Primary tabs
3.4 தொழிற் பாடல்கள்
தொழில் செய்யும் சூழல்களில் பாடப்படும் பாடல்களைத் தொழிற்பாடல்கள் எனலாம். வேளாண்மைத் தொழில்களிலும், வேளாண்மையல்லாத பிற தொழில்களிலும் பாடல்கள் பாடும் மரபு காணப்படுகிறது. தென்னார்க்காடு மாவட்டங்களில் சில பகுதிகளில் வேளாண்மைத் தொழிற் பாடல்களை காட்டுப் பாட்டு என்று கூறுகின்றனர். அவர்கள் வேளாண் நிலப்பகுதிகளைக் காடு என்று அழைப்பதால் அங்குப் பாடப்படும் பாடலை காட்டுப் பாடல் என்று கூறுகின்றனர். தொழில் துன்பங்கள் தெரியாமல் இருப்பதற்காகப் பாடல்கள் பாடப்படுகின்றன. வேறு பயன்கள் இருந்தாலும் இதுவே முதன்மையான காரணமாகத் தெரிகிறது. தொழில்களுக்கேற்பப் பாடல் பொருண்மையும், வடிவமும் அமைந்திருக்கும். தொழிற்பாடல்களுள் முதலில் வேளாண்மைத் தொழிற் பாடல்களைக் காணலாம்.
3.4.1 வேளாண்மைத் தொழிற்பாடல்கள்
ஏர் ஓட்டும்போது பாடல் பாடும் பழக்கம் உண்டு. இவ்வகைப் பாடல்கள் காளேரிப்பாட்டு என்று அழைக்கப்படுகின்றது. காளைகளை எந்தோழிக் காளைகளே, எந்தோழனார் காளைகளே என்று விளித்துப் பாடல்கள் பாடுகின்றனர்.
ஏர்ப்பாடல் ஒன்றின் சில அடிகள் வருமாறு:
இவ்வாறு தொடரும் இந்த ஏர்ப்பாடல் மாரியம்மன் வழிபாட்டுப் பாடலாகும். ‘என் தோழி காளையரே’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதன் வாயிலாக ஏர்ப்பாடல்களாக மாற்றிக் கொள்கின்றனர் பாடகர்கள். ஒரு சூழலில் பாடப்படும் பாடல் தேவை ஏற்படின் சில மாற்றங்களைச் செய்து வேறு சூழலில் பாடும் நிலை அனைத்து நாட்டுப்புறப் பாடல்களுக்குமான பொதுத் தன்மையாகும்.
கிணறு, குளம், குட்டை, கால்வாய்கள் முதலான நீர் நிலைகளிலிருந்து மேட்டுப்பாங்கான விளை நிலங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்கு மின் இயந்திரங்கள் இல்லாத காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்டது ‘ஏற்றம்’.
ஏற்றம் பின் வருமாறு அமைந்திருக்கும் :
இந்த ஏற்றத்திலிருந்து நீர் இறைக்கும் போது பாடல்கள் பாடுவர். ஏற்றத்தின் மேலே மிதி மரத்திலிருந்து சென்று வருபவர் ஒருவர். கீழே சால் பிடித்து நீர் இறைப்பவர் ஒருவர். சால் பிடித்து நீர் இறைப்பவர் பாடல் பாடுவார். களைப்பு தெரியாமல் இருப்பது தான் இதன் முதல் நோக்கம். இறைக்கப்பட்ட சால்களின் எண்ணிக்கையை அறிவது அடுத்த நோக்கம். பாடலின் ஒவ்வொரு பத்தடிக்கும் இறைக்கப்பட்ட சால்களின் எண்ணிக்கை கணக்கிடப்படும். மொத்த நிலத்தின் அளவு, இறைக்கப்பட்ட சால்களின் எண்ணிக்கை, இன்னும் இறைக்கப்பட வேண்டிய சால்களின் எண்ணிக்கை முதலியவற்றை ஏற்றம் இறைப்பவர் நன்கு அறிந்திருப்பார். ஆபத்தான தொழில் ஆகையால் தெய்வங்களையெல்லாம் அழைத்துக் காப்பாற்றுமாறு வேண்டுவதை பல பாடல்களில் காணலாம். பாடல்கள் நீண்ட நேரம் பாடப்படும். பல பாடல்களில் பொருள் தொடர்ச்சி இருக்காது.
