Primary tabs
6.2 அமைப்பியல் கோட்பாடு
அமைப்பியல் கோட்பாட்டினை அறிந்து கொள்வதற்கு முன் அமைப்பியல் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்வது அவசியமாகும்.
நாட்டுப்புற வழக்காற்றுக் கதைகளின் பகுதிகளாகிய உறுப்புகளின் விளக்கமும், பகுதிகளாகிய உறுப்புகள் ஒன்றோடு ஒன்று கொள்ளும் உறவும், பகுதிகள் முழுமையோடு கொள்ளும் உறவும் அமைப்பியல் ஆகும். ஆக, அமைப்பியல் என்பது நாட்டுப்புற வழக்காற்றின் உள்ளடக்கத்தைப் பகுத்தும் - தொகுத்தும் - இணைத்தும் அறிந்து கொள்வது எனலாம்.
6.2.1 அமைப்பியல் கோட்பாட்டின் வளர்ச்சி
1960ஆம் காலக்கட்டத்தில் அமெரிக்காவின் நாட்டுப்புற அறிஞர்களிடையே மிகுந்த செல்வாக்குப் பெற்ற கோட்பாடு அமைப்பியல் கோட்பாடு. இக் கோட்பாட்டின் தந்தை ருஷ்ய நாட்டுப் பேரறிஞர் விளாடிமிர் பிராப் ஆவார். பிராப் தம்முடைய நாட்டார் கதைகளின் உள்ளமைப்பு (Morphologija Skazki) என்ற நூலை 1928இல் வெளியிட்டார். இந்நூல் 1958இல் அமெரிக்காவில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டது. இந்நூல் ‘நாட்டுப்புற வழக்காற்றியல்’ துறையில் பெரும் மாறுதலை ஏற்படுத்தியது. பிராப்பின் கருத்தின்படி வழக்காற்றுக் கதைகளின் தோற்றம் பற்றி ஆய்வு செய்வதற்கு முன்னால் அக்கதைகள் பற்றி விளக்கம் செய்தல் வேண்டும். மேலும் அவர், எல்லா ஆய்வுகட்கும் அடிப்படை, வகைப்படுத்துதல்தான். ஆனால் அது சில முதல்நிலை ஆராய்ச்சிகளுக்குப் பின்னரே நடைபெற வேண்டும் என்கிறார், வகைப்படுத்துதல் புறப்பண்புகளைக் கொண்டு அமையாது. சான்று மூலங்களின் உட்பண்புகளைக் கொண்டே அமைய வேண்டும் என்கிறார். பிராப் தம்முடைய ஆய்விற்கு அஃபனேசவ் என்பார் தொகுத்த நூறு தேவதைக் கதைகளை (Narodnyc russkie skzhi by A.N.Afanasev) எடுத்துக் கொண்டார். தேவதைக் கதைகள் (Fairy Tales) தனித்ததொரு வகையின. ஆன்ட்டி ஆர்னி என்பார் தாம் வகைப்படுத்திய கதை வகை அமைவில் 300 முதல் 749 வரை உள்ளவற்றைத் தேவதைக் கதைகள் என்று குறிப்பிட்டார். பிராப் ஒப்பீடு செய்வதற்காகத் தேவதைக் கதைகளின் உறுப்புகளைத் தனித்ததொரு முறைகொண்டு பிரித்தார். உறுப்புகளின் அடிப்படையில் அவை ஒப்பிடப்பட்டன. அவ்வாறு ஒப்பிட்டதின் விளைவாக அமைப்பியல் உருவாயிற்று.
இலக்கிய வகை ஒன்றின் அமைப்பைக் கண்டுபிடிப்பதற்கு எவை மாறாதவை (constants), எவை மாறுபவை (variables) என்பதை முதலில் கண்டுபிடிக்க வேண்டும்.
சான்று
பிராப் சில வாக்கியங்களைக் கூறி அவற்றின் நிலைத்த கூறு என்று எவற்றைக் கூறலாம் என்பதையும் விளக்கியுள்ளார்.
1) ஒரு ஜார் ஒரு கழுகை ஒரு வீரனுக்குக் கொடுக்கிறான். அந்தக் கழுகு அந்த வீரனை வேறொரு நாட்டுக்குக் கொண்டு செல்லுகிறது. (ஜார் = ரஷிய மன்னர்)
2) ஒரு முதியவர் கசென்கோவிற்கு ஒரு குதிரையைக் கொடுக்கிறார். அந்தக் குதிரை கசென்கோவை வேறொரு நாட்டிற்குக் கொண்டு செல்கிறது.
3) ஒரு மந்திரவாதி இவானுக்குப் படகைக் கொடுக்கிறான். அந்தப் படகு இவானை வேறொரு நாட்டுக்குக் கொண்டு செல்கிறது.
4) ஓர் இளவரசி இவானுக்கு ஒரு மோதிரம் கொடுக்கிறாள். அந்த மோதிரத்திலிருந்து சில இளைஞர்கள் தோன்றி இவானை வேறொரு நாட்டுக்குச் சுமந்து செல்கின்றனர்.
மேற்சொல்லப்பட்ட நான்கு கதைகளில் இரண்டு வகையான தன்மைகளைப் பார்க்க முடிகிறது.
1) நிலையானது.
2) நிலையற்றது.நிலையற்றது என்று எடுத்துக்கொண்டால் கதைப் பாத்திரங்களின் பெயர்கள், இயல்புகள், அனுப்புகின்றவர், கொடுக்கப்படுகின்ற பொருள் இவைகள் வேறுபடுகின்றன.
