தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விசயாலயன் பரம்பரை

  • 5.4 விசயாலயன் பரம்பரை

    விசயாலயன் பரம்பரையில் தோன்றிச் சோழ நாட்டை ஆட்சி புரிந்த மன்னர்கள் மொத்தம் பதின்மூவர் ஆவர். அவர்கள், பிற்காலச் சோழப் பேரரசைத் தோற்றுவித்த விசயாலயன், அவன் மகன் முதலாம் ஆதித்தன், அவன் மகன் முதலாம் பராந்தகன், அவன் மகன் கண்டராதித்தன், அவன் தம்பி அரிஞ்சயன், அவன் மகன் சுந்தரசோழன், கண்டராதித்தனின் மகன் உத்தமசோழன், சுந்தரசோழன் மகன் முதலாம் இராசராசன், அவன் மகன் முதலாம் இராசேந்திரன், அவன் மகன் முதலாம் இராசாதிராசன், அவன் தம்பி இரண்டாம் இராசேந்திரன், அவன் தம்பி வீரராசேந்திரன், அவன் மகன் அதிராசேந்திரன் ஆகியோர் ஆவர். இனி, இச்சோழ மன்னர்களைப் பற்றி ஒருவர்பின் ஒருவராகக் காண்போம்.

    5.4.1 விசயாலயன் (கி.பி. 850 – 871)

    இவன் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள பழையாறை என்னும் இடத்தில் சிற்றரசனாக இருந்துவந்தான். இதே நேரத்தில் முத்தரையர்கள் தஞ்சைக்கும் திருச்சிராப்பள்ளிக்கும் இடைப்பட்ட பகுதியை ஆண்டு வந்தார்கள். முத்தரையர்களும் பாண்டியர்களும் கூட்டாக இருந்த காரணத்தால் விசயாலயனால் அவனது ஆதிக்கத்தைப் பெருக்க இயலவில்லை. இருப்பினும் விசயாலயன் தக்கதொரு தருணம் பார்த்து, முத்தரையரைத் தாக்கி அவர்களை வென்று தஞ்சையைக் கைப்பற்றிக் கொண்டான். தனது வெற்றிக்கு அடையாளமாகத் தஞ்சையில் துர்க்கைக்குக் கோயில் கட்டினான். இதனால் சோழ நாட்டில் முத்தரையர்களின் ஆதிக்கம் குறைந்தது. சோழரின் புகழ் ஓங்கியது. கி.பி. 871 இல் விசயாலயன் மறைந்தான்.

    5.4.2 முதலாம் ஆதித்தன் (கி.பி. 871-907)

    விசயாலயன் மறைவிற்குப் பின் அவனுடைய மைந்தன் முதலாம் ஆதித்தன் அரியணை ஏறினான். அரசியல் ஆற்றலும், போர்த்திறமும் ஒருங்கே வாய்ந்த இவன், தன்னுடைய தந்தை தோற்றுவித்த சோழப்பேரரசை விரிவுபடுத்தினான்.

    • திருப்புறம்பயப் போர்

    இவனது ஆட்சிக் காலத்தில் இரண்டாம் வரகுணபாண்டியனுக்கும், அபராசிதவர்மப் பல்லவனுக்கும் இடையே திருப்புறம்பயம் என்னும் இடத்தில் போர் நடந்தது. (திருப்புறம்பயம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது.) இப்போர் கி.பி. 880 இல் நடைபெற்றது. அபராசிதனுக்கு முதலாம் ஆதித்தனும், கங்க அரசன் முதலாம் பிருதிவிபதியும் துணை நின்றனர். இப்போரில் பிருதிவிபிதி கொல்லப்பட்டான். ஆயினும் அபராசிதனும் முதலாம் ஆதித்தனும் வெற்றி பெற்றனர். இவ்வெற்றியால் மகிழ்ந்த அபராசிதன் சோழநாட்டில் சில பகுதிகளை முதலாம் ஆதித்தனுக்கு அளித்தான்.

    • அபராசிதவர்மனுடன்போர்

    எனினும் சோழ நாட்டின் பெரும்பகுதி பல்லவர் வசம் இருந்துவருவது கண்டு, அதை வென்று பெறும் எண்ணத்தில் முதலாம் ஆதித்தன் அபராசிதவர்மன் மீது போர் தொடுத்தான். யானை மீதிருந்து போர் புரிந்த அபராசிதவர்மனை ஆதித்தன் வாளால் வெட்டிச் சாய்த்தான் என்று கன்னியாகுமரிக் கல்வெட்டுக் கூறுகிறது. இவ்வெற்றியின் மூலம் ஆதித்தன் பல்லவ நாட்டைச் சோழ நாட்டுடன் இணைத்துக் கொண்டான்.

    • கொங்கு நாட்டைக் கைப்பற்றல்

    முதலாம் ஆதித்தன் கொங்கு நாட்டின் மீது படையெடுத்துச் சென்று, அந்நாட்டையும் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தான். கொங்கு நாட்டிலிருந்து கொண்டு வந்த பொன்னைக் கொண்டு தில்லைச் சிற்றம்பலத்தின் முகட்டை (கூரையை) வேய்ந்தான்.

    • சேரநாட்டுடன் நட்புறவு

    இவனுடைய சமகாலத்தில் சேரநாட்டில் தாணுரவி என்பவன் ஆண்டுவந்தான். ஆதித்தன் அவனுடன் நட்புறவு கொண்டிருந்தான். ஆதித்தனின் மைந்தன் பராந்தகன், சேரனின் மகளை மணம்செய்து கொண்டான். இதனால் இந்த நட்புறவு மேலும் வலுப்பெற்றது.

    இம்மன்னன் ஒரு சிவபக்தன். காவிரியின் இரு மருங்கிலும் பல சிவாலயங்களைக் கட்டினான். கி.பி. 907 இல் காளத்திக்கு அருகில் உள்ள தொண்டைமான் ஆற்றூர் என்னும் இடத்தில் இம்மண்ணுலகை நீத்தான்.

    5.4.3 முதலாம் பராந்தகன் (கி.பி. 907 – 955)

    முதலாம் ஆதித்தனின் மகன் முதலாம் பராந்தகன் ஆவான். இவன் ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பே சோழநாடு தொண்டை மண்டலத்தையும், கொங்கு நாட்டையும் தன்னகத்தே கொண்டிருந்தது.

