Primary tabs
சமணத் துறவியர் தனித்துத் துறவு நிலையில் கடுமையான நோன்பினராய், நீராடாமல், அழுக்குப் படிந்த மேனியராய் ஆடையின்றித் திரிந்து, இளமை நிலையாது, யாக்கை நிலையாது, செல்வம் நிலையாது, அழகு நிலையாது என்று வாழ்க்கை வெறுப்புச் சிந்தனைகளை அறக் கருத்துகளாய் போதித்தும், சமயத்தின் பெயரால் தற்கொலை செய்தும் வாழ்ந்தமை புறக்கணிக்கப்படவே, அறக்கருத்துகளை நேரே போதிக்காமல் கதைகளுடன் இணைத்துத் தந்து மக்களைக் கவரும் வண்ணம் கதை நூல்களைப் படைக்கலாயினர்.
தமிழில் விருத்தப்பாவால் எழுதப்பட்ட முதல் காப்பியம் சீவக சிந்தாமணி ஆகும். இதன் ஆசிரியர் திருத்தக்கதேவர். இது சமண சமய நூல் ஆகும். சமணர்கள் இன்றும் இந்நூலைப் பாராயண நூலாகப் பயில்கின்றனர். அழகிய நூல் என்பதால், ‘சிந்தாமணி’ எனப் பெயர் பெற்றது. காப்பியத் தலைவன் சீவகன். அவனை அவனது தாய் விசயை, ‘சிந்தாமணி’ என்று புகழ்கிறாள். அதனால், ‘சீவக சிந்தாமணி’ என்று பெயர் பெற்றது என்பர். 13 இலம்பகங்களைக் கொண்டது. 3145 செய்யுட்களைக் கொண்டது. நச்சினார்க்கினியர் இந்நூலுக்கு உரை எழுதியுள்ளார். கம்பர் இந்நூலைப் பாராட்டுகிறார்.
காப்பியத் தலைவன் சீவகன், காந்தருவ தத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை எனும் 8 பெண்களைத் திருமணம் செய்து கொள்கிறான். அவன் நாமகளையும், திரு வீற்றிருக்கும் பூமகளையும், வீரத்தால் மண்மகளையும், வீடுபேறு அடைந்ததால், ‘முக்தி மகளையும்’ மணந்தான் என்று கூறுவதால் இந்நூல் ‘மணநூல்’ எனவும் அழைக்கப்படுகிறது.
ஏமாங்கத நாட்டின் மன்னன் சச்சந்தன். அவனது மனைவி விசயை. அவள் மீது அளவற்ற காதல் கொண்டு அவன் ஆட்சியை மறந்தான். அமைச்சன் கட்டியங்காரன் ஆட்சியைப் கைப்பற்றினான். விசயையை மயில் வடிவ வான ஊர்தியில் ஏற்றி அனுப்பி விடுகிறான். கட்டியங்காரன் சச்சந்தனைக் கொன்று விடுகிறான். ஊர்தி இடுகாட்டில் இறங்கியது. விசயை சீவகனை ஈன்றெடுக்கிறாள். அவனைக் கந்துக்கடன் எனும் வணிகன் எடுத்து வளர்த்தான். சீவகன் வீரத்திலும், கல்வியிலும், இசையிலும் தேர்ச்சி பெறுகிறான். எண்மரை மணந்தான். கட்டியங்காரனைக் கொன்றான். தேசத்தைத் திரும்பப் பெறுகிறான். ஆட்சி செய்து இறுதியில் துறவு பூண்டான் என்று காப்பியம் துறவைக் கதையின் வழி வலியுறுத்துகிறது.
