தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

எழுவாய் - பயனிலை இயைபு

  • 4.2 எழுவாய் - பயனிலை இயைபு

    ஒரு தொடரில் அமைய வேண்டிய தலையாய உறுப்புகளாகக் கருதப்படுவன எழுவாய் (Subject), பயனிலை (Predicate) ஆகிய இரண்டும் ஆகும். எழுவாய் பெயர்ச்சொல்லாக இருக்கும். பயனிலை பெரும்பாலும் வினைச்சொல்லாக இருக்கும்; சிறுபான்மை பெயர்ச்சொல்லாக இருக்கும். எழுவாய் எனப்படும் பெயர்ச்சொல், பயனிலை எனப்படும் வினைச்சொல்லைக் கொண்டு முடியும்போது அது தொடர் அல்லது வாக்கியம் என்று கூறப்படுகிறது.

    தமிழில் பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகிய இரண்டும் திணை, பால், எண், இடம் ஆகியவற்றைக் காட்டும். உலக மொழிகள் பலவற்றில் பெயர்ச்சொற்கள் மட்டுமே பால், எண், இடம் ஆகியவற்றைக் காட்டுகின்றன. வினைச்சொற்கள் பெரும்பாலும் இவற்றைக் காட்டுவது இல்லை. சான்றாக ஆங்கில மொழியில், He came என்ற தொடரில் He என்ற பெயர்ச்சொல் ஆண்பால், ஒருமை, படர்க்கை ஆகியவற்றைக் காட்டுகிறது. ஆனால் அது கொண்டு முடியும் came என்ற வினைச்சொல் இவற்றைக் காட்டவில்லை.

    தமிழில் அவன் வந்தான் என்ற தொடரில் அவன் என்ற பெயர்ச்சொல் உயர்திணை, ஆண்பால், ஒருமை, படர்க்கை ஆகியவற்றைக் காட்டுகிறது. அச்சொல் கொண்டு முடியும் வந்தான் என்ற வினைச்சொல்லும் இவற்றைக் காட்டுகிறது. எனவே தமிழில் ஒரு தொடரில் எழுவாயாக அமையும் பெயர்க்கும் அது கொண்டு முடியும் பயனிலையாகிய வினைக்கும் இடையே திணை, பால், எண், இடம் ஆகியவற்றில் இயைபு காணப்படுகிறது. இந்த இயைபே எழுவாய் - பயனிலை இயைபு என்று கூறப்படுகிறது.

    தொல்காப்பியர் கிளவியாக்கத்தில் பல நூற்பாக்களில் எழுவாய் - பயனிலை இயைபு பற்றிப் பேசுகிறார். அவற்றில் சிலவற்றை இங்கு விளக்கமாகக் காண்போம்.

    4.2.1 திணை, பால், இயைபு

    தமிழ் வினைச்சொற்களின் இறுதியில் வரும் பால் ஈறுகளைத் தொல்காப்பியர் எடுத்துரைக்கிறார். னகர ஒற்று ஆண்பாலையும் ளகர ஒற்று பெண்பாலையும், ரகர ஒற்று, ப, மார் என்பன பலர்பாலையும் குறிக்க வரும். து, று, டு என்பன அஃறிணை ஒன்றன் பாலையும் அ, ஆ, வ என்பனபலவின் பாலையும் குறிக்க வரும். இப்பதினோரெழுத்துகளும் வினைச் சொற்களின் இறுதியில் பால் உணர்த்த வேண்டித் தவறாது வரும் என்று தொல்காப்பியர் கூறுகிறார். (தொல்.சொல். 10)

    ஆயினும் அனைத்துப் பெயர்ச்சொற்களும் இந்தப் பால் ஈறுகளைப் பெற்று வருவதில்லை. அவன், ஒருவன், பாண்டியன், தலைவன் போன்றஆண்பால் பெயர்ச்சொற்களிலும் அவள், மகள், மனையாள் (மனைவி) போன்ற பெண்பால் பெயர்ச்சொற்களிலும் அவர், நால்வர், அரசர், மாந்தர், தோழிமார், தாய்மார் போன்ற பலர்பால் பெயர்ச் சொற்களிலும் அது, ஒன்று என்பன போன்ற ஒரு சில ஒன்றன்பால் பெயர்ச்சொற்களிலும் பல, சில என்பன போன்ற ஒரு சில பலவின்பால் பெயர்ச் சொற்களிலும் திணை, பால் உணர்த்தும் ஈறுகள் இடம்பெறுகின்றன. ஆனால், ஆடூஉ, நம்பி, விடலை, கோ, பாரி போன்றவை ஆண்பால் பெயர்கள். இவற்றில் ஆண்பாலுக்குரிய னகர ஈறு இல்லை. மகடூஉ, நங்கை, தோழி, தாய், தந்தை, மங்கை, ஒளவை போன்றவை பெண்பால் பெயர்கள். இவற்றில் பெண்பாலுக்குரிய ளகர ஈறு இல்லை. அஃறிணைச் சொற்களில் மரம், மண், மலை, கடல், யானை, நாய், பூ போன்ற எண்ணற்ற சொற்களில் ஒன்றன்பால், பலவின்பால் ஈறுகள் இல்லை. இத்தகைய சொற்களில் அவை உணர்த்தும் பொருளைக் கொண்டு தான் திணை, பால் அறிய வேண்டும்.

