தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

(Word Order)

  • 4.3 சொற்கள் வரன்முறை (Word Order)

    ஒரு தொடர் அமைவதற்குக் காரணம் சொற்களே ஆகும். ஆனால் சொற்கள் பல இருப்பதால் மட்டுமே ஒரு தொடர் அமைந்து விடுவது இல்லை. சான்றாக,

    “இராமன் மரம் அந்த கறுப்பு பார்த்தான் இல் பூனை”

    என்பதை எடுத்துக் கொள்வோம். இதில் எட்டுச் சொற்கள் உள்ளன. இருப்பினும் இதை ஒரு தொடர் என்று கூற முடியாது. காரணம், இச்சொற்கள் இம்முறையில் வரும்போது குறிப்பிட்ட ஒரு பொருளை உணர்த்தவில்லை. ஆனால் இதே சொற்களை,

    “இராமன் அந்த மரத்தில் கறுப்புப் பூனையைப் பார்த்தான்”

    என்று ஒரு முறைப்பட அமைக்கும் போது பொருள் உணர்த்தப்படுகிறது. இவ்வாறு சொற்கள் ஓர் ஒழுங்கான முறையில் ஒன்றன்பின் ஒன்றாக வந்து குறிப்பிட்ட ஒரு பொருளை உணர்த்தும் போதே தொடர் அமைகிறது. எனவே தொடர் அமைப்பில் சொற்களின் வரன்முறை என்பது இன்றியமையாத இடத்தைப் பெறுகிறது.

    உலக மொழிகள் சிலவற்றில் தொடர் இலக்கணம் திட்பம் உடையதாக உள்ளது. இந்த மொழிகளில் ஒரு தொடரில் முறைப்பட அமைந்த சொற்களில் ஒரு சொல்லை இடம் மாற்றி அமைத்தாலும் பொருள் இல்லாமல் போய் விடுகிறது, அல்லது பொருள் மாறி விடுகிறது. சான்றாக ஆங்கில மொழியில்,

    John Came John Killed Jack

    என்ற தொடர்களில் சொற்கள் இம் முறைப்படிதான் வர வேண்டும். இவற்றில் முதல் தொடர், Came John என்று மாறி வரும்போது பொருள் இல்லை. இரண்டாவது தொடர், Jack Killed John என்று மாறி வரும்போது வேறு ஒரு பொருள் தரக்கூடிய தொடராக மாறி விடுகிறது.

    உலக மொழிகள் வேறு சிலவற்றிலோ தொடர் இலக்கணம் நெகிழ்ச்சி உடையதாக உள்ளது. இந்த மொழிகளில் குறிப்பிட்ட அமைப்புடைய தொடர்களில் முறைப்பட அமைந்த சொற்களில் ஒரு சொல்லை இடம் மாற்றி அமைத்தாலும் பொருள் மாறுவது இல்லை. சான்றாகத் தமிழில்,

    “இராமன் வந்தான்”
    “இராமன் மரத்தைப் பார்த்தான்”

    என்ற தொடர்களில் சொற்கள் இம் முறையில் அன்றி, இடம் மாறி அமைந்தாலும் பொருள் மாறுவது இல்லை. இத்தொடர்களில் முதலாவது தொடர். வந்தான் இராமன் என்று மாறி வந்தாலும் பொருள் மாறவில்லை. இதற்குக் காரணம் தமிழில் எழுவாயாக வரும் பெயர்க்கும் பயனிலையாக வரும் வினைக்கும் இடையே திணை, பால், எண், இடம் ஆகியவற்றில் இயைபு காணப்படுவதே ஆகும். இரண்டாவது தொடரில் உள்ள மூன்று சொற்களையும்,

    “இராமன் பார்த்தான் மரத்தை”
    “மரத்தை இராமன் பார்த்தான்”
    “மரத்தைப் பார்த்தான் இராமன்”
    “பார்த்தான் இராமன் மரத்தை”
    “பார்த்தான் மரத்தை இராமன்”

    என்று எப்படி மாற்றி அமைத்தாலும் தொடரின் பொருள் மாறவில்லை. இதற்குக் காரணம் இராமன் என்ற எழுவாயும் பார்த்தான் என்ற பயனிலையும் இயைந்திருப்பதுதான். மேலும் மரம் என்ற செயப்படு பொருளை உணர்த்தும் பெயரோடு என்ற இரண்டாம் வேற்றுமை உருபு இறுதியில் சேர்ந்து வருவதும் ஆகும். பெயர்ச் சொற்களின் இறுதியில் வரும் ஐ, ஆல் போன்ற சில வேற்றுமை உருபுகள் தொடரமைப்பை நெகிழ்ச்சியுறச் செய்து விடுகின்றன. இருப்பினும் இச்சொற்களை, இராமன் மரத்தைப் பார்த்தான் என்ற வரன்முறையில் கூறுவதே முறையான தொடர் அமைப்பாகும்.

