Primary tabs
-
1.3 ஒலியனியல்
இக்கால மொழிநூலார் ஒரு மொழியின் அமைப்பை ஒலியனியல் (Phonology), உருபனியல் அல்லது சொல்லியல் (Morphology) தொடரியல் (Syntax) என வகைப்படுத்தி ஆராய்வர். தமிழ்மொழி வரலாற்றை மொழியியல் கண்ணோட்டத்தில் எழுதியுள்ள தெ.பொ. மீனாட்சிசுந்தரனார், சு. சக்திவேல் ஆகியோர் குகைக் கல்வெட்டுத் தமிழின் அமைப்பையும் இம்மூன்று வகைப்படுத்தியே ஆராய்ந்துள்ளனர். முதற்கண் குகைக் கல்வெட்டுத் தமிழின் ஒலியனியல் பற்றிக் காண்போம்.
ஒரு மொழியில் உள்ள ஒலிகளைப் பற்றி ஆராய்வதே ஒலியனியலாகும். குறைந்த வேற்றுமை உடைய இருசொற்களில் அமைந்து அவற்றின் பொருளை வேறுபடுத்திக் காட்டும் ஒலிகள் ஒலியன்கள் எனப்படும். எ-டு. உடல் - ஊடல். இவற்றில் ட்அல் எனும் மூன்று ஒலிகளும் இருசொற்களுக்கும் பொதுவானவை. உ-ஊ என்பவையே சொற்களின் பொருள் மாற்றத்திற்குக் காரணமானவை. ஆகவே இவை தனித்தனி ஒலியன்கள் ஆகும்.
தமிழில் குறில்களும் நெடில்களும் தனித்தனி ஒலியன்களாகும். தமிழிலக்கண நூலாரும் மொழிநூலாரும் ஒலிகளை உயிரொலிகள் (vowels), மெய்யொலிகள் (Consonants) என இரண்டாகப் பிரித்துள்ளனர். குகைக்கல்வெட்டுத் தமிழில் இவ்விரு வகை ஒலிகளும் மொழியின் (சொல்லின்) முதல், இறுதி, இடை ஆகிய மூன்று இடங்களிலும் எவ்வாறு வருகின்றன எனக் காணலாம்.
அ இ உ எ ஒ எனும் ஐந்தும் குறில் உயிர்கள் என்பதையும் ஆ ஈ ஊ ஏ ஓ எனும் ஐந்தும் நெடில் உயிர்கள் என்பதையும் அறிவீர்கள். ஐ, ஒள எனும் இரண்டும் கூட்டொலிகள் ஆகும்.
எல்லா உயிர்களும் மொழியின் முதலிலும் இடையிலும் வருகின்றன. மொழியின் இறுதியில் ஈ, எ, ஒ ஆகிய மூன்று உயிர்கள் வரவில்லை. பிற உயிர்கள் வருகின்றன. ஐ, ஒள ஆகிய கூட்டொலிகளுள் ஐயன், ஐம்பது போன்ற சொற்களில் மொழி முதலிலும் அந்தை, வெள்ளறை, பிடந்தை போன்ற சொற்களில் இறுதியிலும் ஐகாரம் வந்துள்ளது. ஆனால் ஒளகாரம் குகைக் கல்வெட்டுத் தமிழில் காணப்படவில்லை.
- உயிர்மயக்கம்
சொல்லின் இடையிலோ இறுதியிலோ அடுத்தடுத்து இரண்டு உயிர் எழுத்துகள் சேர்ந்து வருவது உயிர் மயக்கம் எனப்படும். குகைக் கல்வெட்டுகளில் உயிர் மயக்கங்கள் அதிகம் காணப்படுகின்றன.
(எ-டு) பளிஇ, பிணஊ, பணஅன், கொடி ஓர்
இச்சொற்களில் இஇ, அஊ, அஅ, இஓ என இரண்டு உயிர்கள் சேர்ந்து வந்துள்ளன. சொற்களில் இரண்டு உயிர்கள் அடுத்தடுத்து நிற்பதைத் தமிழ் இலக்கணம் ஏற்பதில்லை. இரண்டு உயிர்களுக்கும் நடுவே யகரம் அல்லது வகரம் உடம்படுமெய்யாக வரும். பளி+ய்+இ = பளியி, பிண+வ்+ஊ = பிணவூ என அவை வரவேண்டும். உடம்படு மெய் இல்லாமல் இரண்டு உயிர்களைச் சேர்த்து எழுதியிருப்பது குகைக் கல்வெட்டுத் தமிழில் காணப்படும் குறிப்பிடத்தக்க தனி இயல்பு எனலாம்.
தமிழிலக்கண நூலார் குறிப்பிடும் மெய்யொலிகள் மொத்தம் பதினெட்டு, இவை அனைத்தும் குகைக் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. ங், ஞ் ஆகிய இரண்டு தவிரப் பிற மெய்யொலிகள் ஒலியன்களாக வருகின்றன. ஆய்த எழுத்துக் குகைக் கல்வெட்டுகளில் காணப்படவில்லை. மெய்யொலிகளைத் தமிழிலக்கண நூலார் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று வகையாகப் பகுப்பர். மொழிநூலார் வல்லினத்தை வெடிப்பொலிகள் (Plosives) என்றும், மெல்லினத்தை மூக்கொலிகள் (Nasals) என்றும் குறிப்பிடுவர். இடையினத்தை அவ்வாறே குறிப்பிடுவர்.
