தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கோட்பாடு

  • 6.1 கோட்பாடு

    இப்பாடப் பகுதியில் நாட்டுப்புறவியல், கோட்பாடுகள் என்ற இரு பகுதிகள் உள்ளன. இதில் நாட்டுப்புறவியல் குறித்த விளக்கங்களை முந்தைய ஐந்து பகுதிகளும் விளக்கியுள்ளன. எனவே கோட்பாடு என்ற சொல்லாட்சி விளக்கத்தோடு, நாட்டுப்புறவியலில் இக்கோட்பாடு எங்ஙனம் பொருந்தியுள்ளது என்பதையும் எடுத்துரைப்பது இப்பாடப் பகுதியாகும். கோட்பாடு என்பதை ஒரு கருத்தாக்கம் (ideology) என்பர் அறிஞர்கள். கொள்கையின் தன்மையினைக் கொண்டதே கோட்பாடு.

    • சொல்லாட்சி

    ‘கற்பு’ என்பது ஒரு கோட்பாடு. நடைமுறை வாழ்வில் நாம் ஏற்றுக் கொண்டுள்ள கோட்பாடு. இதன் வாழ்வியல் நெறிமுறை (Standard of life) என்னவென்றால், ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்பதாகும். எனவே ஓர் ஆணும், ஒரு பெண்ணும் மட்டுமே, சமுதாய நிகழ்வாகிய திருமணச் சடங்கின் மூலம் இணைந்து வாழும் வாழ்க்கையே கற்புக் கோட்பாட்டினைக் கொண்டது என்று கூறப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு கொள்கையின் சிந்தனைத் தெளிவினாலும் - ஏற்றுக் கொள்ளல் என்பதாலும் - சமுதாய நிலைப்பாட்டினாலும் கோட்பாடுகள் உருவாகின்றன.

    6.1.1 நாட்டுப்புறவியல் கோட்பாடு

    நாட்டுப்புற வழக்காறுகளைப் புரிந்து கொள்வது என்பது அவற்றைச் சேகரிப்பதிலும், தொகுப்பதிலும், வெளியிடுவதிலும், ஆவணப் படுத்துவதிலும் மட்டும் அடங்கி இருப்பதில்லை; அதனையும் தாண்டி, பல்வேறு கோட்பாடுகளின் அடிப்படையில் அவற்றைப் புரிந்து கொள்வதிலும் அர்த்தப்படுத்துவதிலும்தான் அடங்கி இருக்கிறது.

    • கோட்பாடுகளின் நோக்கம்

    உலகளாவிய நாட்டுப்புறவியல் ஆய்வு என்பது நாட்டுப்புறவியலின் தனித்த சிறப்பான விரிந்த நோக்கப் பார்வையாகும். அதாவது நாட்டுப்புற வழக்காறுகளை வட்டார, தேசிய, சர்வ தேசிய அளவில் புரிந்து கொள்ளுதல்; இதற்குப் பல்வேறு வகையான வழக்காறுகளை, பல்வேறு வட்டார, மொழி, பண்பாட்டுச் சூழல்களிலிருந்து திரட்டி அவற்றை ஒப்பாய்வு செய்தல்; அவற்றுக்கு இடையில் காணப்படும் உலகளாவிய கூறுகளைக் கண்டுபிடித்தல் ஆகியவையே இதன் அடிப்படை நோக்கமாகும். மேலும் நாட்டுப்புற வழக்காறுகளில் பண்பாட்டுத் தனித் தன்மைகளையும், அத்தனித் தன்மைகளுக்கான காரணங்களையும் அறிவதும் இக்கோட்பாடுகளின் நோக்கமாகும்.

    6.1.2 கோட்பாடுகளின் பயன்பாடு

    அமெரிக்க நாட்டைச் சேர்ந்த நாட்டுப்புறவியல் பேரறிஞர் ரிச்சர்ட் எம். டார்சன் பன்னிரண்டு ஆய்வுக் கோட்பாடுகளைப் பற்றிக் கூறுகின்றார். இவை அனைத்தும், அக்கோட்பாடுகள் தோன்றிய காலக்கட்டங்களில் செல்வாக்குச் செலுத்திய அறிவியல், சமூக அறிவியல் முதலிய அறிவுப் புலங்கள் முன்வைத்த வாய்பாடுகளின் (Paradigms) அடிப்படையில் உருவானவை ஆகும். 19ஆம் நூற்றாண்டைப் பொறுத்த வரை பரிணாம வாதம் (Evolutionism), தேசிய வாதம் (Nationalism), வரலாற்று மீட்டுருவாக்கம் (Historical Reconstruction) போன்றவை நாட்டுப்புறவியல் ஆய்வுக் கோட்பாடுகளுக்கு வழிகாட்டிகளாக அமைந்தன.