    இவ்வாறு சொற்களின் வரன்முறையில் நெகிழ்ச்சி காணப்படுவதால், தமிழில் எல்லாத் தொடர்களிலுமே இத்தகைய நெகிழ்ச்சி காணப்படுகிறது என்று கூற முடியாது. சான்றாக,

    “கை மேல் வளையல்”
    “தண்ணீர் மேல் படகு”

    என்ற தொடர்களில் உள்ள சொற்களை,

    “வளையல் மேல் கை”
    “படகு மேல் தண்ணீர்”

    என்று மாற்றினால் வேறு பொருள் தரும் தொடர்களாக மாறி விடுகின்றன.

    எனவே தமிழிலும் தொடர் அமைப்பில் சொற்களின் வரன்முறை ஓர் இன்றியமையாத இடத்தைப் பெறுகிறது எனலாம். இதை நன்கு உணர்ந்த தொல்காப்பியர், தொடரில் சொற்கள் எவ்வாறு தொடர்ந்து அமைய வேண்டும் என்பது பற்றிக் கிளவியாக்கத்தில் பல நூற்பாக்களில் பேசுகிறார்.

    4.3.1 வண்ணச் சினைச்சொல்

    பண்பை உணர்த்தும் ஒரு பெயரடைச் சொல், உறுப்பை உணர்த்தும் ஒரு சொல், முழுப்பொருளை உணர்த்தும் ஒரு சொல் என மூன்று சொற்கள் சேர்ந்து வரும் தொடர் அமைப்பைத் தொல்காப்பியர் வண்ணச் சினைச்சொல் என்கிறார். அடை, சினை (உறுப்பு) முதல் என்ற வரிசை முறையில் வண்ணச் சினைச்சொல் வர வேண்டும்.

    (எ.டு) “செங்கால் நாரை” (செந்நிறமான காலை உடைய நாரை)

    இதில்,

    செம்மை
    - அடை
    (பெயரடை)
    கால்
    - சினை
    (உறுப்பின் பெயர்)
    நாரை
    - முதல்

    என அடை, சினை, முதல் என்ற வரிசை முறையில் சொற்கள் வந்துள்ளன. இதைக் கால் செந்நாராய் என்று மாற்றினால் காலை உடைய செந்நிறமான நாரை எனப் பொருள் மாறிவிடும்.

    இவ்வாறு பெயரடை, பெயருக்கு முன்னாலேயே வரும் என்பதைத் தொல்காப்பியர் உணர்த்துகிறார்.

    பிற பண்பு குறித்த வண்ணச் சினைச்சொல்லுக்கு மேலும் சில சான்றுகள் :

    “சிறு கண் யானை”
    “நெடுங் கை வேழம்”
    “பெருந் தலைச் சாத்தன்”

    4.3.2 இயற்பெயரும் சுட்டுப்பெயரும்

    இயற்பெயரும் சுட்டுப்பெயரும் சேர்ந்து ஒரே பயனிலையைக் கொண்டு முடியும்போது, இயற்பெயர் முன் நிற்கும் ; சுட்டுப்பெயர் பின் நிற்கும்.

    (எ.டு)

    “சாத்தன் அவன் வந்தான்”
    “பொன்னி அவள் மகிழ்ந்தாள்”
    “தலைவர் அவர் பேசினார்”

    இயற்பெயரும் சுட்டுப்பெயரும் தனித்தனிப் பயனிலைகளைப் பெற்று ஒரு தொடர் வாக்கியம் போல வரும்போதும் மேலே கூறியவாறு இயற்பெயரே முன் நிற்கும் ; சுட்டுப் பெயர் பின்னர் நிற்கும்.

    (எ.டு)

    “சாத்தன் வந்தான் ; அவனுக்குப் பொருள் தருக”
    “பொன்னி வந்தாள் ; அவளுக்குப் பூக் கொடுக்க”
    “கபிலர் வந்தார் ; அவருக்குப் பரிசில் தருக”
    “பசு வந்தது ; அதற்குப் புல் இடுக”

    4.3.3 இயற்பெயரும் சிறப்புப்பெயரும்

    ஒருவருடைய இயற்பெயரையும் சிறப்புப் பெயரையும் சேர்த்துத் தொடரில் எழுவாயாகக் கூறும்போது, சிறப்புப் பெயரை முன்னும், இயற்பெயரைப் பின்னும் கூற வேண்டும்.

    (எ.டு) “தெய்வப் புலவர் திருவள்ளுவர் வந்தார்”

    தெய்வப் புலவர் என்ற சிறப்புப் பெயரும் திருவள்ளுவர் என்ற இயற்பெயரும் சேர்ந்து, ஒரே எழுவாயாக நின்று வந்தார் என்ற பயனிலையை ஏற்பதைக் காணலாம்.

    சிறப்புப் பெயர் முன்னும், இயற்பெயர் பின்னும் வருவதற்கு மேலும் சான்றுகள் :

    “பாண்டியன் நெடுஞ்செழியன்”
    “சோழன் நலங்கிள்ளி”
    “சேரன் செங்குட்டுவன்”
    “அறிஞர் இளவழகனார்”
    “பேராசிரியர் வரதராசனார்”

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 03-08-2017 11:40:05(இந்திய நேரம்)