காப்பிய வெளிப்பாட்டு முறைகள்
தமிழில் பெரிய நூல்கள் எல்லாம் வெண்பாவில் இயற்றப்பட்டு வந்தன. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் இதில் புதுமையைப் புகுத்தியவர் திருத்தக்கதேவர் ஆவார். அவர் விருத்தம் என்ற செய்யுள் வகையைப் பயன்படுத்தி 3000க்கும் மேற்பட்ட பாடல்களைக் கொண்ட ஒரு பெரும் காப்பியத்தையே பாடி முடித்தார். விருத்தம் என்பது நான்கு அடிகள் உடையது. முதல் அடியில் எத்தனை சீர்கள் வருமோ அத்தனை சீர்கள் மற்ற மூன்று அடிகளிலும் வரும். முதல் அடியில் அமைந்த சீர்களின் அமைப்பு அடுத்தடுத்த அடிகளிலும் அதே முறையில் வரும். அதனால் முதல் அடியின் ஓசையே மற்ற மூன்று அடிகளிலும் திரும்பத் திரும்ப ஒலிக்கும். ஒரு அடிக்கு இத்தனை சீர்கள் வரவேண்டும், இன்ன அளவான சீர்கள் வரவேண்டும் என்ற வரையறை இல்லை. அதனால் ஒரு விருத்தத்தின் அடிகள் நீண்டு ஒலிக்கலாம். மற்றொரு விருத்தத்தின் அடிகள் குறுகி ஒலிக்கலாம். சிறுசிறு சீர்கள் கொண்ட ஒரு விருத்தம் பரபரப்பாகவோ, துடிதுடிப்பாகவோ இருக்கலாம். நீண்ட சீர்கள் கொண்ட மற்றொரு விருத்தம் ஆழம் உடையதாகவோ, அமைதி உடையதாகவோ இருக்கலாம். ‘விருத்தம்’ என்பது இவ்வாறு பல நூற்றுக்கணக்கான ஓசை வேறுபாடுகளைப் படைத்துக் காட்ட இடம் தந்தது. வெண்பாவில் இதைச் செய்ய முடியாது. தமிழ்க் கவிதையில் ஏற்பட்ட இந்த புரட்சியால் உணர்ச்சிக்கு ஏற்றவாறு கவிதையின்நடையை வடிவமைக்கும் வடிவச் சிறப்பு வளர்ந்தது. இதற்கு வழிகாட்டியவர் என்ற அளவில் திருத்தக்கதேவர் சிறப்பான இடத்தைப் பெறுகிறார். பின்னர் வந்த கம்பர் இந்த காப்பியத்திலிருந்து ஒரு அகப்பை முகந்துகொண்டார் என்பர்.
ஒரே ஒரு சான்று இதோ: வயலில் நட்ட பயிர் தண்டு தடித்து இருப்பது பச்சைப்பாம்பு கருவுற்று இருப்பது போலக் காணப்படுகிறது. கதிர் வெளி வந்ததும் அன்னம் பிடிக்காததால் நற்குடி பிறவாதவர் செல்வம் போலத் தலை நிமிர்ந்து நிற்கின்றது. பால் கட்டி மணி பிடித்ததும் கல்வி அறிவுடையாரைப் போன்று தலை தாழ்ந்து நிற்கின்றது.
சொல்லரும் சூல்பசும் பாம்பின் தோற்றம்போல்
மெல்லவே கருவிருந்து ஈன்று மேல்அல்லார்
செல்வமே போற்றலை நிறுவித் தேர்ந்தநூல்
கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே(சீவக சிந்தாமணி - 53)
சீவக சிந்தாமணி இலக்கியச் சுவை மிக்கது. எனவே சமணர்கள் மட்டுமன்றி அனைவரும் விரும்பிப் படித்தனர். சேக்கிழார் காலத்தில் சைவனாகிய சோழ அரசன் இக்காப்பியத்தை விரும்பிப் படித்தான் என்று ஒரு கதை கூறும். சங்க நூல்களுக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் ஒரு சைவர். இருந்தும் இவர் இச்சமண காப்பியத்திற்கு உரை எழுதியிருப்பது இதன் சிறப்பையே காட்டும்.