குகைக் கல்வெட்டுகளில் காணப்படும் மெய்யொலிகள் வருமாறு :
வெடிப்பொலிகள் (வல்லினம்)-க், ச், ட், த், ப், ற்மூக்கொலிகள் (மெல்லினம்)-ங், ஞ், ண், ந், ம், ன்இடையின ஒலிகள்-ய், ர், ல், வ், ழ், ள் - மொழிமுதல்
- மொழி இறுதி
- மொழி இடை
- மொழி இறுதி மூக்கொலி இழப்பு
- வெடிப்பொலியின் முன் மூக்கொலி
- மெய் இரட்டித்து வாராமை
- கர உயிரின் பின் யகர மெய் வருதல்
க், ச், த், ப் - ஆகிய நான்கு வெடிப்பொலிகளும் ந், ம் - ஆகிய இரண்டு மூக்கொலிகளும், ய், வ் - ஆகிய இரண்டு இடையின ஒலிகளும் மொழிக்கு முதலில் வருகின்றன.
சகர மெய் அ, ஐ, ஒள என்னும் மூன்று உயிர்களோடு கூடி மொழி முதலாகாது ; பிற ஒன்பது உயிர்களோடு மட்டுமே கூடி முதலாகும் என்பர் தொல்காப்பியர். ஆனால் அரிட்டாபட்டியில் உள்ள குகைக் கல்வெட்டுகளில் சடிகன், சந்தரிதன் போன்ற சொற்களில் சகர மெய் அகர உயிரோடு கூடி மொழி முதலாவதைக் காணலாம்.
யகர மெய் ஆகார உயிரோடு மட்டுமே சேர்ந்து மொழி முதலாகும் என்பர் தொல்காப்பியர். இவ்விதிக்கு ஏற்ப, புகழூர் என்னும் இடத்தில் உள்ள கல்வெட்டில் யாற்றூர் என்ற சொல் அமைந்து காணப்படுகிறது. (யாற்றூர் - ஆற்றூர்).
தனிமெய் மொழி முதலில் வாராது; உயிரோடு சேர்ந்து உயிர்மெய்யாகவே வரும். இது தமிழ் இலக்கண நூலார் வரையறுத்துக் கூறும் விதியாகும். குகைக் கல்வெட்டுகளில் இந்த விதி மீறப்படவில்லை.
குகைக் கல்வெட்டுகளில் வடமொழிக்கே சிறப்பாக உள்ள ஒலிகளில் ஒன்றாகிய ஸ என்ற மெய்யொலி மட்டும் அதற்குரிய வரிவடிவத்தோடு பல சொற்களில் காணப்படுகிறது. அரிட்டாபட்டிக் கல்வெட்டுகளில் ஸிரிய், ஸுதன், ஸாலகன் என்னும் சொற்கள் காணப்படுகின்றன.
குகைக் கல்வெட்டுத் தமிழில் க், ச், ட், த், ப், ற் - என்னும் ஆறு வெடிப்பொலிகளும் மொழிக்கு இறுதியில் வரவில்லை. மூக்கொலிகளைப் பொறுத்த வரை ண், ம், ன் - ஆகிய மூன்று ஒலிகள் மொழி இறுதியில் வருகின்றன. இடையின ஒலிகளில் ய், ர், ல், ள் - ஆகிய நான்கு ஒலிகள் மொழி இறுதியில் வருகின்றன.
மொழி இடையில் ஒன்றிற்கு மேற்பட்ட மெய்கள் சேர்ந்து வருவது மெய்ம்மயக்கம் எனப்படும். இது இரு வகைப்படும். ஒரு மெய் தன்னோடு தானே மயங்கி வருவது. அதாவது ஒரு மெய்க்கு அடுத்து அம்மெய்யே வருவது முதலாவது வகை. இதனைத் தமிழ் இலக்கண நூலார் உடனிலை மெய்ம்மயக்கம் என்று கூறுவர். ஒரு மெய் மற்றொரு மெய்யொடு மயங்கி வருவது இரண்டாவது வகை. இதனை வேற்றுநிலை மெய்ம்மயக்கம் என்று கூறுவர். குகைக் கல்வெட்டுத் தமிழில் இவ்விருவகை மெய்ம்மயக்கங்களும் காணப்படுகின்றன.
(எ-டு)
வழுத்தி - த்த் - உடனிலை மெய்ம்மயக்கம்
குடும்பிகன் - ம்ப் - வேற்றுநிலை மெய்ம்மயக்கம்
குகைக் கல்வெட்டுகள் பெரும்பாலும் பேச்சுத் தமிழ் நடையிலேயே எழுதப்பட்டுள்ளன. ஒலி மாற்றங்கள் மிகுதியாகக் காணப்படுகின்றன. அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.
மொழி இறுதியில் வரும் மூக்கொலி அதற்கு முன் நெடில் உயிர் வருமாயின் ஒலிக்கப்படாமல் விடப்படுகிறது.
(எ.டு) செய்தான் - செய்தா
இங்கு இறுதியில் ன் என்ற மூக்கொலி, அதற்கு முன்னர் ஆ என்னும் நெடில் உயிர் வருவதால் மறைந்துபோனது. இக்காலப் பேச்சுத் தமிழிலும் இந்த ஒலி மாற்றம் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
அடைமொழியினை அடுத்து வெடிப்பொலி வரும்போது அதன் முன் இன மூக்கொலி தோன்றுகிறது.
இரட்டை மெய் வர வேண்டிய இடங்களில் ஒற்றை மெய் மட்டுமே எழுதப்பட்டது.
இகர ஈற்று மொழிக்கண் இகரத்தோடு யகரமும் விரவி வருகிறது. குகைக் கல்வெட்டுகளில் இதை மிகுதியாகக் காணலாம்.
(எ-டு) கணிய், பளிய், வழுத்திய்