Primary tabs
-
1.1 குகைக் கல்வெட்டுகள் - ஓர் அறிமுகம்
தொல் எழுத்தியல் அடிப்படையில் குகைக் கல்வெட்டுகளின் காலத்தைக் கி.மு. மூன்றாம் இரண்டாம் நூற்றாண்டுகள் என வரையறை செய்வர். தமிழ்க் கல்வெட்டுகளுள் மிகப் பழைமையான இந்தக் குகைக் கல்வெட்டுகள் தமிழ்நாட்டில் காணப்படும் இடங்கள், அவை அமைந்துள்ள சூழல், அவற்றின் தோற்றம், அவை கண்டுபிடிக்கப்பட்ட காலம் ஆகியன பற்றிக் காண்போம்.
1.1.1 குகைக் கல்வெட்டுகள் காணப்படும் இடங்கள்
தமிழ்நாட்டில் கீழவளவு, மறுகால்தலை, ஆனைமலை, அழகர்மலை, மேட்டுப்பட்டி, முத்துப்பட்டி, சித்தன்னவாசல், திருவாதவூர், விக்கிரமங்கலம், திருப்பரங்குன்றம், மாங்குளம், கருங்காலக்குடி, புகழூர், அரச்சலூர், அரிட்டாபட்டி, மாமண்டூர் போன்ற பல ஊர்களில் குகைக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
1.1.2 குகைக் கல்வெட்டுகள் காணப்படும் சூழல்
மேலே குறிப்பிட்ட ஊர்களை அடுத்துள்ள மலைகளில் இயற்கையாக அமைந்த குகைகள் உள்ளன. இவற்றின் அருகில் தெளிந்த நீர்ச் சுனைகள் உள்ளன. பெரும்பாலான குகைகளுக்குச் செல்வது கூடக் கடினம். இருப்பினும் இங்குச் சென்றால் இயற்கையின் எழில் மன அமைதியை அளிக்கும் வண்ணம் உள்ளது. இக்குகைகளில் பழங்காலத்தில் பௌத்த, சமணத் துறவியர் தங்கி வாழ்ந்தனர். இத்துறவிகளுக்கு அவ்வவ்போது அரசர்களும், வணிகர்களும், ஊர் மக்களும் குகைகளின் தளத்தை வழ வழ என்று செதுக்கித் தந்துள்ளனர். மேலும் துறவிகள் உறங்குவதற்கும், தியானம் செய்வதற்கும் கல் படுக்கைகளை வழ வழப்பாகச் செதுக்கித் தந்துள்ளனர். குகையின் மேல் பாறை முகப்பிலும் படுக்கைகளின் தலைமாட்டிலும், பக்கவாட்டிலும் கல்வெட்டுகள் செதுக்கப்பட்டுக் காணப்படுகின்றன.
1.1.3 குகைக் கல்வெட்டுகளின் தோற்றம்
வட இந்தியாவில் கி.மு. நான்காம் நூற்றாண்டில் மௌரியப் பேரரசை ஆண்டு வந்த சந்திரகுப்தனின் ஆட்சிக் காலத்தில் (கி.மு. 321 - 298) சமண சமயம் தமிழ்நாட்டில் வந்து பரவியது. இவனது பேரன் அசோகன் ஆண்டு வந்த காலத்தில் (கி.மு. 273 - 232) பௌத்த சமயம் தமிழ்நாட்டில் வந்து பரவியது. இவ்விரு சமயங்களைச் சார்ந்த துறவிகள் சமயம் பரப்புவதற்காகச் சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் உள்ள மலைக் குகைகளில் வந்து தங்கினர். இவ்வாறு குகைக் கல்வெட்டுகளுக்கு இத்துறவிகளே காரணமானார்கள்.
1.1.4 குகைக் கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு
குகைக் கல்வெட்டுகள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியவை என்றாலும் நீண்ட காலமாக வெளி உலகு அறியாமல் இருந்தன. கி.பி. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்துதான் இவை கண்டுபிடிக்கப்பட்டன. கி.பி. 1903இல் வெங்கோபராவ் என்பவர் முதன்முதலில் கீழவளைவு என்னும் இடத்தில் இருந்த குகைக் கல்வெட்டைக் கண்டுபிடித்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் கி.பி. 1906இல் அப்போது திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக (District Collector) இருந்த கெமைடு என்ற ஆங்கிலேயர் மறுகால்தலை என்னும் இடத்தில் உள்ள கல்வெட்டைக் கண்டுபிடித்தார். இதன் பின்னர் மற்ற இடங்களிலும் இவை கண்டுபிடிக்கப்பட்டன. கே.வி. சுப்பிரமணிய அய்யர் பன்னிரண்டு இடங்களில் இருந்த முப்பது கல்வெட்டுகளைக் கண்டுபிடித்து ஆராய்ந்தார். மேலும் எச். கிருட்டின சாஸ்திரியார், ஐராவதம் மகாதேவன், ஈரோடு இராசு ஆகியோர் பல இடங்களில் இருந்த குகைக் கல்வெட்டுகளைக் கண்டுபிடித்தனர். இதுகாறும் இருபத்தோர் இடங்களில் மொத்தம் எழுபத்தொரு குகைக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.