திருத்தக்கதேவர் எழுதிய சிறுநூல். தான் ஒரு காப்பியம் செய்யப் போவதாக, இவர் கூறியதைக் கேட்ட அவருடைய ஆசிரியர் இவரது ஆற்றலைச் சோதிக்க விரும்பினார். அருகில் ஓடிய ஒரு நரியைக் காட்டி அதன் தொழிலை அடிப்படையாக வைத்து ஒரு சிறு நூல் எழுதச் சொன்னார். அதன்படி திருத்தக்கதேவர் எழுதிய நூலே நரிவித்தம் என்று ஒரு கதை வழங்குகிறது.
பழைய பஞ்ச தந்திரக் கதையில் வரும், ‘மித்ரலாபம்’ கதையே நரிவிருத்தத்தில் உள்ளது என்பர். கதை இதுதான். ஒரு வேடன் காட்டில் வேட்டையாடச் செல்கிறான். யானையைக் கொல்ல வில்லில் நாண் ஏற்றி அம்பு தொடுக்கிறான். அச்சமயத்தில் அவனைப் பாம்பு ஒன்று கடித்தது. உடனே வில்லால் பாம்பை அடித்துக் கொல்கிறான். வில்லில் இருந்து கிளம்பிய அம்பு யானையை அதே நேரத்தில் கொன்றது. சிறிது நேரத்தில் நஞ்சு தலைக்கு ஏறி வேடனும் இறக்கிறான். இப்படி வேடன், யானை, பாம்பு பிணமாகக் கிடந்த வழியில் நரி ஒன்று வருகிறது. பேராசை கொண்ட நரி யானை, பாம்பு, அம்பு ஏந்திய வேடன் ஆகியோரைக் கண்டு தனக்கு எத்தனையோ நாட்களுக்கு உணவு கிடைத்தது என்று மகிழ்கிறது. கணக்கிடுகிறது. முதல் நாள் உணவு என்று நாண் கயிற்றை நக்குகிறது. நாண் அறுந்து வில்லின் ஒரு முனை அதன் உடலில் பாய்கிறது. உடனே அது இறக்கிறது. இவ்வாறு உலகில் பேராசை தரும் துன்பத்தைக் கூறும்படி அமைந்துள்ளது. நரி விருத்தத்தில் இளமை நிலையாமை, உடல் அழகு நிலையாமை, செல்வம் நிலையாமை பற்றிச் சொல்லப்படுகிறது.
இது உரைநடை இலக்கியம். சமணநூல். குணபத்திராசாரியார் என்பவர் செய்தது. சமண சமயத்தைச் சேர்ந்த 63 பெரியோர்களது வரலாற்றைச் சொல்லும் நூல் உத்தர புராணம். ஸ்ரீபுராணம் அதை அடியொற்றி வந்த நூல். ‘புராணம் என்றால் பழமை’, ‘பழைய வரலாறு’ என்பது பொருள். ‘ஸ்ரீ’ என்பது திரு என்பதைக் குறிக்கும் அடைச்சொல். இது மணிப்பிரவாள நடையில் அமைந்த நூல். முத்தும் பவளமும் கலந்த மாலை போலத் தமிழும், வடமொழியும் கலந்த கலப்பு இலக்கிய நடை மணிப்பிரவாளம் ஆகும். உலகம், நாடு, நகரம், அரசு, ஈகை, பிறப்புகளின் வகை, வீடுபேறு அடையும் வழி, கொடைப்பயன் முதலியவை பற்றி இந்நூல் விளக்குகிறது. நாடு, நகரம், அரசு ஆகியவற்றை வர்ணித்து நூலைத் தொடங்கும் மரபைத் தமிழ் இலக்கியத்தில் தொடங்கி வைத்த சிறப்பு இந்நூலுக்கு உண்டு என்று தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் கூறுவார்.