    • பாண்டிய நாட்டைக் கைப்பற்றல்

    சோழநாட்டின் எல்லையை மேலும் விரிவுபடுத்துவதற்காகப் பாண்டிய நாட்டின் மீது பராந்தகன் கி.பி. 910 இல் படையெடுத்தான். அப்போது பாண்டிய நாட்டை மூன்றாம் இராசசிம்மன் ஆட்சி புரிந்து வந்தான். பராந்தகனை எதிர்த்து நிற்கும் ஆற்றலின்றி, இராசசிம்மன் இலங்கைக்கு ஓடினான். இலங்கை வேந்தன் ஐந்தாம் காசிபன் என்பவனிடம் பராந்தகனை எதிர்ப்பதற்குப் படை உதவி நாடினான். ஐந்தாம் காசிபன் தனது பெரும்படை ஒன்றை இராசசிம்மனுடன் அனுப்பி வைத்தான். வெள்ளூர் என்னும் இடத்தில் நடந்த போரில் பாண்டியனையும், அவனுக்குத் துணையாக வந்த ஈழப்படையையும் புறங்கண்டான் பராந்தகன். இப்போரின் இறுதியில் பாண்டிய நாடு சோழ நாட்டின் ஒரு பகுதியானது.

    • இராஷ்டிரகூடரை வெல்லல்

    இராஷ்டிரகூட மன்னனான இரண்டாம் கிருஷ்ணன் என்பவன் சோழப் பேரரசின் அரியணையைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் சோழநாட்டின் மீது போர் தொடுத்தான். இவனுக்கு வாணர், வைதும்பர் ஆகியோர் துணை புரிந்தனர். பராந்தகனுக்குக் கங்க மன்னன் இரண்டாம் பிருதிவிபதி துணைபுரிந்தான். தஞ்சைக்கு அருகில் உள்ள வல்லம் என்னும் இடத்தில் நடந்த போரில் இரண்டாம் கிருஷ்ணனும் அவனது ஆதரவாளர்களும் படுதோல்வி அடைந்து புறங்காட்டி ஓடினர். இவ்வெற்றியால் பராந்தகனுக்கு வீரசோழன் என்ற விருதுப்பெயர் கிடைத்தது.

    • தக்கோலப் போரும் பராந்தகன் வீழ்ச்சியும்

    பராந்தகனிடம் தோற்றோடிய இராஷ்டிரகூடர், சோழ நாட்டைக் கைப்பற்றி அவனைப் பழிவாங்க வேண்டும் என்று காலம் கருதி இருந்தனர். பராந்தகனின் ஆதரவாளனான கங்க நாட்டு மன்னன் இரண்டாம் பிருதிவிபதி வாரிசு இல்லாமல் திடீரென இறந்துபோனான். இதனால் கங்க நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. பிருதிவிபதி மறைவுக்குப் பின்னர்ப் பூதுகன் என்பவன் கங்க நாட்டு ஆட்சியைப் பிடித்துக் கொண்டான். இதைத் தக்க தருணமெனக் கருதி அப்போது இராஷ்டிரகூட நாட்டை ஆண்டுவந்த மூன்றாம் கிருஷ்ணன் சோழநாட்டின் மீது படையெடுத்து வந்தான். அவனுக்கு வாணரும், வைதும்பரும் உதவியாக வந்தனர். மேலும் பூதுகனும் அவனுக்குத் துணையாகப் படையுடன் வந்தான். இராஷ்டிரகூடர் படைகளைத் தடுத்துப் போரிடுவதற்குப் பராந்தகன் தன் மைந்தன் இராசாதித்தன் தலைமையில் பெரும்படை ஒன்றை அனுப்பி வைத்தான். தக்கோலம் (அரக்கோணம் என்னும் ஊருக்கு அருகில் உள்ளது) என்னும் இடத்தில் இரு படையினர்க்கும் இடையில் (கி.பி.949இல்) கடும்போர் நடைபெற்றது. இப்போரில் பராந்தகனின் மைந்தன் இராசாதித்தன் யானை மேல் இருந்து போரிடும்போது, பூதுகன் விடுத்த அம்பொன்றால் தாக்குண்டு இறந்தான். தலைவனை இழந்து திகைத்து நின்ற, மனம் தளர்ந்துபோன சோழர் படையை இராஷ்டிரகூடப் படையினர் தாக்கி வெற்றி கண்டனர். தொடர்ந்து சோழ நாட்டினுள் முன்னேறிச் சென்று காஞ்சி, தஞ்சை ஆகிய பகுதிகளையும் கைப்பற்றிக் கொண்டனர். எனவே, தக்கோலப் போர் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.

    • சமயப்பணி

    முதலாம் பராந்தகன் தன் தந்தை ஆதித்த சோழனைப் போலவே தில்லைச் சிற்றம்பலத்தைப் பொன்னால் வேய்ந்து அழகுபடுத்தினான். ஆதித்த சோழன் ஆரம்பித்து வைத்த கோயில் பணிகளைத் தொடர்ந்து நடத்தினான். இவன் பல சிவன் கோயில்களை எழுப்பினான்.

    5.4.4 கண்டராதித்தன் (கி.பி. 949-957)

    முதலாம் பராந்தகன் காலத்திலேயே அவனுடைய இரண்டாம் மகன் கண்டராதித்தன் சோழநாட்டின் பட்டத்துக்குரிய இளவரசனாகத் தேர்ந்தெடுக்கப் பட்டான். ஆட்சிப் பொறுப்பு முழுவதும் அவனிடமே இருந்தது. கி.பி. 955இல் பராந்தகன் மறைந்தவுடன் கண்டராதித்தன் முறைப்படி முடிசூடிக் கொண்டான்.

    பராந்தகன் காலத்தில் இராஷ்டிரகூடர் பெற்ற வெற்றியால், கண்டராதித்தன் மிகவும் பலவீனமாகக் காணப்பட்டான். கண்டராதித்தனின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு பாண்டியர் எழுச்சி பெறத் தொடங்கினார். அப்போது பாண்டிய நாட்டை ஆண்டு வந்த வீரபாண்டியன் என்பவன் சோழருக்கு அதுவரை தந்து வந்த திறையையும் நிறுத்திவிட்டான். இதன் மூலம் அவன் பாண்டிய நாட்டை முற்றிலும் தன் ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்து விட்டான். எனவே, பராந்தகனது ஆட்சிக் காலத்தில் சோழநாடு மிகவும் சிறியதொரு நாடாகி விட்டது.

    கண்டராதித்தனின் மனைவி செம்பியன் மாதேவி என்பவள் ஆவாள். இவர்கள் இருவரும் சைவ சமய வளர்ச்சிக்காகப் பாடுபட்டனர். கண்டராதித்தன் பாடிய பாசுரங்கன் பன்னிரு திருமுறைகளுள் ஒன்றான ஒன்பதாம் திருமுறையில் இடம்பெற்றுள்ளன.