நிலையானது என்று எடுத்துக் கொண்டால் பாத்திரங்களின் செயல்பாடுகள், அனுப்புவதும், போவதும், கொடுக்கப்படுவதும் நிலையானவை. இவைகளைத் தான் செயல் என்று கூறுகிறார் பிராப். இந்தச் செயல் (வினை- function) தான் கதைகளின் அடிப்படை அலகு.
பிராப் கதைகளின் மாதிரி (Model) அமைப்பினை உருவாக்கினார். அதில் முப்பத்தொரு வினைகளைப் பற்றிக் கூறுகின்றார். அந்த வினைகளுக்கான குறியீட்டையும் அமைத்துள்ளார். இந்தக் குறியீடுகள் பல்வேறு கதைகளை ஒப்பிடும் திட்டத்திற்குப் பின்னர் உதவும். கதைத் தொடக்கச் சூழலில் ஆரம்பித்து முப்பத்தொரு வினைகளையும், குறிகளையும் பார்க்க வேண்டும்.
இந்த 31 வினைகளும் ஒரே கதையில் இடம்பெற வேண்டும் என்ற கட்டாயமில்லை. சில வினைகள் சில தனித்த கதைகளில் இடம்பெறாமலும் அமையலாம். ஆனால் வினைகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். மேலும் அவற்றின் வரன்முறை அடுக்கு நிலையானதாகவும் அமையும். கதாபாத்திரங்களின் எண்ணிக்கை பெரும்பாலும் 7ஆக அமையும்.
6.2.3 நாட்டுப்புறவியல் ஆய்வாளர்கள்
பிராப்பிற்கு பின்னர் வந்த ஆய்வாளர்கள் பிராப்பின் அமைப்பியல் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தம் ஆய்வை மேற்கொண்டாலும் சில தன்மைகளில் வேறுபட்டனர். அவற்றைப் பற்றி இனிப் பார்க்கலாம். அவை அமைப்பியல் வளர்ச்சி நிலையினை அறிய உதவும்.
- ஆலன் டண்டிஸ்
இவர் பிராப்பின் தேவதைக் கதைகளின் அமைப்பியல் மாதிரியை மாற்றியமைத்து வட அமெரிக்க இந்திய நாட்டார் கதைகளுக்குப் பொருத்தி ஆய்வு செய்தார். அமைப்பியல் ஆய்வை நாட்டார் கதைகளில் மட்டும் அல்லாமல் பழமரபுக் கதைகள், விளையாட்டுகள், பழமொழிகள், விடுகதைகள் போன்றவற்றிற்கும் பொருத்திப் பார்க்கலாம் என்பதை நிறுவினார். பிராப்பின் 31 வினைகளை 10 ஆகச் சுருக்கிக் காட்டினார்.
- கிளாட் பிரிமாண்ட்
கிளாட் பிரிமாண்ட், பிராப்பின் அமைப்பியல் மாதிரியைப் பின்பற்றி மற்றொரு அமைப்பியல் மாதிரியை முன் வைத்துள்ளார். அவர் பிரெஞ்சு நாட்டுத் தேவதைக் கதைகளைத் தமது ஆய்வுக்கு உட்படுத்தினார். பிரெஞ்சு தேவதைக் கதைகள் மூன்று இணை செயல்களைக் கொண்டவை என்ற கருதுகோளை முன்வைத்தார். அவை :
1) சேதப்படுத்தல் (deterioration)முன்னேற்றம் (improvement)2) தகுதி (merit)பரிசளித்தல் (reward)3) விரும்பத்தகாதது (unworthiness)தண்டனை (Punishment)இம்மூன்று இணைகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தப்படும். அத்தொடர்பு இவ்வாறு அமையும்:
‘அ’ சேதப்படுத்தல்‘அ’ முன்னேற்ற மடைதல்‘இ’ உதவி செய்தவனுக்கு நன்றி‘இ’ உதவி செய்தவனின் கொடை‘ஆ’ விரும்பத்தகாத வில்லனின் காரணமாக‘ஆ’ வில்லனுக்குத் தண்டனைபிராப் கண்டறிந்த 31 வினைகளை ஆலன் டண்டிஸ் 10 ஆகச் சுருக்கிக் காட்டினார். பிரிமாண்டின் பிரெஞ்சு மாதிரி இதனிலும் சுருக்கி, 6 வினைகள் மூன்று இணைகளாக அமைந்துள்ளன என்று குறிப்பிடுகின்றது. இம்மூன்று இணைகளுக்கும் பிராப்பின் செயல்களுக்கும் இடையே உள்ள தொடர்பையும் விளக்கியுள்ளார் பிரிமாண்ட்.
- லெவி ஸ்ட்ராஸ்
பிராபைத் தொடர்ந்து மொழியியலை அடிப்படையாக வைத்து நாட்டுப்புற வழக்காறுகளை அமைப்பியல் கோட்பாட்டின்படி ஆராய்ந்தவர் லெவி ஸ்ட்ராஸ் என்னும் மானிடவியல் பேரறிஞர். ‘The Structural Study of Myth’ என்ற ஆய்வுக் கட்டுரையில் புராணங்களைப் புதிய நோக்கில் ஆராய்கின்றார். லெவி ஸ்ட்ராஸ், பிராப்பின் முறையினின்றும் சிறிது விலகிச் சென்றாலும், அமைப்பியல் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டே ஆராய்கிறார்.