தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

பல்லவரைப் பற்றிய படைப்புகள்

  • 4.4 பல்லவரைப் பற்றிய படைப்புகள்

    பல்லவர் காலத்து இலக்கிய நூல்கள் பற்றிய குறிப்புகள், அந்நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள் பாடல்கள் முதலியன யாப்பருங்கல விருத்தி உரையில் மிகுதியாக எடுத்தாளப்பட்டுள்ளன. முழு அளவில் ஒவ்வொன்றைப் பற்றியும், அறிய இயலாத நிலையில், இவையிவை இருந்தன என்று குறிப்பாக உணரவேனும் இவை உதவுகின்றன எனலாம்.

    4.4.1 தனிப்பாடல்கள்

    ‘காடவர்கோன் கழற்சிங்கன்’ என்று பெரியபுராணத்திலும், ‘நந்தி, பல்லவர் கோளரி’ என்று நந்திக் கலம்பகத்திலும் சொல்லப்பட்ட மூன்றாம் நந்திவர்மனைப் பற்றி, ‘கச்சியார் கோ-சிங்கன்’ என்றும், ‘நந்தி’ என்றும், ‘கோன் நந்தி’ என்றும் புகழும் தனிப்பாடல்கள் ஐந்து யாப்பருங்கல விருத்தியுரையில் மேற்கோளாக எடுத்தாளப்பட்டுள்ளன.

    நிலமகள் கேள்வனும் நேர் கழலினானும்
    நலமிகு கச்சியார் கோ என்பவே
    நலமிகு கச்சியார் கோ ஆயினானும்
    சிலைமிகு தோள்சிங்கன் அவன் என்பவே
    செருவிடை யானை அவன் என்பவே

    என்று மன்னனின் சிறப்பைக் கூறுகிறது. அகப்பொருள் சுவை கனியும் இன்னொரு பாடல் இதோ:

    செந்தழலின் சாற்றைப் பிழிந்து செழுஞ்சீதச்
    சந்தனமென்று ஆரோ தடவினார் - பைந்தமிழை
    ஆய்கின்ற கோல்நந்தி ஆகம் தழுவாமல்
    வேகின்ற பாவியேன் மேல்

    பாடல் ஒவ்வொன்றின் நயமும் முழுநூலின் நயத்துக்குச் சான்று பகர்கின்றன.

    4.4.2 நந்திக் கலம்பகம்

    பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனைப் பற்றிப் பாடப்பட்ட நூல் இது. பாடியவர் யார் என்று தெரியவில்லை. மன்னரைப் பற்றிப் பாடப்பட்ட கலம்பக நூல் இதுவேயாகும். பிற கலம்பகங்கள் இறைவனைப் பற்றி பாடப்பட்டவை. இந்நூலில் 144 பாடல்கள் உள்ளன. கலம்பக இலக்கிய வகையில் தோன்றிய முதல் நூல் இதுவே. பலவகை உறுப்பும், பலவகைப் பொருளும், பலவகைச் செய்யுளால் கலந்து பாடப்படும் இலக்கிய வகை ‘கலம்பகம்’ ஆகும். நந்திவர்மனது மாற்றாந்தாய் மக்கள் நால்வருள் புலமை மிக்கவனாகிய ‘காடவன்’ என்பவன், நந்திவர்ம பல்லவனைக் கொல்ல அறம் வைத்து இப்பாடலைப் பாடினான் என்றும், இதன் பாடல் ஒன்றைக் கேட்ட பல்லவன், முழுதும் கேட்க விரும்பி, முழுதும் கேட்டால் உடல் கருகி இறக்க நேரிடும் என்றறிந்தும் அரங்கேறச் செய்து கேட்டான் என்றும், இறுதிப் பாடலைப் படிக்கும் போது பந்தல் தீப்பிடித்து நந்தி இறந்தான் என்றும் கூறப்படுகிறது. ‘நந்தி கலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும்’ என்று சோமேசர் முதுமொழி வெண்பாவும், ‘கள்ளாரும் செஞ்சொல் கலம்பகமே கொண்டு காலம் விட்ட தெள்ளாறை நந்தி’ என்ற தொண்டைமண்டலச் சதகப் பாடலும் கூறுகின்றன.

    நாட்டுபுகழ் நந்திப் பாண! நீ எங்கையர்தம்
    வீட்டிலிருந்து பாட விடிவளவும் கேட்டிருந்தோம்
    பேய் என்றாள் அன்னை; பிறர் நரி என்றார்; தோழி
    நாயென்றாள்; நீ என்றேன் நான்

    என்று பரத்தையர் வீட்டுக்குச் சென்றிருந்த தலைவன் தூதாக அனுப்பிய பாணனைத் தலைவி விளித்துச் சொல்வதாக அமைந்த இப்பாடல் சுவை பருகுங்கள்! (அறம் அமைத்துப் பாடுதல் : யார்மீது பாடப்படுகிறதோ அவ்வரசன் அதைக்கேட்டதும் இறந்து போகும்படி, நச்சு எழுத்துகளை அமைத்துப் பாடுதல்.)

புதுப்பிக்கபட்ட நாள் : 29-07-2017 15:46:29(இந்திய நேரம்)