் இரண்டாம் இராசராசனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டியிருந்தான். கி.பி. 1150 இல் அவன் மறைந்ததும், இரண்டாம் இராசராசன் முறைப்படி சோழ நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றான். இவனது ஆட்சியின் இறுதிக் காலத்தில் மத்திய ஆட்சியும், மண்டல ஆட்சியும் தளர்ச்சியுறலாயின. குறுநில மன்னர்கள் சோழப் பேரரசின் ஆதிக்கத்தினின்று மெல்ல மெல்ல விலகத் தொடங்கிவிட்டனர்.

    இவனது அவைக்களப் புலவராய் இருந்தவரும் ஒட்டக்கூத்தரே ஆவார். அவர் இவன் மீது இராசராசன் உலா என்ற நூலைப் பாடியுள்ளார். ஒட்டக்கூத்தர் விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன் என்னும் மூன்று சோழ மன்னர்களின் அவைக்களப் புலவராகவும் இருந்த பெருமை உடையவர் ஆவார். இவர் இம்மூன்று சோழ மன்னர்கள் மீது பாடிய மூன்று உலா நூல்கள் மூவருலா என்ற பெயரிட்டு அழைக்கப்படுகின்றன. இவன் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் என்னும் ஊரில் இராசராசேச்சுவரம் என்னும் பெயரில் புகழ்பெற்ற சிவன் கோயில் ஒன்றைக் கட்டினான்.

    5.5.5 இரண்டாம் இராசாதிராசன் (கி.பி. 1163 – 1173)

    இரண்டாம் இராசராசனுக்குப் பின்பு இரண்டாம் இராசாதிராசன் சோழநாட்டின் அரியணை ஏறினான். இவன் இரண்டாம் இராசராசனின் மகன் அல்லன். விக்கிரம சோழனுடைய மகள் வயிற்றுப் பேரன் ஆவான்.

    இவன் காலத்தில் பாண்டிய நாட்டில் பராக்கிரம பாண்டியன் என்பவனுக்கும், குலசேகர பாண்டியன் என்பவனுக்கும் இடையே அரசுரிமை பற்றி மோதல் ஏற்பட்டது. இதில் பாராக்கிரம பாண்டியன் இலங்கை மன்னன் பராக்கிரமபாகு என்பவனின் படை உதவியை நாடினான். ஆனால் இலங்கை மன்னனின் படை வருவதற்குள், குலசேகர பாண்டியன் பராக்கிரம பாண்டியனையும், அவன் மனைவியையும் கொன்றுவிட்டு, மதுரையைக் கைப்பற்றிக் கொண்டான். பராக்கிரம பாண்டியனின் மகன் வீரபாண்டியன் மட்டும் தப்பி ஓடி ஒரு மறைவிடத்தில் ஒளிந்துகொண்டான். இந்நிலையில் இலங்கை மன்னன் அனுப்பிய சிங்களப் படையினர் மதுரையை அடைந்தனர். சிங்களப் படையினர் குலசேகரப் பாண்டியன் படையுடன் போரிட்டு வெற்றி பெற்று, பராக்கிரம பாண்டியனுடைய மகனாகிய வீரபாண்டியனை அரியணை ஏற்றினர்.

