தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

6.6- தொகுப்புரை

  • 6.6 தொகுப்புரை

    கதைப்பாடல்கள் காட்டும் தமிழ்ச் சமுதாயம் சாதிப் பாகுபாட்டாலும் சமய வேறுபாட்டாலும் சிதறிச் சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து காணப்படுகின்றது. சில சாதியினரிடையே காணப்பெற்ற தனித்தன்மையுடைய சிறப்பியல்புகளைக் கதைப்பாடல்கள் வாயிலாக அறிய முடிகின்றது. தங்கள் சாதிக்கேயுரிய தனித்தன்மைக்குப் பங்கம் ஏற்படுத்துகின்ற வகையில் யாரேனும் செயல்பட்டால் அவர்கள் தண்டிக்கப்படுகின்ற தன்மையையும் காண முடிகின்றது. இதில் உறவினர், அந்நியர் என்ற பேதம் பார்க்கப்படுவதில்லை, சாதிகள் ஏற்படுத்தியது போன்று சமுதாயப் பிளவுகளைச் சமயங்களும் ஏற்படுத்தியுள்ளன. இருப்பினும் சாதிகளால் சமுதாயத்தில் ஏற்பட்ட அளவிற்குச் சிக்கல்களும் சீர்கேடுகளும் சமயங்களால் மிகுந்த அளவிற்கு ஏற்பட்டதாகக் கருத முடியவில்லை. கதைப்பாடல்கள், சமயச் சிக்கல்களால் இறந்தவர்களை விடச் சாதிச் சிக்கலால் இறந்தவர்களையே அதிகமாகப் பேசுகின்றன. அவ்வாறு இறந்தவர்களின் ஆவி இறைவனின் அருள்பெற்றுப் பேராற்றலுடன் செயல்படும் என்று பாமர மக்கள் நம்பினர். அந்த நம்பிக்கையின் வெளிப்பாடே நாட்டுப்புறத் தெய்வ வழிபாடாகும். சைவ, வைணவ சமயச் சிந்தனைகள் கொண்ட கதைப் பாடலும் தமிழ்ச் சமுதாயத்தில் உண்டு. இதனையொட்டி இசுலாம், சமணம், சிறித்தவக் கதைப்பாடல்களும் தங்கள் சமயக் கருத்துக்களை மக்களிடம் பரப்புவதற்காக இயற்றப்பட்டுள்ளன.

    சாதியாலும், சமயத்தாலும் கட்டுண்ட தமிழ்ச் சமுதாயத்திற்கெனப் பொதுவான சில பழக்க வழக்கங்களும் நம்பிக்கைகளும் உண்டு. அவற்றை அறிவதன் மூலம் தமிழ் மொழிபேசும் சமுதாயத்தினரின் பண்பாட்டை அறிய முடிகின்றது. சில பொதுவான பழக்க வழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் கதைப்பாடல்களில் இடம்பெற்றுக் கதையை நடத்திச் செல்லுகின்ற தன்மையைக் கதைப்பாடல்கள் மூலம் அறிகின்றோம். பொழுது போக்குக்காகக் கதைப் பாடல்கள் பாடப்பட்டன எனலாம். சமூகநீதியையும், பழக்க வழக்கங்கள், நன்மை தீமை ஆகியவை பற்றியும் அறியப் பெருந்துணையாக இவை உள்ளன.

    கதைப்பாடல்கள் காலங்காலமாக வாய் மொழியாகப் பாடப்பட்டு வருகின்ற காரணத்தால் சில மரபுகளைப் பெற்றுள்ளன. இம்மரபுகள் பெரும்பாலும் அனைத்துக் கதைப் பாடல்களிலும் பின்பற்றப்பட்டிருப்பதைக் காணலாம். இம் மரபுகள் சில இடங்களில் தேவையில்லையென்றாலும் கூட மக்களின் ஆர்வத்தைத் தூண்டுவதற்காகப் பின்பற்றப்பட்டுள்ளதை உணரலாம்.

     

    தன்மதிப்பீடு : வினாக்கள் - II

    1.
    பண்பாட்டை அறியத் துணை நிற்பவை எவை?
    2.
    தமிழ்ச் சமுதாயத்தின் அடிப்படைப் பழக்க வழக்கம் ஒன்றினைச் சுட்டுக.
    3.
    நிமித்தங்கள் அல்லது சகுனங்கள் கதைப்பாடல்களில் எடுத்தாளப்படுவதன் நோக்கம் என்ன?
    4.
    கதைப்பாடல்கள் பின்பற்றும் மரபுகளில் இரண்டினைச் சுட்டுக.
    5.
    கலைப்பண்பு முனைப்புக் கூறு என்றால் என்ன?

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 07-10-2017 19:26:48(இந்திய நேரம்)