    பாலீறு பெற்று வினைச்சொற்களும், பாலீறு பெற்றோ பெறாமலோ பெயர்ச்சொற்களும் திணை, பால் உணர்த்துவது தமிழின் இயல்பு. எனவே தொல்காப்பியர், ‘ஒரு தொடரில் எழுவாயாக வரும் பெயர்ச்சொல் என்ன திணை, பாலை உணர்த்துகிறதோ, அவற்றைத்தான் பயனிலையாகிய வினைச்சொல்லும் உணர்த்த வேண்டும்’ என்று கூறுகிறார். இதனை,


    வினையின் தோன்றும் பால் அறி கிளவியும்
    பெயரின் தோன்றும் பால் அறி கிளவியும்
    மயங்கல் கூடா தம்மர பினவே

    (தொல். சொல். 11)


    என்ற நூற்பாவில் குறிப்பிடுகிறார்.

    (பால்அறி கிளவி = பால் உணர்த்தும் சொல் ; மயங்கல் கூடாது = முரண்படக் கூடாது)

    திணை, பால் பற்றித் தொல்காப்பியர் குறிப்பிடும் எழுவாய் - பயனிலை இயைபினைக் கீழ்க் காணும் ஐந்து வாய்பாடுகளில் அடக்கிக் கூறலாம்.


    வாய்பாடு - 1
    ஆண்பால் எழுவாய்
    + ஆண்பால் பயனிலை
     
    அவன்
    வந்தான்
     
    பாண்டியன்
    வென்றான்
     
    பாரி
    கொடுத்தான்
    வாய்பாடு - 2
    பெண்பால் எழுவாய்
    + பெண்பால் பயனிலை
     
    அவள்
    வந்தாள்
     
    தலைவி
    நடந்தாள்
     
    மங்கை
    பாடினாள்
    வாய்பாடு - 3
    பலர்பால் எழுவாய்
    + பலர்பால் பயனிலை
     
    அவர்
    வந்தார்
     
    நால்வர்
    சென்றனர்
     
    தாய்மார்
    மகிழ்ந்தனர்
    வாய்பாடு - 4
    ஒன்றன்பால் எழுவாய்
    + ஒன்றன்பால் பயனிலை
     
    அது
    வந்தது
     
    நாய்
    ஓடிற்று
     
    யானை
    பிளிறியது
    வாய்பாடு - 5
    பலவின்பால் எழுவாய்
    + பலவின்பால் பயனிலை
     
    அவை
    வந்தன
     
    மரங்கள்
    பூத்தன
     
    நாய்கள்
    குரைத்தன

    4.2.2 இடம், எண் இயைபு

    மேலே கண்ட படர்க்கைப் பெயர்ச்சொற்களும் அவை கொண்டு முடியும் வினைச்சொற்களும் வெளிப்படையாகப் பால் காட்டுவன. எனவே அவற்றிற்கு இடையே உள்ள திணை, பால் இயைபு பற்றித் தொல்காப்பியர் விரிவாகப் பேசினார். யான், யாம், நாம் ஆகிய தன்மை இடப்பெயர்களும் நீ, நீயிர் ஆகிய முன்னிலை இடப்பெயர்களும் படர்க்கை இடப்பெயர்களைப் போலப் பால் காட்டுவது இல்லை. ஒருமை, பன்மை என்ற எண்ணை மட்டுமே காட்டும். எனவே இவ்விரு வகைப் பெயர்களும் தொடரில் எழுவாயாக வரும்போது, ஒருமைப் பெயர்கள் ஒருமை வினை கொண்டும் பன்மைப் பெயர்கள் பன்மை வினை கொண்டும் முடிய வேண்டும் என்ற இயைபைத் தொல்காப்பியர் தெளிவுபடுத்தினார். இந்த இயைபினைக் கீழ்க்காணும் நான்கு வாய்பாடுகளில் அடக்கிக் கூறலாம்.

