Primary tabs
சைவராகவும், வைணவராகவும் இருந்து ஆலயங்களை எழுப்பியும், ஆலயங்களுக்கு ஊர்களைத் தானமாக வழங்கியும், பிராமணர்களுக்கு நிலங்களைத் தந்தும், அடியவர்களையும், ஆழ்வார்களையும், உபசரித்துப் பேணியும் பல்லவ மன்னர்கள் தமிழ் இலக்கியப் பாதையை, ‘பக்தி இலக்கியத்திற்கு’ மடையாக மாற்றினர். மக்களும் அவ்வழியே சென்றனர். வைணவத் தலங்கள் 108, சிவதலங்கள் என்று தலயாத்திரைகள் பெருகின. இறைவன் மேல் அருளப்பட்ட பாசுரங்கள் மனத்தைக் கனிவிக்கின்றன.
ஒன்பதாம் நூற்றாண்டில் திருமாலின் மேல் பக்திப் பாசுரங்களைப் பாடியருளிய வைணவ ஆழ்வார்கள் நம்மாழ்வாரும், மதுரகவியாழ்வாரும் ஆவர். இவர்கள் இருவரும் பாடிய நூல்களைப் பற்றிக் காண்போம்.
4.3.1 நம்மாழ்வாரின் படைப்புகள்
ஆழ்வார்களில் சிறப்பிடம் வகிப்பவர் நம்மாழ்வார் ஆவார். திருநகரியில் பிறந்தவர். திருமாலின் அவதாரமாகக் கருதப்படுபவர். நம் எல்லாருக்கும் உரியவர் என்ற பொருளில், ‘நம்மாழ்வார்’ என்று அழைக்கப்படுபவர். இவருக்குச் சடகோபன், பராங்குசன், தமிழ்மாறன் ஆகிய பெயர்களும் உண்டு.
நம்மாழ்வார் திருவாய்மொழி, பெரிய திருவந்தாதி, திருவாசிரியம், திருவிருத்தம் என்னும் நான்கு நூல்களைப் பாடியுள்ளார். நம்மாழ்வார் பாடியுள்ள இந்நான்கு நூல்களும் நான்கு வேதங்களை உள்ளடக்கியவை என்பார்கள். இறைவன், உயிர் என்னும் இரண்டின் இயல்புகள், எம்பெருமானை அடையும் வழி, இடையில் தோன்றும் இன்னல், அதனை நீங்கி இறைவனை அடைதல் என்னும் நிலைகளில் இவரது நூல்களின் பாசுரங்கள் அமைகின்றன.
திருவாய் மொழி
நம்மாழ்வார் அருளியது, திருவாய்மொழி ஆகும். நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் மூன்றாவது ஆயிரமாக, திருவாய்மொழி உள்ளது. இதில் 1102 பாசுரங்கள் உள்ளன. இப்பாசுரங்கள் யாவும் அந்தாதித் தொடையில் அமைந்துள்ளன. இதனால் ஓதுவார்க்கு மறவாமல் நினைவில் வைத்து ஓதுவது எளிது. நம்மாழ்வாரை உடலாகவும், மற்ற ஆழ்வார்களை உடலின் உறுப்புகளாகவும் வைணவர்கள் கருதுவர். பக்தி உணர்வின் இருப்பிடமாகத் திருவாய்மொழி உள்ளது. வைணவ அறிஞர்கள் பலர் இந்நூலுக்கு உரை எழுதியுள்ளனர். அந்த உரைகள் வியாக்கியானங்கள் எனப்படுகின்றன. இவை எழுத்து எண்ணிக் காக்கப்பட்டு வருகின்றன. மூவாயிரப்படி, ஒன்பதினாயிரப்படி, பன்னீராயிரப்படி, இருபத்து நாலாயிரப்படி, முப்பதாறாயிரப்படி என்று எழுத்துகளின் எண்ணிக்கையே திருவாய்மொழி உரைநூல்களுக்குப் பெயராக அமைந்துள்ளது. வைணவர்கள் தம் வாழ்வின் இன்பத்திலும், துன்பத்திலும் மறவாமல் போற்றும் பாடல்கள் திருவாய்மொழிப் பாடல்கள் ஆகும். தென்கலை வைணவர்களுக்கு அவை மந்திரங்களை விட உயர்வாக உள்ளன.
