தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொழில் நுட்பக் கருவிகளின் பயன்பாடு

  • 5.4 தொழில் நுட்பக் கருவிகளின் பயன்பாடு

    இன்றைய ஆய்வுகள் அறிவியல் அணுகுமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. ஆதலால் ஆய்வில் பயன்படுத்தப்படும் கருவிகளும் அறிவியல் தொழில் நுட்பம் சார்ந்தவைகளாகவே உள்ளன. பொதுவாக ஆய்வுப் பொருள் தொடர்பான தரவுகள் மூன்று வழிகளில் சேகரித்துப் பதிவு செய்யப்படுகின்றன. அவை,

    1) மரபு வழிச் சேகரிப்பு முறை (Traditional Media)
    2) அச்சுச் சாதனங்களின் வழிச் சேகரிப்பு முறை (Printing Media)
    3) மின்னணுச் சாதனங்களின் வழிச் சேகரிப்பு முறை (Electronic Media)

    5.4.1 மரபுவழிச் சேகரிப்பு

    தொழில் நுட்பக் கருவிகளின் துணையின்றித் தரவு சேகரிக்கும் முறை. தொடக்கக் காலத்தில் களப்பணி ஆய்வு மேற்கொண்டோர் தகவலாளர்களிடமிருந்து பெறும் தரவுகளையும் தகவல் அறிக்கைகளையும் களப்பணிக் குறிப்பேடுகளில் குறிப்பெடுத்துப் பதிவு செய்து கொண்டனர். நாட்டுப்புற வழக்காறுகள், நிகழ்கலைகள், சடங்குகள், திருவிழாக்கள் தொடர்பான தகவல்களை உற்று நோக்கல், நேர்காணல் மற்றும் வினா நிரல்களின் மூலம் கண்டறிந்து ஆய்வாளர்கள் குறிப்பேடுகளில் பதிவு செய்து அவற்றை ஆய்விற்கு உட்படுத்தினர். இத்தகைய சேகரிப்பு முறை கட்டுப்பாடற்றது, சுதந்திரத் தன்மையுடயது; பொருளாதாரச் சிக்கனமுடையது.

    5.4.2 அச்சுச் சாதனங்களின் வழிச் சேகரிப்பு

    நாட்டுப்புறக் கலைஞர்கள், திருவிழா, தெய்வ வழிபாடுகள் குறித்து வெளிவரும் செய்திகளை அறிந்து, அவை ஆய்விற்குத் தேவைப்படுமானால், உடனே களப்பணி செய்து தகவல்களைத் திரட்ட இம்முறை வாய்ப்பு ஏற்படுத்தித் தருகின்றது. மேலும் நம் ஆய்விற்குத் தேவையான தகவல்களைப் பத்திரிகைகளின் வாயிலாக விளம்பரம் செய்து வெளியிட்டு, அதன் மூலம் தகவல்களைச் சேகரிக்கும் வழியும் இதில் உள்ளது. அச்சிட்டு வெளியிடப்படும் ஏடு, மலர்கள், நூல்கள், ஆய்விதழ்கள், வரலாற்றுக் குறிப்புகள் போன்றவற்றில் இடம்பெறும் செய்திகளைத் தகவல்களாக மாற்றிக் கொள்ளுதல் ஆகிய பயன்பாடு அச்சுச் சாதனச் வழிச் சேகரிப்பு முறையில் உள்ளது.

    5.4.3 மின்னணுச் சாதன வழிச் சேகரிப்பு

    ஒலிப்பதிவுக் கருவி, ஒளிப்படக் கருவி, ஒலிஒளிப்படக் கருவி, இணையம் (Internet) ஆகிய சாதனங்கள் மின்னணுச் சாதனங்களாக இங்குக் குறிப்பிடப்படுகின்றன. தொழில்நுட்பக் கருவிகள், களப் பணியைப் பொறுத்தவரை, தகவல்களை நுட்பமாகவும் நுணுக்கமாகவும் பெற்றுத் தருவதிலும், தரவுகளை ஆவணப்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றி வருகின்றன.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:20:35(இந்திய நேரம்)