    • அரிஞ்சயன் (கி.பி. 956 – 957)

    கண்டராதித்தன் மறைந்தபோது அவன் மகன் உத்தம சோழன் வயதில் மிகவும் சிறியவனாக இருந்தான். எனவே, கண்டராதித்தனைத் தொடர்ந்து அவன் தம்பி அரிஞ்சயன் என்பவன் ஆட்சிக்கு வந்தான். இவன் குறுகிய காலமே ஆட்சி புரிந்தான். இவனது காலத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி எதுவும் நடைபெறவில்லை.

    5.4.5 சுந்தரசோழன் (கி.பி. 957-973)

    அரிஞ்சயனை அடுத்து அவன் மகன் சுந்தரசோழன் ஆட்சிக்கு வந்தான். இவனுக்கு இரண்டாம் பராந்தகன் என்ற பெயரும் உண்டு.

    இவன் ஆட்சிக்கு வந்தபோது சோழநாட்டின் வடபகுதியாகிய தொண்டை மண்டலம் இராஷ்டிரகூடர் வசம் இருந்தது. அதனை அவர்களுடன் போரிட்டு மீட்டுக்கொண்டான்.

    கண்டராதித்தன் காலத்தில் வீரபாண்டியன் திறை செலுத்தாமல் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்த பாண்டிய நாட்டைக் கைப்பற்றச் சுந்தரசோழன் கருதினான். தன் மூத்த மகன் ஆதித்த கரிகாலன் துணையுடன் பாண்டிய நாடு நோக்கிச் சென்றான். சேவூர் என்னும் இடத்தில் சோழப் படைக்கும் பாண்டியப் படைக்கும் இடையே பெரும்போர் நடைபெற்றது. இப்போரில் ஆதித்தகரிகாலன் வீரபாண்டியனைக் கொன்றான். வீரபாண்டியனுக்குத் துணையாக வந்த ஈழத்துப் படைகளைச் சுந்தரபாண்டியன் புறங்காட்டி ஓடுமாறு செய்தான். இவ்வெற்றியால் சுந்தரசோழனுக்கு மதுரை கொண்ட இராஜகேசரி என்ற விருதுப்பெயர் கிடைத்தது. இவன் கி.பி. 973 இல் காஞ்சியில் உள்ள தனது பொன்மாளிகையில் உயிர்நீத்தான். இவனது மனைவி வானவன் மகாதேவி ஆறாத்துயரால் உடன்கட்டை ஏறினாள்.

    சுந்தர சோழனுக்கு ஆதித்த கரிகாலன் மட்டுமன்றி, அருண்மொழிவர்மன் என்ற மற்றொரு மகனும் இருந்தான். இவர்களுள் ஆதித்தகரிகாலன் சுந்தர சோழன் ஆட்சியின் இறுதிக்காலத்தில் படுகொலை செய்யப்பட்டான். இதற்கான காரணம் சரிவரத் தெரியவில்லை. மற்றொரு மகனான அருண்மொழிவர்மனே சோழப் பேரரசை ஓர் உயர்ந்த நிலைக்குக் கொண்டு வந்த முதலாம் இராசராசன் ஆவான்.

    • உத்தம சோழன் (கி.பி. 973-985)

    கண்டராதித்தனுக்கும் செம்பியன் மாதேவிக்கும் பிறந்தவன் உத்தம சோழன் ஆவான். இவன் அரிஞ்சயன், சுந்தரசோழன் ஆகியோர் ஆட்சிக்கு வந்தபோது சிறுவனாகவே இருந்தான். எனவே சுந்தரசோழனுக்குப் பின்னர்ச் சோழ நாட்டின் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தான். இவனது ஆட்சிக் காலத்தில் போர் எதுவும் நடந்ததாகக் குறிப்பில்லை. சோழ நாடு அமைதியாக இருந்தது.

    5.4.6 முதலாம் இராசராசன் (கி.பி. 985-1014)

    சுந்தரசோழனுக்கும் வானவன் மகாதேவிக்கும் பிறந்த இரண்டாம் மகனான அருண்மொழிவர்மன் என்ற இராசராசன் கி.பி. 985 இல் ஆட்சிக்கு வந்தான். இவன் நிலையான தரைப்படையையும், வலிமை வாய்ந்த கப்பற்படையையும் கொண்டிருந்தான். சோழப் பேரரசை விரிவுபடுத்துவதற்கும், வலுப்படுத்துவதற்கும் அப்படைகளைப் பயன்படுத்தினான்.

    விசயாலயன் தொடங்கிவைத்த சோழப் பேரரசைத் தன்னுடைய ஒப்பற்ற பேராற்றல், நுண்ணறிவு, துணிவு ஆகியவற்றால் மிக உயர்ந்த நிலைக்குக் கொண்டுவந்த பெருமை சான்றவன் இராசராசன். இவன் சோழ நாட்டை ஆட்சி புரிந்த முப்பது ஆண்டுகள் தமிழக வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கன ஆகும் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

    முதலாம் இராசராசன் வரலாற்றைக் கூறும் செப்பேடுகளும் கல்வெட்டுகளும் கிடைத்துள்ளன. இவனுடைய 29ஆம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்ட கல்வெட்டு ஒன்று, ‘திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்’ என்று தொடங்கி, அவன் போர் செய்து வெற்றி பெற்றுக் கைப்பற்றிய நாடுகள் எல்லாவற்றையும் குறிப்பிட்டுக் கூறுகிறது. மேலும் திருவாலங்காட்டுச் செப்பேடு, கரந்தைச் செப்பேடு, தஞ்சைக் கல்வெட்டுகள், காஞ்சிக் கல்வெட்டுகள், ஒரு சாளுக்கியக் கல்வெட்டு ஆகியவையும் இவன் வரலாற்றைக் கூறுகின்றன. சோழர் காலத்தில் தோன்றிய கலிங்கத்துப் பரணி, மூவருலா என்னும் சிற்றிலக்கிய நூல்கள் இவனுடைய வரலாற்றை அறிய உதவும் இலக்கியச் சான்றுகளாகத் திகழ்கின்றன.

    • பாண்டிய நாட்டுப் போர்

    இராசராசன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், அண்டை நாடுகளை வென்று சோழ நாட்டின் எல்லையை விரிவுபடுத்தும் வீரச்செயலில் ஈடுபடலானான். பாண்டியரும், சேரரும், சிங்களரும் (ஈழநாட்டாரும்) சோழர்களை என்றுமே ஒன்று கூடி எதிர்த்துப் போரிடுவது என்று தங்களுக்குள் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டிருந்தனர். எனவே இராசராசன் அம்மூவரையும் வென்று ஒடுக்குவது தனது முதற்கடமை எனக் கருதினான்.