நம்மாழ்வாரின் பாடல்களில் தத்துவ ஞானப் பாடல்கள் உள்ளன. காதல் துறைகள் அமையப்பட்ட பக்திப் பாடல்கள் உள்ளன. பழைய இலக்கியத் தொடர்கள் திருவாய்மொழியில் எடுத்தாளப்பட்டுள்ளன. நம்மாழ்வார் தம்மை நாயகியாக - காதலியாகக் கற்பனை செய்து கொண்டு நாரை முதலான பறவைகளைத் திருமாலிடம் தூது அனுப்புவதாகப் பாடும் பாடல்கள் நயம் மிக்கவை. உயிரினங்கள் சிறிதும் துயரின்றி வாழ ஒரே வழி இறைவனைத் தொழுவதே ஆகும் என்பது அவரது முடிவு.
தொழுமின் தூய மனத்தால் இறையும் நில்லா துயரங்களே
(2365)
என்றும்,
சேர்மின் உயிர்க்கு அதன் நேர் நிறை இல்லே (2095)
அற்றது பற்றெனின் உற்றது வீடு (2097)என்றும் இறைவனை வழிபட வேண்டியதன் காரணத்தைக் கூறி மக்களை நல்வழிப்படுத்துவதைக் காண முடிகிறது.
பெரிய திருவந்தாதி
இது நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் நான்காவது ஆயிரத்தில் உள்ளது. இதில் மொத்தம் 87 பாடல்கள் உள்ளன. எல்லாப் பாடல்களும் அந்தாதி அமைப்பைக் கொண்டவை ஆகும். இந்நூல் திருமாலின் சிறப்புகளைப் பலவாறு புகழ்ந்து கூறுகிறது.
திருவாசிரியம்
நம்மாழ்வார் பாடிய திருவாசிரியம் ஏழு பாடல்களைக் கொண்டது. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில், நான்காவது ஆயிரத்தில், 22வது பாடல் தொகுப்பாக இடம்பெற்றுள்ளது. நம்மாழ்வாரது இலட்சியம். ‘திருவேங்கடமலையில் உள்ள என் அப்பன் எம்பெருமான் புகழ் பாடுவது அல்லாமல் வேறு ஒருவரைப் புகழத் தனது கவிதைத் திறத்தைப் பயன்படுத்த மாட்டேன்’ என்பதாகும்.
திருமாலே கடவுளில் சிறந்தவர்.
உயர்வற உயர்நலம் உடையவன் எவன் அவன்
மயர்வற மதிநலம் அருளினன் எவன் அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயரறு சுடரடி தொழுதெழு என் மனனே
(2082)என்று குறிப்பிடுகிறார்.
திருவிருத்தம்
நம்மாழ்வார் பாடியது. நூறு பாக்களைக் கொண்டது. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில், நான்காவது ஆயிரத்தில் 19வது தொகை நூலாக அமைந்துள்ளது. நம்மாழ்வாரது காலத்தில் வறுமையில் உழலும் புலவர்கள் செல்வரைப் பாடிப் பரிசில் பெறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். செல்வரைப் பொய்யாகப் பொருளுக்காகப் புகழ்ந்து பாடும் பொய்ம்மையை நம்மாழ்வார் வெறுத்தார். ஒரு பதிகம் முழுவதும் அவ்வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளார். பாடல் பாடுவதன் நோக்கம் திருமாலைப் பாடுவதே. திருமாலை வழிபட்டால் சிறப்புப் பெறலாம் என்று அறிவுறுத்துகிறார்.
