Primary tabs
6.3 வாய்மொழி வாய்பாட்டுக் கோட்பாடு
வாய்பாடு என்பது பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சூழலில் தேவைப்படும் போதெல்லாம் பயன்படுத்தப்படும் சொற்றொடராகும். இவ்வாய்பாடுகள் எல்லாம் ஒரே தன்மையும் பயனும் உடையனவாகும்.
6.3.1 வாய்பாட்டுக் கோட்பாடு
நாட்டுப்புறவியல் கோட்பாடுகளில் பெரும்பாலானவை ‘பனுவல்’ (text) என்பதை வைத்தே ஆய்வு செய்யப்பட்டன. கதை சொல்பவருக்கோ, பாடல் பாடுபவருக்கோ முக்கியத்துவம் தரப்படவில்லை. முதன் முதலில் இக்கோட்பாட்டில்தான் பாடகருக்கு முக்கியத்துவம் தரப்பட்டது. இந்தக் கோட்பாடானது பாடகரின் மனத்தில் பாடல் உருவாகும் படிமுறைகளையும் அவர் பாடல் அல்லது காவியத்தை நிகழ்த்துவதற்குப் பயன்படுத்தும் உத்திகளையும் கவனத்தில் கொண்டது. குறிப்பிட்ட பாடகர் வெறுமனே மனப்பாடம் செய்வதன் மூலம் பாடுகிறாரா அல்லது பாடும் போது தாமாகவே உருவாக்குகின்றாரா? என்று அறிவது இக்கோட்பாட்டின் அடிப்படையாகும்.
இக்கோட்பாட்டை முதன்முதலில் உருவாக்கியவர் மில்மன் பாரி என்பவர் தான். இவர் இலியட், ஒடிசி ஆகிய காப்பியங்களின் வாய்பாட்டு அமைப்புகளை (Formulaic compositon) ஆராய்ந்தார். அதன்பின் 1933 முதல் 1935 வரை யுகோஸ்லேவியப் பகுதியில் வாழும் நாட்டுப்புறப் பாடகர்களின் பாடல்களைச் சேகரித்தார். சேகரித்த பாடல்களைப் புத்தகமாக எழுத ஆரம்பித்து எதிர்பாராத விதமாக அவர் இறந்துவிடவே, அவர் சீடர் ஆல்பர்ட் லார்டு ஆய்வினைத் தொடர்ந்து மேற்கொண்டார்.
ஆல்பர்ட் லார்டு தம் ஆய்வின் படி வாய்மொழி வாய்பாட்டுக் கோட்பாட்டைக் கீழ்க்கண்டவாறு வரையறுக்கிறார்.
-
குறிப்பிட்ட இன்றிமையாத ஒரு கருத்தை வெளிப்படுத்துவதற்காக ஒரே விதமான யாப்புச் சந்தத்தில் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொகுதி.
பாடகர் வாய்பாடுகளை மனப்பாடம் செய்து கொண்டு நாட்டுப்புறக் காப்பியங்களின் நிகழ்த்துதலில் பலமுறை பயன்படுத்துகிறார்.
இந்த வாய்பாடுகள் இசை, சந்தம், சொற்றொடர், ஓசைப்புலன் சார்ந்த தோரணைகளால் உருவாக்கப்படுகின்றன.
இவை ஓர் இளம்பாடகன் பாட ஆரம்பிக்கும் முன்னரே அவனது சிந்தனையில் சேர ஆரம்பிக்கின்றன. இந்த வாய்பாடுகள் வாய்மொழி எடுத்துரைப்பு நடையின் அடிப்படை ஆகும்.
வாய்மொழிக் காப்பியங்களை எழுத்துக் காப்பியங்களிலிருந்து வேறுபடுத்தும் எண்ணத்தில் பயிலும் நமக்கு மிகவும் உதவும் ஒரு கூறு வாய்பாடு ஆகும்.
இது எந்த ஒரு வரி மற்றொரு வரியுடனும் அடிக்கருத்துடனும் தொடர்புடையது எனப் படிப்பதற்கும், மொத்தத்தில் பாடலின் வடிவத்தைப் படிப்பதற்கும் உதவுகிறது.
அடிக்கருத்துகள் என்பவை மரபுவழிப் பாடலின் வாய்பாட்டு நடையில் ஒரு கதையைச் சொல்லுவதற்காக வழக்காகப் பயன்படுத்தப்படும் கருத்துகளின் தொகுதிகள் ஆகும்.
இந்த அடிக்கருத்துகள் அதே அடிப்படை நிகழ்வுகளையும் விளக்கங்களையும் குறிக்கின்றன.
6.3.2 வாய்மொழி வாய்பாட்டின் பயன்பாடு
-
கதைப் பாடல்களைப் பாடுவோர் சில அடிகளைத் திரும்பத் திரும்பப் பாடும் பொழுது அவ்வடிகள் கேட்போருக்கு மட்டுமன்றிப் பாடுவோருக்கு அதைவிட மிகுந்த உதவியாக இருக்கும்.
கேட்போர் கதையை நன்கு நினைவில் கொள்ளுதலும், சொல்வோர் நினைவு படுத்திக் கொள்ளுதலும் இதனால் எளிதாகின்றன.
இதுவே எழுத்து இலக்கியத்திற்கும் வாய்மொழி இலக்கியத்திற்கும் உள்ள பெரிய வேறுபாடு ஆகும்.
கேட்டுக் கேட்டு மனத்தில் இருத்திக் கொள்ள வேண்டியிருத்தலால் இந்த ‘மீண்டு வரல்’ உத்தி (technique), கதை (story or tale), பாடல் (song), கதைப்பாடல்(Ballad) ஆகியவற்றில் பயன்படுத்தப் படுகிறது.
பாடுபவர் காலத்தைச் சூழ்நிலைக்கு ஏற்ப நீட்டிக்கவும் பயன்படுத்திக் கொள்கிறார். பார்வையாளரைத் தன்வயப்படுத்தவும் பாடுவோருக்கு உதவுகிறது.
சான்று
இந்த உத்தி கதைப் பாடல்களில் மீண்டும் வரல், மாறுபட மீண்டும் வரல், இடை இடையே மீண்டும் வரல் எனக் காணப்படுகின்றது.
ஆறான மாசமதில் அரகரா தஞ்சமென்பாள்
ஏழான மாசமதில் இறையவரே தஞ்சமென்பாள்
எட்டான மாசமதில் ஈசுவரரே தஞ்சமென்பாள்
ஒன்பதான மாசமதில் உடையவரே தஞ்சமென்பாள்என்ற பாடலில் தஞ்சமென்பாள் என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் வருகிறது. இவ்வாறு அமைவது ஒரு குறிப்பிட்ட வாய்பாடாகும். இது வாய்மொழி வழக்காற்றில் அமைய, அதனை வாய்மொழி வாய்பாடு என்கின்றனர்.
தன்மதிப்பீடு : வினாக்கள் -I-