    முதலில் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்துச் சென்றான். அப்போது பாண்டிய நாட்டை அமரபுசங்கன் என்பவன் ஆண்டு வந்தான். அவனைப் போரில் வென்று பாண்டிய நாட்டைக் கைப்பற்றிக் கொண்டான்.

    • சேர நாட்டுப் போர்

    பின்பு சேரநாட்டின் மீது படையெடுத்தான். அந்நாட்டினை ஆண்டு வந்த பாஸ்கரரவிவர்மன் என்பவனைக் காந்தளூர்ச் சாலை என்னும் இடத்தில் நடந்த போரில் வெற்றி கொண்டான். காந்தளூர்ச் சாலையில் இருந்த கடற்படையில் உள்ள மரக்கலங்களை (கப்பல்களை) எல்லாம் அழித்தான். இவ்வெற்றியை இராசராசனின் 29ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு, காந்தளூர்ச் சாலைக் கலம் அறுத்து அருளி என்று குறிப்பிடுகிறது. காந்தளூர்ச் சாலை திருவனந்தபுரத்திற்குத் தெற்கே பத்துமைல் தொலைவில் உள்ள கடற்கரை சார்ந்த ஊராகப் பண்டைய நாளில் விளங்கியது.

    • ஈழத்துப் போர்

    பாண்டிய நாடும், சேர நாடும் தன் ஆட்சியின் கீழ் வந்துவிடவே, முதலாம் இராசராசன் ஈழத்தின் மீது படையெடுத்தான். வலிமை வாய்ந்த கப்பற் படை ஒன்றைத் தன் மகன் இராசேந்திரன் தலைமையில் ஈழத்துக்கு அனுப்பி வைத்தான். அப்போது ஈழ நாட்டை ஐந்தாம் மகிந்தன் என்பவன் ஆண்டுவந்தான். அவனுக்கு எதிராக அவனுடைய படை வீரர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அதை அடக்கும் ஆற்றலின்றி ஐந்தாம் மகிந்தன் ஈழத்தின் தென்பகுதியில் உள்ள ரோகண நாட்டிற்குள் சென்று ஒளிந்து கொண்டான். இராசேந்திரன் தலைமையில் சென்ற சோழப் படையினர் ஈழப் படையினரைத் தாக்கி, அவர்களை வென்று ஈழநாட்டின் வடபகுதியைக் கைப்பற்றினர். ஈழத்தின் தலைநகராக அதுவரை இருந்துவந்த அனுராதபுரம் அழிக்கப்பட்டது. பொலன்னருவா என்ற நகரம் புதிய தலைநகராயிற்று. அதற்கு ஜனநாத மங்கலம் என்ற புதிய பெயர் சூட்டப்பட்டது. ஈழநாட்டின் வடபகுதி சோழநாட்டு மண்டலங்களுள் ஒன்றாகியது. அதற்கு மும்முடிச் சோழமண்டலம் என்ற பெயர் இடப்பட்டது.

    • கங்கபாடி, நுளம்பபாடி, தடிகைபாடிப் போர்கள்

    சோழநாட்டின் எல்லையை மேலும் விரிவுபடுத்த எண்ணி முதலாம் இராசராசன் வடக்கு நோக்கியும் படை எடுத்தான். கங்கபாடி, நுளம்பபாடி, தடிகைபாடி என்னும் நாடுகளின் மீது படையெடுத்துச் சென்று அந்நாடுகளை வெற்றிகொண்டு கைப்பற்றினான். (கங்கபாடி தென்னிந்தியாவில் இப்போது உள்ள கர்நாடக மாநிலத்தின் தென்பாகத்தில் இருந்த பண்டைய நாடு; நுளம்பபாடி – கர்நாடக மாநிலத்தில் கிழக்குப் பகுதியையும், அம்மாநிலத்தில் உள்ள பெல்லாரி மாவட்டத்தையும் உள்ளடக்கிய பண்டைய நாடு; தடிகைபாடி – கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் மாவட்டத்தை உள்ளடக்கிய பண்டைய நாடு.)

    • கீழைச்சாளுக்கிய நாட்டோடு மண உறவு

    பிற்காலச் சோழர் காலத்தில் சாளுக்கியநாடு கீழைச் சாளுக்கிய நாடு, மேலைச் சாளுக்கிய நாடு என இருவகைப்பட்டதாய் விளங்கியது. கீழைச் சாளுக்கிய நாடு தக்காண பீடபூமியின் கிழக்கில் (தற்போதைய ஆந்திர மாநிலத்தில்) வேங்கியைத் தலைநகராகக் கொண்டு, கிருஷ்ணா நதி, கோதாவரி நதி ஆகியவற்றிற்கு இடையே பரந்துபட்டுக் கிடந்தது. மேலைச் சாளுக்கிய நாடு தக்காண பீடபூமியின் மேற்கில் (தற்போதைய கர்நாடக மாநிலத்தில்) கல்யாணி என்னும் ஊரைத் தலைநகராகக் கொண்டு, காவிரி, துங்கபத்திரை ஆகிய ஆறுகளுக்கிடையில் பரந்துபட்டு இருந்தது.

    முதலாம் இராசராசன் ஆட்சிக் காலத்தில் கீழைச் சாளுக்கிய நாட்டில் உள்நாட்டுக் கலகம் நடைபெற்றது. அதனால் அப்போது வேங்கியை ஆண்டு வந்த சக்திவர்மன் (கி.பி. 1000 – 1011) வலிமையிழந்து முடங்கிக் கிடந்தான். அதே நேரத்தில் மேலைச் சாளுக்கிய நாட்டைச் சத்தியாசிரியன் என்பவன் ஆண்டு வந்தான். இவன் கீழைச் சாளுக்கிய நாடு, மேலைச் சாளுக்கிய நாடு ஆகிய இரண்டையும் ஒன்றுபடுத்தி, ஒரே சாளுக்கிய நாடாக்கி அதனைத் தன் ஒரு குடைக்கீழ்க் கொண்டுவரத் திட்டமிட்டிருந்தான். இராசராசன் இத்திட்டத்தைச் சீர்குலைக்கும் நோக்கில் வேங்கியின் மீது படையெடுத்துச் சென்று, அங்கு நடந்துவந்த உள்நாட்டுக் கலகத்தை ஒடுக்கி, சக்திவர்மனை அதன் அரசனாக்கினான். மேலும் சத்திவர்மனுடைய தம்பி விமலாதித்தனுக்குத் (கி.பி. 1011–1018) தன் மகள் குந்தவையை மணம் முடித்தான். இத்திருமண உறவால் கீழைச் சாளுக்கிய நாடும், சோழநாடும் ஒன்றாக இணையும் ஓர் அரிய வாய்ப்பு உருவானது.