ஏற்றப் பாடல் ஒன்றின் தொடக்கம் இது. பிள்ளையார்க்கு என்னென்ன படைக்கப்படும் என்று பட்டியலிடுகிறது பாடல். ஏற்றப் பாடலின் மற்றொரு துணுக்கு வருமாறு.
பசியோடு பணி செய்கிறார்கள். ஒருவன் பசியால் துவள, இன்னொருவன் சாப்பாடு வந்துவிடும் என்று ஆறுதல் கூறுகிறான். பிறகு மகிழ்ச்சியூட்ட என்ன வேண்டும் என்று கேட்க, பசி நேரத்திலும் அவன் தேவை வேறாக உள்ளது. இவ்வாறு தொழில் செய்யும் நேரம் முழுக்கப் பாடல் நீண்டு செல்லும். தொழில் களைப்பைப் போக்க இப்பாடல் துணை செய்யும்.
இவ்வாறே நடவு நடுதல், களையெடுத்தல், நெல் தூற்றல் போன்ற பல்வேறு வேளாண் தொழிற் சூழல்களில் பாடல்கள் பாடப்படும்.
வேளாண்மையல்லாத வேறு தொழில்கள் செய்யும் போதும் பாடல்கள் பாடப்படும். முற்காலத்தில் வீடுகட்டுவதற்குச் சுண்ணாம்புப் பாறைகளை உரலிலிட்டு இடித்துப் பயன்படுத்தி வந்தனர். அச்சூழல்களில் பாடல்கள் பாடப்படும். தொட்டிலில் போட்ட பிள்ளையைத் தூக்கிப் பார்க்கக் கூட நேரமில்லாமல் வேலை வாங்கப்படும் பெண் தொழிலாளியின் துயரக் குரல் ஒன்று கட்டிடப் பணிக்காகச் சுண்ணாம்பு இடிக்கும் பெண்ணிடமிருந்து வெளிப்படுவதைப் பின்வரும் பாடல் தெளிவுபடுத்துகிறது.
காலையிலே என்சாமி வந்தோம் நாங்க வந்தோம் நாங்க
காலப்புண்ண என்சாமி நோவுதுங்க நோவுதுங்க
நானிடிக்கும் என்சாமி நல்சுண்ணாம்பு நல்சுண்ணாம்பு
நல்லமெத்த என்சாமி கட்டுலாமே கட்டுலாமே
பெண்ணாடிக்கும் என்சாமி புது சுண்ணாம்பு புது சுண்ணாம்பு
புதுமெத்த என்சாமி கட்டுலாமே கட்டுலாமே
தொட்டிலிலே என்சாமி போட்டபிள்ள போட்டபிள்ள
தூக்கி பார்க்க நேரமில்ல நேரமில்லகட்டிடம் கட்டுவதற்குச் சுண்ணாம்பு இடிக்கும் பழக்கம் தற்போது மறைந்துவிட்டது. அச்சூழலில் பாடப்பட்ட இத்தகைய பாடல்கள் அருகிக் காணப்படுகின்றன. இவ்வாறு மாடு மேய்க்கும் போதும், கடலில் சென்று மீன் பிடிக்கும் போதும், சலவைத் தொழிலாளர்கள் துணிகளை வெளுக்கும்போதும் பாடல்கள் பாடும் பழக்கம் இருந்து வந்துள்ளதை அறிய முடிகிறது.
இன்றைய நிலையில் தாலாட்டுப் பாடும் பழக்கம் அருகி வருகிறது. கிரிக்கெட் போன்ற மேலைநாட்டு விளையாட்டுகளின் இறக்குமதி காரணமாகச் செலவு ஏதும் இல்லாமல் உடற்பயிற்சியையும், மனப்பயிற்சியையும் நல்கி வந்த நமது விளையாட்டுகள் அருகி வருவது போலவே அச்சூழலில் பாடப்படும் பாடல்களும் அருகி வருகின்றன. வேளாண்மை மற்றும் பிற தொழில்கள் எந்திரமயமாகிவிட்ட காரணத்தால் அச்சூழல்களில் பாடப்பட்டு வந்த பாடல்களும் வெகுவேகமாக மறைந்து வருகின்றன என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.