    போரில் தோல்வியுற்ற குலசேகர பாண்டியன் இராசாதிராசனிடம் படைத்துணை வேண்டினான். இராசாதிராசன் அனுப்பிய சோழப் படை வீரர்கள், பாண்டிய நாட்டில் வீரபாண்டியனுக்கு ஆதரவாக இருந்த இலங்கை மன்னனின் படைவீரர்களோடு போர் செய்து, அவர்களைப் புறமுதுகிட்டு ஓடச் செய்தனர். பின்பு வீரபாண்டியனை ஆட்சியிலிருந்து இறக்கிவிட்டு, குலசேகர பாண்டியனை ஆட்சியில் அமர்த்தினர். அத்தோடு அமையாமல் சோழரின் படை வீரர்கள் இலங்கையின் மேலும் படையெடுத்துச் சென்றனர். இந்நிலையில் பராக்கிரமபாகு குலசேகர பாண்டியனைப் பாண்டிய மன்னனாக ஏற்றுப் பரிசில் அனுப்பினான். குலசேகர பாண்டியனும் சோழர் தனக்குச் செய்த நன்றியை மறந்து இலங்கை வேந்தன் பராக்கிரமபாகுவுடன் நட்பும், மணவினைத் தொடர்பும் கொண்டு சோழர்களையே எதிர்க்கலானான். குலசேகர பாண்டியன் தனக்குச் செய்த நம்பிக்கைத் துரோகத்திற்குப் பாடம் புகட்டக் கருதிய இராசாதிராசன், ஒரு படையை மதுரைக்கு அனுப்பிக் குலசேகர பாண்டியனை அரியணையிலிருந்து இறக்கி, வீரபாண்டியனை மீண்டும் பாண்டிய நாட்டு மன்னனாக்கினான்.

    இரண்டாம் இராசாதிராசன் காலத்துக்கு முன்பு வரை பாண்டிய மன்னர்கள் சோழ வேந்தர்கட்குப் பெரும்பாலும் பரம்பரைப் பகைவர்களாகவே இருந்து வந்தனர். ஆனால் இவனது காலத்தே சோழ வேந்தர்கள் பாண்டிய மன்னர்களுக்கு மாறி மாறி உதவிபுரியும் நண்பர்களாக ஆனதைக் காணமுடிகிறது.

    5.5.6 மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1173 – 1216)

    இரண்டாம் இராசாதிராசனுக்குப் பின்பு மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சிக்கு வந்தான். இவனது ஆட்சிக்காலத்தில் வீரபாண்டியன் இரண்டாம் இராசாதிராசன் தனக்குச் செய்த உதவியை மறந்துவிட்டு, மீண்டும் இலங்கை வேந்தன் பராக்கிரமபாகுவுடன் சேர்ந்துகொண்டு, சோழர்களுக்கு எதிரான அரசியல் சூழ்ச்சிகளை மேற்கொண்டான். இந்நேரத்தில் நாட்டினை இழந்து, உயிரையும் துறந்த குலசேகர பாண்டியனுடைய மகன் மாறவர்மன் விக்கிரம பாண்டியன் மூன்றாம் குலோத்துங்கனை அணுகித் தன் தந்தை இழந்த பாண்டிய நாட்டின் ஆட்சியை மீட்டுத் தனக்கு அளிக்குமாறு வேண்டினான். மூன்றாம் குலோத்துங்கன் ஒரு படையை அனுப்பி வீரபாண்டியனைப் பதவியிலிருந்து இறக்கிவிட்டு மாறவர்மன் விக்கிரம பாண்டியனைப் பதவியில் அமர்த்தினான் (கி.பி. 1182)

    மூன்றாம் குலோத்துங்கன் உதவியால் அரசனான மாறவர்மன் விக்கிரம பாண்டியன் இறந்தபின், அவன் மகன் சடையவர்மன் குலசேகர பாண்டியன் பாண்டிய நாட்டு மன்னனானான். இவனும் நன்றி மறந்து சோழரின் மேலாட்சியை எதிர்க்கலானான். எனவே மூன்றாம் குலோத்துங்கன் கி.பி. 1203இல் பெரும்படையுடன் பாண்டிய நாட்டின் மீது போர் தொடுத்தான். சடையவர்மன் குலசேகர பாண்டியனும் படைகொண்டு எதிர்த்தான். போர் முடிவில் பாண்டியன் தோல்வியைத் தழுவினான். போரில் வெற்றி பெற்ற மூன்றாம் குலோத்துங்கன் மதுரை நகரினுள் புகுந்து அங்குள்ள அரண்மனையின் மண்டபங்களை இடித்து மண்ணோடு மண்ணாக்கினான். தான் அடைந்த வெற்றியின் காரணமாக மதுரை நகரில் சோழ பாண்டியன் என்ற பெயரைச் சூட்டிக் கொண்டு வீராபிடேகம் (வீர+ அபிஷேகம் = வீராபிஷேகம், வீராபிடேகம்) செய்து கொண்டான். பாண்டிய மண்டலம் சோழ பாண்டியன் மண்டலம் எனப் பெயர் பெற்றது. எனினும் சில ஆண்டுகளுக்குப் பின்பு மூன்றாம் குலோத்துங்கன், பாண்டிய நாட்டைச் சடையவர்மன் குலசேகர பாண்டியனுக்கே அளித்து, அவனைத் தனக்குத் திறை செலுத்தி அடங்கி ஆளும்படி செய்தான்.