    • மேலைச் சாளுக்கியருடன் போர்

    அதன்பின்பு, இராசராசன் தன் மகன் இராசேந்திரன் தலைமையில் பெரும்படை அனுப்பி, மேலைச் சாளுக்கிய நாட்டை ஆண்டுவந்த சத்தியாசிரியனை (கி.பி. 997 – 1008) வென்று, அவனுடைய நாட்டில் உள்ள இரட்டபாடி ஏழரை இலக்கம் என்ற பகுதியைக் கைப்பற்றிக் கொண்டான். இதன் விளைவாகச் சோழநாட்டின் எல்லை வடக்கில் துங்கபத்திரை நதி வரையிலும் பரவியது.

    • முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரம் மீது போர்

    இராசராசன் பெற்ற வெற்றிகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது மேற்குக் கடலில் இருந்த முந்நீர்ப் பழந்தீவு பன்னீராயிரம் என்ற தீவுகளை மாபெரும் வலிமை வாய்ந்த கப்பற்படையுடன் சென்று தாக்கிக் கைப்பற்றியதாகும். இத்தீவுகள் தற்போது அரபிக்கடலில் உள்ள மாலத்தீவுகளே ஆகும்.

    • நிருவாகப் பணி

    முதலாம் இராசராசன் போரில் மட்டுமின்றி, நிருவாகத்திலும் சிறந்து விளங்கினான். தன்னுடைய மகன் இராசேந்திரனைத் தன்னோடு அரசியலில் ஈடுபடுமாறு செய்து, அவனை நாட்டிற்குப் பெரும்பணி புரியும்படி செய்தான். மத்திய அரசைப் பலப்படுத்தியதோடு நில்லாது, அதை முறைப்படி சீர்ப்படுத்தியும் அமைத்தான். மத்திய அரசு அலுவலர்கள் கிராம மன்றங்களின் செயல்பாட்டை மேற்பார்வையிட்டு வந்தனர். இதனால் கிராம மன்றங்களின் ஆட்சி நல்லமுறையில் நடைபெற்றது.

    இராசராசனது ஆட்சியில் சோழநாட்டில் உள்ள நிலம் முழுவதும் அளக்கப்பட்டது. நிலத்தை அளப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட கோல் 16 சாண் நீளமுடையதாக இருந்தது. அது உலகளந்த கோல் எனப்பட்டது. நில வரியை ஒழுங்காக வாங்கவே இச்செயல் மேற்கொள்ளப்பட்டது. இச்செயலால் இராசராசன் உலகளந்தான் என்ற சிறப்புப் பெயர் பெற்றான். மேலும் இராசராசன் நீர்ப்பாசன வசதிக்காகக் குளங்கள், ஏரிகள் பல வெட்டிக் குடி மக்களின் நன்மதிப்பைப் பெற்றான்.

    • கட்டடக் கலைப்பணி

    இராசராசன் கட்டடக் கலைக்கு அருந்தொண்டுகள் பல செய்தான். தஞ்சையில் இவன் கட்டிய பிரகதீசுவரர் கோயில் உலகப்புகழ் வாய்ந்தது. இதன் கோபுரம் 216 அடி உயரம் உடையது. இதன் உச்சியில் உள்ள விமானம் ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டது. இதன் எடை 80 டன் ஆகும். இவன் கட்டிய இக்கோயில் தென்னிந்தியக் கட்டடக் கலைக்குத் தக்க சான்றாகும்.

    • சமயப்பொறை

    இராசராசன் சைவ சமயத்தைச் சார்ந்திருந்தான். ஆயினும் இவன் எல்லாச் சமயங்களையும் சமமாகவே நடத்தினான். நாகப்பட்டினத்தில் பௌத்த விகாரம் ஒன்று கட்டுவதற்கு இவன் ஆதரவு அளித்தான். தான் கட்டிய பிரகதீசுவரர் கோயிலில் விஷ்ணுசிலை இடம்பெறச் செய்தான். மேலும் திருமாலுக்குப் பல கோயில்களையும் எழுப்பினான்.

    5.4.7 முதலாம் இராசேந்திரன் (கி.பி. 1012 – 1044)

    முதலாம் இராசராசனின் மைந்தன் ஆவான் முதலாம் இராசேந்திரன். இவனுடைய வரலாற்றை அறிய உதவும் செப்பேடுகளும், கல்வெட்டுகளும் பல கிடைத்துள்ளன. இவனுடைய ஆட்சியின் பத்தாம், பதினான்காம் மற்றும் இருபத்து நான்காம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட கல்வெட்டுகள் இவன் சோழப் பேரரசை விரிவுபடுத்தச் செய்த போர்களையும், அவற்றில் வெற்றி பெற்றுக் கைப்பற்றிய நாடுகளையும் குறிப்பிடுகின்றன. மேலும் திருவாலங்காட்டுச் செப்பேடுகளும் இவன் வரலாற்றைத் தருகின்றன.

    • இளமைக் கால வெற்றிகள்

    இராசேந்திரன் முடி சூட்டிக்கொள்வதற்கு முன்னரே தந்தையுடன் நிருவாகத்தில் ஈடுபட்டுப் பயிற்சி பெற்றவன் ஆவான். இராசராசன் ஈழநாட்டின் மீது படையெடுத்தபோதும், மேலைச் சாளுக்கிய நாட்டின்மீது படையெடுத்தபோதும் அப்படைகளுக்குத் தலைமை தாங்கிச் சென்று, அந்நாடுகளை வெற்றி கொண்டான். இதனால் தனது இளமைப் பருவத்திலேயே தந்தையைப் போன்று தனயனும் சிறந்த வீரன் என்பதை நிரூபித்துக் காட்டினான். இவை யாவும் இராசேந்திரனின் பிற்கால அரசியல் வாழ்க்கைக்கு முன் அனுபவங்களாக அமைந்தன. இராசராசன் கி.பி. 1012 இல் இராசேந்திரனைத் தன் வாரிசாக நியமித்து, அவனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டினான். கி.பி. 1014 இல் இராசராசன் மறைந்ததும், சோழப் பேரரசின் ஆட்சிப் பொறுப்பு முழுவதும் இராசேந்திரன் கைக்கு வந்தது. அப்போது சோழப்பேரரசு பரந்த நிலப்பரப்பைக் கொண்டிருந்தது. அதை மேலும் விரிவுபடுத்திய பெருமை உடையவனாய் இராசேந்திரன் விளங்கினான்.

    • ஈழம் முழுவதும் கைப்பற்றுதல்

    இராசராசன் ஈழத்தின் வடபகுதியை மட்டுமே வென்று ஆட்சி புரிந்தான். ஆனால் இராசேந்திரனோ ஈழத்தின் தென்பகுதியையும் வென்று, ஈழநாடு முழுவதையும் சுமார் 12 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான்.

