Primary tabs
-
1.4 உருபனியல்
ஒரு மொழியில் உள்ள சொற்களின் அமைப்பைப் பலவாறு வகைப்படுத்தி ஆராய்வதே உருபனியல் என்பர் மொழிநூலார். தமிழ் இலக்கண நூலார் சொல்லியல் என்பர். ஓர் ஒலியன் தனித்து நின்றோ, ஒன்றுக்கு மேற்பட்ட ஒலியன்கள் சேர்ந்து நின்றோ பொருள் தருமாயின் அது உருபன் (Morpheme) எனப்படும். தமிழ் இலக்கணம் இதனைச் சொல், பதம், உருபு எனும் சொற்களால் குறிப்பிடுகிறது.
குகைக் கல்வெட்டுத் தமிழில் பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகிய இருவகைச் சொற்களும் காணப்படுகின்றன. தமிழில் பெயர்ச்சொல், வினைச்சொல் இரண்டும் திணை, பால், எண், இடம் ஆகியனவற்றைக் காட்டும். பெயர்ச்சொல் வேற்றுமை உருபை ஏற்று வரும். வினைச்சொல் காலம் காட்டும். பெயர், வினை இரண்டிற்கும் உரிய இந்தப் பொது இயல்புகளைக் குகைக் கல்வெட்டுத் தமிழில் காணலாம்.
கல்வெட்டுகளில் பெயர்ச்சொற்கள் எவ்வாறு பால் உணர்த்துகின்றன என்பதை இங்குக் காண்போம்.
- பால் காட்டும் விகுதிகள்
- வேற்றுமை உருபுகள்
- காலம் காட்டல்
- எச்சங்கள்
- வினைமுற்றுகள்
- தன்வினை, பிறவினை வேறுபாடு
குகைக் கல்வெட்டுகளில் அன், ஆன், ஓன்
என்னும்
உயர்திணை ஈறுகள் ஆண்பால் ஒருமை விகுதிகளாக வருகின்றன;
ஓர் என்னும் ஈறு உயர்திணைப் பன்மை (பலர்பால்) விகுதியாக
வருகின்றது.
பெண்பால் விகுதி எதுவும் இக்கல்வெட்டுகளில் காணப்படவில்லை. அதேபோல் அஃறிணை ஒருமை, பன்மை காட்டும் விகுதிகளையும் காண முடியவில்லை.
வேற்றுமை உருபுகள் குகைக் கல்வெட்டுகளில் அவ்வளவாக இடம் பெறவில்லை. நந்தாஸிரியற்கு என்ற சொல்லில் கு என்ற நான்காம் வேற்றுமை உருபு காணப்படுகிறது. எம் ஊர் சாதன் அ தானம் என்ற தொடரில் அ என்பது ஆறாம் வேற்றுமை உருபாக வருகிறது. இத்தொடருக்கு எம் ஊர் சாத்தனுடைய தானம் என்று பொருள்.
குகைக் கல்வெட்டுத் தமிழில் வினைச்சொல் காலம் காட்டும் முறையையும், பால் காட்டும் முறையையும் இங்குக் காண்போம். மேலும் வினைச்சொல் முற்று, எச்சம் என்ற பாகுபாட்டையும் தன்வினை, பிறவினை முதலான வேறுபாடுகளையும் கொண்டது. இவற்றைக் குகைக் கல்வெட்டுகளில் காணலாம்.
குகைக் கல்வெட்டுத் தமிழில் இறந்தகாலம் மட்டுமே காணப்படுகிறது. இறந்தகாலம் இரண்டு வகையில் உணர்த்தப்படுகிறது.
(1) வினையடிகளோடு த்,
த்த, ந்த் என்னும் வடிவங்கள்
சேர்க்கப்படுவதால் இறந்தகாலம் உணர்த்தப்படுகிறது.
(2) உகரத்தை இறுதியாகக் கொண்ட வினையடிகளில் உகர இறுதி மறைய இகர விகுதி சேர்க்கப்படுவதால் இறந்த காலம் உணர்த்தப்படுகிறது.
(எ-டு) வழுத்து + இ = வழுத்தி
எனவே குகைக் கல்வெட்டுத் தமிழில் இறந்தகாலம் உணர்த்த த், இ என்ற இரண்டு இடைநிலைகள் மட்டுமே உள்ளன எனலாம். மொழியியலார் த் எனும் இடைநிலை த்த், ந்த் எனும் வடிவங்களிலும் வருவதாகக் கூறுகின்றனர்.
குகைக் கல்வெட்டுகளில் அகர ஈற்று இறந்தகாலப்
பெயரெச்சங்களும் இகர ஈற்று இறந்தகால வினையெச்சங்களும்
காணப்படுகின்றன. ஆனால் மிகக் குறைவாகவே
காணப்படுகின்றன.
எச்ச வடிவங்களோடு ஆண்பால் ஒருமையைக் காட்டும் அன், உயர்திணைப் பன்மையைக் காட்டும் ஆர் அல்லது ஓர் ஆகிய விகுதிகள் சேர்வதால் வினைமுற்றுகள் உருவாகின்றன.
(எ-டு) செய்து (அல்லது) செய்த + ஆன் = செய்தான்
ஒரு வினையைத் தானே செய்தல் தன்வினை; பிறரைச் செய்வித்தல் பிறவினை. வினையடியோடு வி அல்லது பி என்னும் விகுதி சேர்வதால் பிறவினை உருவாக்கப்படுகிறது. (செய்+வி = செய்வி ; நட + பி = நடப்பி என்றாற் போல்வன) குகைக் கல்வெட்டுகளில் வினையடியோடு பி என்னும் விகுதி சேர்த்துப் பிறவினை உணர்த்தப்படுவது மிகுதியாகக் காணப்படுகிறது.
(எ.டு) கொட்டுபித்தோர்
இச்சொல்லில் கொட்டு என்பது வினையடி. இதற்குச் செதுக்கு என்று பொருள். இது தன்வினையாகும். இதனோடு பி என்னும் விகுதி சேர்க்கப்பட்டு, கொட்டுபி என்ற பிறவினை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்குச் செதுக்குவி என்று பொருள். இப்பிறவினையோடு இறந்தகால இடைநிலை, உயர்திணைப் பன்மை விகுதி ஆகியன சேர்க்கப்பட்டு, (கொட்டுபி+த்த்+ஓர்) கொட்டுபித்தோர் (செதுக்குவித்தோர்) என்ற வினையாலணையும் பெயர் உருவாக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.
பிராகிருத மொழிச் சொற்களும் வடமொழிச்
சொற்களும்
குகைக் கல்வெட்டுகளில் கலந்துள்ளன. வடமொழிச் சொற்கள்
பிராகிருத வடிவத்தில் வந்து வழங்குகின்றன. இச்சொற்கள்
அஃறிணையாயின் மகர இறுதியையும், உயர்திணை
ஆண்பாலாயின் னகர இறுதியையும் பலர்பாலாயின் ரகர
இறுதியையும் பெறுகின்றன.