    வாய்பாடு - 1
    தன்மை ஒருமை எழுவாய்
    + தன்மை ஒருமைப் பயனிலை
     
    யான்
    வந்தேன்
    வாய்பாடு - 2
    தன்மைப் பன்மை எழுவாய்
    + தன்மைப் பன்மைப் பயனிலை
     
    யாம்
    வந்தேம்
     
    நாம்
    செல்வாம்
    வாய்பாடு - 3
    முன்னிலை ஒருமை எழுவாய்
    + முன்னிலை ஒருமைப் பயனிலை
     
    நீ
    வந்தாய்
    வாய்பாடு - 4
    முன்னிலைப் பன்மை எழுவாய்
    + முன்னிலைப் பன்மைப் பயனிலை
     
    நீயிர்
    வந்தீர்

    மேலே கூறியவற்றால் தொல்காப்பியர் காலத் தமிழில் எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடையே திணை, பால், எண், இடம் ஆகியவற்றில் இயைபு காணப்படுவது தெளிவாகிறது. இந்த இயைபு பற்றிய ஒன்பது வாய்பாடுகளும் இன்று வரையிலும் நீடித்திருப்பன ஆகும்.

    4.2.3 தொடரில் வழுக்கள்

    எழுவாய்க்கும் பயனிலைக்கும் இடையே திணை, பால், எண், இடம் பற்றிய இயைபு இல்லாமல் மாறி அமையுமானால் அது வழு (குற்றம்) என்று கூறப்படும். வழு, திணை வழு, பால் வழு, எண் வழு, இட வழு என நால்வகைப்படும்.

    திணை வழு
    - அவன் வந்தது ;
    அது வந்தாள்
    பால் வழு
    - அவன் வந்தாள் ;
    அவை வந்தது
    எண் வழு
    - நீ வந்தீர் ;
    நீயிர் வந்தாய்
    இட வழு
    - நான் வந்தான் ;
    அவன் வந்தேன்

    இத்தகைய வழுக்கள் இல்லாமல் எழுவாய் பயனிலைத் தொடர்கள் அமைய வேண்டும் என்பதையே தொல்காப்பியர் கிளவியாக்கத்தில் வற்புறுத்திக் கூறுகிறார்.

    4.2.4 எண்ணுநிலைத் தொடர்

    ஒரு தொடரில் ஒன்றிற்கு மேற்பட்ட பெயர்கள் இணைந்து எழுவாய்களாக வருவது உண்டு. அவ்வாறு வரும்போது அப்பெயர்கள் எல்லாவற்றின் இறுதியிலும் உம் என்ற இடைச்சொல் சேர்ந்து வரும். ஆங்கிலத்தில் உம் என்பதற்கு இணையாக and என்பது வரும். ஆனால் இது அம்மொழியில் ஓரிடத்தில் மட்டுமே வரும்.

    Rama and Sita came

    The Chera the Chola and the Pandya came

    ஆனால் தமிழிலோ,

    இராமனும் சீதையும் வந்தனர்
    சேரனும் சோழனும் பாண்டியனும் வந்தனர்

    என்று தொடர்களில் வரும் எல்லாப் பெயர்களின் இறுதியிலும் உம் வரும்.

    இவ்வாறு வரும் உம், எண்ணப்படும் பொருளில் வழங்குவதால் எண்ணும்மை என்று கூறப்படுகிறது. எழுவாய்தோறும் எண்ணும்மை பெற்று வரும் தொடர்களை எண்ணுநிலைத் தொடர் என்று இக்கால மொழிநூலார் குறிப்பிடுகின்றனர். எண்ணும்மைப் பொருளில் வெவ்வேறு திணைக்கும், பாலுக்கும், இடத்திற்கும் உரிய பெயர்கள் ஒரு தொடரில் இணைந்து வரும்போது அவை எத்தகைய வினைகளைப் பயனிலையாகப் பெற்று முடியும் என்பது பற்றித் தொல்காப்பியர் கிளவியாக்கத்தில் கூறுகிறார்.

    (1) உயர்திணைக்கு உரிய தன்மைப் பெயர்ச்சொல்லும் அஃறிணைப் படர்க்கைப் பெயர்ச்சொல்லும் எண்ணும்மைப் பொருளில் இணைந்து எழுவாய்கள் ஆகும் போது அவை உயர்திணைக்குரிய தன்மைப் பன்மை வினையைப் பயனிலையாகப் பெற்று முடியும். (தொல். சொல். 43)

    (எ.டு) யானும் என் நாயும் செல்வேம்.