    • பாண்டிய, சேர நாடுகளைக் கைப்பற்றுதல்

    இராசராசன் பாண்டிய நாட்டையும், சேர நாட்டையும் கைப்பற்றியிருந்தாலும், அவன் ஆட்சிக்குப் பின்பு அவை சோழர் பிடியிலிருந்து நழுவிவிட்டன. எனவே இராசேந்திரன் பெரும்படையுடன் சென்று போரிட்டுப் பாண்டிய நாட்டையும், சேர நாட்டையும் கைப்பற்றிக் கொண்டான். அந்நாடுகளில் சோழரின் ஆதிக்கத்தை மீண்டும் நிலை நாட்டினான்.

    • மேலைச் சாளுக்கியருடன் போர்

    ஒவ்வொரு சோழ மன்னருக்கும் மேலைச் சாளுக்கியர் தொல்லை தந்து வந்தனர். எனவே சோழ – மேலைச் சாளுக்கியப் போர் தொடர்ந்து நடைபெறுவது தொடர்கதையாயிற்று. இராசேந்திரன் மேலைச் சாளுக்கியர்மேல் படையெடுத்துச் சென்றான். முயங்கி என்னும் இடத்தில் நடந்த போரில் மேலைச் சாளுக்கிய மன்னன் சயசிங்கன் என்பவனை வென்று அவனுடைய இரட்டபாடி ஏழரை இலக்கத்தைக் கைப்பற்றினான்.

    • கங்கைப் படையெடுப்பு

    இவனது ஆட்சியின் பதினோராம் ஆண்டில் வடநாட்டுப் படையெடுப்பு நிகழ்ந்தது. மாபெரும் வீரனாகத் திகழ்ந்த இராசேந்திரன் வடக்கே படையெடுத்துச் சென்று கங்கை நீரைக் கொண்டு வந்து தனது சோழ நாட்டைத் தூய்மைப்படுத்த விரும்பினான். சோழர்க்கு உறவுநாடான வேங்கிநாடு, கோதாவரி கிருஷ்ணா ஆறுகளுக்கு இடையில் உள்ள பகுதியாகும். வேங்கிக்குத் தெற்கில் இருந்த நாடுகள் சோழர் ஆட்சிக்கு உட்பட்டிருந்ததால் முதலாம் இராசேந்திரனின் வடநாட்டுப் படையெடுப்பு வேங்கிக்கு வடக்கே இருந்து தொடங்கியது. அங்கிருந்து கலிங்கம், ஒட்டவிசயம் என்னும் நாடுகளின் வழியாகச் சென்ற சோழப்படை வங்காள நாட்டைத் தாக்கியது. வங்காளத்தை அப்போது மகிபாலன் என்பவன் ஆண்டு வந்தான். சோழப்படை மகிபாலனைப் புறங்காட்டி ஓடச் செய்தது. மேலும் கங்கை செல்லும் வழியில் பல வடநாட்டு மன்னர்களோடும் போர் செய்து வெற்றி கண்டது; பின்பு கங்கையாற்று நீரை வடநாட்டு மன்னர்களின் தலையில் சுமக்கச் செய்து சோழநாடு திரும்பியது. இராசேந்திரன் கங்கையில் இருந்து கொண்டு வந்த நீரைத் தான் புதிதாக உருவாக்கியிருந்த தலைநகரத்தில் வெட்டுவித்த ஏரியில் நிரப்பி, அந்த ஏரிக்குச் சோழகங்கம் என்ற பெயரைச் சூட்டி வெற்றிவிழா நடத்தினான். தனக்குக் கங்கை கொண்ட சோழன் என்ற சிறப்புப் பெயரையும் சூடிக்கொண்டான். புதிய தலைநகரத்துக்குக் கங்கை கொண்ட சோழபுரம் எனப் பெயர் இட்டான். அந்நகரில், தன் தந்தை தஞ்சையில் கட்டிய பிரகதீசுவரர் கோயில் போன்ற அமைப்புடைய ஒரு கோயிலைக் கட்டினான். தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில் கோபுரம் 216 அடி உயரம் உடையது. கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள கோயில் கோபுரம் 185 அடி உயரம் உடையது. கங்கை கொண்ட சோழபுரம் தற்போது தமிழகத்தில் அரியலூருக்கு அருகில் ஒரு சிற்றூராகக் காட்சியளிக்கிறது.

    • கடார வெற்றி

    இராசேந்திரனின் ஆட்சியின் முற்பகுதியில் சோழநாட்டிற்கும் கடாரத்திற்கும் இடையே நல்லுறவு இருந்தது. (கடாரம் – கிழக்கிந்தியத் தீவுகளில் ஒன்றாகத் தற்போது சுமத்ரா என அழைக்கப்படும் தீவு). இராசேந்திரன் சீன நாட்டிற்குச் சோழத் தூதுவர்களை அனுப்பினான். இதனால் சோழநாடு சீனநாட்டோடு வாணிபத் தொடர்பினைப் பெருமளவு பெற்றது. அப்போது கடாரத்தை ஆண்டுவந்த ஸ்ரீவிஜயன் என்ற மன்னன், சோழநாட்டுக்கும் சீனநாட்டிற்கும் இடையிலே நடந்து வந்து வாணிபத்தைத் துண்டித்துவிட முயன்றான். இதனால் கோபம் கொண்ட இராசேந்திரன் மாபெரும் வலிமை வாய்ந்த கப்பற்படையுடன் கடாரத்தின் மீது போர் தொடுத்தான். கடார மன்னன் ஸ்ரீவிஜயனைப் போரில் வென்று, அங்குச் சோழர் ஆட்சியை நிறுவித் தாயகம் திரும்பினான். கடாரத்தை வென்று கைப்பற்றியதால், கடாரம் கொண்டான் என்ற சிறப்புப் பெயர் பெற்றான்.

    முதலாம் இராசேந்திரன் கடாரம் கொண்ட வெற்றியைக் கலிங்கத்துப்பரணி,

    குளிறு தெண்திரைக் குரை கடாரமும்
             கொண்டு மண்டலம் குடையுள் வைத்தும்

    (கலிங்கத்துப்பரணி, 202)

    என்று கூறுகிறது. இதற்குப் பொருள் ‘ஒலிக்கின்ற தெளிந்த அலைகளையும், பலவகை ஒலிகளையும் உடைய கடாரத்தைக் கைப்பற்றி அதைத் தன் குடையின்கீழ் இராசேந்திரசோழன் வைத்தான்’ என்பதாகும்.

