தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பின்புலங்கள்

  • 4.1 பின்புலங்கள்

    அரசியல், சமயம், சமூகம், வாழ்வியல் கோட்பாடுகள் ஆகியவை பின்புலங்களாக அமைந்து எத்தகைய பாடுபொருள் மாற்றங்களை ஏற்படுத்தின, எத்தகைய இலக்கியங்கள் படைக்கப்பட்டன என்பதைப் பார்ப்போம்.

    4.1.1 அரசியல் பின்புலம்

    இரண்டாம் நந்திவர்மனின் மகன் தந்திவர்மன் (கி.பி.774-825) ஐம்பது ஆண்டுகள் பல்லவ அரசை ஆட்சி செய்தான். எனினும் இவனது ஆட்சிக்காலத்தில் இராட்டிரகூடர், பாண்டியர் தாக்குதலுக்குக் காஞ்சி உள்ளாயிற்று. இராட்டிரகூட அரசன் துருவன் காஞ்சி நகரத்தை முற்றுகையிட்டான். அப்போரில் தந்திவர்மன் தோல்வியுற்றான். தனது பெரிய யானைப் படையைத் துருவனுக்கு அளித்துச் சரண் புகுந்தான் என்று இரதனபுரப் பட்டயம் கூறுகிறது. இங்ஙனம் துருவனுக்கு அடங்கிக் கப்பம் கட்டும் நிலை ஏற்பட்டது. கி.பி.803இல் மீண்டும் இராட்டிரகூட - பல்லவப் போர் நடந்தது. இம்முறை போர் தொடுத்து வந்தவன் துருவனின் மூன்றாம் மகன் கோவிந்தன். அவனிடமும் தந்திவர்மன் தோற்றான். கோவிந்தன் இராமேச்சுவரம் வரை சென்று அங்கு கி.பி.804இல் பட்டயம் ஒன்றை வெளியிட்டு (பிரிட்டிஷ் காட்சிச் சாலை பட்டயம் E.P. Ind Vol. II P.126) மீண்டான். மூன்றாம் கோவிந்தன் வடநாடுகளை வெல்லச் சென்றான். அப்போது தந்திவர்மன், கங்கபாடி அரசன், சேர, சோழ, பாண்டியர் அனைவரும் ஒன்று சேர்ந்து கோவிந்தனை வெல்லத் திட்டமிட்டதாக, ‘கஞ்சன் பட்டயம்’ கூறுகிறது. கோவிந்தன் பெரும்படையுடன் வந்து கி.பி.808-810இல் தென்னாட்டு அரசர் அனைவரையும் வென்றான். காஞ்சியைக் கைப்பற்றினான். சோழ, பாண்டிய, பல்லவ நாடுகளில் இராட்டிரகூட வீரர்கள் திரிந்தனர். இதை அறிந்து இலங்கை அரசன் அவனுக்குப் பரிசுகள் பல அனுப்பி நட்புக் கொண்டான். இவ்வாறு பல்லவ தந்திவர்மன் சந்தித்த மூன்று பெரும் போர்களும், போர்த் தோல்விகளும் பல்லவ அரசைத் தளர்வுறச் செய்தன.

    வரகுண பாண்டியன் கி.பி.800 முதல் 830 வரை பாண்டிய நாட்டை ஆண்டவன். அவன் தகடூர் அதியமானை எதிர்த்தபோது தந்திவர்ம பல்லவன் அதியமானை ஆதரித்தான். சேரனும் அவனை ஆதரித்தான். வரகுண பாண்டியன் கி.பி.806 இல் இவர்கள் அனைவரையும் தோற்கடித்தான். பல்லவர் ஆட்சியின் கீழ் இருந்த சோழநாடு முழுவதையும் தொண்டை நாட்டில் பெண்ணையாற்றங்கரை வரை உள்ள பகுதியையும் பாண்டியன் கைப்பற்றிக் கொண்டான். திருச்சிராப்பள்ளி மலைக்கோயில், திருநெய்த் தானம், திருவிசலூர் ஆகிய இடங்களில் வரகுணன் பட்டயங்கள் உள்ளன. வடக்கே இராட்டிரகூடர் படையெடுப்பும், தெற்கே பாண்டியர் படையெடுப்பும் பல்லவ மன்னன் தந்திவர்மனைத் தத்தளிக்கச் செய்தன. இவனது கல்வெட்டுகள் செஞ்சிக்கு அருகில் உள்ள தொந்தூர், உத்தர மல்லூர், திருவல்லிக்கேணி, கூரம், மலையடிப்பட்டு, திருவெள்ளறை, ஆலம்பாக்கம் ஆகிய இடங்களில் மட்டுமே கிடைத்துள்ளன.