4.5.4 கிடைக்கப் பெறாத சமண நூல்கள்
வளையாபதி, கலியாணன் கதை, எம்பாவை, புத்தமதக் கண்டன நூல் ஆகியவை பற்றிய செய்திகளே கிடைத்துள்ளன. அந்நூல்கள் கிடைக்கவில்லை.
வளையாபதி
இந்த நூலின் ஆசிரியர் யார் என்பது தெரியவில்லை. இந்த நூல் கிடைக்கவில்லை. வைசிய புராணம் என்பது வேறு ஒரு நூல். அதில், ‘வைர வணிகன் வளையாபதி பெற்ற சருக்கம்’ என்று ஒரு பகுதி உண்டு. அதை அடிப்படையாக வைத்து ஒரு கதை வழங்குகிறது. புகார் நகரில் வைசிய மரபில் நாராயணன் எனும் வைர வியாபாரி இருந்தான். ஒன்பது கோடி பொன் படைத்தவன். எனவே, நவகோடி நாராயணன் எனப்பட்டான். சிவனை வழிபடுபவன். அவனுக்கு இரு மனைவியர். முதல் மனைவி வைசிய குலத்தவள். இரண்டாவது மனைவி வேறு சாதியினள். இதை ஊரார் எதிர்த்து சாதிக் கட்டுப்பாடு செய்தனர். எனவே நவகோடி நாராயணன் இரண்டாவது மனைவியை விலக்கி விடுகிறான். அச்சமயத்தில் அவள் கருவுற்றிருந்தாள். நாராயணனோ முதல் மனைவியுடன் வாழ்ந்து வந்தான். கணவன் தன்னை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவள் தினமும் காளியை வணங்கி வந்தாள். கோயில் அருகிலேயே குடியிருந்தாள். அவளுக்கு ஒரு மகன் பிறந்தான். அவன் வளர்ந்து பள்ளிக்கூடம் செல்லும் பருவம் வந்தது. மாணவர்களிடையே சிறுசண்டை வருகிறது. ஒரு மாணவன், இவனைத் தந்தை பெயர் தெரியாதவன் என்று திட்டி விடுகிறான். தன் தாயிடம் வந்து அதுபற்றிக் கேட்டு உண்மையை அறிந்து கொள்கிறான். தந்தையிடம் சென்று தன்னை மகனாக ஏற்றுக் கொள்ள வேண்டுகிறான். முதலில் மறுத்த நவகோடி பின்னர் ஏற்றுக் கொள்கிறான். இரண்டாவது மனைவியையும் ஏற்றுக்கொண்டு இனிதாக வாழ்ந்தான் என்று கதை முடிகிறது. இதுதான் வளையாபதி என்பர். இதை ஏற்க இயலாது. ஏனெனில் வளையாபதி சமணக் காப்பியம். அருகனைத் தவிர வேறு தெய்வத்தைக் காப்பியத் தலைவன் வணங்க மாட்டான். ஆனால் இக்கதையில் தலைவன் சிவபக்தி உடையவன். அவனது மனைவியோ காளியை வணங்குபவள். மேலும் காப்பியத் தலைவனின் துறவே சமண காப்பியத்தின் முடிவாக அமையும். இதிலோ இளைய மனைவியுடன் கூடி இன்பமாக வாழ்ந்தான் என்று முடிகிறது. எனவே இது ‘வளையாபதிக் கதை’ என்று உறுதியாகக் கொள்ள முடியாது என்பர்.
புறத்திரட்டு என்ற நூலில் இருந்தும், உரையாசிரியர்களின் உரைகளில் இருந்தும் வளையாபதி பாடல்கள் 72 கிடைத்துள்ளன. அவை மிகச் சிறப்பானவை. குறள், குறுந்தொகை, திருமந்திரம் ஆகியவற்றின் கருத்துகள் அவற்றில் எடுத்தாளப்பட்டுள்ளன. தக்கயாகப் பரணி என்ற நூலின் உரை ஆசிரியர், ‘வளையாபதியை நினைத்தார் கவி அழகு வேண்டி’என்று போற்றுவார். அதிலிருந்து இதன் அழகு புலப்படும்.