    முதலாம் இராசேந்திரனுக்கு இராசாதிராசன், இராசேந்திரன், வீரராசேந்திரன் என்ற மூன்று ஆண்மக்கள் இருந்தனர். இம்மூவரும் முதலாம் இராசேந்திரன் மறைவுக்குப் பின்னர், ஒருவருக்குப்பின் ஒருவராகச் சோழநாட்டின் அரியணை ஏறி ஆட்சி செய்தவர்கள் ஆவர். மேலும் முதலாம் இராசேந்திரனுக்கு அருண்மொழி நங்கை, அம்மங்காதேவி என்ற இரண்டு பெண்மக்கள் இருந்தனர். இவர்களுள் அம்மங்காதேவியைக் கீழைச் சாளுக்கிய வேங்கி மன்னன் இராசராச நரேந்திரன் என்பவனுக்கு மணம் முடித்துத் தந்தான். இதனால் முதலாம் இராசராசன் காலத்தில் முகிழ்த்த சோழ – கீழைச் சாளுக்கிய உறவு இவன் காலத்தில் மேலும் வலுப்பெற்றது.

    5.4.8 முதலாம் இராசாதிராசன் (கி.பி. 1018 – 1054)

    முதலாம் இராசேந்திரன் தன் ஆட்சியின் ஏழாம் ஆண்டிலேயே (கி.பி. 1018), தன் மூத்த மகன் முதலாம் இராசாதிராசன் என்பவனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டி, அவன் அரசியலில் பயிற்சி பெற வழி செய்தான். இராசாதிராசன் 26 ஆண்டுகள் இளவரசனாக விளங்கித் தன் தந்தையுடன் நிருவாகத்திலும் போரிலும் கலந்து கொண்டு அரும்பணி ஆற்றினான். கி.பி. 1044 இல் முதலாம் இராசேந்திரன் இறக்கவே, சோழநாட்டின் ஆட்சிப் பொறுப்பு முழுவதையும் முதலாம் இராசாதிராசன் ஏற்றுக்கொண்டான்.

    • ஈழத்துப் போர்

    முதலாம் இராசாதிராசன் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நேரத்தில், ஈழத்தில் சோழரின் ஆட்சியை எதிர்த்துக் கிளர்ச்சிகள் நடந்தன. இவன் கடுமையான போர் நடவடிக்கைகளை மேற்கொண்டு அக்கிளர்ச்சிகள் அனைத்தையும் ஒடுக்கினான்.

    • மேலைச் சாளுக்கியருடன் போர்

    சோழ நாட்டுக்கு மேலைச் சாளுக்கியரின் தொல்லை முதலாம் இராசேந்திரன் காலத்தைப் போலவே, முதலாம் இராசாதிராசன் காலத்திலும் தொடர்ந்தது. எனவே அவர்களை வென்று அடக்கும் பொருட்டு, மேலைச் சாளுக்கிய நாட்டின் மீது இராசாதிராசன் படையெடுத்துச் சென்றான். அப்போது அந்நாட்டை ஆண்டு வந்த முதலாம் சோமேசுவரன் என்பவனை எதிர்த்துப் போரிட்டான். அப்போரில் இராசாதிராசன் மேலைச் சாளுக்கிய மன்னனையும், அவனுக்குத் துணையாக வந்த மன்னர்களையும் தோற்கடித்தான். காம்பிலி என்னும் நகரில் இருந்த சாளுக்கிய அரண்மனையைத் தகர்த்தான். அவர்களின் தலைநகராகிய கல்யாணியையும் மண்ணோடு மண்ணாக்கினான்.

    ஆயினும், மேலைச் சாளுக்கியருடன் மேலும் பல போர்கள் நடந்தன. இறுதியாகக் கி.பி. 1054இல் கொப்பம் என்னும் ஊரில் நடைபெற்ற போரில் முதலாம் இராசாதிராசனும், அவனது தம்பி இரண்டாம் இராசேந்திரனும் இணைந்து ஈடுபட்டனர். (கொப்பம், கிருஷ்ணா நதிக்கரையில் உள்ளது) மேலைச் சாளுக்கிய மன்னன் முதலாம் சோமேசுவரன் இம்முறையும் சோழர்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்காமல் தோற்றோடினான். ஆனால் போர்க்களத்தில் யானை மேல் இருந்து போர் புரிந்த முதலாம் இராசாதிராசன் பகைவர்களின் அம்புகள் தாக்கிப் புண்பட்டு வீரமரணம் எய்தினான். இதனால் அவனைக் கல்வெட்டுகள் ஆனைமேல் துஞ்சிய மன்னன் என்று புகழ்கின்றன. முதலாம் இராசாதிராசன் மறைந்ததும் உடனடியாக அவன் தம்பி இரண்டாம் இராசேந்திரன் போர்க்களத்திலேயே சோழப் பேரரசனாக முடி சூடிக் கொண்டான்.

    • இரண்டாம் இராசேந்திரன் (கி.பி. 1052-1064)

    இராசாதிராசனுக்குப் பின்னர் அவனது தம்பி இரண்டாம் இராசேந்திரன் சோழநாட்டு மன்னன் ஆனான். இவன் கங்கைகொண்ட சோழபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செலுத்தினான்.

    கொப்பம் என்னும் இடத்தில் தோல்வியுற்று ஓடிய முதலாம் சோமேசுவரன், தான் அடைந்த அவமானத்தை நினைத்து, அதனைப் போக்கிக் கொள்ளப் பெரும்படை திரட்டிக்கொண்டு வந்தான். முடக்காறு என்னும் இடத்தில் இரண்டாம் இராசேந்திரனை எதிர்த்துநின்று போர் செய்தான். (முடக்காறு கிருஷ்ணா ஆற்றின் கரையில் உள்ளது.) இப்போரிலும் அவன் இரண்டாம் இராசேந்திரனிடம் தோல்வி அடைந்து மேலும் அவமானத்திற்கு ஆளானான்.

    இரண்டாம் இராசேந்திரன் அறப்பணிகள் பல செய்துள்ளான். திருவரங்கம் கோயிலுக்கு நன்கொடைகள் வழங்கினான். அக்கோயிலைப் பழுது பார்த்தான். கோயில்களில் பாரதமும், இராமாயணமும் விளக்கிக் கூறுவதை ஊக்குவித்தான்.

    5.4.9 வீரராசேந்திரன் (கி.பி. 1063-1070)

    இரண்டாம் இராசேந்திரனை அடுத்து அவனது இளவல் வீரராசேந்திரன் அரியணை ஏறினான். தனக்கு முன்பு சோழநாட்டை ஆட்சி புரிந்த மன்னர்களைப் போல இவனும் மேலைச் சாளுக்கியர்களோடு பல்வேறு போர்களை நிகழ்த்தியுள்ளான்.