    தன்மைப் பெயரும் படர்க்கைப் பெயரும் எழுவாய்களாக வரும் தொடர் தன்மை வினையைக் கொண்டு முடிவது இலக்கண முறைப்படி இடவழு என்றாலும் இடவழுவமைதியாக (வழுவை இலக்கணமாக அனுமதித்துக் கொள்ளல்) ஏற்றுக் கொள்ளப்பட்டது.

    (2) செய்யுளில் உயர்திணைப் பெயரும் அஃறிணைப் பெயரும் எண்ணும்மைப் பொருளில் வரும்போது அவை பெரும்பாலும் அஃறிணை வினைகளைப் பயனிலையாகக் கொண்டு முடியும். (தொல். சொல். 51)

    இவ்வாறு இருதிணைச் சொற்கள் எழுவாய்களாக வரும்போது ஏதேனும் ஒரு திணைக்குரிய வினைச்சொல் பயனிலையாக வருவது வழு. எனினும் இதனைத் திணை வழுவமைதியாக ஏற்றுக் கொள்கின்றனர்.

    (எ.டு) “முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா”.

    சிறுபான்மை இத்தகைய பெயர்கள் உயர்திணை வினைகொண்டும் முடியும்.

    (எ.டு) “தானும் தன் புரவியும் தோன்றினான்”

    (3) வியங்கோள் வினைமுற்று இருதிணைக்கும் பொதுவானது. ஆகவே வியங்கோள் வினைமுற்றைக் கொண்டு முடிகின்ற எண்ணு நிலைத் தொடரில் உயர்திணைப் பெயரும் அஃறிணைப் பெயரும் விரவி எழுவாய்களாக வருவது உண்டு. (தொல். சொல். 45)

    (எ.டு) ஆவும் ஆயனும் செல்க. நாயும் வேடனும் செல்க.

    4.2.5 முற்றும்மைத் தொடர்

    இவ்வளவு என்று வரையறுக்கப்பட்ட சினைப் பெயர்ச்சொல்லும் முதல் பெயர்ச்சொல்லும் எழுவாயாக நின்று வினையொடு தொடரும் பொழுது அத்தொகுதிப் பெயருக்கு இறுதியில் உம் கொடுத்துக் கூற வேண்டும் இந்த உம்மை முற்றும்மை என்று கூறப்படும்.

    (எ.டு) இரு கண்ணும் சிவந்தன. மூவேந்தரும் வந்தனர்.

     
    தன் மதிப்பீடு : வினாக்கள் - I
     
    1.
    தொல்காப்பியர் சொல்லதிகாரத்தில் தொடரியலைப் பற்றிப் பேசும் இயல்கள் யாவை?
    2.
    தொல்காப்பியத்தில் எழுவாய் பயனிலை இயைபு பற்றிக் கூறும் இயல் யாது?
    3.
    தமிழில் எழுவாய், பயனிலை ஆகியவற்றிற்கு இடையே எவ்வெவற்றில் இயைபு காணப்படுகிறது?
    4.
    கிளவியாக்கம் என்ற தொடரின் பொருள் யாது?
    5.
    டாக்டர். பி. எஸ். சுப்பிரமணிய சாத்திரியார் கிளவியாக்கம் என்னும் இயல் பற்றிக் கூறும் கருத்து யாது?
    6.
    ஆங்கில மொழியில் வினைச்சொற்கள் பால் காட்டுவது உண்டா?
    7.
    மார் என்னும் இடைச்சொல் காட்டும் பால் யாது?
    8.
    வந்தன என்ற வினைச்சொல் உணர்த்தும் திணை பால்கள் யாவை?
    9.
    அவள் வந்தாள், அது வந்தது - இத்தொடர்களில் அமைந்துள்ள திணை, பால் வாய்பாட்டைக் குறிப்பிடுக.
    10.
    எழுவாய், பயனிலை இயைபு மாறினால் ஏற்படும் வழுக்கள் யாவை?
    11.
    அவன் அவள் வந்தனர் - இத்தொடரில் உள்ள பிழை நீக்கிச் சரியாக எழுதுக.
    12.
    மூவேந்தரும் வந்தனர் - இதில் வரும் உம்மைக்கு வழங்கப்படும் பெயர் யாது?
புதுப்பிக்கபட்ட நாள் : 17-08-2017 11:34:48(இந்திய நேரம்)