    மூன்றாம் குலோத்துங்கன் கொங்குநாட்டின் மீது படையெடுத்துச் சென்று அந்நாட்டை வென்று, அதன் தலைநகராகிய கருவூரையும் கைப்பற்றிக் கொண்டான்.

    இவனுடைய ஆட்சிக்காலத்தில் சோழ நாட்டில் இரண்டு ஆண்டுகள் (கி.பி. 1201-1202) கொடும்பஞ்சம் ஒன்று ஏற்பட்டுக் குடிமக்கள் துன்புற்றனர். பஞ்ச நிவாரணப் பணிகள் பலவற்றை அரசின் சார்பில் இவன் மேற்கொண்டான். தனிப்பட்டவர்களும் நிவாரணப் பணியில் பங்குகொண்டனர்.

    5.5.7 மூன்றாம் இராசராசன் (கி.பி. 1216 – 1256)

    மூன்றாம் குலோத்துங்கனுக்குப் பிறகு அவன் மகன் மூன்றாம் இராசராசன் சோழநாட்டின் அரியணை ஏறினான். இவனுடைய காலத்தில் முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் பாண்டிய நாட்டு அரசனானான். தனது முன்னோர் சோழர்க்கு அடங்கித் திறை செலுத்தி வாழ்நாளைக் கழித்து வந்ததையும், தனது இளம்வயதில் மூன்றாம் குலோத்துங்கன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்துவந்து மதுரையில் ஏற்படுத்திய அழிவுகளையும் இவன் நேரில் கண்டிருந்தான். சோழ நாட்டை வென்று பழிக்குப் பழி வாங்க வேண்டுமென்று எண்ணியிருந்தான். இந்நிலையில் மூன்றாம் குலோத்துங்கன் இறந்தான். அவன் மகன் மூன்றாம் இராசராசன் முடிசூடினான். சுந்தரபாண்டியன் வலிமைமிக்க பெரும்படை திரட்டிச் சென்று சோழ மன்னன் மூன்றாம் இராசராசனைப் போரில் வென்று சோழ நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான். சோழநாட்டின் தலைநகர்களாக இருந்த தஞ்சையையும், உறையூரையும் தீக்கிரையாக்கினான். அங்கு உள்ள பல மணிமண்டபங்களையும், மாட மாளிகைகளையும் இடித்து மண்ணோடு மண்ணாக்கினான். போரில் தோல்வி அடைந்த மூன்றாம் இராசராசன் சுற்றத்தாருடன் ஒளிந்து வாழும் இழிநிலை எய்தினான். சுந்தர பாண்டியன், பழையாறை சென்று அங்குள்ள அரண்மனையில் முடி சூடிக்கொண்டான். பின்பு பாண்டிய நாடு திரும்பும்போது வழியில் பொன்னமராவதி என்னும் இடத்தில் தங்கினான். இராசராசனைத் தூதுவர் வேண்டுகோளுக்கு இணங்க அங்கே அழைத்துவரச் செய்தான். அவனை ஆண்டுதோறும் திறை செலுத்திக்கொண்டு சோழநாட்டை ஆட்சி செய்து வருமாறு ஆணையிட்டான். இதன் விளைவாகச் சோழப் பேரரசு சிற்றரசாக மாறியது; பாண்டிய நாட்டிற்குத் திறை செலுத்தித் தாழ்வடைந்தது.