    20ஆம் நூற்றாண்டில் அமைப்பியல் வாதம், பண்பாட்டியல் கோட்பாடு, சூழலியல் கோட்பாடு, நிகழ்த்துதல் கோட்பாடு முதலியன வழிகாட்டிகளாக அமைந்தன. 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் இலக்கியம் மற்றும் சமூக அறிவியல் புலங்களில் வளமடைந்த பின்நவீனத்துவம், குறியியல், பொருள் கோடலியல், உளப்பகுப்பாய்வு போன்ற கோட்பாடுகள் தோன்றின. இக்கோட்பாடுகள் இன்றைய நாட்டுப்புற வழக்காறுகளை ஆய்வு செய்வதற்கு மிகவும் பயனுள்ளவையாக உள்ளன.

    நாம் மேற்கொள்ளும் கோட்பாடுகளில் எதை எடுத்துக் கொண்டு ஆராய்ந்தாலும் அவ்வாய்வு ஒரு குறிப்பிட்ட பண்பாட்டிற்குள் சுருங்கிப் போகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது, எந்த ஒரு கோட்பாட்டையும் பல பண்பாட்டுச் சூழல்களிலும் ஆராய்ந்து அக்கோட்பாடு பல பண்பாடுகளுக்கும் பொருந்துகிறதா என்று பார்க்க வேண்டும். அப்படிப் பொருத்தமாக அமைந்தால்தான் அக்கோட்பாடு உலகளாவிய பயன்பாட்டைக் கொண்டதாகக் கருதப்படும். அதே சமயம் அவ்வாறு சொல்லப்படுகின்ற கோட்பாட்டை அப்படியே எல்லாரும் ஏற்றுக் கொள்வார்கள் என்றும் சொல்ல முடியாது. ஆதரவு, எதிர்ப்பு, மாற்றம், எல்லாமே தோன்றும். ஆனால் அவை அனைத்தும் அக்கோட்பாட்டின் வளர்ச்சிக்கு உதவும். கோட்பாடு வெற்றி பெற வேண்டும் என்றால் அதில் நம்பகமான தரவுகள், ஆழமான பகுப்பாய்வு, அறிவுப் பூர்வமான அல்லது தர்க்கப் பூர்வமான விவாதங்கள், பல பண்பாடுகளுக்கும் பொருந்தும் தன்மை போன்றவைகள் இருப்பது முக்கியம் ஆகும்.

    நாட்டுப்புறவியல் கோட்பாடுகளை இருவகைப்படுத்தலாம்.

    1) இருநிலைக் காலக் கோட்பாடுகள்(Diachronic Theories)
    2) ஒருநிலைக் காலக் கோட்பாடுகள(Synchronic Theories)
    • இருநிலைக் காலக் கோட்பாடுகள் (DiachronicTheories)

    இருநிலைக் காலக் கோட்பாடுகள் (Diachronic Theories) கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் இணைப்பவையாக அமையும். தோற்றம், பரிணாமம், மரபுகள், வரலாற்று மீட்டுருவாக்கம், தேசிய வாதம், காதலின்பம் (Romantic) பற்றிய கோட்பாடுகள் இந்த வகையைச் சார்ந்தவையாகும். இந்தக் கோட்பாடுகள் 19ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்றிருந்தன.

    • ஒருநிலைக் காலக் கோட்பாடுகள் (Synchronic Theories)

    20ஆம் நூற்றாண்டில் ஒருநிலைக் காலக் கோட்பாடுகள் முக்கியத்துவம் பெற்றன. இக்கோட்பாடுகள் நிகழ்காலத்திற்கு முக்கியத்துவம் தந்தன. அமைப்பு, வடிவம், அர்த்தம், பயன்பாடு முதலியவற்றுக்கு முக்கியத்துவம் தந்தன.

    கோட்பாடுகள் என்பன முடிவானவை என்பதல்ல. அவை, நாட்டுப்புற மரபுகள், வழக்காறுகள் போன்றவற்றைப் புரிந்து கொள்ள உதவும் கருவிகளே. முன்னமே சொன்னது போல 12 கோட்பாடுகளை நாட்டுப்புற வழக்காற்று அறிஞர்கள் முன்வைக்கின்றனர். ஆனால் நம் பாடப் பகுதியில் பக்க வரையறை கருதி மூன்று கோட்பாடுகள் மட்டுமே விளக்கப் பெறுகின்றன. அவையாவன:

    • அமைப்பியல் கோட்பாடு
    • வாய்மொழி வாய்பாட்டுக் கோட்பாடு
    • சூழல் கோட்பாடு

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 06-10-2017 18:05:28(இந்திய நேரம்)