    • மேலைச் சாளுக்கியருடன் போர்

    மேலைச் சாளுக்கிய மன்னன் முதலாம் சோமேசுவரன் தனக்கும் தன் குலத்திற்கும் தொடர்ந்து ஏற்பட்ட பெரும்பழியைப் போக்கிக்கொள்ள எண்ணினான். கூடல் சங்கமம் என்னும் இடத்தில் படையுடன் வந்து நேருக்குநேர் நின்று தன்னோடு போர்புரிய வருமாறு வீரராசேந்திரனுக்கு அறை கூவல் விடுத்தான். (கூடல் சங்கமம் கிருஷ்ணா, துங்கபத்திரை ஆகிய இரண்டு ஆறுகளும் கூடும் இடத்தில் உள்ளது). வீரராசேந்திரன் அவ்விடத்தில் பெரும்படையுடன் சென்று ஒரு திங்கள் வரை காத்திருந்தான். ஆனால் சோழர் படை இருந்த பக்கம் முதலாம் சோமேசுவரன் வரவேயில்லை. பின்பு வீரராசேந்திரன் துங்கபத்திரை ஆற்றின் கரையில் வெற்றித் தூண் ஒன்றை நாட்டிவிட்டுத் தன் நாடு திரும்பினான். முதலாம் சோமேசுவரன் கொடும் நோய்க்குள்ளாகி, மருத்துவம் பல செய்தும் பலன் அளிக்காததால் துங்கபத்திரை ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டான் என்று மைசூர்க் கல்வெட்டுக் கூறுகிறது. தனது அடுக்கடுக்கான தோல்விகளைத் தாங்கமுடியாத காரணத்தால் கூட அவன் இவ்வாறு செய்திருக்கலாம் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் சிலர் கூறுகின்றனர்.

    • மேலைச் சாளுக்கியருடன் மண உறவு

    மேலைச் சாளுக்கிய நாட்டில் முதலாம் சோமேசுவரனுக்குப் பின்னர் அவனுடைய மூத்த மகன் இரண்டாம் சோமேசுவரன் அரியணை ஏறினான். இவனை எதிர்த்து அவனுடைய தம்பி ஆறாம் விக்கிரமாதித்தன் என்பவன் அரியணை மீது உரிமை கொண்டாடினான். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மேலைச் சாளுக்கியருடன் தொடர்ந்து போரிடுவதை விட்டு உறவு ஏற்படுத்திக் கொள்ளலாம் என எண்ணினான் வீரராசேந்திரன். எனவே வாரிசு உரிமைப் போரில் வீரராசேந்திரன் ஆறாம் விக்கிமாதித்தனை ஆதரித்தான். வீரராசேந்திரனின் தலையீட்டுக்கு அஞ்சி, இரண்டாம் சோமேசுவரன் தன் நாட்டை இரண்டாகப் பங்கிட்டு, ஒரு பாதியைத் தன் தம்பி ஆறாம் விக்கிரமாதித்தனுக்கு அளித்துவிட்டு, எஞ்சிய பாதியை மட்டும் தன் ஆளுகைக்குள் வைத்துக் கொண்டான். வீரராசேந்திரன் தன் மகளை ஆறாம் விக்கிரமாதித்தனுக்கு மணம் முடித்துக் கொடுத்தான். இத்திருமணத்தின் விளைவாக இரு நாடுகளுக்கும் இடையில் நல்லுறவு ஏற்பட்டது.

    வீரராசேந்திரன் பல அறப்பணிகள் செய்தான். சிதம்பரம் கோயிலுக்கு நன்கொடைகள் வழங்கினான். பிராமணர்களுக்குப் பரிசில்கள் வழங்கிக் கௌரவித்தான். இவனது காலத்தில் புத்தமித்திரர் என்பவர் வீரசோழியம் என்னும் இலக்கண நூலை இயற்றினார்.

    • அதிராசேந்திரன் (கி.பி. 1070)

    வீரராசேந்திரன் மறைவுக்குப் பின்பு அவன் புதல்வன் அதிராசேந்திரன் அரியணை ஏறினான். அரியணை ஏறிய சில மாதங்களிலேயே இவன் வாழ்நாள் முடிந்துபோனது. இவன் நோய்வாய்ப்பட்டு இறந்தான் என்றும், உள்நாட்டுக் கிளர்ச்சியில் கொல்லப்பட்டான் என்றும் இரு கருத்துகள் நிலவுகின்றன.

    அதிராசேந்திரன் ஆட்சியுடன், விசயாலய சோழன் பரம்பரையில் வந்த சோழ மன்னர்களின் ஆட்சி முடிவடைந்து விடுகிறது. அதற்குப் பின்னர்ப் புதிய பரம்பரை ஒன்று தோன்றிச் சோழநாட்டை ஆட்சி செய்யத் தொடங்கியது.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I

    1.
    பிற்காலச் சோழப் பேரரசைத் தோற்றுவித்தவன் யார்?
    2.
    திருப்புறம்பயப் போரில் அபராசிதனுக்குத் துணை நின்ற சோழ மன்னன் யார்?
    3.
    தில்லைச் சிற்றம்பலத்தைப் பொன்னால் வேய்ந்த மன்னர்கள் யாவர்?
    4.
    முதலாம் பராந்தகன் காலத்தில் சோழநாட்டின் மீது படையெடுத்து வந்த இராஷ்டிரகூட மன்னன் யார்?
    5.
    சேவூர்ப் போரில் வீரபாண்டியனைக் கொன்றவன் யார்?
    6.
    காந்தளூர்ச் சாலைக் கலம் அறுத்து அருளியவன் யார்?
    7.
    முதலாம் இராசராசன் தன் மகள் குந்தவையை யாருக்கு மணம் முடித்தான்?
    8.
    முதலாம் இராசராசன் ஆட்சியில் நிலத்தை அளப்பதற்குப் பயன்பட்ட கோல் எவ்வாறு அழைக்கப்பட்டது?
    9.
    கீழைச் சாளுக்கிய நாட்டின் தலைநகர் யாது?
    10.
    தஞ்சைப் பிரகதீசுவரர் கோயிலைக் கட்டியவன் யார்?
    11.
    முதலாம் இராசேந்திரன் புதிதாக உருவாக்கிய தலைநகரத்தின் பெயர் என்ன?
    12.
    கடாரம் கொண்டான் யார்?
    13.
    கொப்பத்துப் போரில் வீர மரணம் எய்திய சோழமன்னன் யார்?
    14.
    வீரசோழியம் என்னும் நூலை இயற்றியவர் யார்?
    15.
    விசயாலய சோழன் பரம்பரை யாருடைய ஆட்சியுடன் முடிவுற்றது?
புதுப்பிக்கபட்ட நாள் : 09-12-2019 13:01:01(இந்திய நேரம்)