தொழுவல் தொல்வினை நீங்குக’ என வரும் கடவுள் வாழ்த்துப் பாடல் சமணக் கடவுள் அருகனின் துதியாக உள்ளது. அடியார்க்கு நல்லார் எனும் உரையாசிரியர் காட்டும் மேற்கோள் பாடலில், ‘நிக்கந்த வேடத்து இருமுடி கணங்கள்’ என்ற தொடர் உள்ளது. நிக்கந்தன் என்றால் அருகன் என்பது பொருள். (நிக்கந்தன் - நிர்க்கந்தன் - பற்றுகளில் இருந்து விடுபட்டவன், அருகன்) இக்குறிப்பினால் இந்நூலாசிரியர் சமணர் எனலாம். அதற்குமேல் அறிந்து கொள்ள இயலவில்லை.
கலியாணன் கதை
இந்த நூலும் கிடைக்கவில்லை. யாப்பருங்கல விருத்தி உரையில் இறுதி எழுத்தும், சொல்லும் இடையிட்டுத் தொடுத்த செய்யுள் அந்தாதி என்பது இதை உதயணன் கதை, கலியாணன் கதை ஆகியவற்றில் கண்டு கொள்க என்றொரு குறிப்பு உள்ளது. அதே நூலில் (பக்கம் 262இல்), உதயணன் கதையும், கலியாணன் கதையும் என்று வந்துள்ளது. இதிலிருந்து கலியாணன் கதை என்றொரு நூல் இருந்ததாகத் தெரிகிறது. அவ்வளவே!
எம்பாவை
எம்பாவை என்றும், திருப்பாவை என்றும் அழைக்கப்படும் இந்நூல் சமணசமயஞ் சார்ந்த நூல். இதை இயற்றியவர் அவிரோதியார் என்பவர். ‘கோழியும் கூவின, கடல் சூழ்ந்த உலகில் அருகனை வணங்கி, குளிர்ந்த நீரில் குடைந்து விளையாட வாருங்கள்’ என்று ஒரு பெண் தனது தோழியரை அழைப்பது போன்ற ஒரு பாடல் யாப்பருங்கல விருத்தி உரையில் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது.
கோழியும் கூவின குக்கில் குரலியம்பும்
தாழியுள் நிலத் தடங்கணீர் போதுமினோ
ஆழிசூழ் வையத் தறிவன் அடியேத்தி
கூழை நனையக் குடைந்தும் குளிர்புனல்
ஊழியுள் மன்னுவோம் என்றேலோ ரெம்பாவாய்(யாப்.விருத். உரை. மேற்கோள் பக்கம் - 345)
(குக்கில் = செம்போத்துப் பறவை; தாழி = கடல்; தடங்கணீர் = பெரிய கண்களையுடைவர்களே; கூழை = கூந்தல்)
என்ற இப்பாடலைத் தவிர வேறு எதுவும் கிடைக்கவில்லை. மாணிக்க வாசகர் எழுதிய திருவெம்பாவை போலவும், ஆண்டாள் இயற்றிய திருப்பாவை போலவும், சமண சமயத்திற்குப் பாவைப் பாடலாக, எம்பாவை எனும் இந்நூல் இருந்தது என்று அறியலாம்.
புத்தமதக் கண்டனநூல்
இந்த நூலும் கிடைக்கவில்லை. எழுதியவர் யார் என்றும் தெரியவில்லை. புத்த சமயக் கருத்துகளை மறுக்கும்படியும், கண்டிக்கும்படியும் ஒரு எதிர்நூல் இருந்தது என்றும் அது சமண சமய நூல் என்றும் தேவநேயப் பாவாணர் கூறுவார்.