    தந்திவர்மனுக்குப் பின் அவனது மகன் மூன்றாம் நந்திவர்மன் (கி.பி.825 முதல் கி.பி.850 வரை) அரசன் ஆனான். “இவன் சந்திர குலத்தவன். சேர, சோழ, பாண்டியரை வெறியலூர், பழையாறு, வெள்ளாறு, தெள்ளாறு ஆகிய இடங்களில் நடந்த போர்களில் முறியடித்தவன். மூவேந்தரிடமும் வடபுலத்தவரிடமும் திறை பெற்றவன்” என்று நந்திக் கலம்பகம் கூறுகிறது.

    இவன் ‘பல்லவர் கோள் அரி’ என்று குறிக்கப்படுகிறான். (பல்லவர் கோள் அரி - அரி என்றால் சிங்கம். கோள் - பகைவர்; பகைவருக்குச் சிங்கம் போன்றவன்.) பாண்டியனை, தெள்ளாறு என்ற இடத்தில் வென்றதால், தெள்ளாறு எறிந்த நந்திவர்மன்’ என்று அழைக்கப்பட்டான் என்று பெல்லாரிக் கோட்டத்தில், துங்கபத்திரை ஆற்றங்கரையில் உள்ள குருக்கோடு என்ற இடத்தில் கி.பி.830இல் இராட்டிரகூட மன்னன் அமோகவர்சனை வென்று பல்லவ அரசின் இழந்த புகழை மீட்டான். இச்செய்தியை நந்திக்கலம்பகம் எடுத்துரைக்கின்றது

    எனதே கலைவளையும் என்னதே மன்னர்
    சினஏறு செந்தனிக்கோல் நந்தி - இனவேழம்
    கோமறுகில் சீறிக் குருக்கோட்டை வென்றாடும்
    பூமறுகில் போகாப் பொழுது                        (2)

    குருக்கோட்டைக் குறுகா மன்னர்
    போர்க்கின்ற புகர்முகத்துக் குளித்த வாளி            (35)

    -கேளாதார்
    குஞ்சரங்கள் சாயக் குருக்கோட்டை அத்தனையும்
    அஞ்சரங்கள் ஆர்த்தான் அருள்                     (34)

    ஆடக மேரு வில்லார் அருளினால் அமரிற்சென்று
    கூடலர் முனைகள் சாய வடபுலம் கவர்ந்துகொண்டு

    (பெரியபுராணம், கழற்சிங்க நாயனார்புராணம்:2)

    என்று இவனது வெற்றி பெரிய புராணத்தில் குறிக்கப்பட்டு உள்ளது.

    வண்மையால் கல்வியால் மாபலத்தால் ஆள்வினையால்
    உண்மையால் பாராள் உரிமையால் - திண்மையால்
    தேர்வேந்தன் வானேறத் தெள்ளாற்றில் வென்றானோடு
    யார்வேந்தர் ஏற்பார் எதில்.

    என்று பாரத வெண்பாவில் பெருந்தேவனார் இவனது வெற்றியைப் புகழ்ந்துள்ளார்.

    மூன்றாம் நந்திவர்மனுக்கு, மூவேந்தரும் வடபுலத்து அரசரும் திறை தந்தனர் என்றும் (27), புகாராகிய காவிரிபூம்பட்டினம் இவனது ஆட்சிக்கு உட்பட்டிருந்தது என்றும் (44) நந்திக்கலம்பகம் பராட்டுகிறது.

    அவனிட்ட வழக்கன்றோ
    வழக்கிந்த வையத்தார்க்கே                     (53)

    அறம் பெருகும் தனிச்செங்கோல் மாயன்         (60)

    பொதுவின்றி ஆண்ட பொலம்பூண் பல்லவன்      (61)

    தண் செங்கோல் நந்தி தனிக்குடையுடையவன்     (72)

    தமிழ்த் தென்றல் புகுந்துலவும் தண் சோழநாடன்   (74)

    என்றும் போற்றப்பட்டுள்ளான். தந்தையின் காலத்தில் இழந்த பல்லவர் புகழை மீட்டுத் தந்தான், மூன்றாம் நந்திவர்மன்.

