தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

புத்த மத இலக்கியங்கள்

  • 4.6 புத்த மத இலக்கியங்கள்

    புத்த சமயத்து இலக்கியங்கள் இருந்தன. இந்நூற்றாண்டின் முற்பகுதியில் ஆண்ட பல்லவ மன்னர்கள் சமய வெறுப்பினர் அல்லர். அவ்வகையில் புத்த சமய நூல்கள் உருவாயின. எனினும் போற்றுவாரும், பாதுகாப்பாரும் இல்லாமையால் புத்த சமயம் நலிவுற்றதைப் போலவே இந்நூல்களும் அழிந்துபட்டன.

    4.6.1 விம்பசாரக் கதை

    விம்பசாரக் கதை புத்த சமய நூல் ஆகும். புத்தர் காலத்தவனும் அவரை ஆதரித்தவனுமாகிய விம்பசாரன் எனும் மன்னனின் வரலாற்றைக் கூறும் காவியம் இந்த நூல் என்பர். நீலகேசி உரையாசிரியர் இந்நூலிலிருந்து மேற்கோள் காட்டி, ‘இது விம்பசாரக் கதை’ என்று எழுதுவார். சிவஞானசித்தியார் உரையிலும் ஞானப்பிரகாசர் மேற்கோள் காட்டுவர். இது ஆசிரியப்பாவால் இயன்ற நூல் என்பர். இந்த நூல் கிடைக்கவில்லை. இதை எழுதியவரும் யார் என்று தெரியவில்லை.

    விம்பசாரன் மகத நாட்டை (கி.மு.540 முதல் 590 வரை) ஆண்டான். சித்தார்த்தனைத் தனது அரண்மனைக்கு வருமாறு அழைக்கிறான். அவரோ தான் துன்பத்தைப் போக்கும் வழி அறியச் செல்வதாகவும், தனது எண்ணம் நிறைவேறியதும் அரண்மனைக்கு வருகை தருவதாகவும் கூறிச் செல்லுகிறார். தான் சொன்னபடியே ஞானம் பெற்றுப் புத்தரானவுடன் தன் சீடர்களோடு விம்பசாரனது அரண்மனைக்கு வருகிறார். புத்தரை வணங்கி வரவேற்று உபதேசம் பெற்று விம்பசாரன் புத்த மதத்தைத் தழுவுகிறான். புத்தருக்கும், அவரது சீடர்களுக்கும் வேண்டிய உதவிகளைச் செய்கிறான். இதைப் பார்த்துப் புத்தரின் மைத்துனன் தேவதத்தன் பொறாமை கொள்கிறான். விம்பசாரனின் மகன் அஜாதசத்ருவைத் தன் பக்கத்தில் சேர்த்துக்கொண்டு மகனை விட்டே தந்தை விம்பசாரனைக் கொல்லச் செய்கிறான். புத்த சங்கத் தலைமையைத் தனக்கு வாங்கித்தர வேண்டுகிறான். அதற்கிசைந்த அஜாதசத்ருவும் தன் தந்தையைச் சிறையில் அடைக்கிறான். தேவதத்தன் சிலரை ஏவி, புத்தர் மீது அம்புகளை எய்யச் செய்கிறான். ஆனால் அவை அவரைத் துளைக்கவில்லை. அவர் மேல் பாறைகளை உருட்டச் செய்கிறான். காலில் அவருக்குச் சிறுகாயம் பட்டதே தவிர அவர் இறக்கவில்லை. மதம் பிடித்த யானைகளை ஏவிக் கொல்லச் செய்கிறான். ஆனால் யானைகளோ அவரைக் கொல்லாமல் பணிந்து வணங்கி விலகின. அஜாதசத்ரு தன் தாயைத் தவிர வேறு யாரும் சிறைக்கூடத்துக்குச் சென்று அரசரைப் பார்க்கக்கூடாது என்று உத்தரவிடுகிறான். அரசன் மனைவி பிறர் அறியாதபடி புடவை முன்றானைத் தலைப்பில் உணவு கொண்டு சென்று கணவனுக்குத் தந்து காப்பாற்றுகிறாள். இதை அறிந்த காவலர்கள் தடுத்து விடுகின்றனர். தன் தலைமுடியில் ஒளித்து வைத்துக் கொண்டு செல்கிறாள். அதையும் கண்டுபிடித்துத் தடுக்கின்றனர். தன் உடலில் நான்கு வகை இனிப்புகளைப் பூசிக்கொண்டு செல்கிறாள். அதுவும் கண்டுபிடிக்கப்படுகிறது. அரசியும் சிறையிலுள்ள அரசனைப் பார்க்கக் கூடாது என்று அஜாதசத்ரு கட்டளை இடுகிறான். முடிவில் விம்பசாரன் தன்மகன் அஜாதசத்ருவாலேயே கொல்லப்பட்டு உயிர் துறக்கிறான். இதற்கிடையில் அஜாதசத்ருவுக்கு ஒரு மகன் பிறக்கிறான். அவனை அன்புடன் வளர்க்கிறான். தன்னால் கொல்லப்பட்ட தன் தந்தையும் தன்னை அப்படித்தானே நேசித்திருக்க வேண்டும் என்று எண்ணி வருந்துகிறான். இதை அடிப்படையாகக் கொண்டு அமைந்த காப்பியமே விம்பசாரக் கதை என்பர். அது கிடைக்கவில்லை.

    4.6.2 கிடைக்கப் பெறாத புத்தமத நூல்கள்

    ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றியதாகச் சில நூல்களைப் பற்றிய செய்திகள் உள்ளன. அவற்றுள் சித்தாந்தத் தொகை, திருப்பதிகம், மானாவூர்ப் பதிகம், புத்த நூல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

    சித்தாந்தத் தொகை

    புத்த சமயத்தினர் செய்த நூலுள் சித்தாந்தத் தொகையும் ஒன்று. அந்நூல் கிடைக்கவில்லை.

    திருப்பதிகம்

    திருப்பதிகம் என்ற நூல் இந்நூற்றாண்டில் தோன்றிய நூலே ஆகும். புத்த சமயம் சார்ந்தது. ஆனால் அது கிடைக்கவில்லை.

    மானாவூர்ப் பதிகம்

    மானாவூர் எது என்ற குறிப்பு இல்லை. பதிக அமைப்பில் இயற்றப்பட்ட புத்தசமயஞ் சார்ந்த நூல் இதுவாதல் வேண்டும். இந்த நூலும் கிடைக்கவில்லை.

    புத்த நூல்

    புத்த சமயக் கருத்துகளின் பொழிவாக இந்த நூல் இருந்திருக்க வேண்டும். இந்த நூலும் கிடைக்கவில்லை. சைவ வைணவ நூல்களைத் தொகுத்தது போல் புத்த சமய நூல்களைத் தொகுக்கவில்லை. புத்த சமயத்தினரே காலப்போக்கில் குறைந்து இல்லாது போனதைப் போலப் புத்த சமய இலக்கியங்களும் மறைந்து போயின போலும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 29-07-2017 16:04:29(இந்திய நேரம்)