4.3.2 மதுரகவியாழ்வாரின் படைப்பு
மதுரகவியாழ்வார் பாடியது கண்ணிநுண் சிறுத் தாம்பு என்ற ஒரு நூல் மட்டுமே. இந்நூலில் 11 பாடல்கள் உள்ளன. நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் முதலாவது ஆயிரத்தில், ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ பத்தாவது நூல் தொகுப்பாக உள்ளது. இப்பாடல்களில் மதுரகவியாழ்வார் திருமாலை புகழ்ந்து பாடாமல், தமது ஆசாரியரான நம்மாழ்வாரையே தெய்வமாகக் கருதி அவரைப் போற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார். மதுரகவி ஆழ்வார் பாண்டி நாட்டில் திருக்கோளுரில் பிறந்தவர். காதுக்கும் மனத்துக்கும் இனிய பாடல்களைப் பாடியவர் என்பதால், மதுரகவி ஆழ்வார் என்றழைக்கப்படுகிறார். இவரது பதினொரு பாடல்களும் அந்தாதித் தொடையில் அமைந்துள்ளன. அந்தணர் மரபினர் மதுரகவி ஆழ்வார். இவர் வேளாள குலத்தவராகிய நம்மாழ்வாரைப் புகழ்ந்து வழிபட்டு உயர்ந்தது, ‘இறைவனை அடையச் சாதி தடை இல்லை’ என்பதைப் புலப்படுத்துகிறது.
கண்ணிநுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெருமாயன், என்னப்பனில்
நண்ணித் தென்குருகூர் நம்பி யென்றக்கால்
அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே (937)(கண்ணிநுண் சிறுத்தாம்பு = கண்ணை விட மென்மையான சிறு கயிறு; அண்ணிக்கும் = இன்னிக்கும்)
எனவும்,
நாவினால் நவிற் றின்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
தேவுமற் றறியேன் குருகூர்நம்பி
பாவி னின்னிசை பாடித் திரிவனே
(நவிற்றி = கூறி; தேவு = இன்பம்)எனவும் மதுரகவி ஆழ்வார் பாடிய பாசுரங்கள் அவரது பக்தியைப் புலப்படுத்தும்.
4.3.3 நாலாயிரத் திவ்வியப் பிரபந்த வெளிப்பாட்டு முறைகள்
நாலாயிரத் திவ்வியப் பிரபந்தப் பாடல்கள் மனப்பாடம் செய்வதற்கு, எளியவை; திருமாலின் மீது மனம் கசிந்து பாடுபவை; வழிபடுவோர் மனத்தைக் கொள்ளை கொள்பவை. ஆழ்வார்கள் வாழ்த்தி வழிபட்ட திருமாலின் தலங்கள், ‘திவ்விய தேசங்கள்’ என்றும், ‘திருப்பதிகள்’ என்றும் குறிப்பிடப்படும். அவை 108 என்பர். திருமால் கோவில் இருக்கும் ஊருக்குச் சென்று பாடல் இயற்றி வழிபடுவது, ‘மங்களா சாசனம் செய்தல்’என்று குறிக்கப்படும். இப்படி ஆழ்வார்கள் பாடி வழிபட்ட தலங்களில், பாற்கடல், பரமபதம் என்ற இரண்டு மட்டும் இவ்வுலகில் இல்லை. எஞ்சிய 106 வைணவத் தலங்களில் தமிழகத்தில் 96 தலங்கள் உள்ளன. பத்துத் தலங்கள் வடநாட்டில் உள்ளன. நம்மாழ்வாரைத் தெய்வமாகக் கொண்டவர் மதுரகவி ஆழ்வார். அவரைத் தவிர மீதி பதினொரு ஆழ்வார்களும் திருவரங்கத்தைப் போற்றிப் பாடி உள்ளனர். திருமாலைப் பாடித் துதித்தவர்கள் ஆழ்வார்கள். அப்பாசுரங்களை வழிபாட்டின்போது வாசித்து எளியோர் பயன் பெறும் நிலையை வைணவ இயக்கம் ஏற்படுத்தியது.