Primary tabs
-
ஆய்வாளர் தன் ஆய்வுக்குப் பயன்படுத்தும் தரவுகளை இரண்டு வகையாகப் பகுக்கலாம்.
1) முதல் நிலைத் தரவுகள்
2) துணை நிலைத் தரவுகள்ஆய்வுக் களத்திற்கு நேரடியாகச் சென்று காட்சி, உற்று நோக்கல், நேர்காணல், வினாத் தொகுப்பு போன்ற கருவிகளைக் கொண்டு திரட்டப்படும் தரவுகள் முதல் நிலைத் தரவுகளாகக் கொள்ளப்படும். பிறரால் சிதைக்கப்படாமலும், புனையப்படாமலும் ஆய்வாளருக்குக் கிடைக்கும் இத்தரவுகள் நம்பிக்கைக்கு உரியவையாகும். இவ்வாறு திரட்டப்படும் தரவுகள் ஆய்வாளரின் கருதுகோளை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ பயன்படுகின்றன. களப்பணியின் வாயிலாக மேற்கொள்ளப்படும் ஆய்வுகளில் களப்பணியில் ஆய்வாளரால் தொகுக்கப் பெறும் வழக்காற்றுத் தரவுகளே மூல ஆதாரங்களாக, முதல் நிலைத் தரவுகளாக அமைகின்றன.
ஆய்வுப் பொருள் தொடர்பாகத் தொகுக்கப்பட்டுள்ள முதல் நிலைத் தரவுகளோடு பொருந்தியும், துணையாகவும் வரும் பிற தரவுகள், துணை நிலைத் தரவுகளாகக் கொள்ளப்படும். இத்தரவுகளால் ஆய்வின் அடித்தளம் விரிவுபடுகின்றது. மூலத் தரவுகளைக் கொண்டு நிகழ்த்தப்பட்ட தனது ஆய்வின் முடிவுகளைத் துணை நிலைத் தரவுகள் மூலம் ஆய்வாளர் சரிபார்த்துக் கொள்ள இயலும். அச்சு வடிவில் வெளி வந்துள்ள செய்தி ஏடு, இதழ்கள், ஆய்விதழ், வானொலி உரைகள் போன்றவை துணை நிலைத் தரவுகளில் இடம் பெறுகின்றன.
சான்றாக :
‘தெருக்கூத்து’ பற்றிய ஆய்வில் தெருக்கூத்தைப் பல்வேறு சூழல்களில் உற்று நோக்கிக் கள ஆய்வில் திரட்டிய தகவல்கள், கூத்துக் கலைஞர்கள், பார்வையாளர் போன்றோரிடம் நிகழ்த்திய நேர்காணலின் வாயிலாகக் கிடைத்த தகவல்கள்; கூத்து தொடர்பாக வெளிவந்துள்ள நூல்கள் ஆகியவற்றை முதல் நிலைத் தரவாகக் கொள்ளலாம். கூத்து, தமிழ் நாடகம் பற்றி வெளிவந்துள்ள ஆய்வேடுகள், நூல்கள், கட்டுரைகள் போன்றவற்றைத் துணை நிலைத் தரவாகக் கொள்ளலாம்.