    4.1.2 சமயப் பின்புலம்

    பல்லவ மன்னன் தந்திவர்மனைப் பல்லவர் காலப் பட்டயங்கள் செந்தாமரைக் கண்ணனான திருமாலின் அவதாரம் போன்றவன்; அன்பு, அருள், ஈகை, ஒழுக்கம் இவற்றுக்குப் புகலிடமானவன் என்கின்றன. இவன் திருச்சிராப்பள்ளிக் கூற்றத்தில் உள்ள ஆலம்பாக்கத்திற்கு ‘தந்திவர்ம மங்கலம்’ எனத் தன் பெயரிட்டு அதனைப் பிரமதேயமாக வழங்கினான். அங்குக் கைலாசநாதர் கோயிலைக் கட்டினான். இவன் வைணவன். ஆயினும் சைவ-வைணவக் கோயில்கட்கு நிரம்பப் பொருள் தந்தான் என்பதைப் பட்டயங்கள் உறுதி செய்கின்றன. இவனது 16ஆவது ஆட்சி ஆண்டில் முத்தரைய மன்னன், திருவாலத்தூர் மலையைக் கோவிலாகக் குடைந்து பெருமாளை எழுந்தருளச் செய்தான் என்பது மலையடிப்பட்டி வாகீசர் கோவிலின் அழிந்த மண்டபத்தில் உள்ள கல்வெட்டில் காணப்படுகிறது. தந்திவர்மன் காஞ்சிப்பரமேச்சுர விண்ணகரத்திற்குப் பொற்குடம் ஒன்றை அளித்துள்ள செய்தியைக் கல்வெட்டுத் தருகிறது.

    மூன்றாம் நந்திவர்மன் சிற்றூர்களைத் தேவதானமாகத் தந்தான். திருக்காட்டுப்பள்ளியில் உள்ள சிவபெருமான் கோவிலுக்கு ஒரு சிற்றூர் தந்ததைக் கல்வெட்டுத் தெரிவிக்கிறது. இவன் திருநாகேச்சுரத்தைத் தன் பெயரால், ‘குமார மார்த்தாண்டபுரம்’ என்று அழைத்துத் தானமாகத் தந்தான். திருவல்லம் பெருமானுக்குப் பல அறங்கள் செய்துள்ளான். திருச்சிக்கு அருகில் உள்ள கற்குடி என்னும் இடத்தில் உள்ள நிலத்தை நான்மறையாளருக்கு அளித்தனன். திருவிடைமருதூரில் கோவில் திருப்பணி செய்து உள்ளான். இவனது மனைவி தஞ்சையை அடுத்த நியமம் என்ற சிற்றூரில் உள்ள சிவன் கோவிலுக்குச் சித்திரை நாளில் திருவமுது செய்தருள நெல், பால், தயிர், 5 நாழியும் அரிசி பதக்கும் வாங்க 5 கழஞ்சு பொன்னும் அளித்துள்ளாள். இவனது கீழிருந்த சிற்றரசர்களும் திருப்பணி செய்யத் தயங்கிடவில்லை. குன்றாண்டார் கோவில் (புதுக்கோட்டை) திருஆதிரை நாளில் 100 பேருக்கு உணவளிக்க வலுவூரான் என்பவன் அரிசி தானம் செய்தான். ஒருவன் திருநெய்த்தானம் சிவன் கோவிலில் நந்தாவிளக்குக்காகப் பொன் அளித்தான். ஒருவன் செந்தலை - சுந்தரேசுவரர் கோவிலுக்கு நிலம் அளித்தான். திருவல்லம் கோவிலுக்கு மூன்று சிற்றூர்கள் தேவதானமாக விடப்பட்டன. அங்குத் திருப்பதிகம் ஓதுவார் உள்படப் பலபணி செய்வோருக்கு 2000 காடி நெல்லும் 20 கழஞ்சு பொன்னும் தரப்பட்டன. ஒருவன் திருப்பராய்த்துறையில் உள்ள கோவிலில் இரண்டு விளக்குகள் எரிக்கப் பொன் தந்ததாகக் கல்வெட்டு கூறுகிறது. ஒருவன் குடிமல்லம் பரசுராமேசுவரர்க்குத் திருநந்தா விளக்குகட்கும் நெய்க்குமாக நிலம் அளித்தான்.