    5.5.8 மூன்றாம் இராசேந்திரன் (கி.பி. 1246 – 1279)

    மூன்றாம் இராசராசன் தன் ஆட்சிக் காலத்திலேயே (கி.பி. 1246) தன் மகன் மூன்றாம் இராசேந்திரனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டி, சோழநாட்டின் நிருவாகம் முழுவதையும் அவன் பொறுப்பில் தந்தான். கி.பி. 1256 இல் மூன்றாம் இராசராசன் மறைந்ததும், மூன்றாம் இராசேந்திரன் சோழநாட்டின் மணிமுடியைச் சூடிக்கொண்டான்.

    இவன் தலைசிறந்த வீரனாக விளங்கினான். தன் தந்தை காலத்தில் வீழ்ச்சியுற்ற சோழ நாட்டின் ஆட்சியையும் பெருமையையும் தன் ஆற்றல் கொண்டு ஓரளவு உயர்த்தினான்.

    முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் சோழ நாட்டின்மீது போர் தொடுத்து நிகழ்த்திய கொடுஞ்செயல்கள் உண்டாக்கிய அவமானத்தைத் தன் இளமைக் காலத்திலேயே கண்டு மனம் வெதும்பியவன் மூன்றாம் இராசேந்திரன். எனவே, பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து இழந்த பெருமையைப் பெறத் தக்க காலத்தை எதிர்பார்த்திருந்தான். பாண்டிய நாட்டில் முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் இறந்தான். அவனுக்குப் பின்பு இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் அரியணை ஏறினான். இப் பாண்டிய மன்னன் தன் முன்னோர் போல் ஆற்றல் பெற்றிருக்கவில்லை. இதுவே நல்ல தருணம் என்று எண்ணி மூன்றாம் இராசேந்திரன் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்துச் சென்று போரிட்டுப் பாண்டியனை வென்றான். தனது ஆட்சியை ஏற்றுக்கொண்டு அவனைத் திறை செலுத்துமாறு செய்தான். இப்போர் இவனுடைய தந்தையினுடைய ஆட்சியின் இறுதிக்காலத்தில் (கி.பி. 1251) இவனே முழுப்பொறுப்பு ஏற்று நடத்தியதாகும்.

    பாண்டிய நாட்டில் இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனை அடுத்து முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் என்பவன் அரியணை ஏறினான். இவன் கி.பி. 1257 இல் சோழநாட்டின் மீது படையெடுத்தான். போரில் மூன்றாம் இரசேந்திரனை வென்று தனக்குத் திறை செலுத்தும் சிற்றரசனாக்கிவிட்டான். அதற்குப் பிறகு மூன்றாம் இராசேந்திரன் தனது ஆட்சிக்காலம் முழுவதும் பாண்டியனுக்குத் திறை செலுத்தியே வாழ்ந்தான். ஆற்றலும் வீரமும் இருந்தும் சோழப் பேரரசின் வீழ்ச்சியை மூன்றாம் இராசேந்திரனால் தடுத்து நிறுத்த முடியாமல் போய்விட்டது.

    மூன்றாம் இராசேந்திரனுக்குப் பின் சோழர் பரம்பரையே இல்லாது போயிற்று. சோழநாடு பாண்டிய நாட்டுடன் இணைந்தது. ஏறத்தாழ நானூறு ஆண்டு காலம் சோழநாடு என்ற பெயரில் தமிழகத்தை ஆட்சி செய்து வந்த பிற்காலச் சோழர்களின் ஆட்சி மறைந்தது. தமிழக வரலாற்றில் பிற்காலப் பாண்டியர் ஆட்சி மலரத் தொடங்கியது.

புதுப்பிக்கபட்ட நாள் : 09-12-2019 13:05:08(இந்திய நேரம்)