    மூன்றாம் நந்திவர்மனை, ‘சிவனை முழுதும் மறவாத சிந்தையன்’ என்று நந்திக்கலம்பகம் போற்றுகிறது. சுந்தரர் தமது திருத்தொண்டத் தொகையுள் இவனை ஒரு நாயனாராகப் பாடிப் புகழ்ந்து, “கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்” என்று கூறியுள்ளார். இவனது கோயில் திருப்பணிகளும் இவனை ஒரு சிறந்த சிவபக்தன் என்று உரைக்கின்றன. வேலூர் பாளையப் பட்டய வரிகள் இதை அரண் செய்கின்றன. ‘சிவனது திரு அடையாளம் நெற்றியில் கொண்ட (திருநீறு அணிந்த) நந்திவர்மன் கைகளைக் குவித்து, எனக்குப் பின்வரும் அரசர் இந்தத் திருப்பணியைப் பாதுகாப்பராக என்று வேண்டுகின்றான்’ என்கிறது, அந்தப் பட்டயம்.

    சைவ, வைணவ, சமண, பௌத்த இலக்கியங்கள் இக்காலக் கட்டத்தில் தோன்றியதில் வியப்பு இல்லை.

    4.1.3 சமூகப் பின்புலம்

    பல்லவர் வடக்கிலும், தெற்கிலும் பெரும் போர் செய்ததால் நாட்டில் வறுமை ஏற்பட்டது. அதை மூன்றாம் நந்திவர்மன் நீக்கினான் என்று கலம்பகம் (செய்யுள் - 11) கூறுகின்றது. அதே காலத்தில் சோழநாட்டில் பெரும்பஞ்சம் உண்டானதைக் கோட்புலி நாயனார் வரலாற்றில் காண்கிறோம். அவர் போருக்குப் போயிருந்தபோது பெரும்பஞ்சம் உண்டானது. அதனால் அவர் சிவனடியார்களுக்கென வைத்திருந்த நெல்லை உறவினர் பயன்படுத்திக் கொண்டனர் என்ற செய்தியைக் கலம்பகச் செய்தியுடன் பொருத்திப் பார்த்தால் பஞ்சம் உண்மை என்பது புலனாகும்.

    மக்கள் போர், பஞ்சம் இவற்றால் பாதிக்கப்பட்டதைத் தவிர பிறநிலைகளில் பாதிக்கப்படவில்லை. ‘அறம் பெருகும் தனிச் செங்கோல் மாயன்’ (நந்திக்கலம்பகம் - 60), தண்செங்கோல் நந்தி (72), பகை இன்றிப் பார் காக்கும் பல்லவர் கோன் (70) முதலிய தொடர்களால் அரசனது ஆட்சி குளிர்ச்சி மிக்கதாய் இருந்ததை அறியலாம். ‘கடல் சூழ்ந்த உலகமெல்லாம் காக்கின்ற பெருமான்’ என்று சுந்தரரும், ‘நாடு அறநெறியில் வைக நன்னெறி வளர்த்தான்’ என்று சேக்கிழாரும் பாராட்டினர். அவரவர் வாழ்வியல் நெறிகளின்படி வாழ்ந்தனர். அரசன் போர் செய்தான். குடிகளைக் காத்தான். அந்தணரை ஓம்பினான். அந்தணர்கள் பேணப்பட்டனர். வீரர்கள் போரிட்டனர். வணிகர்கள் கடல் வணிகமும் செய்தனர். மாமல்லபுரம், மயிலாப்பூர் இரண்டும் சிறந்த துறைமுகங்களாக இருந்ததை நந்திக் கலம்பகத் தொடர்கள் புலப்படுத்துகின்றன. சைவ, வைணவ, சமண, பௌத்த சமயத்தினர் தத்தம் சமயத் தொண்டினைச் செய்தனர். உழைக்கும் மக்கள் தம் உழைப்பில் அடியவரைப் புரந்தனர்; கோயில்களுக்குத் தம்மால் இயன்றதை நல்கினர்.

    சமூக மாற்றம்

    பல்லவர் போர்களைச் சந்தித்தனர். நாட்டில் பஞ்சம், வறுமை தலைகாட்டியது. அதைச் சரி செய்யலாயினர். தெய்வ பக்தியும், நால் வருணப் பகுப்பில் நம்பிக்கையும் உடையவராக இருந்தனர். சைவர்கள், வைணவர்கள், தத்தம் திருத்தொண்டினைத் தொடர்ந்தனர். சமணர்கள் கதை தழுவிய இலக்கிய நூல்களைச் செய்தனர். பௌத்தர்கள் கதையையும், சிறு பதிக நூலையும் செய்தனர்.

    4.1.4 வாழ்வியல் பின்புலம்

    ‘நந்தி நூல் வரம்பு முழுதும் கண்டான்’ (செய்யுள் 3) நூற்கடல் புலவன் (26) என்று கலம்பகம் போற்றும் நந்திவர்மன் கல்வி கேள்விகளில் சிறந்திருந்ததுடன், சிறந்த வள்ளலாகவும் இருந்தான். ‘நந்தி வறியோர் சொன்ன பொருள் நல்கு வள்ளல்’ (24) ஒழியா வண்கைத் தண்ணருள் நந்தி (43) முதலிய தொடர்கள் உணர்த்தும், பல்லவனது வேலூர்ப் பாளையக் கல்வெட்டு


    (1) நந்திவர்மன் ஆட்சியில் வசந்தகாலம் சிறப்பளித்தது போல முன்னர்ச் சிறப்பளித்ததில்லை.
    (2) நல்லியல்புகள் பொருந்திய பல பெருமக்கள் பிறந்திருந்தனர்.
    (3) பெண்மக்கள் சிறந்த கற்புடையவராக இருந்தனர்.
    (4) வள்ளல்கள் பலர் இருந்தனர்.
    (5) சான்றோர் அடக்கமாக இருந்தனர்.
    (6) குடிகள் அரசனைச் சார்ந்து நின்றனர் என்று கூறுகிறது.

    4.1.5 இலக்கியப் பாடுபொருள் மாற்றம்

    இறைவழிபாடு, சிவனன்பு, திருமாலன்பு, பக்தி, திருத்தலச் சிறப்பு போல்வன நுவல்பொருளாக அமைய, சைவ, வைணவ பக்தி இலக்கியங்கள் இந்த நூற்றாண்டிலும் குறைவற்றுச் செழித்தன.

    பௌத்த சமணப் போர்கள் பெரும்பாலும் ஏழாம் நூற்றாண்டோடு முடிந்துவிட்டன. அதற்குப் பிற்பட்ட எட்டாம் நூற்றாண்டில் வீராவேசத்துடன் சமண-சைவ வாதங்கள் நடந்த சம்பந்தர் காலத்தில்-அப்பரைப் பலவழிகளிலும் கொல்ல முயன்ற காலத்தில் சம்பந்தர் இருந்த மடத்திற்கே நெருப்பிட்ட காலத்தில் - சமணர்கள் கழுவேற்றப்பட்டனர்.

    பரமேச்சுர விண்ணகரத்தின் உட்சுவர்ச் சிற்பக் காட்சி வருமாறு: அரசன் அரியணையில் அமர்ந்துள்ளான். அவனுக்குப்பின் ஒருத்தி கவரி வீசுகிறாள். அரசர்க்கு எதிரில் துறவிகள் இருவர் கழுவேற்றப்பட்டுள்ளனர். இச்சிற்பத்திற்கு வலப்புறம் ஆழ்வார் சிலை கொண்ட கோயிலையும், அதன் வலப்புறம் வைகுந்தப் பெருமாள் கோயில் போன்ற கோயிலையும் குறிக்கும் சிற்பங்கள் உள்ளன.

    கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டில், ‘புத்த மத கண்டன நூல்’ ஒன்றைச் சமணர் யாத்துள்ளமையைக் காண முடிகிறது. சமணர்கள் கதை தழுவிய இலக்கிய நூல்களை ஆக்கினர். புத்த சமயத்தினர் செய்த நூல்களும் உள்ளன.

    இலக்கணத்தை விரித்துரைக்கும் நூல் ஒன்றும் செய்யப்பட்டுள்ளது.


Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 29-07-2017 13:22:40(இந்திய நேரம்)